மனிதன் கடவுளாக முடியுமா?

உலக வாழ்விலுள்ள எத்தனையோ மனிதர்கள் இதர மனிதர்களால் கடவுளாக ஏற்கப்பட்டு, வழிபடப்படுவதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம். அவர்கள் கடவுளா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

 

ஆஸ்திகர்களைப் போன்ற நாஸ்திகர்கள்

கடவுள் மனிதனைப் படைத்தானா, மனிதன் கடவுளைப் படைத்தானா? என்று சிலர் கேள்வி கேட்பதுண்டு. கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறுபவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், மனிதன் கடவுளைப் படைத்தான் என்று கூறுபவர்கள் நாஸ்திகர்கள் என்றும் அறியப்படுகின்றனர். மனிதன் தனக்கு துன்பம் ஏற்படும்போது, மனநிறைவு அடைவதற்காக, ஏதோ ஓர் உயர் சக்தி இருப்பதாக கற்பனை செய்து, அந்த உயர்சக்தியை ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அழைக்க, சந்தர்ப்பவசமாக அவனுடைய துன்பங்கள் விலக, இல்லாத அந்த உயர்சக்தியை அவன் கடவுளாக நம்பத் தொடங்குகிறான் என்று நாஸ்திகர்கள் கருதுகின்றனர். ஆஸ்திகர்களோ இந்த உலகத்தையும் மனிதனையும் மற்ற உயிர்வாழிகளையும் படைத்த கடவுள், தன்னால் படைக்கப்பட்டவர்கள் தன்னை வணங்கும்போது அவர்களுக்கு நன்மை வழங்கி துன்பத்தைப் போக்குவதாக நம்புகின்றனர்.

நாஸ்திகர்களுக்கும் ஆஸ்திகர்களுக்கும் இடையிலான வாதங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் நாஸ்திக கருத்தும் ஆஸ்திக கருத்தும் இணைந்ததுபோன்ற தோற்றத்துடன் பலர் அவ்வப்போது தோன்றுவதுண்டு. அதாவது, மனிதர்களில் ஒருவரை புனிதர் என்று கருதி, அந்த மனிதனிடம் இருக்கும் சில அதிசய சக்திகளைக் கண்டு மயங்கி, அந்த மனிதனையே கடவுளாக ஏற்று, அவனிடம் பிரார்த்தனை செய்து, சந்தர்ப்பவசத்தினாலோ அந்த மனிதனின் சின்னஞ்சிறு சக்திகளாலோ பணத்தினாலோ பதவியினாலோ அன்பி னாலோ அந்த மனிதனைக் கடவுளாக ஏற்கின்றனர். இவர்கள் நாஸ்திகர்களைப் போன்று கடவுள் இல்லை என்று கூறுபவர்களாக இல்லாவிட்டாலும், சாதாரண மனிதனுக்கு உயர் மதிப்பளித்து, கடவுளாக வழிபடுவதால், வெளியில் பார்ப்பதற்கு இவர்கள் ஆஸ்திகர்களைப் போலத் தோன்றினாலும், உண்மையில் இவர்களும் நாஸ்திகர்களே.

 

மனிதக் கடவுள்கள்

கண்ணில் காணாத கடவுளை நம்புவதைவிட, கண்ணில் காணப்படும் கடவுளை நம்புதல் சிறந்தது என்று அவர்கள் தத்துவம் பேசுவதுமுண்டு. பெற்றெடுத்த அன்னை, நோயை குணப்படுத்திய மருத்துவர், பதவி வழங்கிய அரசியல் தலைவர், ரசனைக்குப் பிடித்த சினிமா கலைஞர், கிரிக்கெட் வீரர், மாயாஜாலம் காட்டிய காவியுடையினர் என இப்பட்டியல் நீண்டு செல்லக்கூடியது. சாதாரண மனிதர்களை ஏதோ காரணத்தினால் கடவுளாக ஏற்று வழிபடுவோர், என்றோ ஒருநாள் அந்த மனிதக் கடவுள் (இப்படியும் ஒரு வார்த்தை உண்டோ), மரணத்தைத் தழுவும்போது, இதயமே வெடித்ததுபோன்று மயங்கி நிற்பதைக் காண்கிறோம். கடவுள் யார் என்பதை முறையாக அறியாத இம்மக்கள், தங்களது கடவுள்(?) மடியும்போது, செய்வதறியாது தவிக்கின்றனர்.

மனிதனைக் கடவுளாக்கும் இந்த மனிதர்களைப் பொறுத்தவரை, கடவுள் என்பவர் தங்களைவிட சற்று உயர்வானவர், அவ்வளவுதான். யாராவது ஒருவர் செல்வந்தராக இருந்து பண உதவி செய்தால், அவர் கடவுளாகி விடுகிறார்; யாராவது ஒருவர் மருத்துவராக இருந்து, மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த நோயாளியைக் காப்பாற்றினால், அவர் கடவுளாகி விடுகிறார்; யாராவது ஒருவர் மருத்துவராக இல்லாமல், ஏதோ சில சக்திகளின் மூலம் ஏதேனும் நோயை குணப்படுத்தினால், அவர் கடவுளாகி விடுகிறார்; யாராவது ஒருவர் ஏழைக் குழந்தைகளுக்கு உணவோ உடையோ இருப்பிடமோ கல்வியோ வழங்கினால், அவர் கடவுளாகி விடுகிறார்; யாராவது ஒருவர் சின்னஞ்சிறு பொருள் ஒன்றை மாயாஜாலத்தினாலோ சித்தியினாலோ வரவழைத்தால், அவர் கடவுளாகி விடுகிறார். இறுதியில் பார்த்தால், யாரெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்கிறார்களோ, அவர்கள் கடவுளாகி விடுகின்றனர். சமுதாயத்திற்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் நிச்சயம் பாராட்டத்தக்கவர்கள், ஆனால் அவர்களைக் கடவுள் என்று அழைக்கலாமா? நிச்சயம் கூடாது. அவ்வாறு வழிபடப்படுவோரில் சிலர், தங்களின் உண்மையான நிலையை உணர்ந்து, தாங்கள் கடவுளல்ல என்பதை தெளிவுபடுத்துவர்; ஆனால் சில முட்டாள்களோ, அறியாத மக்களால் ’கடவுள் என்று அழைக்கப்படும்போது, அதை ஏற்றுக் கொண்டு தங்களையே கடவுளாக அறிவித்து மக்களின் வழிபாட் டையும் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த மூடர்களை என்னவென்று சொல்வது? ஏமாற்றுக்காரர்கள், அயோக்கியர்கள் என எவ்வாறு கூறினாலும் அவ்வார்த்தைகள் போதுமானவையல்ல.

கடவுள், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

யாரேனும் ஒருவன் நம்மிடம் வந்து, தன்னை இந்தியாவின் பிரதமர் என்று அறிமுகப்படுத்தினால், நாம் ஏற்றுக்கொள் வோமா? நிச்சயம் இல்லை. அவனை பைத்தியம் என்றோ, ஏமாற்றுக்காரன் என்றோ நினைத்து பொருட்படுத்த மாட்டோம்; அல்லது காவல் துறையில் புகார் கொடுப்போம். ஆனால் திடீரென்று யாரேனும் முன்வந்து, தன்னையே கடவுள் என்று கூறும்போது, அவனை பலர் ஏற்றுக் கொள்கின்றனர். அவனை பைத்தியம் என்றோ, ஏமாற்றுக்காரன் என்றோ பெரும்பாலும் யாரும் நினைப்பதில்லை. இந்தியா என்னும் நாட்டை ஆள்பவன் “நானே” என்று ஒருவன் அறிவிக்கும்போது, அதனை மறுக்கும் மக்கள், கோடிக்கணக்கான பிரபஞ்சங்களை ஆள்பவன் “நானே” என்று ஒருவன் அறிவிக்கும்போது, அதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஏன்? ஏனெனில், இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் என்பதை அனைவரும் அறிவர்; ஆனால் பிரபஞ்சத்தை ஆள்பவர் யார் என்பதை யாரும் அறிவதில்லை. இந்த மூடத்தனமே பல்வேறு போலிகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது. கடவுள் என்பவர் யார், அவரது சக்திகள் யாவை என்பதை நாம் முறையாகப் புரிந்துகொண்டால், ஏமாற்றுக்காரர்களை நாம் என்றும் நம்ப மாட்டோம்.

கடவுள் என்னும் சொல், கட, உள் என்னும் இருசொற்களின் கலப்புச் சொல்லாகும். இதன் பொருள் என்னவெனில், எல்லாவற்றையும் கடந்தவராகவும் எல்லாவற்றின் உள்ளே இருப்பவராகவும் யார் உள்ளாரோ, அவரே கடவுள். நாம் ஏற்றுக்கொள்ளும் கடவுள், இந்த ஜடவுலகத்தின் துன்பங்களைக் கடந்தவராக உள்ளாரா, குறைபாடுகளைக் கடந்தவராக உள்ளாரா, உலகின் உயர்ந்த நபர்கள் அனைவரையும் கடந்தவராக உள்ளாரா என்று நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். மேலும், அவர், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உயிருக்குள்ளும் உள்ளாரா என்பதையும் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, நாம் வணங்கும் கடவுள் இந்த ஜடவுலகத்தின் துன்பங் களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்றவற்றால் அவதிப்பட்டால், அவர் கடவுளல்ல என்பதை உணர வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு, சுமார் நான்கு வயதே உடைய ஒரு சிறுவனை சில பக்தர்கள் சீண்டிக் கொண்டிருந்தனர். பக்தர் ஒருவரின் சீரிய மகனான அச்சிறுவனிடம், அங்கிருந்த பல்வேறு பக்தர்களைக் காட்டி, “இவர் கடவுள்,” “இவர் கடவுள்,” “இவரே கடவுள்,” என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அச்சிறுவனோ, “இல்லை, இல்லை, இல்லவே இல்லை,” என்று மறுத்துக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் நான் அங்கு வர, என்னை அச்சிறுவனிடம் காட்டிய பக்தர், “இதோ இவரே கடவுள்,” என்று கூறினார். துளியும் யோசிக்காத அச்சிறுவன், “இல்லை, இவர் கடவுளல்ல, கடவுளாக இருக்க முடியாது. கடவுளுக்கு எதற்குக் கண்ணாடி?” என்று எளிய எதார்த்தமான விதத்தில், எனது கண்ணாடியைக் காட்டி மறுப்புத் தெரிவித்தான். ஆச்சரியமடைந்த அனைத்து பக்தர்களும், சிறுவனின் புத்திக் கூர்மையை மிகவும் பாராட்டினர்; அதே சமயத்தில் இந்த அளவு புத்திகூட இல்லாத சில பெரியவர்கள், கண் தெரியாத, காது கேட்காத, கால்களால் நடக்க இயலாமல் சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய, என எத்தனையோ குறைகளுக்கு உட்பட்டிருக்கும் சாதாரண மனிதர்களை கடவுளாக ஏற்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தனர்.

கடவுள் என்பவர் ஒருவரே, ஆனால் தங்களையே கடவுள் என்று கூறுவோர், ஒரே சமயத்தில் பலர் இருக்கிறார்களே! இந்தியாவில் மட்டும் குறைந்தது 50பேர் தங்களைத் தாங்களே கடவுள் என்று கூறி அலைவதைக் காண்கிறோம். இதை வைத்தே இவர்களில் யாருமே கடவுள் அல்ல என்பதை எளிதில் உணரலாம். கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்தபோது, பௌண்டரகன் என்பவன் தன்னையே கடவுள் என்று போலித்தனமாக கூறியதால், கிருஷ்ணர் அவனைக் கொன்றார்; ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட இல்லை. அறியாத அப்பாவி மக்களோ, உடலின் பிரச்சனைகளைப் போக்க இவர்களை அணுகுகின்றனர், உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்மாவைப் பற்றிய ஆர்வம் இம்மக்களுக்கும் இல்லை, இந்த போலிக் கடவுள்களுக்கும் இல்லை; பல்வேறு நோய்களால் சில சமயங்களில் இந்த போலிக் கடவுள்கள் அவதிப்பட, அறியாமையிலுள்ள மக்கள் அக்கடவுளுக்காக வேறு கடவுளிடம் (எந்தக் கடவுளிடம்?) வழிபடுகின்றனர்–என்னே வினோதம்!

கடவுளின் தன்மைகள்

கடவுள் என்பவர் சர்வ சக்தி பொருந்தியவராக, எல்லாவற்றையும் படைத்தவராக, எல்லாவற்றையும் கட்டுப்படுத்து பவராக, எல்லாவற்றையும் பராமரிப்பவராக, பூரண சுதந்திரம் உடையவராக இருக்க வேண்டும்.

சர்வ சக்தி பொருந்தியவர் என்றால் அவரால் இயலாதது என்று எதுவும் இருக்கக் கூடாது, இருக்க முடியாது. அவர் ஏதேனும் செயலைச் செய்ய விரும்பினால், எந்தத் தடங்கலுமின்றி செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். உதாரணமாக, அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராட விரும்பிய கிருஷ்ணர், தான் இருந்த இடத்திலேயே அனைத்து புண்ணிய நதிகளையும் வரவழைத்து அங்கேயே நீராடினார் (அவ்வாறு தோன்றியதே கோவர்த்தன மலையின் அடிவாரத்தில் உள்ள சியாம குண்டம் எனப்படும் தீர்த்தம்). புண்ணிய நதிகளிலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் எடுத்துவர வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இல்லை, அதற்காக பல வருடங்கள் யோசித்து திட்டம் தீட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

எல்லாவற்றையும் படைத்தவர் என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் அவரால் படைக்கப்பட்டதாக, அவருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். அவர் இவ்வுலகில் தோன்றும் போது, தங்கம், வெள்ளி, விலைமதிப்பற்ற கற்கள் போன்றவற்றை சாதாரண மனிதனால் கற்பனை செய்ய இயலாத அளவில் படைக்கக்கூடியவராக இருக்க வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், அவர் தங்கத்தை வரவழைக்க நினைத்தால் மலை போன்று குவிக்கும் சக்தி பெற்றவராக இருக்க வேண்டும், வெறும் மோதிரமோ சங்கிலியோ அவரை கடவுள் என்று நிரூபிப்பதற்குப் போதுமானவையல்ல. உதாரணமாக, கிருஷ்ணர் இவ்வுலகில் தனது லீலைகளை அரங்கேற்றியபோது, தனது இராணிகள் ஒவ்வொருவருக்காகவும் விலைமதிக்க முடியாத தங்கம், வைரம், தந்தம் போன்ற எண்ணற்ற பொருள்களால் அடங்கிய பல்வேறு மாட மாளிகைகளைப் படைத்தார், இந்திரனைக் காட்டிலும் அதிக வசதிகளை குசேலருக்காக படைத்தார். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான கடவுளை, அவர் படைத்த மனிதர்களில் ஒருவருடன் சமப்படுத்துவது நம் அறியாமையை உள்ளங்கை நெல்லிக்கனி போன்று காட்டுவதாகும்.

எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் என்றால், இவ்வுலகிலுள்ள அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இயற்கை அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அவர் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. உதாரணமாக, கிருஷ்ணர் வெறும் ஏழு வயது சிறுவனாக இருந்தபோது, பல மைல் சுற்றளவுடைய கோவர்தன மலையைத் தனது இடது கை சுண்டு விரலால் மிகவும் எளிதாக எந்த சிரமமும் இன்றி ஏழு நாள்களுக்கு உயர்த்திப் பிடித்தார். குருக்ஷேத்திர போர்க்களத்தில் சூரிய னையே மறைத்தார். ஆனால் இன்றைய மனிதக் கடவுள்கள் மழைக்காக யாகம் நடத்துவதும், சுனாமி எழும்போது அதைத் தடுக்க இயலாமல் வெறுமனே அனுதாபம் தெரிவிப்பதும் அவர்களது உண்மை நிலையை எடுத்துரைக்கின்றது.

எல்லாவற்றையும் பராமரிப்பவர் என்றால், இவ்வுலகிலுள்ள எல்லா ஜீவன்களையும் அவரே பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்று பொருள். உதாரணமாக, கிருஷ்ணர் தனது லீலைகளை அரங்கேற்றியபோது, அவர் எல்லா மக்களையும் பாதுகாத்து வந்தார்; அவரது ஆட்சியில் யாரும் நோய்வாய்ப்படவில்லை, யாரும் அகால மரணம் எய்தவில்லை. ஆனால் இன்றைய மனிதக் கடவுள்களோ நோய் வராமல் தடுப்பதற்குப் பதிலாக நோயை குணப்படுத்த மருத்துவமனைகளை திறக்கின்றனர், அங்குள்ள பலரும் நோய் குணமாகாமல் மடிகின்றனர்; தன்னையும் தனது இயக்கத்தையும் பராமரிப்பதற்குக்கூட இவர்கள் மற்றவர் களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர்.

பூரண சுதந்திரமுடையவர் என்றால், நினைத்ததை செய்யும் சக்தி பெற்றவராக, யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதவராக இருக்க வேண்டும். உதாரணமாக, கிருஷ்ணரை சிறைபிடிக்க துரியோதனன் விரும்பியபோது, அவர் தன்னைப் பல்வேறு ரூபங்களாக வியாபித்து, “என்னை உன்னால் பிடிக்க முடியாது,” என்று தெரிவித்தார். ஆனால் இன்றைய மனிதக் கடவுள்கள் அவ்வப்போது சிறைக்குச் செல்வது வழக்கமாக உள்ளது; அவர்களால் இயற்கையின் அழைப்பைக்கூட கட்டுப்படுத்த முடியாது, பூரண சுதந்திரத்தைப் பற்றி என்ன சொல்வது?

மேலும், கடவுள் என்பவர், அழகு, அறிவு, செல்வம், பலம், புகழ், துறவு ஆகிய குணங்களை பூரணமாகப் பெற்றிருக்க வேண்டும். பூரணமாக என்றால், இக்குணங்களில் அவரை விடச் சிறந்தவர் யாரும் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கிருஷ்ணர் கோடானகோடி மன்மதர்களை மயக்கும் அழகுடையவராக இருந்தார், அவர் என்றும் வயோதிகத்தை அடைந்தது கிடையாது, தனது அழகை இழந்தது கிடையாது. கிருஷ்ணர் எல்லாவற்றையும் அறிந்தவராக இருந்தார், கோடிக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் அவதரித்தபோது தான் செய்த செயல்களைக்கூட அவர் அறிந்திருந்தார், 64 கலைகளை 64 நாள்களில் கற்றார், பறவைகள், மிருகங்கள் என எல்லோரின் மொழியையும் அறிந்திருந்தார்; இன்றைய கடவுள்கள் தாய்மொழியைக்கூட தெளிவாக பேசத் தெரியாதவர்கள். கிருஷ்ணரின் செல்வம் அளவிட முடியாதது, அவர் யாரிடமும் என்றும் பணம் வசூலித்ததில்லை. அவரது வலிமையை மதிப்பிட முடியாது, சிறு வயதிலிருந்தே அவர் பல்வேறு அசுரர்களைக் கொன்றார்; ஆனால் இன்றைய கடவுள்களுக்குப் பாதுகாப்பு வசதிகள் அவசியமாக உள்ளன. அவரது புகழ் இப்பூமியில் மட்டுமின்றி மூவுலகமும் பரவிய ஒன்று, மேலும், அவரைப் போன்ற துறவு மனப்பான்மை கொண்டோர் வேறு எவரும் இல்லை.

இறுதியாகச் சில துளிகள்

இவற்றிலிருந்து நாம் அறிவது என்னவெனில், கடவுள் எனப்படுபவர் சாதாரண மனிதனைப் போன்று இருக்கக் கூடாது, இருக்க முடியாது. மனிதனாக இருப்பவர் (இருந்தவர்) என்றாவது ஒருநாள் கடவுளாக மாறலாம் என்பதும் சாத்தியமல்ல. சாதாரண மனிதன் மட்டுமல்ல, அசாதாரணமான மனிதன்கூட என்றுமே கடவுளாக முடியாது. கடவுள் என்றும் கடவுளே; அவர் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. கடவுள் சாதாரண மனிதனைப் போல பிறந்து இறப்பதில்லை, பிறந்து இறக்கும் சாதாரண மனிதன் என்றும் கடவுளாவதில்லை.

எனவே, தங்களையே கடவுளாகக் கூறுபவர்கள், மலையைத் தூக்கட்டும், விஸ்வரூபத்தைக் காட்டட்டும், சூரியனை மறைக்கட்டும், ஆயிரம் தலை கொண்ட பாம்பின் மீது நடனமாடட்டும், ஆயிரக்கணக்கான உருவில் தன்னை விஸ்தரிக்கட்டும், உலகில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் செய்யட்டும்–அதன்பின்னர் வேண்டுமானால், அவர் கடவுளா என்பதை யோசித்துப் பார்க்கலாம். அதுவரை அத்தகு யோசனைக்குக்கூட இடம் கிடையாது. மந்த புத்தியுடைய அடிமட்ட முட்டாள்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்களைக் கடவுளாக ஏற்று வழிபடுவர், அறிவுடையவர்களோ நிச்சயம் இதில் ஈடுபட மாட்டார்கள். மனிதக் கடவுள்களில் பெரும்பாலானோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சமூகச் சேவைகளில் ஈடுபடுகின்றனர், அத்தகு சேவைகளுக்காக பலரிடமிருந்து பாராட்டும் பெறுகின்றனர்; ஆனால் அவர்கள் செய்யும் புண்ணியச் செயல்களைக் காட்டிலும் தங்களையே கடவுள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதால் வரும் பாவங்கள் கொடியவை என்பதால், அறிவுடைய மக்கள் இவர்களின் மீது துளியளவும் மதிப்பு வைப்பதில்லை.

சிறுவனாக இருந்தபோதே 1000 தலைகள் கொண்ட காளியனின் மீது நடனமாடிய முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர்

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

2 Comments

  1. Venkatraman September 2, 2017 at 12:15 pm - Reply

    Dear Mr. Giridharidas
    Rama was hailed as the LORD Himself, but He preferred to manifest himself as a simple human being with all the attendant attributes of a human being. If you could properly understand this the answer lies there

    • Tamil BTG Staff September 7, 2017 at 9:59 am - Reply

      But Rama is clearly understood as Lord through Sastra. His manifestation of humanly nature was part of His lila, and we can still see that he exhibited high level of super natural things in life.

Leave A Comment