பிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக பிறந்தான் என்பதும் தெரியாத துணுக்கு.

ஹிரண்யகசிபுவினுடைய தந்தையின் பெயர் கஸ்யபர், தாயின் பெயர் திதி. கஸ்யப முனிவர், மாமுனிவரான மரீசியின் மகனாவார். கஸ்யபரே பெரும்பாலான தேவர்களின் தந்தையுமாவார். மிகச்சிறந்த முனிவராகவும் பிராமணராகவும் திகழ்ந்த கஸ்யபருக்கு ஹிரண்யகசிபு பிறந்ததற்கு காரணம் என்ன?

கஸ்யபரின் மனைவியரில் ஒருத்தியான திதி கட்டுப்படுத்த இயலாத காமத்துடன் தனது கணவரை அணுகினாள். அவளது விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கணவரின் கடமையாக இருந்தது. இருப்பினும், அவள் அணுகிய நேரம் மாலை வேளையாக இருந்ததால், கஸ்யபர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மாலை வேளையில் சிவபெருமான் தமது பூத கணங்களுடன் எங்கும் உலாவிக் கொண்டிருப்பார். அந்தத் தருணம் கணவனும் மனைவியும் இணைவதற்கு உகந்தது அன்று. முறையற்ற தருணத்தில் இணைவதால் பிறக்கும் குழந்தைகள் முறையற்றவர்களாகவே இருப்பர். எனவே, கஸ்யபர் முதலில் திதியிடம் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறினார்.

கஸ்யபரின் நல்லறிவுரைகளைக் கேட்டபோதிலும், காமத்தின் மயக்கத்தில் மதியிழந்திருந்த திதியினால் தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்றும் வெட்கமின்றி கணவரைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள். தகாத வேளையில் உறவு கொள்வது நல்லதல்ல என்பதை அறிந்திருந்தபோதிலும், கஸ்யபர் தனது மனைவியின் இச்சைக்கு ஒப்புக் கொண்டார். அதன்படி, பிறந்தவர்களே ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும்.

முறையான குழந்தைகள் சமுதாயத்தின் மாபெரும் சொத்தாகும். முறையற்ற குழந்தைகள் சமுதாயத்தின் மாபெரும் சுமையாகும். முறைதவறி பிறக்கும் குழந்தைகளால் சமுதாயம் சீரழிந்துவிடும் என்பதை நாம் பகவத் கீதையிலும் (1.40) காண்கிறோம். தவறான தருணத்தில் வெறும் காம இச்சைக்காக குழந்தைகளைப் பெற்றெடுப்பது நல்லதல்ல என்பதையும், அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ஹிரண்யகசிபுவைப் போலவே அசுரத்தனத்துடன் இருப்பர் என்பதையும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.