பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

அறிமுகம், அத்தியாயம் : – ஒன்றுஇரண்டு,  மூன்றுநான்கு,  ஐந்து,  ஆறு,  ஏழு,  எட்டு,  ஒன்பது,  பத்து.  பதினொன்று,  பன்னிரண்டு, பதின்மூன்றுபதினான்குபதினைந்துபதினாறுபதினேழுபதினெட்டு

அத்தியாயம் பதினாறு, தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் பதினைந்து அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம்.

இந்த இதழில் பதினாறாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

பதினைந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம்

ஜடவுலகத்தினை தலைகீழான ஓர் அரச மரத்துடன் ஒப்பிட்டு கிருஷ்ணர் பதினைந்தாம் அத்தியாயத்தினைத் தொடக்கினார். அந்த அரச மரத்தின் ஆதியைக் காண முடியாது என்றும், பற்றின்மையைக் கொண்டு அதனை வெட்டி வீழ்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு வீழ்த்துவதால் அடையப்படும் கிருஷ்ணரின் உயர்ந்த லோகம், சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு வசிப்பதற்குப் பதிலாக

இந்த ஜடவுலக வாழ்வில் துன்பப்படும் கிருஷ்ணரின் நித்திய அம்சங்களான ஜீவன்கள், ஓர் உடலை விட்டு மற்ற உடலை அடையும்போது, முந்தைய உடலின் உணர்வுகளைத் தாங்கிச் செல்கின்றன. அவர்களின் உடல்களை கிருஷ்ணரே பராமரிக்கின்றார், அவரே வேதங்களை அறிந்தவராகவும் உள்ளார். எல்லா உயிர்வாழிகளுக்கும் அப்பாற்பட்டவராகத் திகழும் கிருஷ்ணரை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான். அவன் அவரது தூய பக்தியில் ஈடுபடுவான்.

15ஆம் அத்தியாயத்திற்கும் 16ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

அத்தியாயம் பதினைந்தில் அரச மரத்தைப் பற்றி விளக்கும்போது, அம்மரத்தின் பல்வேறு கிளைகளுக்கு முக்குணங்கள் ஊக்கம் கொடுப்பதாக கிருஷ்ணர் கூறினார். அரச மரத்தின் மேல் கிளைகள் மங்களகரமானவை, தெய்வீகமானவை என்றும், அதன் கீழ் கிளைகள் அசுரத் தன்மை கொண்டவை என்றும் விளக்கப்பட்டன. மேல் கிளைகள், கீழ் கிளைகள் ஆகிய இரண்டையும் முக்குணங்களே ஊக்கமளிக்கின்றன. ஒருவனை முக்தியை நோக்கி அழைத்துச் செல்லும் தெய்வீக குணங்களைப் பற்றி கிருஷ்ணர் பதினாறாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் எடுத்துரைக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் அசுர இயல்புகளை விரிவாக விளக்குகின்றார்.

தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்

தெய்வீக இயல்புடைய உன்னதமான மனிதரைச் சார்ந்த குணங்கள் இருபத்தி ஆறு. இக்குணங்கள் அனைத்தையும் கிருஷ்ணர் முதலில் பட்டியலிடுகிறார். அவையாவன: அச்சமின்மை, தனது நிலையைத் தூய்மைப்படுத்துதல், ஆன்மீக ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுதல், தானம், சுயக் கட்டுப்பாடு, யாகம் செய்தல், வேதங்களைக் கற்றல், தவம், எளிமை, அகிம்சை, வாய்மை, கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை, துறவு, சாந்தி, குற்றம் காண்பதில் விருப்பமின்மை, எல்லா உயிர்களின் மீதும் கருணை கொள்ளுதல், பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை, கண்ணியம், வெட்கம், மனவுறுதி, வீரம், மன்னிக்கும் தன்மை, தைரியம், தூய்மை, பொறாமையின்மை, மற்றும் மரியாதையை எதிர்பார்க்காமல் இருத்தல். (ஒவ்வொரு குணம் குறித்த விளக்கத்தையும் அறிய ஸ்ரீல பிரபுபாதரின் பொருளுரையை அணுகவும்)

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள முறையான சடங்குகளின்படி குழந்தைகளைப் பெறுபவர்கள், தெய்வீக குணம் கொண்ட மக்களை ஈன்றெடுக்க முடியும். கிருஷ்ணர் எடுத்துரைத்த தெய்வீக குணங்கள் அனைவருக்கும் அவசியமானவை என்றபோதிலும், வர்ணாஷ்ரம தர்மத்தின் அடிப்படையில், ஒவ்வொரு குணமும் குறிப்பிட்ட சமூகத்திற்கு மிகவும் அவசியமாக உள்ளது. பல்வேறு வர்ணம் மற்றும் ஆஷ்ரமத்திற்கு ஏற்றாற்போல, இவை விருத்தி செய்துகொள்ளப்பட வேண்டும். ஜட சூழ்நிலைகள் துன்பமயமானவை என்றபோதிலும், இக்குணங்களை வளர்த்துக் கொள்வதால், ஒவ்வொருவரும் படிப்படியாக ஆன்மீக உணர்வின் உயர்தளத்தினை அடையக்கூடும்.

இருபத்தி-ஆறு தெய்வீக குணங்களை எடுத்துரைத்த பின்னர், பின்வரும் ஆறு அசுர குணங்களை கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்: தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், மற்றும் அறியாமை. தெய்வீக குணங்கள் முக்தி தரக்கூடியவை, அசுர குணங்களோ பந்தப்படுத்துபவை என்று கூறிய கிருஷ்ணர், எப்போதும் தெய்வீக குணத்தில் நிலை பெற்றுள்ள அர்ஜுனனுக்கு ஊக்கம் தரும் பொருட்டு, பாண்டுவின் மைந்தனே, கவலைப்பட வேண்டாம். நீ தெய்வீக குணங்களுடன் பிறந்துள்ளாய்,” என்று கூறினார். இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிர்வாழிகளில் சிலர் தெய்வீக குணங்களுடனும் சிலர் அசுர குணங்களுடனும் பிறந்துள்ளனர். சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களின்படி வாழ்க்கையை நடத்துபவன் தெய்வீக குணங்களுடன் உள்ளான் என்றும், தனது மனம்போன போக்கில் இயங்குபவன் அசுரத் தன்மை கொண்டவன் என்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த இரு பிரிவினருமே பிரஜாபதியிடமிருந்து தோன்றினர்; ஒரே வேற்றுமை என்னவெனில், ஒரு பிரிவினர் வேத நெறிகளுக்குக் கீழ்படிகின்றனர், மற்றவர் கீழ்படிவதில்லை.

அசுர இயல்புகளைப் பற்றிய சிறு குறிப்பினை முதலில் வழங்கிய கிருஷ்ணர், அர்ஜுனனின் தெய்வீகத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டும் போரிடுதல் என்பது அசுரத் தன்மையல்ல என்பதை அர்ஜுனன் உணரும் பொருட்டும், அசுர இயல்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றார்.

படிக்கட்டின் பாதை திரும்பும் பகுதியில் இரண்டு நபர்கள் நிற்கின்றனர்; ஒருவர் முக்தியின் பாதையையும் மற்றவர் பந்தத்தின் பாதையையும் காட்டுகின்றனர். மாயையின் மாலையை ஏற்க விரும்பும் மனிதன், காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று கயிறுகளால் பந்தப்பட்டு நரகத்தை நோக்கிச் செல்கிறான்.

அசுர குணத்தைப் பற்றிய விளக்கம்

அசுரர்கள் என்றால் கொடூரமான உருவத்துடன் வெறி பிடித்து அலைபவர்கள் மட்டுமே என்று நாம் எண்ணிவிடக் கூடாது. அசுரர்களின் தன்மையினை கிருஷ்ணர் இங்கு தெளிவாக எடுத்துரைக்கின்றார். இந்தத் தன்மைகள் யாரிடம் உள்ளதோ அவர்கள் அசுரர்கள் என்று அறியப்படுகின்றனர்.

செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதது எது என்பதை அசுரர்கள் அறிவதில்லை. தூய்மையோ, முறையான நடத்தையோ, வாய்மையோ இவர்களிடம் காணப்படுவதில்லை. நீராடுதல், பற்களைத் துலக்குதல், தினமும் ஆடைகளை மாற்றுதல் போன்ற வெளிப்புறத் தூய்மை மட்டுமின்றி, இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பதால் பெறப்படும் உட்புறத் தூய்மையும் இவர்களிடம் இல்லை.

இவ்வுலகம் பொய் என்றும், அஸ்திவாரம் இல்லாதது என்றும், இதனைக் கட்டுப்படுத்தும் கடவுள் யாரும் இல்லை என்றும் அவர்கள் நினைக்கின்றனர். காமத்தினால் உந்தப்பட்டு காமத்தைத் தவிர உலகத்திற்கு வேறு காரணம் இல்லை என்று கூறுவர். காமத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதால், அறிவற்ற அந்த அசுரர்கள் உலகத்தை அழிப்பதற்கான பல்வேறு கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உலகினை அழிப்பதற்காக பல்வேறு அணு ஆயுதங்களைத் தயாரிப்பவர்கள் இப்பிரிவினுள்தான் அடங்குவர்.

என்றுமே திருப்தியடையாத காமத்திடம் இவர்கள் தஞ்சமடைந்திருப்பதால், தம்மைப் பற்றிய பொய்யான கௌரவத்தில் மயங்கி, நிரந்தரமற்ற பொருட்களால் கவரப்படுகின்றனர். தங்களுக்கென்று ஒரு கடவுளை உருவாக்கி, தங்களது சொந்த மந்திரங்களை உச்சரிப்பர். மது, மங்கை, சூது, மாமிசம்ஶீஇவையே இந்த அசுரர்களைக் கவரக்கூடியவை.

புலனின்பமே பிரதானம் என்ற எண்ணத்துடன் வாழும் இவர்கள், ஆசைகள் என்னும் கயிறுகளால் கட்டப்பட்டு, அநியாயமான வழிகளில் செல்வம் சேகரிக்கின்றனர். சேகரிக்கும் பணத்தைக் கொண்டு, தமது வாழ்நாளை ஒருநாள்கூட நீட்டிக்க முடியாது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

தன்னிடம் இப்போது இவ்வளவு சொத்து உள்ளது, அதைத் தனது திட்டங்களின் மூலமாக பல மடங்கு அதிகரிப்பேன் என்று அசுரன் நினைக்கின்றான். மேலும், அவன் என்னுடைய எதிரி, அவனை நான் கொன்றுவிட்டேன், என்னுடைய மற்ற எதிரிகளும் கொல்லப்படுவர். நானே எல்லாவற்றின் இறைவன். நானே அனுபவிப்பாளன். நானே பக்குவமானவன். பலசாலியும் நானே. என்னைப் போல சக்தியுடையவனும் செல்வந்தனும் யாரும் இல்லை,” என்று எண்ணியபடி அறியாமையினால் மயக்கப்படுகிறான்.

இவ்வாறு மோக வலையில் சூழப்பட்ட இவர்கள், புலனின்பத்தில் பலமாக பற்று கொண்டு, நரகத்தில் வீழ்ச்சியுறுகின்றனர். செல்வத்தாலும் மற்றவர்கள் தனக்கு வழங்கும் பொய்யான கௌரவத்தாலும் மயக்கப்பட்டு, திமிர் கொண்டு, சில நேரங்களில் சமயச் சடங்குகளில் பெயருக்காக கலந்து கொள்வர். ஆனால் அச்சடங்குகள் வெறுமனே எந்த சட்டதிட்டத்தையும் பின்பற்றாமல், கர்வத்தின் அடிப்படையில் செய்யப்படும்.

இவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்டவர்கள், பரமாத்மாவின் மீது பொறாமை கொண்டவர்கள், உண்மையான தர்மத்தை நிந்திக்கக்கூடியவர்கள். மக்களின் மீது துளியும் கருணையின்றி வாழும் இத்தகு கடைநிலை மனிதர்களை பல்வேறு அசுர இனங்களுக்குள் கிருஷ்ணர் நிரந்தரமாகத் தள்ளுகின்றார். ஜடவுலக வாழ்வின் பந்தப்பட்ட நிலையிலேயே அவர்கள் தொடர்வர்.

அசுரத்தனமான வாழ்வில் தொடர்ந்து பிறவியெடுக்கும் இவர்கள் கிருஷ்ணரை என்றும் அடைய முடியாது. படிப்படியாக மிகவும் வெறுக்கத்தக்க வாழ்வினங்களில் மூழ்குவர். இறுதியில் நாய்கள், பூனைகள், பன்றிகள் போன்ற உடல்களை அடைகின்றனர். அசுரர்களை கீழான உயிரினங்களில் வைப்பதால், இறைவனை கருணையற்றவர் என்று நினைக்கக் கூடாது. அதுவும் அவருடைய கருணையின் மற்றொரு உருவமே. சில சமயங்களில் அசுரர்கள் இறைவனால் கொல்லப்படுகின்றனர். அதுவும் அவரது கருணையே.

அசுரத் தன்மையிலிருந்து விடுபடுதல்

அசுர இயல்புகளையும் அதன் விளைவுகளையும் பற்றிக் கேள்விப்படுவோர், இயற்கையாகவே அவற்றைக் கைவிட விரும்புவர். அவற்றைக் கைவிடுவதற்கான வழியையும் பரம இலக்கை அடைவதற்கான முறையையும் கிருஷ்ணர் பின்வருமாறு விளக்குகிறார்.

காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பியவன் தன்னுணர்வைப் பெறுவதற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடையலாம்.

இம்மூன்று விரோதிகளையும் ஒழிக்க நினைப்பவர்கள் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நெறிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த ஒழுக்க நெறிகள் ஒருவரை படிப்படியாக ஆன்மீகத் தளத்திற்கு அழைத்து வரும். இவை மனித சமூ கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் ஏற்றாற் போல சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றாமல் மனம்போன போக்கில் செயல்படுபவன் என்றும் பக்குவமடைய முடியாது, என்றும் மகிழ்ச்சியடைய முடியாது, பரம இலக்கை அடைவதும் சாத்தியமற்ற ஒன்றே.

ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயல் (கடமை) என்ன என்பதை சாஸ்திரங்களின் மூலமாக அறிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் சட்டதிட்டங்களை அறிந்து அதன்படி செயல்படுதல் மிகவும் அவசியம். வேத அறிவின் இறுதி இலக்கு கிருஷ்ணரே. அவரைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறையினை சைதன்ய மஹாபிரபு மிகவும் எளிமையாக்கினார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரித்து, கிருஷ்ண பக்தியில் ஈடுபடுபவர்கள் தங்களது இதயத்திலுள்ள அசுர குணங்கள் அனைத்தும் தம்மை விட்டு படிப்படியாக விலகுவதைக் கண்கூடாகக் காணலாம்.

பதினாறாம் அத்தியாயத்தின் மூன்று பகுதிகள்

(1) தெய்வீக மற்றும் அசுர இயல்புகள் (16.1-6)

இருபத்தி ஆறு தெய்வீக இயல்புகள் (பயமின்மை, தானம், அகிம்சை…)

ஆறு அசுர இயல்புகள் (தற்பெருமை, கோபம், கொடூரம்…)

(2) அசுர குணத்தைப் பற்றிய விளக்கம் (16.7-20)

செய்ய வேண்டியது எது, செய்யக்கூடாதது எது என்பதை அறியார்கள் தூய்மையில்லாதவர்கள், நடத்தையறியாதவர்கள் கடவுள் இல்லை, காமமே முக்கியம் என்பர் உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர் பணமே குறி, புலனின்பமே குறிக்கோள் பெயருக்காக யாகங்கள் செய்வர்  கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்டவர்கள் கிருஷ்ணரை என்றும் அடைய முடியாது

(3) அசுரத் தன்மையிலிருந்து விடுபடுதல் (16.21-24)

நரகத்தின் மூன்று கதவுகள்–காமம், கோபம், பேராசை

சாஸ்திரங்களை மதிக்காதோர், பக்குவநிலை, மகிழ்ச்சி, பரம கதி என எதையும் அடைவதில்லை.

சாஸ்திரங்களின் மூலமாக கடமையை அறிய வேண்டும்.

கிருஷ்ணரால் விளக்கப்படும் அசுரத் தன்மைகளில் சில: மாமிசம் ஏற்றல், தன்னையே பலவானாக நினைத்தல், பக்தர்களை நிந்தித்தல், தகாத வழியில் பணம் சேர்த்தல், தகாத வழியில் காமத்தில் ஈடுபடுதல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives