தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

Must read

அனைத்து பக்தர்களும் பேராவலுடன் காத்திருந்த பொன்நாள், தமிழுலக பக்தர்களின் வரலாற்றில் மிக முக்கியமான நன்நாள், தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல்முறையாக ஒரு வங்காள காவியம் தமிழில் வெளிவந்த திருநாள்-அதுவே மே 5, 2018.

சென்னையின் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் நிகழ்ந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரான திரு மாஃபா க.பாண்டியராஜன், WinTV தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு தேவநாதன் யாதவ், தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி இயக்குநரான திரு ரெங்கராஜ் பாண்டே, குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியரான A.M. ராஜகோபாலன், பாரதிய ஜனதா கட்சியினுடைய ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவரான திரு A.N.S பிரசாத், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரான திரு கோ. விசயராகவன், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரான திரு ந. அருள் முதலிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தைச் சார்ந்த பிரபல சொற்பொழிவாளர்களான ஸ்ரீமான்  M.A. வேங்கட கிருஷ்ணன், ஸ்ரீமான் M.V. அனந்தபத்மநாபாசாரியர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  ஸ்ரீரங்கத்திற்கு வந்தபோது, அவர் ஸ்ரீமான் வேங்கட பட்டரின் இல்லத்தில் தங்கியிருந்ததை அனைவரும் அறிவோம். அந்த வம்சாவளியில் வரும் ஸ்ரீமான் முரளி பட்டர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இஸ்கான் சார்பில் தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, ஸ்ரீமான் பீம தாஸ், ஸ்ரீமான் ராதே ஷ்யாம தாஸ், ஸ்ரீமான் ஆனந்த தீர்த்த தாஸ் முதலிய தலைவர்களுடன் தமிழகத்தின் எல்லா கோயில்களைச் சார்ந்த தலைவர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரம்மாண்டமான மேடை, அழகிய கோலங்கள், தோரணங்கள், மலர்கள், கௌர லீலைகளை எடுத்துரைக்கும் வரைபடக் கண்காட்சி என அரங்கம் அமர்க்களமாகக் காட்சியளித்தது. சுமார் 1,200க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

 

 

தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் தமிழ் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணித்தல்

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியும் தவத்திரு பானு ஸ்வாமியும் சொற்பொழிவுகளை வழங்கினர். உடல்நலக் குறைவின் காரணமாக தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி அவர்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும், தமது இதயம் இந்நிகழ்வில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக பிரத்யேகமான சொற்பொழிவினை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அச்சொற்பொழிவு பக்தர்களுக்குத் திரையிடப்பட்டது. மங்கலாசரணத்துடன் தொடங்கிய விழாவில், வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றியும் இஸ்கானைப் பற்றியும் ஸ்ரீல பிரபுபாதரைப் பற்றியும் வெகுவாகப் புகழ்ந்தனர். தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கிய வாழ்த்துரையும் வாசிக்கப்பட்டது.

 

அமைச்சர் திரு பாண்டியராஜன் அவர்கள் விழாவில் சிறப்புரையாற்றுதல்

நூலை அமைச்சர் திரு பாண்டியராஜன் அவர்கள் வெளியிட திரு தேவநாதன் யாதவ் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் வழங்கப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் சுபமான முறையில் மஹா பிரசாத விருந்து வழங்கப்பட்டது.

மாலை வேளையில், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலின் பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தவத்திரு ஜெயபதாக ஸ்வாமியின் சார்பாக, மத்திய கிழக்குப் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் வழங்கிய நன்கொடையின் மூலமாக, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பிரச்சார மையத்திற்கும் பிரதிகள் வழங்கப்பட்டன. மேலும், முதல் நாளில் பிரதியைப் பெறுவதற்காக முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கும் நூல்கள் வழங்கப்பட்டன.

இவ்விழா மிகச் சிறப்பான முறையில் நிகழ்வதற்கு பல்வேறு பக்தர்கள் பல்வேறு துறைகளில் சேவை செய்தனர். சில பக்தர்கள் தங்களது நன்கொடையின் மூலமாக முக்கிய பங்காற்றினர். அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். இவ்வெல்லா பக்தர்களின் உழைப்பினாலேயே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழ் நூல் வெளியீட்டு விழா சிறப்பான முறையில் நிகழ்ந்தது. அனைவருக்கும் நன்றி.

ஒன்பது பாகங்களைக் கொண்ட மாபெரும் நூல் என்னும்போதிலும், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதனை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives