ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 6–8

சென்ற இதழில் பகவான் ரிஷபதேவர் தமது மைந்தர்களுக்கு அருளிய உபதேசங்களை அறிந்து கொண்டோம். இந்த இதழில் ரிஷபதேவரின் மைந்தர்களில் மூத்தவரான பரத மன்னரின் செயல்களைப் பற்றி பார்ப்போம்.

மனதை நம்ப வேண்டாம்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.

“கற்பில்லாத பெண் ஒருத்தி பிற ஆடவர்களின் துணையுடன் தன் சொந்தக் கணவனையே கொலை செய்வதைக் கேள்விப்படுகிறோம். அதுபோலவே, கட்டுப்படுத்தப்படாத மனம் காமம், கோபம், லோபம், போன்ற பகைவர்களின் துணையுடன் ஆன்மீகவாதியை தன்னிலை தடுமாறி புத்தியை இழக்கச் செய்கிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் முதலியவை அனைத்திற்கும் மனமே காரணமாகும். எனவே, பெளதிக பந்தத்திற்கு ஆதாரமாக விளங்கும் மனதின் மீது கற்றறிந்தோர் நம்பிக்கை கொள்வதில்லை. பகவான் ரிஷபதேவர் மனதை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும், மற்றவர்களுக்கு உதாரணம் அமைக்கும்பொருட்டு, தமது யோக சக்திகளைப் பயன்படுத்தவில்லை.”

ரிஷபதேவரின் மறைவு

ரிஷபதேவரின் வரலாற்றினை சுகதேவர் தொடர்ந்தார்: அரசர்களுக்கெல்லாம் அரசரான பகவான் ரிஷபதேவர் அவதூதரைப் போல் பல இடங்களில் சுற்றித் திரிந்தபின் (கர்நாடகத்திலுள்ள) குடகாசலத்தை அடைந்து அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தார். அங்கே அவர் திரிந்து கொண்டிருந்தபோது காட்டுத் தீ பரவியது. ரிஷபதேவரின் உடல் ஆன்மீகமானது என்றாலும், சாதாரண மனிதரைப் போல காட்டுத் தீயிற்கு தமது உடலை வழங்கினார். அவரது உடல் சாம்பலானது. அச்சமயத்தில் அங்கிருந்த விலங்குகள் அனைத்தும் முக்தி பெற்றன.

ஒரு சாதாரண மனிதரைப் போல ரிஷபதேவர் காட்டுத் தீயிற்கு தமது உடலை வழங்குதல்

கற்பனையான மதம்

ரிஷபதேவரின் செயல்களைப் பற்றி கேள்விப்பட்டு அவரது கொள்கைகளை பாவனை செய்து கற்பனையாக ஒரு புது சமயத்தை மன்னன் அர்ஹத் என்பவன் அறிமுகம் செய்தான். அதுவே ஜைன தர்மத்தின் தொடக்கமாகும். இதைப் பின்பற்றுபவர்கள் தினசரி குளிப்பதோ சுத்தம் செய்து கொள்வதோ இல்லை. இவர்கள் முழுமுதற் கடவுளை வழிபடுவதில்லை, முழுமுதற் கடவுளின் இருப்பை ஏற்பதில்லை; இறைவன், பக்தர்கள், வேதங்கள், அந்தணர்கள் ஆகியோரை இழிவுபடுத்துகின்றனர். சில சமயங்களில் தங்களைத் தாங்களே இறைவனாகவும் பிரகடனம் செய்வர். தங்களது மனயூகத்தைப் பின்பற்றி அறியாமை எனும் இருண்ட வாழ்வில் தாமாகவே வீழ்ச்சியுறுகின்றனர்.

ரிஷபதேவரின் புகழ்

ரஜோ மற்றும் தமோ குணங்களின் ஆக்கிரமிப்பில் மாயையின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காகவே பகவான் ரிஷபதேவர் தோன்றினார். முழுமுதற் கடவுளின் அவதாரங்களான பகவான் ரிஷபதேவர் போன்றோரின் செயல்களைப் போற்றிப் புகழ்வதை பாரத மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இச்செயல்கள் அனைத்தும் மனித சமுதாயத்தின் நலனுக்கு மிகவும் மங்கலம் வாய்ந்தவையாகும்.

ரிஷபதேவர் தோன்றியதால், மன்னர் பிரியவிரதரின் வம்சம் புகழ்பெற்றது. யோக சித்திகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் யோகிகளுக்கு மத்தியில் யோகேஸ்வரரான பகவான் ரிஷபதேவர் அனைத்து யோகங்களையும் புறக்கணித்து முக்திக்கான வழியைக் காட்டினார். அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாக விடுதலைப் பெறுவர். அவரது சரிதமானது அனைத்து மங்கலமும் நிரம்பியதாகும். குரு பரம்பரையின் மூலம் இதைக் கேட்பவர்களும் பேசுபவர்களும் பகவான் வாஸுதேவரின் தூய பக்தித் தொண்டை அடைவர்.

மன்னர் பரதர் மானிடம் பாசம் வைத்தல்

பக்தித் தொண்டின் சிறப்பு

சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜாவிடம் தொடர்ந்து கூறினார்: பக்தித் தொண்டு புரிவதில் பக்தர்கள்  பரம ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். மேலும் முக்தியானது அவர்களது வீட்டின் வாசலில் அவர்களுக்குத் தொண்டு செய்ய காத்திருக்கிறது. ஆனால் அவர்களோ அதை முக்கியமாகக் கருதுவதில்லை. அன்பிற்குரிய மன்னரே! முக்தியளிப்பதால் முகுந்தன் என்று அறியப்படுபவரும் முழுமுதற் கடவுளுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே உங்களது குரு, தெய்வம், நண்பர். உங்களது செயல்களை இயக்குபவர் என அனைத்தும் அவரே. அவரே பாண்டவ குலத்தையும் யது குலத்தையும் காப்பவர்.

சில சமயங்களில், அவர் உங்கள் குடும்பத்தின் தூதராகவும் தொண்டராகவும் (தேரோட்டியாகவும்) இருந்து சாதாரண பணிகளையும் செய்துள்ளார். பகவான் தம்மை வழிபடுவோருக்கு முக்தியை எளிதில் வழங்கினாலும் தமக்கு நேரடியாக திருப்தி செய்யும் பக்தித் தொண்டை அவ்வளவு எளிதில் வழங்குவதில்லை. தமது எல்லையற்ற கருணையால் பகவான் ரிஷபதேவர் நமது உண்மையான அடையாளத்தையும் வாழ்வின் இலட்சியத்தையும் தெளிவாகக் காட்டி அருள்புரிகிறார். ஆகையால், அவருக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களை எப்போதும் சமர்ப்பிப்போமாக.

பரதரின் ஆட்சி

பகவான் ரிஷபதேவர் தமது மகனும் மிகச்சிறந்த பக்தனுமான பரதரை உலகை ஆட்சி செய்ய நியமித்தார். மன்னர் பரதர் உலகை ஒரு கோடி வருடங்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். பின்னர் ஆட்சிப் பொறுப்பை தமது மைந்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஹரித்வாரத்தில் உள்ள புலஹாஷ்ரமத்திற்கு சென்றார். அங்குள்ள கண்டகி நதியில் சாளக்ராம வடிவில் விஷ்ணு மூர்த்திகள் கிடைக்கின்றன. பரத மன்னர் அங்கே நந்தவனத்தில் பல வண்ண மலர்கள், துளசி இலைகள், கண்டகி நதிநீர், பல்வேறு வகை வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை பகவானுக்கு படைத்து வழிபட்டார். பகவானின் சேவையில் முழு திருப்தியடைந்து உலக இன்ப ஆசைகள் துளியும் இன்றி உறுதியான பக்தித் தொண்டில் நிலைபெற்றிருந்தார். இவ்வாறாக  தொடர்ச்சியான பக்தித் தொண்டில் ஈடுபட்டதன் மூலம், இயற்கையாகவே பகவானின் மீதான அவரது அன்பு அதிகரித்து இதயம் உருகியது. அவரது உடலில் பாவ பக்தியின் அடையாளமாக மெய்மறந்த நிலையில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக்கெடுத்தல், மயிர்க்கூச்செறிதல் போன்றவை தாமாக வெளிப்பட்டன.

பரதர் மானை நினைத்தபடி உயிர் துறத்தல்

பரத மன்னரின் வழிபாடு

பரத மன்னர் தினமும் மும்முறை நீராடி, மான்தோல் ஆடை அணிந்து ரிக் வேத மந்திரங்களை ஓதி பகவான் நாராயணரை வழிபட்டார். அவர் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “தூய ஸத்வ குணத்திலிருக்கும் முழுமுதற் கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்கி தனது பக்தர்களையும் அனைத்து உயிர்களையும் காக்கின்றார். தமது சொந்த ஆன்மீக சக்தியிலிருந்தே உருவாக்கிய இப்பிரபஞ்சத்திற்குள் தமது விருப்பப்படி பரமாத்மாவாக பிரவேசிக்கிறார். அனைவருக்கும் உற்ற நண்பராக இருந்து நல்லறிவை வழங்கும் உன்னத பகவானுக்கு நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.”

மானைக் காப்பாற்றுதல்

ஒரு நாள் பரத மன்னர் கண்டகி நதிக்கரையில் அமர்ந்து ஓம்காரத்துடன் தொடங்கும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். அப்பொழுது ஒரு பெண் மான் மிகுந்த தாகத்துடன் நீர் அருந்துவதற்காக அந்த நதிக்கரைக்கு வந்தது. அது தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் சிங்கத்தின் பயங்கரமான கர்ஜனை கேட்டது. மான்கள் இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்டவை. இந்தப் பெண் மான் நாலாபுறமும் பார்த்துவிட்டு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தது. சிங்கத்தின் கர்ஜனையை மீண்டும் கேட்ட அப்பெண் மான் இதயம் படபடக்க பயத்தினால், நதியின் அக்கரைக்கு செல்லத் தாவியது.

கர்ப்பிணியான அந்த மான் பயத்தினால் எழும்பித் தாவ, அதன் வயிற்றிலிருந்த குட்டி வெளிப்பட்டு, வேகமாக ஓடும் ஆற்று நீரில் விழுந்தது. தாய் மான் ஆற்றைக் கடந்து சென்றும் குட்டியைப் பிரிந்த வருத்தத்தில் துயருற்று குகையில் விழுந்து உயிர் விட்டது. பரிதாபமாக இறந்த அந்த பெண் மானின் குட்டியானது ஆற்றில் தத்தளிப்பதைக் கண்ட பரதர் மிகுந்த கருணை கொண்டு, தாயற்ற அந்த மான்குட்டியைத் தன் குழந்தையைப் போல் நினைத்து ஆஷ்ரமத்திற்கு எடுத்துச் சென்றார்.

மானின் மீதான பற்றுதல்

அந்த மான்குட்டியிடம் பற்றுக்கொள்ள ஆரம்பித்தார் பரதர். கொடிய விலங்குகளிடமிருந்து அதனைப் பாதுகாப்பதிலும் உணவளித்து ஆதரவளிப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். மான்குட்டியின் மீது பெரும் அன்பும் பற்றுதலும் ஏற்பட்டு பகவானின் பக்தித் தொண்டிற்கான நெறிமுறைகளை மறந்தார். அவர் சிந்தித்தார்: “முழுமுதற் கடவுளின் காலத்தின் ஆதிக்கமானது இந்த மான்குட்டியை அதன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரித்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டதே. என்னையே தாய் தந்தையாக, உடன்பிறந்தவனாக, உறவினனாக, இனத்தவனாக இது கருதுகிறது. என்னையே நம்பி சரணடைந்துள்ள இதற்கு வேறு எதுவும் தெரியாதே. இவ்வாறு சரணடைந்தவரைக் கைவிடுதல் பாவம் என்பதை அறிவேன். ஆகவே, எனது ஆன்மீக வாழ்விற்குத் தடையாக இருப்பினும், இதனைக் காத்து பராமரிப்பது எனது கடமை என உணர்கிறேன்.”

இவ்வாறு அந்த மான்குட்டியிடம் கொண்ட பற்றுதலால், உட்காரும்போதும், படுக்கும்போதும், சுற்றித் திரியும்போதும், நீராடும்போதும், ஏன் உண்ணும்போதும்கூட, அவரது மனம் அதனையே எண்ணியது. பூஜைக்கான சமித்துகள், மலர்கள் முதலியவற்றைச் சேகரிக்கச் செல்லும்போதும் அக்குட்டி மானை கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தன்னுடனேயே அழைத்துச் சென்றார். பகவானை வழிபாடு செய்யும் நேரங்களில்கூட அந்த மானைப் பற்றியே சிந்தித்தவண்ணம் இருந்ததால் அவரது பக்தி தடைபட்டது.

மானாகப் பிறத்தல்

ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதற்காக ஆட்சி, அரண்மனை, சுற்றம், மனைவி, மக்கள் என அனைத்தையும் துறந்த பரத மன்னர் மானின் மீது கொண்ட மோகத்தால் சுயநிலையை மறந்தார். அவர் உடலைத் துறக்கும் தருணம் வந்தது. அவ்வேளையில் மன்னரின் மனம் மானின் மீதே ஆழ்ந்திருந்தது, மானை நினைத்துக் கொண்டே உடலைத் துறந்தார். அதனால், அவர் மறுபிறவியில் மானின் உடலை அடைந்தார்.

இருப்பினும், தமது முந்தைய பக்திமய வாழ்வின் வலிமையினால், தனது முந்தைய பிறவியின் நினைவை அவர் பெற்றிருந்தார். எனவே, அவர் மானின் உடலில் இருந்தாலும் தன் தவறுகளை எண்ணி வருந்தினார். பகவானின் மீதான பக்தித் தொண்டில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தும் ஒரு மானின் மீதான பற்றுதலால் அந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார். இதர மான்களின் கூட்டத்திலிருந்து விலகி, புலஹர் மற்றும் புலஸ்திய முனிவர்கள் வசிக்கும் ஆஷ்ரமத்தை அடைந்தார். அங்கு மானின் உடலிலேயே தவ வாழ்வை மேற்கொண்டு, புனித இடத்தில் நீராடி, அமைதியாக பகவானின் சிந்தனையில் இருந்து தன் உடலை நீத்தார்.

இவ்வாறாக, பரத மன்னர் மானின் உடலில் இருந்தபோதிலும், முழுமையான பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவரது அடுத்த பிறவியைப் பற்றி அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives