பகவத் கீதை வயதானவர்களுக்கா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.

அறிவும் அறிவின் அரசனும்

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிப்பிற்காக படிவங்களைப் பூர்த்தி செய்யும் நேரம் இந்த ஜுன் மாதம். அப்படிவங்கள் அனைத்திலும் இருக்கும் முக்கிய கட்டுப்பாடு: அதிகபட்ச வயது வரம்பு. ஏன் வயது வரம்பை வைத்துள்ளனர்? அறிவைப் பெறுவதற்கு வயது ஒரு தடையில்லை என்று சிலர் ஆங்காங்கே கூறும்போதிலும், இளமையில் கல் என்ற பழமொழியே நடைமுறைக்கு உகந்ததாகும். வயதான பிறகு ஏதேனும் ஒரு புதிய பாடத்தைக் கற்பது என்பது ஏறக்குறைய இயலாத காரியம். எந்த துறையில் ஒருவர் தேர்ச்சி பெற்றாரோ, அந்த துறையில் வயதாக ஆக ஒருவர் நிபுணராக மாறலாம். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் வயதான நிலையில் புதியதாக ஒரு பாடத்தைக் கற்பது என்பது மிகவும் கடினம். இது சாதாரண கல்வியறிவின் நிலை. பகவத் கீதையில் வழங்கப்படும் கல்வியறிவு எல்லா அறிவிற்கும் அரசன் என்று சொல்லப்பட்டுள்ளது (பகவத் கீதை 9.2). சாதாரண அறிவைப் பெறுவதற்கே ‘இளமையில் கல்’ என்று சொல்லும்பட்சத்தில், அறிவின் அரசனை மட்டும் முதுமையில் கல் என்று கூறுவது நியாயமா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? இளவயதே கல்விக்கு உரிய வயது என்பதை எந்தவொரு மனிதனாலும் எளிதில் உணர முடியும். அப்படியிருக்கையில், பகவத் கீதை என்று வரும்போது மட்டும் முதுமையே அதற்கு உரிய வயது என்று சொல்வதில் எந்தவோர் அர்த்தமும் இல்லை.

வயதான நிலையில் படிக்க முடியுமா?

வயதான நிலையில் பகவத் கீதையைப் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். அஃது உண்மையில் சாத்தியமா? வயதான நிலையில் நமது புத்தியும் கிரகிக்கும் திறனும் இயல்பாகவே குறைந்து விடுகிறது. மேலே கூறியபடி, அந்த குறைந்த திறனைக் கொண்டு அறிவின் அரசனை அறிதல் அவ்வளவு எளிதல்ல. மேலும், வயதான காலத்தில் நமது உடலின் அங்கங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்துவிடும். கண்கள் தெரியாமல் போய்விடும், காதுகள் கேட்காமல் போய்விடும், அமர்ந்து எதையும் படிப்பதற்கு உடலின் உறுப்புகள் நிச்சயம் ஒத்துழைக்காது. அந்த நிலையில் பகவத் கீதையை யாரால் படிக்க முடியும்? உடல் நல்ல வலுவுடன் உள்ளபோதே படிக்க முடியாது என்னும் பட்சத்தில், கண்கள் சரிவர தெரியாதபோது படிக்க முடியுமா என்ன? கப, பித்த, வாயுவினால் பாதிக்கப்பட்ட வயதான காலத்தில் இறையுணர்வில் ஈடுபடுவது கடினம் என்பதை குலசேகராழ்வாரும் தனது முகுந்த மாலா ஸ்தோத்திரத்தில் (ஸ்லோகம் 33) எடுத்துரைத்துள்ளார்.

 

நடைமுறையில் பாருங்கள்! எத்தனை வயோதிகர்கள் பகவத் கீதையைப் படிக்கின்றனர்? இளமையில் பகவத் கீதையைப் படித்தவர்கள் மட்டுமே முதுமையிலும் அதனைப் படிக்கின்றனர். இளமையில் ஊதாரியாகத் திரிந்துவிட்டு முதுமையில் ஞானோதயம் வந்து கீதையைப் படித்தவர்களை நாம் நமது நடைமுறையில் காண்பதில்லை. இளமையை வீணடித்தபோதிலும் முதுமையில் கிருஷ்ண உணர்வைப் பெறும் பாக்கியம் பெற்ற பல்வேறு நபர்கள், கீதையையும் இதர சாஸ்திரங்களையும் தங்களால் ஆழமாகப் படிக்க முடிவதில்லை என்று கூறுவதை யாம் நடைமுறையில் பலமுறை கண்டுள்ளோம். பெரும்பாலான வயோதிகர்கள் தங்களது எஞ்சியுள்ள நேரத்தை தொலைக்காட்சி, உடல் பராமரிப்பு, மருந்து உண்ணுதல், பேரக் குழந்தைகளுடன் விளையாடுதல், ஊர் கதை பேசுதல் போன்ற விஷயங்களில்தான் செலவழிக்கின்றனர். கீதையைப் படிக்க அவர்களால் நிச்சயம் முடிவதில்லை. ஆர்வம் இருந்தால்கூட படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அவர்களது வயது தடையாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

பகவத் கீதையை அனைத்து வயதினரும் படிக்கலாம்; ஆயினும், இளம் வயதிலிருந்தே படிக்கத் தொடங்குதல் மிகவும் நன்று.

வயதான பின்னர்–என்றால் என்ன?

வயதான பின்னர் படிக்கலாம் என்பவர்கள், வயோதிகம் என்றால் என்ன என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். வயோதிகத்திற்கு ஏதேனும் வரையறை உண்டோ? உடல் உறுப்புகள் மெல்ல மெல்ல இயங்காமல் போகும் காலம் வயோதிகம் என்பது பொதுவான கருத்து. வேறு விதமாகக் கூறினால், யாரொருவர் மரணத்தை நெருங்குகின்றாரோ, அவர் வயோதிகர் என்று அழைக்கப்படுகிறார். மரணத்திற்கு அருகிலிருக்கும் காலம் வயோதிகப் பருவம். அப்படிப் பார்த்தால், இவ்வுலகில் அதுவும் தற்போதைய நவீன உலகில், எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்பதால், நாம் அனைவருமே வயோதிகர்கள் என்றல்லவா பொருள்படும்! எத்தனையோ குழந்தைகள் மடிகின்றனர், பாலகர்கள் மடிகின்றனர், இளைஞர்கள் மடிகின்றனர், நடுவயதினர் மடிகின்றனர்; அதாவது, யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம். அப்படி இருக்கையில், ஐம்பது, அறுபது வயதிற்குப் பின்னர் பார்க்கலாம் என்று கூறுதல் தகுமோ? அதற்கு முன்னராக மரணம் சம்பவித்து விட்டால், பெறற்கரிய இந்த மானிடப் பிறவியை நீங்கள் வீணடித்தவராகி விடுவீரே! மறுபிறவியில் நீங்கள் மனிதராகப் பிறப்பீர் என்பதற்குக்கூட எந்த உத்திரவாதமும் இல்லை. இதனால் வீணாக காலம் கடத்துதல் அறிவுடைய செயல் அல்ல.

இளம் வயதில் படித்தால் துறவு மனப்பான்மை வந்துவிடுமோ?

அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயதினருக்கு அதிகமாக உள்ளதால், பகவத் கீதையை இப்போதைக்கு படிக்க வேண்டாம் என்று நினைக்கின்றனர். கீதையைப் படித்தால், அந்த அறிவானது தங்களது ஆசைகளுக்கு தடையாக இருக்கும் என்று நினைக்கின்றனர். இத்தகைய எண்ணம் முற்றிலும் மடத்தனமானதாகும். குடிப்பழக்கத்தினால் அவதிப்படுபவர்கள் அதற்குரிய மருத்துவரிடம் செல்ல மறுப்பதைப் போன்றது அத்தகைய எண்ணம். இவ்வுலகில் நாம் படும் துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணம், கடவுளை விட்டு தனியாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பமே. அந்த ஆசையை விட்டொழித்து உண்மையான ஆனந்தத்தினை அனுபவிப்பதற்கான வழிமுறையை பகவத் கீதை நமக்கு வழங்குகிறது. குடிப்பழக்கம் என்னும் போலியான மகிழ்ச்சியிலிருந்து உண்மையான மகிழ்ச்சியை வழங்குவதற்கான மருந்தைப் போன்றது பகவத் கீதை. ஆனால் சில குடிகாரர்கள் மருத்துவர்களிடம் போக மறுப்பதைப் போன்று, இவ்வுலகிலுள்ள சில மூடர்கள் பகவத்

கீதையை அணுக மறுக்கின்றனர்.

கீதையைப் பயிற்சி செய்ய ஆயுள் அவசியம்

மருத்துவப் படிப்பை மேற்கொள்பவர் படித்து முடித்துவிட்டால் மட்டும் போதாது. அதனை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவத் தொழிலில் ஈடுபடாமல் வெறுமனே மருத்துவம் படிப்பதால் என்ன பயன்? படித்ததை வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்பது அடிப்படையான ஒன்று. அதுபோல, பகவத் கீதையைப் படிப்பவரும் அதனை வாழ்வில் செயல்படுத்த வேண்டும். பகவத் கீதை ஒரு நல்ல புத்தகம் என்று வெறுமனே படித்து விட்டு ஓரங்கட்டிவிடக் கூடாது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்தியுள்ளவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு காலம் அவசியம். மருத்துவப் படிப்பைப் படித்தவர் அதில் பக்குவம் பெற பல வருட அனுபவம் அவசியமாவதைப் போல, பகவத் கீதையைப் படித்தவர் அதில் பக்குவம் பெற பொதுவாக நீண்ட கால அளவு தேவைப்படுகிறது. மனதைக் கட்டுப்படுத்தி பக்தியின் மேல் நிலையை அடைவது என்பது ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. பயிற்சி செய்பவரின் தீவிரத்தைப் பொறுத்து கால அளவு மாறுபடும் என்றபோதிலும், பொதுவாக, இளம் வயதில் பக்தியை ஏற்பவர்கள் (அவர்கள் தங்களது இயற்கையான ஆயுள் வரை வாழும் பட்சத்தில்) பக்குவமடைவதற்கு நல்வாய்ப்பு உள்ளது.

எப்போது படிக்க வேண்டும்?

இதனால் முடிந்தவரை இளம் வயதிலேயே பகவத் கீதையைக் கற்கத் தொடங்க வேண்டும். அப்போது கீதையின் தாத்பரியங்கள் பசு மரத்தாணி போல ஆழமாகப் பதியும். பிரஹலாதர், கௌமார ஆசரேத் பிராஜ்ஞோ, பகவானைப் பற்றிய விஷயங்களை ஐந்து வயதிலிருந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் (ஸ்ரீமத் பாகவதம் 7.6.1). யார் யாரோ சொல்வதைக் கேட்டு நமது அறிவுப் பசியை காக்க வைக்கக் கூடாது. எவ்வளவு எளிதில் நம்மால் ஆன்மீக அறிவை, அறிவின் அரசனை அறிந்து கொள்ள இயலுமோ, அவ்வளவு எளிதில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.

இளம் வயதில் புரியாதா?

கீதையின் தாத்பரியங்கள் இளம் வயதில் புரியாது என்று கூறுவோர் உண்டு. ஒரு விதத்தில் பார்த்தால், உண்மையாகத் தோன்றலாம். மறுபுறம் பார்த்தால், இளம் வயதில் மட்டுமல்ல, எந்த வயதிலும் கீதை புரியாது–நீங்கள் பக்தராக இல்லாத பட்சத்தில். கீதையினை முறையான பக்தரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டால், அவர் நமக்கு ஏற்ற விதத்தில் படிப்படியாக கற்றுத் தருவார். அதனால்தான் இந்த ஞானத்தைப் பெறுவதற்காக முறையான ஆன்மீக குருவை அணுக வேண்டும் என்று கீதையிலேயே (4.34) பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். இளம் வயதிலிருந்து படிக்கும்போது, காலப் போக்கில் தெளிவைப் பெற முடியும்.

மிகச்சிறந்த பக்தர்களும் பகவத் கீதையும்

வாழ்க்கை முழுவதையும் வீணடித்துவிட்டு இறுதியில் பகவத் கீதையைப் படித்து பெரும் பக்தராக மாறியவர் என்று யாரும் இல்லை. மாறாக, பெரும் பக்தர்கள் அனைவருமே தங்களின் இளம் வயதிலிருந்தே பகவத் கீதையைப் பயிற்சி செய்தவர்கள். பல்வேறு ஆச்சாரியர்கள் ஐந்து அல்லது ஆறு வயதிலேயே பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களையும் அறிந்திருந்தனர். இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சங்கராசாரியர், சைதன்ய மஹாபிரபு ஆகியோர் மட்டுமின்றி, நவீன உலகில் கிருஷ்ண பக்தியை உலகெங்கிலும் பரப்பிய ஸ்ரீல பிரபுபாதரும் இளம் வயதிலிருந்து பகவத் கீதையைக் கற்றவர்களே. வேறு விதமாகக் கூறினால், பகவத் கீதையைப் பக்குவமாக கற்றறிந்த அனைவரும் அதனை தங்களது இளம் வயதிலேயே தொடங்கியுள்ளனர். எனவே, கீதையை உண்மையாக கற்க விரும்புவோர் காலம் கடத்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும். வயதான பின்னர் படிக்கலாம் என்று சொல்வது வெறும் நொண்டி சாக்கு.

காலம் கடந்துவிட்டால் என்ன நிலை?

முன்னரே கூறியபடி, கிருஷ்ண பக்தர்களின் சங்கத்தினை இளம் வயதில் பெற முடியாமல், பிற்காலத்தில் கிடைக்கப்பெற்ற பலரும் அதற்காக வருந்துவதை நாம் காண்கிறோம். அவர்களின் வருத்தம் உண்மையானது என்றபோதிலும், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பகவத் கீதையை முறையான குரு சீடப் பரம்பரையின் வழியாக, அதன் உண்மையுருவில் பெற முடிந்தால், எந்த வயதாக இருந்தாலும் நீங்கள் அதனை சிரத்தையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கீதையைப் படித்து அதன் பாதையில் சிறிதேனும் நீங்கள் முன்னேற்றம் அடைந்தால்கூட, அஃது உங்களை மாபெரும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். நீங்கள் மீண்டும் மனிதப் பிறவியைப் பெற்று, அந்த பிறவியின் இளம் வயதிலேயே பகவத் கீதையை உள்ளது உள்ளபடி படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். எனவே, யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. கிடைத்தவுடன் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது கருத்து.

ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்

இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகும், வயதான பின்னர் கீதையைப் படிக்கலாம் என்று யாரேனும் கூறினால், அது வெறும் ஏமாற்று வேலை என்பதை வாசகர்கள் தெளிவாக உணரலாம். மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைப்பவர்கள் உண்மையில் தம்மையே ஏமாற்றிக் கொள்கின்றனர். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை யாராலும் ஏமாற்ற முடியாது. (பார்க்க: இந்த மாத பகவத் தரிசனத்தின் படக்கதை) வாழ்வின் உண்மையான அர்த்தத்தை அறிய விரும்புவோர் சற்றும் தயங்காமல் பகவத் கீதை உண்மையுருவில் படிக்க வேண்டும். மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொள்பவர்கள் ஒரு காரணத்தை மாற்றி மறு காரணத்தைச் சொல்லி பகவத் கீதையைப் படிப்பதை தொடர்ந்து தவிர்த்துக் கொண்டே இருப்பர். பகவத் தரிசன வாசகர்கள் அவ்வாறு இருக்காமல், முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த நவீன காலத்தின் தலைசிறந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில் படித்து பயன்பெறுவர் என நம்புகிறோம்.

2016-10-28T00:43:16+00:00June, 2013|ஞான வாள்|0 Comments

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment