கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

சமீபத்தில் வாசகர் ஒருவர், “குறளின் குரல்” என்ற தலைப்பில், கீதையின் வரிகள் திருக்குறளின் மூலமாக விளக்கப்படும் பகுதியினை விமர்சித்து, எமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திலிருந்து சில வரிகள்:

பகவத் கீதையை திருக்குறளுடன் ஒப்பிடுவதால், கீதையின் மதிப்பு குறைக்கப்படுகிறது. கீதையின் அறிவு திருக்குறளில் ஏற்கனவே உள்ளது என்று கூறுதல், திருக்குறளுக்கு தேவையற்ற உயர் மதிப்பினை வழங்குகிறது. இத்தகு ஒப்புமை முற்றிலும் தவறானது என்பதே எனது அபிப்பிராயம்.

இது பகவத் கீதையை அணுகுவதற்கான தவறான வழியாகும். இத்தகு ஒப்புமையினால், வருங்காலத்தில் பக்தர்கள் ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் போன்ற அங்கீகாரம் பெற்ற சாஸ்திரங்களுக்கு ஆச்சாரியர்கள் கொடுத்த விளக்கங்களுக்கு மாறாக, திருக்குறளை மேற்கோள் காட்டத் தொடங்குவர். கிருஷ்ணரின் வார்த்தை எங்கே? யார் என்றே தெரியாத திருவள்ளுவரின் வார்த்தை எங்கே? இத்தகு ஒப்புமை நிச்சயம் குற்றமாகும். தயவுசெய்து இதனை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும்.

திருக்குறளின் ஒரு முக்கியமான பகுதி காமத்துப்பால். இதில் திருவள்ளுவர் இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரிமாற்றங்களையும் உணர்ச்சிகளையும் விவரித்துள்ளார். அத்தகு உணர்ச்சிகளை விவரிக்கும் நூலை எவ்வாறு நீதி நூலாக ஏற்க முடியும்?

இக்கடிதத்தினைத் தொடர்ந்து எங்களுக்கிடையில் பல கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இக்கடிதத்திற்கான எமது பதில் பகவத் தரிசன வாசகர்களுக்கும் இஸ்கான் பக்தர்களுக்கும் பொதுவான உதவியாக இருக்கலாம் என்பதால், அதன் சாரத்தை இங்கே வெளியிடுகிறோம்.

திருக்குறள்–சில அடிப்படை

திருக்குறளை அனைவரும் அறிவர், ஆயினும் பெரும்பாலானோர் அதனை முறையாக அறியார். எனவே, இந்த சிறிய அறிமுகம் இங்கே.

திருக்குறள் வேத கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல். இது மறுக்க முடியாத உண்மை. இதன் ஆசிரியர் யார், அவரது வரலாறு என்ன என்பதுகுறித்து நம்மிடம் துல்லியமான விவரங்கள் இல்லை என்றபோதிலும், அவரது நூலைப் படிக்கும்போது, அவர் நிச்சயமாக வேத தர்மத்தைப் பின்பற்றியவர் என்பதை அறியலாம். வேதங்களின்படி மனித வாழ்வின் பக்குவநிலையானது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காக எடுத்துரைக்கப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்தே திருவள்ளுவர் தனது திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாகப் பிரித்துள்ளார். வீடுபேறு குறித்து திருக்குறளில் தனிப்பட்ட பகுதி இல்லை என்றாலும், அறத்துப்பாலில் இருக்கும் ஒரு பகுதி வீடுபேற்றினை எடுத்துரைக்கின்றது. எனவே, திருக்குறள் வேத நெறியான புருஷார்தத்தை (அறம், பொருள், இன்பம், வீடு) எடுத்துரைக்கும் நூல் என்பதில் ஐயமில்லை.

ஒரு சிலர், திருவள்ளுவர் ஜைன மதத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்; ஆனால் திருக்குறளில் கூறப்பட்டுள்ள மறுபிறவி, வீடுபேறு அடைதல் முதலிய தத்துவங்கள் ஜைன மதத்தில் கிடையாது என்பது அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை.

முற்காலத்தில், பல்வேறு சைவர்களும் வைணவர்களும் திருக்குறளைப் பற்றி பேசியுள்ளனர், விளக்கமும் வழங்கியுள்ளனர். அவ்வெல்லா விளக்கங்களிலும் இன்றும்கூட மிகமிக பிரபலமானது பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பரிமேலழகர் வழங்கிய உரையாகும். அவர் காஞ்சிபுரத்தின் உலகளந்த பெருமாள் கோயிலைச் சார்ந்த அர்ச்சகர்களின் பரம்பரையைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும், திருக்குறளில் திருவள்ளுவர் இறைவனை தாமரைக் கண்களை உடையவர், தாமரையில் வீற்றிருப்பவர் என்றெல்லாம் புகழ்கிறார்–இப்புகழ்ச்சிகள் நிச்சயம் பகவான் விஷ்ணுவைக் குறிப்பவை. முதல் குறளானது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகமான ஜன்மாத்யஸ்ய யத: என்பதைத் தழுவி இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு வைஷ்ணவர்கள் திருவள்ளுவரை வைஷ்ணவர் என்றும், பல்வேறு சைவர்கள் அவரை சைவர் என்றும் வாதிடுகின்றனர். எனினும், அந்த வாதம் இங்கே அவசியமில்லை. அவருடைய நூலிலுள்ள வார்த்தைகள் எதைச் சொல்கின்றன என்பதை மட்டும் பார்ப்போம்.

வேத வழி வந்த திருக்குறள்

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன. இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது, அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

“என்பர்” என்று முடியும் குறள்கள் ஏராளம். அதாவது, வள்ளுவர் தனது பூர்விக மாமனிதர்களை இங்கே சுட்டிக்காட்டி, தனது நூல் அவர்களுடைய கூற்றுகளிலிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இதை அடிப்படையாக வைத்து, திருவையாறு கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியரும் சமஸ்கிருதம், தமிழ் என இரு மொழியிலும் புலமை பெற்றவருமான திரு சுப்ரமணிய சாஸ்திரிகள், “பாலர் உரை” என்ற தலைப்பில் திருக்குறளின் அறத்துப்பாலிற்கு விளக்கமளித்துள்ளார். அங்கே அவர் ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.

திரு இராமசந்திர தீட்சிதர் அவர்கள் எல்லா குறளிற்கும் சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கமளித்துள்ளார்: முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும், இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும், மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.

திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

எப்படிப் பார்த்தாலும், திருக்குறள் வேத எண்ணங்களைத் தழுவியது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

திருவள்ளுவர் இறைவனை தாமரையில் வீற்றிருப்பவர் என்று புகழ்கிறார்.

பகவத் தரிசனத்தில் இதற்கான தேவை

இதெல்லாம் சரி, பகவத் தரிசனத்தில் இதற்கென்ன அவசியம் என்று நீங்கள் கேட்கலாம்.

திருக்குறள் தமிழில் நன்கு அறியப்பட்ட நூலாக இருப்பினும், பெரும்பாலானோர் பள்ளிக்கூடத்தில் கற்றதற்கு அப்பால் திருக்குறளைக் கற்பதில்லை. இதனால் திருக்குறளில் இருக்கும் பல்வேறு வைதிக கருத்துகள் மக்களிடையே செல்லாமல் தடுக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, (திராவிடர் கழகம் மற்றும் போலி மதச்சார்பின்மையின் விளைவாக) தமிழகத்தின் தற்போதைய கல்விமுறையில், ஸநாதன தர்மம் சார்ந்த திருக்குறளின் பகுதிகளை பள்ளியில் நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை.

நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிடினும், திருக்குறள் தமிழ் மக்களிடையே ஊறிய நூல். எனவே, அதிலுள்ள வைதிக விளக்கங்களை நாம் வழங்காவிடில், திருக்குறள் நாஸ்திகர்களால் வழங்கப்படும் விளக்கங்களால் மட்டும் புரிந்துகொள்ளப்படும் நிலை வந்துவிடும். திருக்குறளும் நாஸ்திக நூல் என்றுகூட மக்கள் நினைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

இதனால், நாஸ்திகர்களும் மேலோட்டமாக ஏற்கக் கூடிய ஒரு நூலைக் கொண்டு வைதிக தத்துவத்தினை எடுத்துரைப்பதற்கான சிறு முயற்சியே இப்பகுதி. நிச்சயம் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிக்கும் இஸ்கான் பக்தர்களுக்கு திருக்குறளிற்கான எந்த அவசியமும் இல்லை. இருப்பினும், தமிழ் மக்களிடையே பகவத் கீதையைப் பிரச்சாரம் செய்யும் நமது பணிக்கு திருக்குறள் உதவியாக இருக்க முடியும்.

அதுமட்டுமின்றி, பத்திரிகை என்று வந்துவிட்டால், இங்கே பலசுவைகளை வாசகர்களுக்கு வழங்குதல் அவசியம். அதே சமயத்தில், யாம் ஒருபோதும் தத்துவத்தில் விட்டுக் கொடுப்பதில்லை. தமிழையும் திருக்குறளையும் நன்கறிந்த பல்வேறு அன்பர்கள் எமது இம்முயற்சியினை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதையுடன் சமப்படுத்துவதா

கீதையுடன் சமப்படுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டு நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல; ஏனெனில், யாம் அதுபோன்று சமப்படுத்துவதில்லை. பகவத் கீதையின் கூற்றுகள் தமிழ் மக்களிடம் புதைந்துள்ள திருக்குறளிலும் இருக்கின்றன என்றுதான் யாம் கூறுகின்றோமே தவிர, பகவத் கீதையும் திருக்குறளும் சமம் என்று யாம் ஒருபோதும் கூறவில்லையே. தங்களுடைய அத்தகு எண்ணம் முற்றிலும் தவறானது. ஒவ்வொரு மாதமும் “குறளின் குரல்” பகுதியில் யாம் எழுதுகிறோம், “பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.” இதன் மூலம் பகவத் கீதை அனைத்திலும் உயர்ந்த சாஸ்திரம் என்பதை யாம் தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறோம். திருக்குறள் கீதையினால் பெருமையடைகிறது என்றுதான் யாம் கூறுகிறோமே தவிர, கீதை திருக்குறளால் பெருமையடைகிறது என்று கூறவேயில்லை.

எனவே, கீதையின் மதிப்பினை நாங்கள் குறைக்கின்றோம் என்ற கூற்றில் துளியளவும் உண்மையில்லை. மக்களை கீதைக்கு அருகில் கொண்டு வருவதே எமது நோக்கம். கீதையில் உள்ள அனைத்தும் திருக்குறளில் உள்ளது என்றும் யாம் எங்குமே கூறவில்லை.

காமத்தை எடுத்துரைக்கும் நூலா?

அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை நான்கும் வேத வாழ்வின் நான்கு நோக்கங்கள் என்பதை யாம் ஏற்கனவே எடுத்துரைத்தோம். எனவே, இந்த நான்கு நோக்கங்களை எடுத்துரைக்கும் நூலில் காமத்துப்பால் (இன்பம்) இடம்பெற்றுள்ளது. காமம் வாழ்வின் பிரிக்கவியலாத ஒரு பகுதி என்பதால், வாழ்விற்கு வழிகாட்டும் திருக்குறளில் காமத்துப்பால் இடம்பெறுவது இயற்கையே. தர்மத்திற்கு விரோதமில்லாத காமத்தினை தம்முடைய பிரதிநிதி என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.11) கூறுகிறார்.

மேலும், திருக்குறள் காமத்தைப் பற்றி பேசும் போதிலும், இது காமத்தைத் தூண்டும் அசிங்கமான வகையில் எழுதப்படவில்லை. இதனைப் புரிந்து கொள்வதற்கு முறையான வேதப் பண்பாட்டின் பின்னணி அவசியம். வேத வழக்கத்தில், காமம் என்பது ஒருபோதும் அறத்திற்கும் பொருளுக்கும் விரோதமானதல்ல; உண்மையில், இம்மூன்றும் வாழ்வில் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன.

 

பிரச்சாரத்திற்கான உதவி நூல்

ஸ்ரீல பிரபுபாதர் பல நேரங்களில் சாணக்கிய பண்டிதரின் நீதி சாஸ்திரங்களை எடுத்துரைத்து கருத்துக்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்பதை கவனித்தல் அவசியம். நிச்சயமாக சாணக்கியர் ஒரு வைஷ்ணவர் அல்ல. ஆயினும், நீதி நெறிகளில் அவருடைய கூற்றுகள் அதிகாரம் பொருந்தியவை என்று கருதப்படுவதால், ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அதுபோலவே, திருக்குறளும் ஒரு நீதி நூல் என்பதால், அதனை மேற்கோள் காட்டுவதில் பிழையேதும் இல்லை.

பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் “மறுபிறவி” என்னும் நூலில் பல்வேறு மேற்கத்தியர்கள் மறுபிறவியைப் பற்றி எடுத்துரைத்த கூற்றுகள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது, நல்ல கருத்துகள் யாரால் கூறப்பட்டாலும் அதனை ஏற்று உபயோகிக்கலாம் என்பதே நமது கோட்பாடு. இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டும் எமது ஆன்மீக குருவாகிய தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்களின் நேரடி அறிவுரையின்படியும், யாம் இந்த தொடர் கட்டுரையைத் தொடங்க முடிவு செய்தோம். அதனை எவ்வாறு வழங்குவது என்று யோசித்தபோது, நமது வைஷ்ணவ தத்துவத்திலும் தமிழ் இலக்கியங்களிலும் நல்லறிவு பெற்ற அறிஞரான திரு தயாள கோவிந்த தாஸ் அவர்கள் “குறளின் குரல்” என்னும் சிறிய நூலை தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்களின் ஒத்துழைப்பில் இஸ்கான் கோயம்புத்தூர் மூலமாக பிரசுரித்திருந்தது நினைவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, யாம் பகவத் தரிசன வாசகர்களுக்கு “குறளின் குரல்” பகுதியினை இப்போது படிப்படியாக வழங்கி வருகிறோம்.

எனவே, எமது இப்பணி எவ்விதத்திலும் குரு பரம்பரையின் வழிகாட்டுதலிலிருந்து விலகியதோ கீதையின் மதிப்பினைக் குறைப்பதோ அல்ல.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives