சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் சற்று வேறுபடுகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கறுநீல திருமேனியைக் கொண்டவர், சைதன்ய மஹாபிரபுவோ பொன்னிற மேனியைக் கொண்டவர்; இடையர் குலச் சிறுவனாக தோன்றிய கிருஷ்ணர் தலையில் மயில் இறகையும் கையில் புல்லாங்குழலையும் கொண்டிருந்தார், பிராமண குலத்தில் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவோ மிருதங்கம் மற்றும் கரதாளத்துடன் காணப்பட்டார்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

கிருஷ்ணர் பூலோகத்தில் தோன்றிய தினத்தை கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும், சைதன்ய மஹாபிரபு பூலோகத்தில் தோன்றிய தினத்தை கௌர பூர்ணிமா என்றும் கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் தெய்வீக மகனாக தோன்றுகிறார், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபு மாயாபுரில் ஜகந்நாத மிஸ்ரருக்கும் ஸச்சிதேவிக்கும் தெய்வீக மகனாக தோன்றுகிறார். கிருஷ்ணரும் மஹாபிரபுவும் ஒருவரே என்பதால், மதுராவும் நவத்வீபமும் வேறுபட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் யமுனையில் நீராடுகிறார், நவத்வீபத்தில் சைதன்ய மஹாபிரபு கங்கையில் நீராடுகிறார். கிருஷ்ணரின் தனிச்சிறப்பு உன்னதமான இனிமை என்றும், சைதன்ய மஹாபிரபுவின் தனிச்சிறப்பு உன்னதமான கருணை என்றும் கூறப்படுகிறது,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்ததற்கு ஓர் அந்தரங்க காரணமும் ஒரு வெளிப்புற காரணமும் உண்டு. ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணருக்கு சேவை செய்வதால் பெறும் ஆனந்தம் கிருஷ்ணரையே கவர்ந்தது என்பதும், அதனை அவரே சுவைக்க விரும்பினார் என்பதும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தோற்றத்திற்கான அந்தரங்க காரணமாகும். கலி யுகத்தில் துன்பப்படும் மக்களுக்கு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பது அவரது தோற்றத்திற்கான வெளிப்புற காரணமாகும்.

பொன்னிற திருமேனியுடன் தோன்றிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரேயாவார்; ஆனால் தனது உன்னத பக்தரான ராதாராணியின் மனோபாவத்தையும் மேனி நிறத்தையும் ஏற்று அவர் அவதரித்திருந்தார். அவர் பக்தித் தொண்டை பாகுபாடின்றி அனைவருக்கும் தாராளமாக வழங்குகிறார் என்பதால், கிருஷ்ணர் தன் கருணையை சைதன்ய மஹாபிரபுவாக தோன்றும்போது கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு மிகமிக அதிக அளவில் வெளிப்படுத்துகிறார். சைதன்ய மஹாபிரபுவிற்கு நிமாய், கௌராங்கர், விஸ்வம்பரர் என பல பெயர்கள் உண்டு. சிறுவயதில் நிமாய் என்றழைக்கப்பட்ட சைதன்ய மஹாபிரபுவின் ஆரம்ப கால லீலைகளில் சிலவற்றைக் காண்போம்.

ஸ்ரீ சைதன்யரின் அவதாரம்

அன்னை தேவகியின் கருவிற்குள் கிருஷ்ணர் இருந்தபோது, எவ்வாறு தேவர்கள் அனைவரும் தேவகியை வலம் வந்து பிரார்த்தனை செய்தார்களோ, அதைப் போன்று சைதன்ய மஹாபிரபு தன் அன்னை ஸச்சிதேவியின் கருவிற்குள் இருந்தபோது, தேவர்கள் அனைவரும் அவளை வலம் வந்து வழிபட்டு வந்தனர். சைதன்ய மஹாபிரபு மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் மாயாபுரில் 1486ஆம் வருடம் பால்குன மாதம் பௌர்ணமி தினத்தன்று தோன்றினார். அன்றைய நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்ததால், வேத நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் அனைவரும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக கங்கையில் நீராடினர். அப்போது, அவர்கள் அனைவரும் ஹரி, கோவிந்த, முகுந்த என்று பகவானின் திருநாமங்களை உரக்க உச்சரித்துக் கொண்டிருந்தனர். ஹரியின் திருநாமம் ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த அத்தருணத்தில் கௌரஹரி என்று அழைக்கப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.

சைதன்ய மஹாபிரபு பூலோகத்தில் தோன்றியதை அறிந்த அத்வைத ஆச்சாரியர் சாந்திபுரில் ஆனந்த நடனமாடினார். நாமாசாரியர் என்று அழைக்கப்படும் ஹரிதாஸ தாகூர் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்து அதிக பரவசத்தை உணர்ந்தார், அங்கிருந்த இதர வைஷ்ணவர்களும் இதயத்தில் ஆனந்தத்தை உணர்ந்தனர்.

நிமாய் சிறு குழந்தையாக இருந்தபோது, ஹரி நாமம் உச்சரிக்கப்படாவிடில் தொடர்ந்து அழுது கொண்டேயிருப்பார். அவரின் அழுகையை நிறுத்துவதற்காக அவரது வீட்டில் கூடும் பெண்கள் அனைவரும் எப்போதும் ஹரி நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஹரி நாமத்தை நிறுத்தினால், நிமாய் அழுகையை ஆரம்பித்துவிடுவார். அதனால், அவரது வீட்டில் ஹரி நாமம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பிராமணரின் நைவேத்யம்

ஜகந்நாத மிஸ்ரரும் ஸச்சிதேவியும் விருந்தினர்களை குறிப்பாக வைஷ்ணவர்களை உபசரிப்பதில் தலை சிறந்தவர்கள். ஒருநாள் அவர்கள் தங்களது இல்லத்தில் ஒரு பிராமண வைஷ்ணவரை விருந்தினராக தங்க வைத்திருந்தனர். அவர் தன்னுடைய கோபால விக்ரஹத்திற்கு முதலில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை மட்டுமே ஏற்கும் பழக்கமுடையவராக இருந்தார். அதன்படி, அந்த பிராமணர் தனது கோபாலருக்கு நைவேத்யம் செய்வதற்கான உணவை ஒரு தட்டில் வைத்து, கோபால மந்திரத்தை உச்சரித்து நைவேத்யம் செய்யத் தொடங்கினார். அச்சமயத்தில் அவ்விடத்தில் தோன்றிய நிமாய், அந்த உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்தார். இதைக் கண்ட பிராமணர் உணவு களங்கமடைந்து விட்டதாக எண்ணி அலறினார். சம்பவத்தை அறிந்த ஜகந்நாத மிஸ்ரர் மிகவும் கோபம் கொண்டு நிமாயை கடிந்து கொண்டார். “சின்ன குழந்தைக்கு என்ன தெரியும், விட்டுவிடுங்கள்என கேட்டுக் கொண்ட பிராமணர், ஜகந்நாத மிஸ்ரரின் வற்புறுத்தலால் மீண்டும் புதியதாக சமைக்கப்பட்ட உணவை நைவேத்யம் செய்ய ஒப்புக் கொண்டார்.

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிமாய் மீண்டும் கோபால மந்திரம் உச்சரிப்பதைக் கேட்டவுடன், அவ்விடத்தில் தோன்றி உணவினை உட்கொள்ள ஆரம்பித்தார். அதைக் கண்ட பிராமணர் மீண்டும் அலறினார். அந்த சத்தத்தை கேட்ட உடன் விரைந்து வந்த ஜகந்நாத மிஸ்ரர் நடந்த சம்பவத்திற்கு மிகவும் மனம் வருந்தினார். அப்போது அத்வைத ஆச்சாரியரின் பாகவத சொற்பொழிவைக் கேட்டு இல்லம் திரும்பிய நிமாயின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் தன் பெற்றோர்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு அதற்கான காரணத்தை கேட்டார். இல்லத்திற்கு வந்த விருந்தினரை சரியாக உபசரிக்க முடியவில்லை என்று தெரிந்து கொண்ட விஸ்வரூபர், பின் பிராமணரிடம் தன் வேண்டுகோளை பணிவாக சமர்ப்பித்தார். விஸ்வரூபர் சங்கர்ஷணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால் விஸ்வரூபரின் அழகிய திருமேனியைக் கண்டு ஈர்க்கப்பட்ட பிராமணர் நள்ளிரவில் மீண்டும் நைவேத்யம் செய்வதற்கு சம்மதித்தார்.

நிமாயின் கருணை

நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பிராமணர் மீண்டும் கோபால மந்திரத்தை உச்சரித்து நைவேத்யம் செய்யத் தொடங்கினார். நிமாய் அங்கு தோன்றியதைக் கண்ட பிராமணர் மீண்டும் அலறுவதற்கு தயாரானபோது, சைதன்ய மஹாபிரபு உடனடியாக தன்னை கோபால கிருஷ்ணராக மாற்றி காட்சி அளித்தார். பின் அந்த பிராமணரிடம், “கோபால், கோபால் என்று மந்திரத்தை உச்சரித்து என்னை அழைக்கும்போது, வேறு யார் இங்கு வருவார்? நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னை அழைத்தபோது நான் உணவை ஏற்க வந்தேன். என்மீது என்ன குற்றம் இருக்கிறது?” என வினவினார்.

அதன்பின், தன்னுடைய அடையாளத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்று பிராமணரிடம் அறிவித்துவிட்டு, சைதன்ய மஹாபிரபு உறங்க சென்று விட்டார். பெரும் பரவசத்தில் இருந்த பிராமணர், ஜகந்நாத மிஸ்ரரின் பாக்கியத்தை எண்ணி எண்ணி வியந்தார்.

நிமாயின் பள்ளி பருவம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுல வாழ்க்கையை தொடங்கி 64 நாளில் 64 கலைகளையும் கற்றார். வேத சாஸ்திரம், புராணங்கள், 64 கலைகள் என அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிட மிருந்தே தோன்றினாலும், குருகுலத்தில் கல்வி கற்பதன் முக்கியத்து வத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்க கிருஷ்ணர் அவ்வாறு செயல்பட்டார். அதைப் போன்று கங்காதாஸ பண்டிதரின் பள்ளியில் நிமாய் சமஸ்கிருதம் பயின்று, ஒவ்வொரு அக்ஷரத் திற்கும் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி விளக்கம் கொடுத்தார்.

சைதன்ய மஹாபிரபு நவத்வீபத்தில் நுணுக்கமான வேத பண்டிதராக திகழ்ந்ததால், அவரை நிமாய் பண்டிதர் என்றே அனைவரும் அழைப்பர். பிராமணர்களை விவாதத்திற்கு அழைத்து அவர்கள் கூறும் தத்துவங்களை முறியடித்து தோற்கடிப்பார். பின்பு, தான் கூறிய தத்துவங்கள் தவறானது என்றும், அதனை எவ்வாறு ஏற்கலாம் என்று கேட்டு வேறொரு தத்துவத்தை நிலைநாட்டுவார். இதனால் வேத பண்டிதர்கள் நிமாய் அருகில் வருவதற்கு பயந்தனர். உண்மையான முக்தி என்பது பௌதிக துன்பத்தில் இருந்து விடுபடுவது அல்ல, மாறாக கிருஷ்ண உணர்வில் நிலைத்திருப்பதே என சைதன்ய மஹாபிரபு தனது இணைபிரியா தோழரான கதாதர பண்டிதரிடம் அடிக்கடி கூறுவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில் வலம் வரும்போது அவரை தரிசிப்பதற்கு மக்கள் எவ்வாறு திரளாக கூடுவார்களோ, அதை போன்று சைதன்ய மஹாபிரபு நவத்வீபத்தை வலம் வரும்போதும் மக்கள் திரளாக கூடி அவரைத் தரிசிப்பர்.

ஜோதிடரை அணுகுதல்

சைதன்ய மஹாபிரபு ஒரு ஜோதிடரை அணுகி தனது பூர்வ ஜென்மத்தைப் பற்றி கூறும்படி கேட்டுக் கொண்டார். அந்த ஜோதிடரோ கண்ணை மூடி தியானித்தபோது, மத்ஸயர், கூர்மர், வராஹர், நரசிம்மர், நான்கு கை கொண்ட நாராயணர், அன்னை யசோதையின் மடியில் பால் அருந்தும் கிருஷ்ணர் என பல்வேறு உருவங்கள் மாறிமாறி வருவதைக் கண்டு திகைத்துப் போனார். அவர் மஹாபிரபுவை பகவான் என்று உரைத்தபோது, நிமாய், “நீங்கள் நல்ல ஜோதிடர் அல்ல, நான் முற்பிறவியில் ஒரு இடையர் குலச் சிறுவனாக இருந்து பசுக்களை மேய்த்த புண்ணியத்தினால் இப்போது பிராமணராக பிறந்துள்ளேன்,” என்று கூறிவிட்டு சென்றார்.

தீக்ஷை பெறுதல்

ஜெகன்னாத மிஸ்ரரின் மறைவிற்கு பிறகு சைதன்ய மஹாபிரபு கயாவிற்குச் சென்றபோது, அங்கு தன் குருவான ஈஸ்வரபுரியை சந்தித்தார். அப்போது அவர் ஈஸ்வரபுரியிடம், “நான் கிருஷ்ணரிடம் செல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு குரு தேவை, குரு இல்லாமல் எவ்வாறு கிருஷ்ணரை அடைய முடியும், எவ்வாறு பிறவிக் கடலை கடக்க முடியும். நீங்களே எனக்கு குருவாக செயல்படுங்கள்,” என கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கீகரிக்கப்பட்ட குருவிடம் சரணடைந்து முறையாக தீக்ஷை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற போதனையை இந்த லீலை மூலம் உலக மக்களுக்கு தெரிவித்தார்.

அதிசய லீலை

ஒருநாள் சைதன்ய மஹாபிரபு நாம ஸங்கீர்த்தன குழுவுடன் சென்றபோது, பக்தர்கள் தாகம் மற்றும் பசியால் வாடினர். அதைக் கண்ட சைதன்ய மஹாபிரபு அனைத்து பக்தர்களையும் ஓரிடத்தில் அமரவைத்து ஒரு மாமரத்தின் விதையை வரவழைத்தார். அதை அனைவரும் காணும்படி பூமியில் புதைத்தார். உடனடியாக அது செடியாக, மரமாக வளர்ந்து, பூ பூத்து, காய் காய்த்து உடனடியாக பல மாம்பழங்களை கொண்ட மரமாக நொடிப் பொழுதில் மாறியது. அந்த மாம்பழங்கள் கொட்டை இல்லாமல் மிகமிக மெல்லிய தோலுடன் காணப்பட்டன. அவற்றை கோவிந்தனுக்கு அர்ப்பணித்து அனைத்து பக்தர்களுக்கும் வழங்கும்படி சைதன்ய மஹாபிரபு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாம்பழமும் ஒரு பக்தரின் பசியை முழுமையாக போக்கக்கூடிய அளவிற்கு அமிர்தமாக ருசித்தது. ஒரு வருடம் வாழ்ந்த அந்த மாமரம் அதன்பின் மறைந்து போனது.

இந்த லீலையின் மூலம் சைதன்ய மஹாபிரபு உலக மக்களுக்கு ஒரு முக்கியமான உபதேசத்தைத் தெரிவிக்கிறார். அந்த மாமரம் குறுகிய காலத்தில் தோன்றி மறைந்தாலும் அதில் வெளிவந்த மாம்பழங்கள் கோவிந்தனுக்கு அர்ப்பணிக்கப் பட்டதால், அந்த மாமரத்தின் வாழ்வு புனிதமடைந்து பூரணத்துவம் பெற்றது. அதுபோல மனித உடல்கள் சில வருடங்களோ பல வருடங்களோ தோன்றி மடிந்தாலும், நம் வாழ்க்கையை நாம் கோவிந்தனுக்கு அர்ப்பணித்தால், நமது வாழ்வும் புனிதமடைந்து பூரணத்துவம் பெறும்.

ஒவ்வொரு வருடமும் கௌர பூர்ணிமா பண்டிகைக்கு முன்பாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நவத்வீப மண்டல பரிக்ரமா (சுற்றுப்பயணத்தினை) மேற்கொண்டு, சைதன்ய மஹாபிரபு நிகழ்த்திய பல்வேறு லீலா ஸ்தலங்களை தரிசிக்கின்றனர்.

சைதன்யரின் உபதேசங்கள்

கிழக்கு இந்தியாவில் சைதன்ய மஹாபிரபுவின் புகழை நித்யானந்த பிரபு பிரச்சாரம் செய்ததால், அங்கு வசிப்பவர்களுக்கு சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான அடையாளம் தெரிந்துள்ளது. தென்னிந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான அடையாளம் தெரியாமல், அவரை மிகச்சிறந்த சாது என்றும் சந்நியாசி என்றும் கருதுகின்றனர். பக்த ரூபத்தில் தோன்றியபோதிலும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பரம புருஷ பகவானே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. .. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினமும் உச்சரித்து, மற்றவர்களுக்கும் இந்த புனித நாமத்தினை வழங்குபவர்கள் நிச்சயம் சைதன்ய மஹாபிரபுவின் நேரடியான லீலையில் பங்கேற்பவர்களாக கருதப்பட வேண்டும்.