தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் எட்டு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஒன்பதாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

எட்டாம் அத்தியாயத்தின் சுருக்கம்

ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு, எட்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் விளக்கம் கேட்டதால், கிருஷ்ணர் அவற்றை விளக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பொதுவான கேள்விகளுக்கு சுருக்கமான பதிலை வழங்கி விட்டு, மரண நேரம் குறித்த கேள்வியை மட்டும் விளக்கமாக எடுத்துரைத்தார். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன், நிச்சயமாக கிருஷ்ணரை அடைய முடியும். உண்மையில், மரண நேரத்தில் ஒருவன் எந்த நிலையை நினைத்தாலும், நிச்சயம் அதனை அடைவான். எனவே, ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரை நினைக்கப் பழக வேண்டும், அவ்வாறு பழகுபவனால் மரண நேரத்தில் கிருஷ்ணரை எளிதில் நினைக்க முடியும். கிருஷ்ணரை யோகப் பயிற்சியின் மூலம் நினைக்க விரும்புபவர்கள், அவரை எல்லாமறிந்தவர், கட்டுப்படுத்துபவர் என்று நினைப்பர். தூய பக்தர்களோ பிறழாத மனதுடன் எப்போதும் கிருஷ்ணரின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அவரை ஒருபோதும் மறக்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகு மகாத்மாக்கள் தங்களது மரணத்திற்குப் பிறகு, துன்பம் நிறைந்த இவ்வுலகிற்கு வருவதேயில்லை, அவர்கள் கிருஷ்ணரின் நித்திய உலகை அடைகிறார்கள். கிருஷ்ணரின் நித்திய உலகம், தோன்றி மறையும் இந்த ஜடவுலகத்திற்கு அப்பாற்பட்டதாகும். பிரம்மாவின் படைப்பிற்கு அப்பாற்பட்ட அவ்வுலகங்கள் வைகுண்ட லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவற்றில் உயர்ந்த லோகமான கோலோக விருந்தாவனத்தில் கிருஷ்ணர் தனது நித்திய லீலைகளில் ஈடுபட்டு வருகின்றார். யோகிகள் இவ்வுலகை விட்டுச் செல்வதற் கென்று பல்வேறு கால நியமங்கள் உள்ளன, ஆனால் அத்தகு நியமங்கள் ஏதுமின்றி, கிருஷ்ணரின் தூய பக்தியில் இவ்வுலகை விட்டு விலகுபவர்கள் நிச்சயமாக கிருஷ்ண லோகத்தை அடைகின்றனர்.

எட்டாம் அத்தியாயத்திற்கும் ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

தூய்மையான (அனன்ய) பக்தியில் நிலைபெற்றுள்ள பக்தனைப் பற்றி எட்டாம் அத்தியாயத்தில் பேசிய கிருஷ்ணர், எவ்வாறு அனன்ய பக்தியின் தளத்திற்கு ஒருவரால் வர முடியும் என்பதை ஒன்பதாம் அத்தியாயத்தில் எடுத்துரைக்கின்றார்.

ஒன்பதாம் அத்தியாயத்தின் பெருமைகள்

கீதையிலேயே மிகவும் முக்கியமான அத்தியாயம் “மிக இரகசியமான அறிவு” அல்லது ராஜ வித்யா என்றழைக்கப்படும் ஒன்பதாவது அத்தியாயமே. இந்த அத்தியாயத்தின் சிறப்பினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்வயம் தாமாகவே முன்வந்து முதல் மூன்று ஸ்லோகங்களில் எடுத்துரைக்கின்றார்.

கிருஷ்ணரைப் பற்றிய இந்த மிக இரகசியமான அறிவு, ஜடவுலக வாழ்விலிருந்து விடுதலையளிக்கக் கூடியது. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் இந்த அறிவில் ஒருவன் முன்னேற்றம் பெற முடியும். இதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் கிருஷ்ணரின் மீது பொறாமை கொள்ளாதவர்களாக இருத்தல் அவசியம். பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்திலும் மூன்றாம் அத்தியாயத்திலும் விவரிக்கப்பட்ட ஆன்மீக விஷயங்கள் குஹ்யம், இரகசியமானவை என்று அழைக்கப்படுகின்றன. ஏழாம் அத்தியாயத்திலும் எட்டாம் அத்தியாயத்திலும் விவரிக்கப்பட்டவை குஹ்யதரம், மிக இரகசியமானவை எனப்படுகின்றன. மேலும், ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ள விஷயங்கள் குஹ்யோதம, மிக மிக இரகசியமானவை எனப்படுகின்றன. கிருஷ்ணரின் மீது பொறாமையற்று இருத்தல் என்பது இந்த அத்தியாயத்தைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தகுதியாகும். கீதைக்கு உரை எழுதக்கூடிய பேராசிரியர்கள்கூட அவர்மீது பொறாமை கொண்டிருக்கும் காரணத்தினால், கீதையின் உள் இரகசியத்தினுள் அவர்களால் நுழைய முடிவதில்லை. அவர்களது உரைகள் பயனற்றவை, அவர்கள் கீதையை விளக்கவோ கிருஷ்ணரைப் பற்றிய அறிவை வழங்கவோ தகுதியற்றவர்கள். அத்தகைய முட்டாள்களின் வியாக்கி யானங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

பக்தியை எடுத்துரைக்கும் இந்த அறிவு, அனைத்து விதமான கல்விக்கும் (அறிவிற்கும்) அரசனாக அமைகிறது, எல்லா இரகசியங்களிலும் இது மிக இரகசியமானதாகும், இதுவே மிகத் தூய்மையான அறிவாகும் (உலகின் எல்லாப் பாவங்களையும் தூய்மைப்படுத்தக்கூடியது), தன்னுணர்வின் அனுபவங்களை நேரடியாக நல்கக் கூடியது, இதுவே தர்மத்தின் பக்குவநிலை, இஃது அழிவற்றது, மற்றும் பேரின்பத்துடன் செயலாற்றப்படக் கூடியது. பக்தித் தொண்டை நிறைவேற்றுபவன் நிச்சயமாக மகிழ்ச்சியடைவான், அப்படியிருக்கையில், ஏன் ஒரு சிலர் பக்தித் தொண்டை ஏற்றுக்கொள்வதில்லை? ஏனெனில், அவர்களிடம் பக்தித் தொண்டின் மீதான நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் இவ்வுலகின் பிறப்பு இறப்பிலேயே திரிகின்றனர்.

கிருஷ்ணருக்கும் ஜடவுலகிற்கும் உள்ள தொடர்பு (ஐஸ்வர்ய ஞானம்)

ஓர் அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் அனைத்தும் மன்னரின் சக்தியே, மன்னரே அவை எல்லா வற்றையும் ஆள்கிறார், ஒவ்வொரு துறையும் மன்னரையே சார்ந்துள்ளது. தனது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மன்னர் தனது சக்தியின் மூலம் வீற்றுள்ளார், ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் அதிலிருந்து விலகியுள்ளார். அதுபோல, ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே. இருப்பினும், கிருஷ்ணர் அவற்றிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தனது தோன்றாத உருவின் மூலமாக இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளார். எல்லா ஜீவன்களும் கிருஷ்ணரில் உள்ளனர், ஆனால் அவர்களில் கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணருக்கும் அவரது சக்திகளுக்கும் இடையில் ஒரே சமயத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளது; இதுவே அசிந்த்ய பேதாபேத தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

அனைத்தையும் படைத்தவர் கிருஷ்ணரே என்றபோதிலும், படைக்கப் பட்டவை எல்லாம் அவரில் நிலை பெற்றிருக்கவில்லை. அதுவே அவரது யோக ஐஸ்வர்யம். கிருஷ்ணரே எல்லா உயிரினங்களையும் காப்பவர், அவர் எங்கும் நிறைந்துள்ளவர்; இருப்பினும், அவர் இவ்வுலகத்தின் ஒரு பகுதி அல்ல. புரிந்துகொள்ள இயலாத கிருஷ்ணரின் இத்தன்மையை நாம் உணரும் பொருட்டு ஆகாயத்தையும் காற்றையும் வைத்து கிருஷ்ணர் ஓர் உதாரணத்தைக் கொடுக்கின்றார். காற்று எவ்வாறு எங்கும் வீசிக் கொண்டு எப்போதும் ஆகாயத்தில் உள்ளதோ, அதுபோலவே படைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் கிருஷ்ணரில் அமைந்துள்ளன. காற்று மிகவும் பிரம்மாண்டமாக உள்ளபோதிலும், அஃது ஆகாயத்தினுள் அமைந்துள்ளது, ஆகாயத்தின் எல்லைகளைத் தாண்டுவதில்லை. அதுபோல, பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் பரம இச்சையினால் இயங்குகின்றது. அவருடைய விருப்பமின்றி ஒரு புல்லும் அசையாது, இருப்பினும் அவர் அனைத்திலிருந்தும் விலகியுள்ளார்.

கல்பத்தின் முடிவில் ஜடத் தோற்றம் முழுவதும் கிருஷ்ணரின் இயற்கையில் நுழைந்து, பின்னர் அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில், அவரது சக்தியினால் மீண்டும் படைக்கப்படுகின்றன. முற்றிலும் அவருக்குக் கீழ்ப்பட்ட இந்த பிரபஞ்சம் அவரது விருப்பப்படியே மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. நடுநிலையில் அமைந்து, பௌதிகச் செயல்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் கிருஷ்ணரை எந்தச் செயல்களும் பந்தப்படுத்த முடியாது. கிருஷ்ணரின் சக்தியான இந்த ஜட இயற்கை, அவரது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைவன, அசையாதன என எல்லாவற்றையும் படைக்கின்றது.

முட்டாள்களும் மகாத்மாக்களும்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை உணராத முட்டாள்கள் அவரை ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரை உள்ளபடி ஏற்றுக் கொள்ளாமல், அவரை ஒரு சக்தியுடைய மனிதனாகவோ, கர்மத்தினாலும் தவத்தினாலும் அற்புத ரூபம் பெற்றவராகவோ, அருவமான அவர் ரூபத்தைத் தாங்கி வருவதாகவோ அந்த முட்டாள்கள் கற்பனை செய்கின்றனர். மனிதரைப் போல தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல; அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, மற்றும் ஆனந்தமயமானது. அவர் இவ்வுலகில் தோன்றும்போது, தனது நித்திய உருவில் தனது அந்தரங்க சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்பட்டு, தங்களது முக்திக்கான ஆசைகள், கர்மங்கள், அறிவுப் பயிற்சிகள் என அனைத்திலும் தோல்வியை சந்திக்கின்றனர்.

இத்தகு குழப்பங்களுக்கு உட்படாமல், கிருஷ்ணரை ஆதிபுருஷராகவும் அழிவற்றவராகவும் அறிந்த மகாத்மாக்கள் கிருஷ்ணருடைய தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டு, எப்போதும் அவரது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, அவரை நித்திய மாக வழிபடுகின்றனர். அவ்வாறு கிருஷ்ண பக்தியில் இடைவிடாமல் ஈடுபட்டிருப்போர் மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு சாதாரண மனிதனை முத்திரை குத்துவதன் மூலம் மகாத்மாவை உற்பத்தி செய்ய முடியாது. பரம்பொருளை அருவ நிலையில் உணரக்கூடியோர் பகவத் கீதையில் மகாத்மாவாக விவரிக்கப்படவில்லை.

கிருஷ்ணரை ஆதி புருஷராகவும் அழிவற்றவராகவும் ஏற்று, அவரது புகழைப் பாடுவதில் ஈடுபடுவோர் மகாத்மாக்கள் எனப்படுகின்றனர்.

விஸ்வரூபத்தை வழிபடுவோர்

மகாத்மாவின் தளத்தில் இல்லாதோர், இறைவனைப் பல்வேறு தேவர்களின் மூலமாகவும் விஸ்வரூபத்தின் மூலமாகவும் வழிபடுகின்றனர். அத்தகு வழிபாடுகள் நேரடியான வழிபாட்டைக் காட்டிலும் தாழ்ந்தவை. இந்த ஜடவுலகத்திற்கு அப்பாலுள்ள எதையும் சிந்திக்க முடியாதவர்கள், இந்த உலகமே உயர்ந்தது என்று எண்ணி, அதனை பகவானின் உருவமாக வழிபடுகின்றனர். அதன்படி, வேதச் சடங்குகள், யாகம், முன்னோருக்கு அளிக்கப்படும் பொருள், மந்திரம், நெய், அக்னி, தாய், தந்தை, காப்பவன், பாட்டனார், ஓம்காரம், ரிக், யஜுர், ஸாம வேதங்கள், இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், நண்பன், வெப்பத்தைக் கொடுப்பவன், மழையைக் கொடுப்பவன், மழையைத் தடுப்பவன் என பல்வேறு ரூபங்களில் கிருஷ்ணரைக் கண்டு அவர்கள் அவரை வழிபடுகின்றனர்.

தேவர்களை வழிபடுவோர்

அடுத்த தரப்பில் இருப்பவர்கள், ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக பல்வேறு தேவர்களை வழிபடுகின்றனர். அத்தகு வழிபாட்டினால் பாவ விளைவு களிலிருந்து தூய்மையடைந்து, இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, தேவ சுகங்களை அவர்கள் அனுபவிப்பர். ஆனால் அப்புண்ணியங்களின் பலன்கள் தீர்ந்தவுடன், அவர்கள் மீண்டும் இந்த மரண உலகத்தில் வீழ்கின்றனர். நம்பிக்கையுடன் தேவர்களை வழிபடு பவன், உண்மையில் கிருஷ்ணரையே வழிபடுகிறான், ஆனால் அது தவறான வழியில் மறைமுகமாகச் செய்யப்படும் வழிபாடாகும். மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதற்குப் பதிலாக, இலைகளுக்கும் கிளைகளுக்கும் நீரூற்றுவதைப் போன்றது அது. அவ்வாறு தேவர்களை வழிபடுவதை கிருஷ்ணர் அனுமதிப்பதில்லை. கிருஷ்ணரின் உண்மையான தெய்வீக இயற்கையை அங்கீகரிக்காத நபர்கள் வீழ்ச்சியடைவது உறுதி. தேவர்களை வழிபடுவோர் தேவர்களிடையே பிறப்பர், முன்னோர்களை வழிபடுவோர் முன்னோர்களிடையே பிறப்பர், பூதங்களை வழிபடுவோர் பூதங்களிடையே பிறப்பர், கிருஷ்ணரை வழிபடுவோரோ கிருஷ்ணருடனே வாழ்வர்.

தூய பக்தியின் உயர்நிலை

கிருஷ்ணரை அவரது தெய்வீக ரூபத்தில், களங்கமற்ற (அனன்ய) பக்தியினால் வழிபடுவோருக்கு, வேண்டியவற்றை கொடுத்தும் இருப்பவற்றை காத்தும் கிருஷ்ணர் சுயமாக அவரே காக்கின்றார். கிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் அறியாத தூய பக்தன், கிருஷ்ணரை வந்தடைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கிருஷ்ணரே நிறைவேற்றுவார், அவனிடம் இருக்கக் கூடிய பக்தியை அவரே பாதுகாக்கவும் செய்கிறார்.

தேவர்களை வழிபடுவோர் அதற்காக பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், ஆனால் கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அன்புடனும் பக்தியுடனும் யாரேனும் கிருஷ்ணருக்கு இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதனை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்கிறார். பக்தி யோகத்தின் உயர் தளத்தில் நிலைபெற்று கிருஷ்ணரை வழிபட இயலாதவர்களுக்காக கிருஷ்ணர் கர்ம யோகத்தையும் பரிந்துரைக்கின்றார்: எதையெல்லாம் செய்கின்றாயோ, எதையெல்லாம் உண்கின்றாயோ, எதையெல்லாம் படைக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் செய்கின்றாயோ, அவை அனைத்தையும் தனக்கு அர்ப்பணமாகச் செய்யும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்; அவ்வாறு கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு, மனதை கிருஷ்ணரில் பதியச் செய்து, முக்தி பெற்று கிருஷ்ணரை அடையலாம்.

கிருஷ்ணர் யாரிடமும் பொறாமை கொள்வதோ பாரபட்சம் காட்டுவதோ இல்லை. அவர் அனைவருக்கும் சமமானவர். இருப்பினும், பக்தியுடன் அவருக்கு அன்புத் தொண்டு செய்பவர் யாராக இருந்தாலும், அவரை கிருஷ்ணர் தனது நண்பனாகக் கருதுகிறார். அனன்ய பக்தியில் ஈடுபட்டுள்ள அத்தகைய தூய பக்தன், சில சமயங்களில் ஏதேனும் ஒரு காரணத்தினால் மிகவும் மோசமான செயலைச் செய்ய நேர்ந்தாலும், கிருஷ்ணர் அவனை தனது பக்தனாகவே கருதுகிறார். ஏனெனில், கிருஷ்ணருக்கு பக்தி செய்ய வேண்டும் என்ற தனது தீர்மானத்தில் அவன் திடமாக உள்ளான். விரைவிலேயே அவன் தர்மாத்மாவாக ஆகி, அமைதியை அடைகிறான். கிருஷ்ண பக்தன் என்றும் அழிவதில்லை–இதனை அனைவருக்கும் தைரியமாக அறிவிக்கும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிடுகிறார். பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்த யாராக இருந்தாலும், கிருஷ்ணரிடம் சரணடைந்தால், அவர்கள் பரம கதியை அடைய முடியும்.

தாழ்ந்தவர்களும் பரம கதியை அடைய முடியும் என்னும்பட்சத்தில், பிராமணர்களையும் சத்திரியர் களையும் பக்தர்களையும் பற்றிக் கூற வேண்டுமா என்ன! துன்பம் நிறைந்த இந்த தற்காலிக உலகத்திலுள்ளோர் அனைவரும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு உயர் நிலையை அடைய வேண்டும். அந்த உயர் நிலையை அடைவதற்கு, ஒவ்வொருவரும் தங்களது மனதை எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்த வேண்டும், கிருஷ்ணரை வழிபட வேண்டும், கிருஷ்ணரின் பக்தனாக ஆக வேண்டும், கிருஷ்ணரின் முன்பு விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணரில் முழுமையாக லயித்து நிற்போர் நிச்சயம் கிருஷ்ணரை அடைவர்.

மேலும் பக்கத்தை பார்க்க :-

அறிமுகம், அத்தியாயம் : – ஒன்றுஇரண்டு,  மூன்றுநான்கு,  ஐந்து,  ஆறு,  ஏழு,  எட்டு,  ஒன்பது,  பத்து.  பதினொன்று,  பன்னிரண்டு, பதின்மூன்றுபதினான்குபதினைந்துபதினாறுபதினேழுபதினெட்டு