பக்தி யோக வாழ்க்கை

Must read

வழங்கியவர்: நீதி

நாம் மடிந்து போகும் உடலல்ல, அழிவற்ற ஆத்மா” எனும் ஞானம் ஆன்மீக வாழ்வின் முதல் படியாகும். சிலர் இதனை ஏட்டளவில் அறிந்துள்ளபோதிலும், ஆத்மாவின் தளத்தில் உண்மையான ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது என்பதை அறியாமல் உள்ளனர். ஒவ்வோர் உயிர்வாழியும் முழுமுதற் கடவுளின் சிறிய அம்சம் என்பதை அறிந்து, அவரது சேவையில் ஈடுபடுவதே ஆனந்தத்தைப் பெறுவதற்கான வழியாகும். இவ்வாறு கடவுளுக்குச் செய்யப்படும் அன்புத் தொண்டே பக்தி யோகமாகும்.

உண்மையான ஆனந்தம்

நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு துன்பத்திற்கான மூல காரணமாகும். ஜட உலகின் தொடர்பினால் ஜட இயற்கையின் முக்குணங்களான ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்திற்கு ஜீவன் உட்படுகிறான். ஆனால், உண்மையில் பரம புருஷரைப் போன்று ஜீவன்களும் ஆனந்தமயமானவர்களே. ஜீவன்கள் தற்போதைய கட்டுண்ட நிலையில் தங்களது ஸ்வரூபத்தினை (நான் பரம புருஷ பகவானின் சேவகன் என்பதை) மறந்துள்ளனர். பக்தித் தொண்டின் மூலமாக அந்த ஸ்வரூப நிலையினை மீண்டும் அடையலாம்.

சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கர்ம, ஞான, அஷ்டாங்க யோக முறைகளைப் பயிற்சி செய்து படிப்படியாக முன்னேறி, இறுதியில் பக்தி யோகத்தின் தளத்திற்கு வரும்போது, உயிர்வாழியின் உன்னத இலக்கு அடையப்படுகின்றது. ஒருவன் பற்பல பிறவிகளுக்குப் பிறகே இத்தகைய ஞானத்தைப் பெற்று கிருஷ்ணரிடம் சரணடைகிறான் என்று பகவத் கீதை (7.19) உறுதிப்படுத்துகிறது: பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே.

இருப்பினும், கர்ம, ஞான, அஷ்டாங்க யோக முறைகளை படிப்படியாகப் பயிற்சி செய்து காலத்தினை வீணடிக்காமல், நேரடியாக பகவான் கிருஷ்ணரிடம் சரணடையும் அதிர்ஷ்டசாலிகள் இந்தப் பிறவியில் இன்பமான வாழ்க்கை வாழ்வதோடு அல்லாமல், இறுதியாக கிருஷ்ண பிரேமை எனும் மிக உன்னதமான பரிசையும் பெறுகின்றனர்.

பக்தர்களின் சங்கம்

பகவானின் கருணையாலும் மஹாத்மாக்களான பகவத் பக்தர்களின் கருணையாலும், பகவானின் தூய பக்தர்களுடன் தொடர்புகொள்ளும் அரிய வாய்ப்பை ஓர் உயிர்வாழி பெறுவானாயின், நதிப் பிரவாகம்போல் அவனது பக்தி பெருக்கெடுப்பது நிச்சயம். கடலில் சேரும்வரை நதி ஓடிக் கொண்டே இருப்பதைப் போல, தூய பக்தர்களின் சேர்க்கையால் ஏற்படும் கலப்பற்ற பக்தித் தொண்டும் கிருஷ்ண பிரேமை எனும் இறுதி இலக்கை அடையும் வரை ஓடிக் கொண்டே இருக்கும் என்று நாரதர் சுகதேவருக்கு ஸ்ரீமத் பாகவதத்தில் உரைக்கின்றார்.

எண்ணெயை ஊற்றும்பொழுது அஃது எவ்வாறு இடைவெளியில்லாமல் ஒரே சீராகக் கொட்டுகிறதோ அதே போன்று பக்தி யோகத்தின் வழிமுறைகளை இடைவிடாது பின்பற்றுவதன் மூலமாக, ஒருவனால் பகவானுடன் தூய்மையான பக்தியை வளர்த்துக்கொள்ள முடியும். தனது சரீரத்தையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய பக்தர்களுடன் வாழ்வதினால் மட்டுமே பக்தர்கள் பக்தி யோகத்தில் வெகுவேகமாக முன்னேற முடியும்.

கிருஷ்ணருக்கு ஒரு சேவகனாக இருந்து மலர்மாலை அணிவிப்பதும் ஒருவித பக்தித் தொண்டே.

ஒன்பது விதமான பக்தித் தொண்டு

ஸ்ரீமத் பாகவதத்தில் (7.5.23–25) பிரகலாதர் பக்தித் தொண்டின் ஒன்பது வழிமுறைகளைக் கூறுகிறார்:

(1)    பகவானின் தெய்வீகமான நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளைக் கேட்டல்

(2)   பகவானின் பெருமைகளைப் பாடுதல்

(3)   பகவானை நினைவிற்கொள்ளுதல்

(4)   பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்தல்

(5)   பல்வேறு உபகரணங்களைக் கொண்டு மதிப்பிற்குரிய வழிபாட்டினை பகவானுக்கு அர்ப்பணித்தல்

(6)   பகவானுக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்தல்

(7)   பகவானின் சேவகனாகச் செயல்படுதல்

(8)   பகவானுடன் நண்பனாகப் பழகுதல்

(9)   பகவானிடம் பூரணமாக சரணாகதி அடைதல்

மேற்கூறிய ஒன்பது விதமான பக்தித் தொண்டினைப் பழக்குவதற்காகவே தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினை ஸ்தாபித்துள்ளார். ஹரி பக்தி விலாஸம், பக்தி ரஸாம்ருத சிந்து முதலிய சாஸ்திரங்களையும் பிரகலாதர் கூறிய ஒன்பது வித பக்தித் தொண்டையும் அடிப்படையாகக் கொண்டு இஸ்கான் அன்றாட நிகழ்ச்சிகளைச் செயல்படுத்துகிறது, இயக்கத்தின் உறுப்பினர்கள் தூய்மையான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.

இருவகை பக்தர்கள்

பக்தியைப் பயிலும் பக்தர்கள் சாதக பக்தர்கள் எனப்படுவர். அவர்களை வைதி பக்தர்கள் (சாஸ்திர விதிகளின்படி பக்தியில் ஈடுபடுவோர்), ராகானுக பக்தர்கள் (இயல்பான அன்பின் அடிப்படையில் பக்தியில் ஈடுபடுவோர்) என இரு வகைப்படுத்தலாம்.

நடைமுறையில் பக்தி யோகம்

வைதி பக்தர்கள் ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ், அன்றாடம் பதினாறு சுற்றுகள் (16 x 108 முறை) ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மஹா மந்திரத்தை ஜபம் செய்கிறார்கள். பாவத்தின் தூண்களான மாமிசம் உண்ணுதல், தவறான ஆண்-பெண் உறவு, போதைப் பொருட்கள், மற்றும் சூதாட்டம் முதலியவற்றைத் தவிர்க்கின்றனர். பகவானின் பிரசாதத்தை உண்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படாத உணவினைத் தவிர்க்கின்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணர், கௌர-நிதாய், ஜகந்நாதர் பலதேவர், சுபத்திரை முதலிய விக்ரஹங்கள் அல்லது படங்களுக்கு தினசரி முறையாக ஆரத்தி, அலங்காரம், நைவேத்தியம், மற்றும் இதர சேவைகளையும் செய்கின்றனர். ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் மற்றும் கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களால் வழங்கப்பட்ட பாடல்களைப் பாடி ஆடுகின்றனர். பக்தர்கள் ஒன்று கூடி ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை முதலிய சாஸ்திரங்களிலிருந்து பகவானின் நாமம், ரூபம், குணம், லீலைகளைக் கேட்டு மகிழ்கின்றனர். தூய அன்புடனும் பக்தியுடனும் அறுசுவை உணவுகளை பகவானுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

சைதன்ய மஹாபிரபுவின் வழிகாட்டுதலின்படி மரத்தைவிடப் பொறுமையாகவும் புல்லைவிடப் பணிவாகவும் இருக்கப் பழகி சதா ஸர்வ காலமும் கீர்த்தனத்தில் ஈடுபட்டு பேரானந்தம் அடைகின்றனர். இவ்வாறாக, யுக தர்மத்தைக் கடைப்பிடித்து பகவானின் இன்பத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக்
கொள்ளும் பக்தர்கள் பேரானந்தத்துடனான நித்தியமானதொரு பெருவாழ்வை வாழ்கிறார்கள்.

பக்தித் தொண்டில் ஈடுபட்டு பகவானைத் திருப்திப்படுத்துவதற்காக, திருக்கோயில்களில், அதிகாலை முதல் இரவு வரை பலவிதமான பக்தித் தொண்டுகள் உள்ளன. தூய பக்திக்காக விடாமுயற்சி செய்ய நினைப்பவர்கள் இத்தகு அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பக்குவ நிலை

பக்தித் தொண்டில் பக்குவமடைந்த பக்தர் கீழ்க்காணும் ஐந்து உறவுகளில் ஏதாவதொரு முறையில் பகவானுடன் உறவுடையவராகிறார்.

(1)    சாந்தமான பக்தர் அல்லது நடுநிலை வகிக்கும்  பக்தர் (நெருக்கமான உறவு இல்லாதவர்)

(2)   தொண்டு செய்யும் பக்தர் (ஹனுமான்)

(3)   நண்பன் (அர்ஜுனன், சுதாமர்)

(4)   பெற்றோர் (யசோதை, நந்தர்)

(5)   காதலர் (கோபியர்கள்)

24 மணி நேர பக்தி சேவை

மன்-மனா பவ மத்-பக்தோ

மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே

ப்ரதிஜானே ப்ரியோ ’ஸி மே

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கிறேன்.” (பகவத் கீதை 18.65)

கிருஷ்ணரது தூய பக்தனாகி, எப்போதும் அவரைப் பற்றியே நினைத்து, அவருக்காகவே செயல்பட வேண்டும்—இதுவே ஞானத்தின் மிகமிக இரகசியமான பகுதியாகும். கிருஷ்ணரை எப்போதும் நினைவுகொள்வதற்கு உகந்த வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் தனது தினசரி செயல்கள் அனைத்தும் கிருஷ்ணருடன் தொடர்புடையவையாக இருக்கும்படி செயல்பட வேண்டும். இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ணரைப் பற்றி நினைப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாதவாறு அவன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதைக்கான தமது விளக்கவுரையில் கூறியுள்ளார். இத்தகு தூய கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள், கிருஷ்ணருடைய இருப்பிடத்திற்கு நிச்சயமாகத் திரும்பிச் செல்வர் என்றும், அங்கு அவர்கள் கிருஷ்ணருடன் நேரடியான உறவில் ஈடுபடுவர் என்றும் பகவானே சத்தியம் செய்கிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives