வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றிகொள்ள முயல்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக்கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர்.

கடுமையான தவத்தையும் யோகப் பயிற்சியையும் மேற்கொண்டு புலன்களை அடக்க முயன்ற, பக்குவமான யோகியும் சிறந்த முனிவருமான விஸ்வாமித்திரர் மேனகையினால் பாலுறவு வாழ்விற்கு அழைத்துச் செல்லப்பட்டார். உலக சரித்திரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இருப்பது உண்மையே. வெளிப்புறமாக புலன்களைக் கட்டுப்படுத்துவோரை கிருஷ்ணர் கீதையில் (3.6) பின்வருமாறு கண்டிக்கிறார்:

கர்மேந்திரியாணி ஸம்யம்யய ஆஸ்தே மனஸா ஸ்மரன்

இந்த்ரியார்தான் விமூடாத்மாமித்யாசார: ஸ உச்யதே

புலன்களையும் புலனுறுப்புகளையும் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனுகர்ச்சிப் பொருட்களில் மனதைச் செலுத்திக் கொண்டிருப்பவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.” 

கிருஷ்ணரின் இதே கூற்றினை திருவள்ளுவர் தமது வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறார்:

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்

மனதில் ஆசைகளை நீக்காமல், ஆனால் ஆசைகளே இல்லாத துறவிகளைப் போல வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போல் கொடியவர்கள் வேறு யாரும் இல்லை.” (திருக்குறள் 276)

புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்துதல் மிகமிகக் கடினமாகும்; இருப்பினும், பூரண கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்கள் அதனை அடைய முடியும். மாயையை வெல்லுதல் கடினம் என்றும், தன்னிடம் சரணடைந்தோர் அதனை எளிதில் வெல்லலாம் என்றும் கிருஷ்ணர் கீதையில் (7.14) கூறுகிறார்.

பூரண கிருஷ்ண உணர்விற்கான வழிமுறையினை ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு வழிகாட்டியுள்ளார் (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258): கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன் அனைத்துப் பொருட்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் ஜடப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, அருவவாதி நல்ல உணவுப் பொருட்களைத் தவிர்க்க விரும்புகிறான். ஆனால், கிருஷ்ணரே எல்லாவற்றையும் அனுபவிக்கக்கூடிய பரம ஆளுநர் என்பதையும், பக்தியுடன் அர்ப்பணிக்கப்படும் எல்லா உணவுப் பொருட்களையும் அவர் மகிழ்வுடன் ஏற்கிறார் என்பதையும் பக்தன் அறிவான். எனவே, பகவானுக்கு நல்ல உணவுப் பொருட்களைப் படைத்த பின், அதன் மீதியை பிரசாதமாக பக்தன் ஏற்றுக்கொள்கிறான். இவ்விதமாக, அனைத்தும் ஆன்மீகப்படுத்தப்படுவதால் வீழ்ச்சிக்கான அபாயம் இல்லை.

ஒருவன் தன் மனதில் மாசற்றவனாக இருக்க வேண்டும், அதுவே அறம். மனத் தூய்மை இல்லாதவை அனைத்தும் ஆரவாரத்தன்மை உடையவை என்ற பொருளில் வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற (திருக்குறள் 34)

மனமாசை அகற்றச் சிறந்த வழி தகுந்த பயிற்சியால் கிருஷ்ண உணர்வைப் பெறுவதே. கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்களுக்குப் புலனின்பம் துச்சம், இதற்கான நடைமுறை உதாரணம், மிகச்சிறந்த சாதுவும் கிருஷ்ண பக்தருமான ஸ்ரீயாமுனாசாரியர். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

யத்-அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே

நவ-நவ-ரஸ-தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்

தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே

பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதக் கமலங்களின் தொண்டில் என் மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும் தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால், உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி, அவ்வெண்ணத்தின் மீது காறி உமிழ்கிறேன்!” எனவே, பௌதிக இன்பம் தானாகவே சுவையற்றுப் போகுமளவிற்கு கிருஷ்ண உணர்வு (பக்தி) உன்னத சுவையுடையதாகும்.

கிருஷ்ண உணர்வு எத்தகைய சுவையுடையது என்பதை தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனது திருமாலைத் தொகுப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

பச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்,

அச்சுதா! அமர ரேறே!ஆயர்தம் கொழுந்தே! என்னும்,

இச்சுவை தவிர யான்போய்இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகரு ளானே!

திருமங்கை ஆழ்வாரும் இதே போன்று கூறுகிறார், பெரும் உணர்வை நல்கும் நாராயண என்னும் நாமம் வேண்டும், இந்திர லோகமும் வேண்டாம், ரம்பை, ஊர்வசி இவர்களின் உறவும் வேண்டாம்.”

பக்தியின் இத்தகு நிலையினால் பெறப்படுவதே உண்மையான இன்பம் என்பதை வள்ளுவரும் பின்வருமாறு கூறுகிறார்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல (திருக்குறள் 39)

கிருஷ்ண உணர்வே எல்லையில்லா மகிழ்ச்சியை நல்கும் என்பது சாஸ்திரங்களின் கூற்றும் நடைமுறையில் அனுபவிப்பதுமாகும். இதற்காகவன்றோ பகவான் ஸ்ரீ சைதன்யரும் பின்வந்த ஆச்சாரியர்களும், குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதரும் அரும்பாடுபட்டு கிருஷ்ண உணர்வைப் பரப்பினார்கள்.