தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமியின் நினைவுகள்

Must read

ஸ்ரீல பிரபுபாதரின் ஸங்கீர்த்தனப் படையில் முக்கிய அம்சம் வகித்த தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி மஹாராஜா அவர்களின் சங்கத்தை நாம் இழந்து விட்டோம் என்பதை பக்தர்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மஹாராஜா அவர்கள் டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை 03:50 மணிக்கு தனது உடலை நீத்து, ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் திருவடிகளை அடைந்தார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்புரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில், மஹாராஜா அவர்கள் பக்தர்களின் இடைவிடாத ஸங்கீர்த்தனத்திற்கு மத்தியில் இவ்வுலகை விட்டு புறப்பட்டார்.

 

வாழ்க்கைக் குறிப்பு

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1971ஆம் ஆண்டில் பர்மிங்ஹம் கோயிலில் பிரம்மசாரியாக இணைந்தார். அதன் பிறகு, 1972இல் இலண்டனின் பரி ப்லேஸ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு மாறி அங்கே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். கடின சேவைகளை எளிதில் நிறைவேற்றும் பக்குவமான பிரம்மசாரியாக அவர் திகழ்ந்தார். 1972ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற்றார். ஸ்ரீல பிரபுபாதர் இவருக்கு விரஜேந்திர குமார தாஸ் என்று பெயரிட்டார்.

இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் அவர் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை விநியோகம் செய்யும் குழுவிற்கு தலைமை தாங்கி தொடர்ந்து புத்தகங்களை விநியோகம் செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் இலண்டனில் சேவை செய்த பின்னர், 1975இல் இந்தியாவின் விருந்தாவனத்தில் ஸ்ரீல பிரபுபாதர் அப்போது நிர்மாணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண-பலராமரின் கோயிலுக்கு இடம்பெயர்ந்தார்; அங்கே அவர் கோயில் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

1979இல் இவர் தனது தாய்நாடான மலேசியாவிற்குத் திரும்பி அங்கே கிருஷ்ண பக்தியை ஊன்றச் செய்யும் பணிகளில் இறங்கினார். 1983இல் சந்நியாசம் பெற்று தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி என்ற பெயருடன் மலேசியாவிலும் இதர இடங்களிலும் பிரச்சாரப் பணிகளை மிகவும் அதிகமாக விரிவுபடுத்தினார். 1990களின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு உடல் உபாதைகள் அவரை மிகவும் பாதித்தன. இருப்பினும், அவற்றை வென்று தொடர்ந்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார். இவர் ஒவ்வொரு வருடமும் மாயாபுரில் நடைபெறும் கௌர பூர்ணிமா திருவிழாவில் பேரார்வத்துடன் கலந்துகொள்வது வழக்கம்.

மஹாராஜா அவர்களுக்கு சுமார் 80 தீக்ஷா சீடர்களும் நூற்றுக்கணக்கான சிக்ஷா சீடர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானோர் மலேசியா மற்றும் சென்னையைச் சார்ந்தவர்கள்.

விசேஷ குணங்கள்

தமிழகத்திலும் பிரச்சாரம் மேற்கொண்ட இவர், சென்னையில் பல காலம் தங்கியிருந்து பல்வேறு விதங்களில் பக்தர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானவராக இருந்தார். இவரை அணுகுவோர் அனைவரும் எளிதில் கண்டறியும் அற்புத குணங்களில் சில: (1) எங்கும் எதிலும் எவரிடத்திலும் எந்த எதிர்பார்ப்புமின்றி எளிமையின் வடிவமாக விளங்கினார், (2) என்றென்றும் ஸ்ரீல பிரபுபாதரின் வார்த்தைகளைத் தன்னுள் முற்றிலுமாக ஏற்று மற்றவர்களுக்கும் அதனை ஊட்டினார், (3) பக்குவமான பணிவிற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கினார், (4) பொறாமை, காமம், கோபம், பேராசை போன்ற தீய குணங்களை துளியளவும் அவரிடம் காண முடியாது, (5) ஸ்ரீல பிரபுபாதரின் ஸங்கீர்த்தன படையில் தன்னை அர்ப்பணித்த மாமனிதர்.

ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களில் தமிழ் பேசும் ஒரேயொரு சந்நியாசியின் சங்கத்தினை இழந்திருப்பது தமிழ் பக்தர்களுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives