சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். ஒருபுறம் மழை பற்றாக்குறையால் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும், மறுபுறம் அரசாங்கம் அதிகப்படியான வரியை வசூலிக்கும். இவ்வண்ணம் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, வீடுகளைத் துறந்து வனத்திற்குச் சென்று விடுவர்.

ஆத்ரேய ரிஷி தாஸ்: இப்போதுகூட அரசு பணம் வசூலிக்கிறதே தவிர, வேறு ஒன்றும் செய்வதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும். வேலையில்லா திண்டாட்டம் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் அரசோ மக்களை விவசாயத்திலிருந்து (கிராமத்திலிருந்து) நகரத்திற்கு இழுத்து வருகிறது. “இத்தனை பேர் ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அதற்கு பதில் மிருகங்களைக் கொன்று உண்டால் போதுமே!” என்று எண்ணுகின்றனர். ஏனெனில், கர்ம விதிகளைப் பற்றியோ பாவத்தின் பின்விளைவுகளைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. “மாடுகளை உண்ண முடியும் என்னும்பட்சத்தில், நிலத்தை உழுது ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று எண்ணுகின்றனர். உலகம் முழுவதும் இதுவே நிகழ்கிறது.

ஆத்ரேய ரிஷி தாஸ்: ஆம், விவசாயிகளின் மகன்கள் விவசாயத்தைக் கைவிட்டு நகரத்திற்கு இடம்பெயர்
கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: உலகம் முழுவதிலும் மக்கள் களங்கமடைந்துள்ளனர். எனவே, அரசாங்கம் மட்டும் நல்லதாக இருக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? களங்கமான மக்களிடமிருந்தே சிலர் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்றனர். எனவே, எங்கெல்லாம் ஹரே கிருஷ்ண மையங்கள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் மக்களுக்கு அவர்களது இயற்கையான திறமையின் அடிப்படையில் கல்வி கற்பிக்க கல்லூரிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபித்தல், தன்னுணர்வின் வழிமுறையை பகவத் கீதையிலிருந்து அறிதல், அனைத்தையும் கிருஷ்ணருக்காகச் செய்தல் முதலிய ஆன்மீகச் செயல்களின் மூலம் ஒவ்வொருவரும் உயர்வு பெற முடியும். அனைவரின் வாழ்வும் முழுமுதற் கடவுளுக்கான பக்தித் தொண்டின் அடிப்படையில் அமையும்.

அதே நேரத்தில், நடைமுறை வாழ்வை நிர்வகிப்பதற்கு பல்வேறு சமூகப் பிரிவுகளை ஏற்படுத்தி மக்களை அதன்படி பயிற்றுவிக்க வேண்டும்; ஏனெனில், மக்களது திறன் பலவாறு அமைந்துள்ளது. புத்திசாலியாக இருப்பவர்கள் பிராமணராக வேண்டும்—பூஜாரி, ஆசிரியர், ஆலோசகர் என்பனவற்றில் அவர்கள் ஈடுபட வேண்டும். நிர்வாகத்திலும் மற்றவர்களைக் காப்பதிலும் திறமையுடன் திகழ்பவர்கள் சத்திரியர்களாக வேண்டும்—நிர்வாகிகளாகவும் போர் வீரர்களாகவும் இவர்கள் செயல்படுவர். உணவு உற்பத்தியிலும் மாடுகளைப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்குபவர்கள் வைசியர்களாக (வியாபாரிகளாக) இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்தவர்கள் தொழிலாளர்களாக, சூத்திரர்களாக இருக்க வேண்டும்.

நமது உடலில் இருப்பதைப் போலவே, சமூக அமைப்பிலும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். எல்லாரும் மூளையாக (புத்திமானாக) அல்லது கைகளாக (நிர்வாகிகளாக) இருக்க விரும்பினால், வயிறாக (விவசாயிகளாக) அல்லது காலாக (தொழிலாளியாக) யார் இருப்பர்? ஒவ்வொரு தொழிலும் முக்கியம். மூளையும் வேண்டும், கைகளும் வேண்டும், வயிறும் வேண்டும், கால்களும் வேண்டும். எனவே, சமூகத்தினை இவ்வாறு சீராக ஏற்பாடு செய்தல் அவசியம். முழுமுதற் கடவுள் இயற்கையாக ஏற்படுத்திய சமூகப் பிரிவுகளை மக்கள் உணர வேண்டும். சிலர் மூளையாகவும், சிலர் கைகளாகவும், சிலர் வயிறாகவும், சிலர் கால்களாகவும் செயல்பட வேண்டும். சமூக அமைப்பினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே முக்கிய நோக்கம்.

ஒவ்வொருவரும் தமக்குத் தகுந்த தொழிலில் ஈடுபடுவதற்கு நீங்கள் உதவ வேண்டும். முக்கிய விஷயம் என்னவெனில், ஒருவன் எந்தச் செயலைச் செய்தாலும், அது பகவானது பக்தித் தொண்டாக அமையலாம். மக்கள் தங்களது சுபாவத்திற்கு ஏற்ப பணிபுரிகிறார்களா என்பதே முக்கியம். உதாரணமாக, நீங்கள் நடக்கும்போது உங்களது மூளை, “இப்பக்கம் செல், அப்பக்கம் செல், வண்டி வருகிறது, திரும்பிச் செல்,” என்று உங்களுடைய கால்களுக்கு கட்டளையிடும். கால்களும் அதன்படி பயணிக்கும். மூளையின் வேலையும் கால்களின் வேலையும் வேறுபட்டுள்ளபோதிலும், இரண்டின் நோக்கமும் ஒன்றே—நீங்கள் பத்திரமாக வீதியைக் கடக்க வேண்டும். அதுபோலவே, சமூக அமைப்பின் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும்—அனைவரும் பகவானுடைய தொண்டில் ஈடுபடுவதற்கு உதவ வேண்டும்.

ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி: நீங்கள் கூறும் கல்லூரிகள் பொதுமக்களுக்காக இருக்குமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அனைவருக்கும். ஒரு பொறியியல் கல்லூரி எவ்வாறு அனைவருக்காகவும் செயல்படுகிறதோ, அவ்வாறே நமது கல்லூரியும் அனைவருக்காகவும் செயல்பட வேண்டும். மக்கள் இத்தகு பயிற்சிக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே அவசியம். இத்தகு கல்லூரிகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில், உலகம் முழுவதும் மக்கள் தங்களது பெயரளவு தலைவர்களால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கிருஷ்ண உணர்வுடன்கூடிய ஆரம்பப் பள்ளியில் பங்கேற்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின்னர், கிருஷ்ண உணர்வுடன் கூடிய கல்லூரியில் சேர்ந்து தொழில் மற்றும் ஆன்மீக வாழ்வை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆத்ரேய ரிஷி தாஸ்: வர்த்தகமும் சொல்லிக் கொடுப்போமா?

ஸ்ரீல பிரபுபாதர்: நவீன வர்த்தகம் தேவையில்லை. இந்த வர்த்தகம் அயோக்கியத்தனமானது. உண்மையான வர்த்தகம் என்பது தேவையான தானியங்களை விளைவிப்பதாகும். தனக்கு மிஞ்சியதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும், மனிதர்களுக்கும் பசு முதலிய விலங்குகளுக்கும் வழங்கலாம். பசுக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க பொருட்களைக் கொடுத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், அப்போது பசுக்களுக்கு நன்றாக பால் சுரக்கும், மனித குலம் நோய் நொடியின்றி உழைக்கும். ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் திறப்பது நமது நோக்கமல்ல.

யதுபர தாஸ்: ஸ்ரீல பிரபுபாதரே! கலைகளும் கைவினைகளும் எதில் அடங்கும்? ஏனெனில், எங்களது சமுதாயத்தில் கலைஞர்களும் இசை வல்லுநர்
களும் தத்துவ அறிஞர்களாக ஏற்கப்படுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கலைஞன் என்பவன் தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தவன். உங்களது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், மக்கள் அனைவரும் தொழிலாளிகளாக உள்ளனர்.

தத்துவ அறிஞர்களா? அறிவும் இல்லை, தத்துவமும் இல்லை. அனைவரும் அதிக சம்பளத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். பரம்பொருளைத் தேடுபவனே தத்துவ அறிஞன்.

உங்களது நாட்டில் அயோக்கியர்கள் பாலுணர்வைப் பற்றிய நூல்களை எழுதுகின்றனர். பாலுறவைப் பற்றி ஒரு நாய்க்குக்கூட தெரியும். இத்தகைய பெயரளவு தத்துவங்களை ஆதரிக்க அயோக்கியர்களால் மட்டுமே முடியும். நாம் அவற்றை ஆதரிப்பதில்லை. பரம்பொருளின் தேடலில் இருப்பவனே உண்மையான தத்துவ அறிஞன்.

மேற்கத்திய தத்துவம் என்று சொல்லப்படுவதன் உண்மைப் பொருள் என்ன? மேற்கத்திய உலகம் முழுவதும் தொழில் செய்யவும் பணம் சம்பாதிக்கவுமே பாடுபடுகிறது. “நன்றாக சாப்பிடு, நன்றாகக் குடி, நன்றாக அனுபவி.” இதுவே இவர்களுக்கு எல்லாம். இவர்கள் மனிதர்களே இல்லை, இவர்களை மனிதர்களாக்குவதே முதல் முயற்சி. அதற்காகவே இந்த வர்ணாஷ்ரம கல்லூரி தேவைப்படுகிறது.

நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக எண்ண வேண்டாம். இதுவே உண்மை. இவர்கள் விலங்குகளாக வாழ்கின்றனர், இரண்டு கால்கள் கொண்ட விலங்குகள்.

ஆயினும், இவர்களையும் மீட்க முடியும். என் சீடர்களான நீங்கள் எவ்வாறு மீட்கப்பட்டீர்களோ, அவ்வாறே பயிற்சியின் மூலமாக அனைவரையும் பிராமணர்களைக் காட்டிலும் உயர்த்த முடியும். இதில் எந்தத் தடையும் இல்லை. ஆயினும், அயோக்கியர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். “தவறான பாலுறவு கூடாது,” “புலால் உண்ணுதல் கூடாது,” என்று கூறியவுடன் கோபம் வந்துவிடுகிறது.

உங்களுக்கு எப்படியோ கிருஷ்ணரின் கருணையினால் இப்பயிற்சி கிடைத்துள்ளது. நீங்கள் இதில் தேர்ச்சி பெற்று, மேற்கத்திய நாகரிகத்தை முற்றிலுமாக மாற்றியமையுங்கள். அதன் பின்னர், புதிய அத்தியாயம் தொடங்கும். இதுவே திட்டம். இதற்காகவே கிருஷ்ண பக்திக் கல்லூரிகள் அவசியப்படுகின்றன.

மக்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும், அதனை பகவானின் பக்தித் தொண்டாக அமைக்க முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives