வழங்கியவர்: திருமதி கீதா கோவிந்த தாஸி

பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம்.

பீஷ்மருக்கும் பகவானுக்கும் உள்ள உறவுமுறை

பொதுவாக, பக்தர்களுக்கும் பகவானுக்கும் ஐந்து வகையான முக்கிய உறவு முறைகள் உள்ளன. அவை ஸாந்த பக்தி (மிதமான பக்தி), தாஸ்ய பக்தி (தொண்டு செய்யும் பக்தி), ஸக்ய பக்தி (நட்பு ரீதியான பக்தி), வாத்ஸல்ய பக்தி (பெற்றோர் முறையிலான பக்தி), மாதுர்ய பக்தி (சிருங்கார பக்தி). இந்த ஐந்து உறவுகளில், பீஷ்மர் தொண்டு புரியும் பக்தராக பகவானுடன் உறவு கொண்டிருந்தார்.

ஐந்து வகையான பக்தியை வெளிப்படுத்தும் பக்தர்கள் அவ்வப்போது அச்சச் சுவை, வீரச் சுவை, நகைச் சுவை முதலிய ஏழு வகையான உறவுகளையும் வெளிப்படுத்துவது வழக்கம். அதன்படி, பீஷ்மர் பகவானுடன் வீரச் சுவையை வெளிப்படுத்தினார்.

பொதுவாக, அசுரர்கள் மட்டுமே பகவானை எதிர்ப்பவர்களாக இருப்பர். ஆனால் பீஷ்மரோ, பக்தனாக இருந்தும், பகவானோடு போரிட்டு, வீரச் சுவையின் மூலமாக அவரை திருப்தி செய்தார்.

பக்தியின் உயர்ந்த படி

பக்தித் தொண்டின் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பகவானுக்கு எது பிடிக்குமோ, எந்தச் செயல் அவருக்கு விருப்பமானதோ, அதையே செய்வர். அவர்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பகவானை மகிழ்விக்கவே விரும்புவர். பகவானின் விருப்பம் தங்களுக்கு கடினமாக இருந்தாலும், அதைச் செய்து அவரை திருப்தி செய்வர். உதாரணமாக, அர்ஜுனன் பகவானுக்காக போர் புரிந்தார், யுதிஷ்டிரர் பகவானுக்காக பொய் சொன்னார். இவர்களைப் போலவே பீஷ்மரும் பகவானை திருப்திப்படுத்த அவரோடு போரிட்டார்.

குருக்ஷேத்திரத்தில் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் அவருடன் போரிட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்த பீஷ்மர், அர்ஜுனனை இடைவிடாமல் தாக்கினார். அந்தச் சூழ்நிலையில், ஒரு பக்தனை (அர்ஜுனனை) காத்து மகிழ்விக்கவும், மற்றொரு பக்தனை (பீஷ்மரை) தாக்கி மகிழ்விக்கவும் பகவான் கிருஷ்ணர் பீஷ்மரை எதிர்த்தார், தேரின் சக்கரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைந்தார்.

அர்ஜுனனின் வேண்டுதலால் கிருஷ்ணர் பீஷ்மரைத் தாக்கவில்லை என்றபோதிலும், பீஷ்மரோடு அவ்வாறு போரிடுவதை கிருஷ்ணர் அனுபவித்தார் என்பதை நாம் பீஷ்மரின் பிரார்த்தனையிலிருந்து அறியலாம்: (சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த) போர்க்களத்தில் குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியிருந்தது. மேலும், பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.9.34)

இந்த ஸ்லோகத்தின் பொருளுரையில், ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, சிருங்கார பாவத்தில் இருக்கும் காதலி ஒருத்தி அந்த அன்புடன் பகவானைக் கடித்தால், அஃது எவ்வாறு அவருக்கு இன்பத்தைக் கொடுக்குமோ, அவ்வாறே பீஷ்மதேவரின் கூரிய அம்புகளால் ஏற்படுத்தப்பட்ட காயத்திலிருந்து அவருக்கு இன்பம் கிடைத்தது என்று கூறுகிறார். கிருஷ்ணரின் மீது அம்பு எய்திய பீஷ்மரின் செயல்களை ஒருபோதும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஆகவே, பகவானுக்கும் அவரது தூய பக்தரான பீஷ்மருக்கும் இடையில் குருக்ஷேத்திரத்தில் ஓர் உன்னதமான அன்புப் பரிமாற்றம் நிகழ்ந்தது, அந்தப் போர் ஒருபோதும் பௌதிகமானதல்ல. மேலும், பகவானின் திருமேனியில் ஏற்பட்ட காயங்களும் சாதாரணமானவை அல்ல. அவரது திருமேனியில் காயம் என்பது சாத்தியமா? கூரிய அம்புகளால் காயம் விளைவிக்கப்பட்டதுபோல் காணப்படுவது சாதாரண மனிதனுக்குக் குழப்பத்தை விளைவிக்கலாம். ஆனால் ஆன்மீக அறிவைப் பெற்றிருப்பவரால், வீரச் சுவையுடன் பீஷ்மர் புரிந்த போரையும் அவர்களுக்கு இடையிலான திவ்யமான அன்புப் பரிமாற்றத்தையும் புரிந்துகொள்ள இயலும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேர் சக்கரத்தை ஆயுதமாக ஏந்தி பீஷ்மருடன் போர் புரிய முற்படுதல்

பக்தர்களையும் பகவானையும் அறிந்த பீஷ்மர்

பகவான் கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம் என்பதை பீஷ்மர் நன்கு அறிந்திருந்தார். எனவே, தம் மரணப் படுக்கையில்  அவர் பகவானை தரிசிக்க விரும்பினார்.

பகவானின் சிறந்த பக்தர்களான பாண்டவர் களையும் அவர் மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். அவர்களுக்கு அநியாயம் நிகழ்ந்தது என்பதை அறிந்தும், சில மேலோட்டமான அரசியல் காரணங்களால் அவர் பாண்டவர்களோடு இணையவில்லை.

இருப்பினும், பகவானை பக்தர்களின் மூலமாகவே அணுக வேண்டும் என்ற முறையை அறிந்து, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்த மஹாஜனராக அவர் திகழ்ந்தார். இதனால்தான், அவர் தம் பிரார்த்தனையில் பகவானை விஜய ஸகே, பார்த ஸகே என்றெல்லாம் அழைக்கிறார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மரைக் காண வருதல்

பீஷ்மர் மிகவுயர்ந்த பக்தர்

பீஷ்மர் மிகவுயர்ந்த பக்தராக இருந்த காரணத்தினால்தான், அவர் இறக்கும் தருவாயில் சாக்ஷாத் கிருஷ்ணரே அவரைக் காண போர்க்களம் வந்தார், யுதிஷ்டிரருக்கு பீஷ்மர் மூலம் அறிவுரையும் வழங்கச் செய்தார். அதன் மூலம், பீஷ்மரின் பெருமையை பகவான் உலகினர் அனைவருக்கும் உணர்த்தினார்.

உயர்ந்த பக்தர்கள் மரணப் படுக்கையிலும் தெளிவான சிந்தனையுடன் கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்வர் என்பதை இதிலிருந்து அறியலாம். நமது ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரும் தம் இறுதி மூச்சு வரை சீடர்களுக்கு பகவானைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

பீஷ்மர் தமது மரணப் படுக்கையில்தான் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் கூறினார். பகவானைப் பார்த்தபடியே அவரது நினைவில், உடலை நீத்து வைகுண்டத்தில் அதே பார்த்தசாரதியின் பக்தித் தொண்டில் இணைந்தார்.