ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்
கீதையில் கூறப்பட்டுள்ள வர்ணாஷ்ரம அமைப்பிற்கும், நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும், பெண் விடுதலை குறித்தும் ஸ்ரீல பிரபுபாதர் ஜூலை 1975இல் ஸாண்டி நிக்ஸன் எனும் பெண் நிருபருடன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு பகுதி.

ஸாண்டி நிக்ஸன்: புராதன இந்திய ஜாதி அமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தாங்கள் முயன்று வருகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: புராதன ஜாதி அமைப்பை அறிமுகப்படுத்த நாங்கள் முயல்கிறோம் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்? முதலில் அதைச் சற்று விளக்கவும். நாங்கள் அதுபோன்று முயற்சி செய்தால், நீங்கள் இவ்வாறு வினவுவதில் அர்த்தமுள்ளது. அதுபோன்ற முயற்சி எதுவும் இல்லாதபோது ஏன் இதுபோன்று கேட்கிறீர்கள்?

ஸாண்டி நிக்ஸன்: அப்படியெனில், பகவத் கீதை இந்த ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறதே.

ஸ்ரீல பிரபுபாதர்: கீதை ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

ஸாண்டி நிக்ஸன்: ஆம், நான்கு வர்ணங்களைப் பற்றியும் தீண்டத்தகாதவர்களைப் பற்றியும் கூறுகிறதே.

ஸ்ரீல பிரபுபாதர்: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ, செயல்களுக்கும் தன்மைக்கும் ஏற்ப நால்வகை பிரிவுகள் மனிதரில் உள்ளன என்றுதான் பகவத் கீதை (4.13) குறிப்பிடுகிறது. இது ஜாதி அமைப்பு என்று உங்களுக்கு கூறியது யார்? இது ஜாதி அமைப்பு அல்ல. உதாரணத்திற்கு பொறியியல் வல்லுநர்களும் மருத்துவர்களும் சமுதாயத்தில் உள்ளனர். அவர்களை நீங்கள், அவர் பொறியாளர் ஜாதி, அவர் மருத்துவர் ஜாதி.” என்று கூறவியலுமா? ஒருவர் தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தால், நாம் அவரை மருத்துவராக ஏற்கிறோம். ஒருவர் தகுதிவாய்ந்த பொறியாளராக இருந்தால், அவரை பொறியாளராக ஏற்கிறோம். அதுபோலவே, பகவத் கீதையில், உயர்ந்த அறிவுடையவர்களின் பிரிவு, ஆளுநர்களின் பிரிவு, உற்பத்தியாளர்களின் பிரிவு, சாதாரண தொழிலாளர்களின் பிரிவு என நால்வகை பிரிவுகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவை ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளன. இவர் இன்னஇன்ன பிரிவைச் சார்ந்தவர்.” என்பதைக் கண்டறிவது எவ்வாறு எனும் முறையைத்தான் பகவத் கீதை விளக்குகிறது. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன் என்று கீதை குறிப்பிடவில்லை. நீங்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

இந்த பிரிவுகள் இயற்கையாகவே சமுதாயத்தில் உள்ளன. மனிதரில் ஒருவகையினர் மிகுந்த புத்திசாலிகளாக உள்ளனர். அனைவரும் சமமான அறிவை கொண்டுள்ளனரா என்ன? மிகுந்த புத்திசாலி களான மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். அந்த பிரிவினரின் அறிகுறிகள் என்ன? என்பதை கீதை விவரிக்கின்றது. ஒருவனிடம் அந்த அறிகுறிகள் காணப்படும்போது, அவன் முதல்தர மனிதன் எனப்படுகிறான். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். முதல்தர மனிதர்களற்ற சமுதாயத்தினால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே, முதல்தர மனிதர்கள் சமுதாயத்தில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

உதாரணமாக, புத்திசாலி மாணவன் மருத்துவர் எனும் தகுதியைப் பெற மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற வேண்டுமல்லவா? அதுபோலவே கிருஷ்ண பக்தி இயக்கத்தில் புத்திசாலியான மனிதர்களுக்கு மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவது எவ்வாறு? உண்மை பேசுதல், உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், சாஸ்திரங்களைக் கற்றல், கற்றதை வாழ்வில் கடைப்பிடித்தல், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தல் உள்ளிட்ட அனுஷ்டானங்கள் வழங்கப்படுகின்றன.

முதல்தர மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இவர்களெல்லாம் (அருகிலிருந்த சீடர்களைச் சுட்டிக்காட்டியபடி) தங்களது திறமையை நல்ல முறையில் பயன்படுத்த பயிற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற புத்திசாலி மனிதனே சமுதாயத்திற்கான தேவை. எனவே, பயிற்சி மிகவும் அவசியமாகிறது. நாங்கள் ஜாதி அமைப்பை அறிமுகப்படுத்தவில்லை. அந்த ஜாதி அமைப்பில் பிராமண குடும்பத்தில் பிறந்த அயோக்கியனும் பிராமணனாகிறான். நாங்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. பிராமணனாவதற்கு தரமான பயிற்சியை மேற்கொண்டவனையே நாங்கள் பிராமணராக ஏற்கிறோம். அவர் இந்தியாவில் பிறந்தவரா, ஐரோப்பாவில் பிறந்தவரா, அமெரிக்காவில் பிறந்தவரா என்பனவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். இதுவே பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜாதி அமைப்பின்படி, பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் மூன்றாம்தர மனிதனுக்குரிய தீய பழக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவன் பிறப்பின் அடிப்படையில் பிராமணனாக ஏற்கப்படுகிறான். ஆயினும், ஒருவன் மிகுந்த புத்திசாலியாக, முதல்தர மனிதனுக்குரிய பழக்கங்களுடன் பயிற்சிகளைப் பெற தகுதியானவனாக இருந்தாலும், அவன் சூத்திர குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தினால் சூத்திரனாக ஏற்கப்படுகிறான்.” நாங்கள் இந்த அபத்தங்களை  நிறுத்துவதற்கு விரும்புகிறோம். அவன் இந்தியனா ஐரோப்பியனா, பிறப்பினால் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்பதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை. அவை ஒரு பொருட்டே அல்ல. புத்திசாலி மனிதர்களைத் தேர்ந்தெடுத்து எல்லா வகையிலும் அவர்கள் முதல்தர மனிதராக விளங்குவதற்கான பயிற்சியை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம்.

ஸாண்டி நிக்ஸன்: பெண் விடுதலையைப் பற்றி தங்களது கருத்தென்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: சம உரிமை என்ற பெயரில் பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர். ஓர் ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள், காதலர்களாகி பாலுறவில் ஈடுபடுகின்றனர். பெண் கருத்தரித்த பின்னர், ஆண் அவளை விட்டு விலகிச் செல்கிறான். குழந்தைக்கான பொறுப்பை பெண் வகிக்க நேரிடுகிறது. அவள் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள், அல்லது கருச்சிதைவு செய்து குழந்தையைக் கொன்று விடுகிறாள். இதுதான் பெண் விடுதலை. இந்தியாவில் ஒரு பெண் வறுமையில் உழன்றாலும், அவள் தன் கணவனின் பொறுப்பில் வாழ்கிறாள். அவனும் அவளைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறாக, அவள் கருச்சிதைவு செய்து குழந்தையைக் கொல்வதற்கோ பிச்சை எடுத்து குழந்தையைக் காப்பாற்றுவதற்கோ தள்ளப்படுவதில்லை. ஆகவே, எது பெண் விடுதலை? கணவனின் பொறுப்பில் வாழ்வதா அல்லது எல்லாராலும் அனுபவிக்கப்படுவதா?

ஸாண்டி நிக்ஸன்: ஆன்மீக வாழ்வில் எப்படி? கிருஷ்ண உணர்வில் பெண்களும் வெற்றி பெற முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: பாலின வேறுபாட்டின் அடிப்படையில் நாங்கள் பாகுபடுத்துவதில்லை. நாங்கள் கிருஷ்ண உணர்வை ஆண்கள், பெண்கள் உட்பட அனைவருக்கும் சமமாக வழங்குகிறோம். பெண்கள், ஆண்கள், ஏழை, பணக்காரன் என அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். கீதையில் கிருஷ்ணர் (5.18) கற்றறிந்த பண்டிதன் அனைவரையும் சம நோக்கில் காண்பதாகக் கூறுகிறார்.

தகுதி வாய்ந்த மருத்துவரையும் பொறியாளரையும் எவ்வாறு ஏற்கின்றோமோ, அவ்வாறே அறிவுடையோர், ஆளுநர், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என்பதையும் ஏற்க வேண்டும்.

சம உரிமை என்ற பெயரில் ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆண் விட்டுச் செல்லும்போது, குழந்தைக்கான பொறுப்பை அவள் ஏற்க நேரிடுகிறது.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment