மஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்

Must read

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.

அதன் பின்னர், தூய பக்தரிடமிருந்து பரம புருஷ பகவான் கிருஷ்ணரின் லீலைகளை நம்பிக்கையுடன் கேட்பதே உயர்ந்த நிலை என்று இராமானந்த ராயர் கூறினார். இதனை வரவேற்ற மஹாபிரபு மேலும் தொடர்ந்து கூறச் சொன்னார். எந்தவோர் உள்நோக்கமும் பௌதிக ஆசைகளும் இன்றி செய்யப்படும் தன்னலமற்ற தூய பக்தித் தொண்டினை உயர்ந்த இலக்காக இராமானந்தர் கூறினார். இந்த தூய பக்தித் தொண்டினை வாழ்வின் இறுதி இலக்கின் நுழைவாயிலாக மஹாபிரபு ஏற்றுக் கொண்டார். இருப்பினும், இன்னும் ஆழ்ந்து செல்லுமாறு இராமானந்த ராயரைத் தூண்டினார். அதனைத் தொடர்ந்து இராமானந்த ராயர் பகவான் கிருஷ்ணருக்கு அன்பான பற்றுதலுடன் சேவகனாக, நண்பனாக, தாய் தந்தையாக, காதலியாக தொண்டாற்றுவதை உயர்ந்த இலக்காகக் கூறினார். மஹாபிரபு அதற்கு மேலும் கேட்க விரும்பினார். ஸ்ரீ இராமானந்த ராயர் கிருஷ்ணருக்கான கோபியர்களின் அன்பினை விளக்கினார். அந்த கோபியர்களில் தலைசிறந்த, ஈடுஇணையற்ற ஸ்ரீமதி ராதாராணியின் தன்னலமற்ற சேவை மனோபாவத்தினையும் விளக்கினார். உயிர்வாழிகள் அவளுக்கு சேவை செய்ய விரும்ப வேண்டும், அதுவே வாழ்வின் இறுதி இலக்கு என்று முடிவுரைத்தார். மஹாபிரபு இந்த முடிவினால் மிகவும் திருப்தியுற்றார்.

மஹாபிரபு இவ்விஷயத்தை மேன்மேலும் அதிகமாகக் கேட்க விரும்பினார். இராமானந்த ராயர் ஸ்ரீமதி ராதாராணியின் அந்தரங்க மனோபாவங்களை பாடலாகத் தொகுத்துப் பாடினார். மஹாபிரபு அவரைத் தழுவிக் கொண்டு ஆன்மீக பரவசத்தில் அழுதார்.

அடுத்தடுத்த நாள்களில், மஹாபிரபு அவரிடம் மேன்மேலும் பல்வேறு வினாக்களை வினவ, இராமானந்த ராயரும் அதற்கு உகந்த விடைகளை அளித்தார். அதிலிருந்து ஒரு சிறு பகுதி, இங்கே.

மஹாபிரபு: தலைசிறந்த கல்வி எது?

இராமானந்தர்: ராதா-கிருஷ்ணரின் பக்தியைப் பற்றிய கல்வி.

மஹாபிரபு: உயிர்வாழிக்குரிய உயர்ந்த செயல் என்ன?

இராமானந்தர்: கிருஷ்ணருக்குத் தொண்டனாக இருப்பது.

மஹாபிரபு: உயர்ந்த செல்வம் என்ன?

இராமானந்தர்: ராதா-கிருஷ்ணருக்கான பிரேமை.

மஹாபிரபு: உயர்ந்த துக்கம் என்ன?

இராமானந்தர்: கிருஷ்ண பக்தர்களின் சங்கத்திலிருந்து ஏற்படும் பிரிவு.

மஹாபிரபு: உயர்ந்த முக்தி என்ன?

இராமானந்தர்: கிருஷ்ண பிரேமை.

மஹாபிரபு: மிகச்சிறந்த பாடல் என்ன?

இராமானந்தர்: ராதா-கிருஷ்ணரின் லீலைகளை வர்ணிக்கும் பாடல்.

மஹாபிரபு: உயிர்வாழிகளுக்கு மிகவும் மங்களகரமானது என்ன?

இராமானந்தர்: கிருஷ்ண பக்தர்களின் சங்கம்.

மஹாபிரபு: எந்த விஷயத்தை மட்டும் நாம் நினைவுகூர வேண்டும்?

இராமானந்தர்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது நாமம், குணங்கள், லீலைகள்.

மஹாபிரபு: எதன்மீது மட்டும் நாம் தியானம் செய்ய வேண்டும்?

இராமானந்தர்: ராதா-கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள்.

மஹாபிரபு: வாழ்வதற்கு உகந்த இடம் எது?

இராமானந்தர்: கிருஷ்ணர் தெய்வீக லீலைகள் புரிந்த இடம்.

மஹாபிரபு: எது போற்றுதலுக்குரிய ஒரே விஷயம்?

இராமானந்தர்: ராதா-கிருஷ்ணரின் திருநாமம்.

இவ்விதமாக தங்களது பத்து நாள்கள் சந்திப்பில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இராமானந்த ராயரும் கிருஷ்ண பக்தி தத்துவத்தின் அனைத்து விஷயங்களையும் விவாதித்தனர். மஹாபிரபுவால் சக்தியளிக்கப்பட்ட இராமானந்த ராயர் மஹாபிரபுவின் அனைத்து கேள்விகளுக்கும் பொருத்தமான பதில்களை வழங்கினார். அவர்களது விவாதம் முடிந்தபோது பகவான் சைதன்யர் தனது உண்மையான ராதா கிருஷ்ண ரூபத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். இராமானந்தர் தெய்வீக ஆனந்தத்தில் மூர்ச்சையடைந்தார். இவ்வாறாக பகவான் சைதன்யரும் இராமானந்தரும் பரஸ்பர தொடர்பில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பதன் ஆனந்தத்தை அனுபவித்த மிகவும் முக்கியமான ஸ்தலமான கொவ்வூர் கௌடீய வைஷ்ணவர்களுக்கு ஆனந்த விருந்தாவனமாகத் திகழ்கிறது

ராதையும் கிருஷ்ணரும் இணைந்த ரூபமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தம்மை இராமானந்த
ராயரிடம் வெளிப்படுத்துதல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives