படைப்பாளியும் விஞ்ஞானிகளும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கீழ்காணும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் ஜுன் 4, 1976 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெனிஸ் கடற்கரையில் நடைபெற்றதாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: நாம் பார்ப்பவை அனைத்தும் படைக்கப்பட்டவையே. படைப்பாளி என்று எவரும் இல்லை என இந்த விஞ்ஞானிகள் எவ்வாறு வாதிடுகின்றனர்? அவர்களும் படைக்கப்பட்டவர்களே, படைத்தவர் இல்லை என்று எதன் அடிப்படையில் சொல்கின்றனர்?

ரிஷபதேவ தாஸ்: அந்த படைப்பாளிக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை தவிர்ப்பதற்காக படைப்பாளியே இல்லை என்று அவர்கள் சொல்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: படைப்பாளியை நீங்கள் தவிர்க்கலாம், ஆனால் படைப்பாளியே இல்லை என்று சொல்ல முடியாது. படைப்பவரின் அதிகாரத்தை ஏற்பதும் மறுப்பதும் உங்களுடைய முடிவு, ஆனால் படைப்பாளி இல்லையென்று நீங்கள் சொல்ல முடியாது. உதாரணமாக, சட்டத்தை மதிக்காதவர்கள் பலர் உள்ளனர். “நாங்கள் அரசாங்கத்திற்கு பணிய மாட்டோம்” என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அரசாங்கம் இருப்பது உண்மையே. உங்களுக்கு அரசாங்கத்தை பிடிக்கலாம், பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் அரசாங்கம் இருப்பதை நீங்கள் எவ்வாறு மறுக்க முடியும். அரசாங்கம் உள்ளது என்பதை நீங்கள் ஏற்றேயாக வேண்டும்.

இராமேஷ்வர தாஸ்: பெரும் கர்வம் கொண்டுள்ள இந்த விஞ்ஞானிகள் “படைப்பாளி இல்லை” என கடந்த சில நூற்றாண்டுகளாக பிரகடனம் செய்து வருகின்றனர். இது சமீப கால எண்ணமே.

தமால கிருஷ்ண கோஸ்வாமி: ஆம், முன்பெல்லாம் இதுபோன்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.

ஸ்ரீல பிரபுபாதர்: எனவே, இந்த அயோக்கியர்களுக்கு நாம் சவால் விட வேண்டும்.

தமால கிருஷ்ணர்: சவால் விடுவதற்குத் தேவையான தெய்வீக ஞானம் என்னும் ஆயுதத்தை தங்களின் புத்தகங்களின் மூலமாக நீங்கள் கொடுக்கின்றீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: உண்மையை அறிவதில் அவர்கள் உண்மையான ஆர்வம் கொண்டிருப்பின், நமது புத்தகங்களை ஏற்றுக்கொள்வர்.

இராமேஷ்வரர்: அணுவே அனைத்திற்கும் மூல காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அயோக்கியனே, நீ அணுவிலிருந்து தோன்றியவன் அல்ல, தந்தையிடமிருந்து தோன்றியவன்.

இராமேஷ்வரர்:  ஆதியில் அனைத்தும் அணுவிலிருந்து தோன்றியதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களின் தற்போதைய நிலையை முதலில் பாருங்கள், பிறகு ஆதியைப் பார்க்கலாம். தற்போதைய நிலையே தெரியவில்லையாம், ஆதியைப் பற்றி அறிகிறார்களாம். விஷமில்லாத தண்ணீர் பாம்பைப் பிடிக்கமுடியாத பாம்பாட்டி நாகப் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்தானாம். அதுபோல, தற்போதைய நிலைக்கு பதில் சொல்ல முடியாத நீங்கள் ஆதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

விஞ்ஞானிகள் மிகச்சிறிய அற்பமான உயிர்வாழிகள், ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக பேசுவார்கள். இதுவே நவீன நாகரிகத்தின் குறைபாடு. அவர்கள் முக்கியத்துவமற்றவர்கள், இருப்பினும் மிகப்பெரிய விஷயங்களைப் பேசுகின்றனர். விஷமற்ற பாம்பைப் பிடிக்க முடியாதவன், நாகப் பாம்பைப் பிடிக்கப் போவதாக கூறுகிறான்.

தமால கிருஷ்ணர்: இது குழந்தை சந்திரனைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போல உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இவ்வெல்லா அயோக்கியர்களுக்கும் நாம் சவால் விட வேண்டும். “நீங்கள் உங்களின் தந்தையிடமிருந்து வந்தீர்களா, குரங்கிலிருந்து வந்தீர்களா? உங்கள் தந்தை ஒரு குரங்கா? மனிதன் குரங்கிலிருந்து வந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குரங்கிலிருந்து வந்தீர்களா, தந்தையிடமிருந்து வந்தீர்களா?”  ஒருவன் அடிமட்ட முட்டாளாக இல்லாதபட்சத்தில், மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூற மாட்டான். நீங்கள் தந்தையிடமிருந்து வந்தீர்கள், அவர் தனது தந்தையிடமிருந்து வந்தார். இதில் குரங்கு எங்கிருந்து வந்தது? உங்களுடைய குடும்ப பரம்பரையில் முன்னோர்கள் யாராவது குரங்காக இருந்தார்களா?

தமால கிருஷ்ணர்: அவர்கள் எலும்புகளைத் தோண்டி எடுத்து அதனை ஆராய்ச்சி செய்து இவ்வாறு கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: எலும்புகளை அடிப்படையாக வைத்து எதையும் கூற முடியாது. நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எலும்புகளை எரித்து விடுவதே இந்துக்களின் பாரம்பரிய பழக்கம். எனவே, எலும்புகள் எப்படி அவர்களுக்கு கிடைக்கும்?

தமால கிருஷ்ணர்: ஆப்பிரிக்கா போன்ற உலகின் இதர பகுதிகளிலிருந்து அவர்கள் எலும்புகளை எடுக்கின்றனர். ஐம்பது இலட்சம் வருடங்களுக்கு முந்தைய எலும்புகளை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். ஆயினும், அத்தகு எலும்புகளுக்கு இடையிலான இணைப்பினை அவர்களால் அறிய முடியவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அவர்கள் எதையும் கண்டறியவில்லை என்று பொருள். ஆயினும், கண்டுபிடித்து விட்டதாக கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும்போது படைப்பின் மூலத்தை அவர்களால் எவ்வாறு கண்டறிய முடியும்? கடவுளை எதிர்ப்பது ஒன்றுதான் இந்த விஞ்ஞானிகளின் நோக்கம். இவர்கள் அனைவரும் அசுரர்கள்.

பலிமர்தன தாஸ்: உண்மையில், விஞ்ஞானிகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால், மக்கள் தற்போது அவர்களை விட்டு விலகிச் செல்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுடைய போலித்தனத்தை நாம் வெளிக்கொணர்ந்தால் போதும், அவர்களின் வாழ்க்கை முடிந்து விடும்.

இராமேஷ்வரர்: அவர்கள் விஞ்ஞான புரட்சிக்கு முன்பு மக்கள் படைப்பாளியின் மீது நம்பிக்கை வைத்ததாகக் கூறுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அது விஞ்ஞான புரட்சி அல்ல, அயோக்கிய புரட்சி. இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளிக்கட்டும்–நீங்கள் தந்தையால் படைக்கப்பட்டீர்கள் எனும்போது எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் ஏன் இருக்க முடியாது? நீங்கள் ஆகாயத்திலிருந்து குதித்து விடவில்லையே.

தமால கிருஷ்ணர்: அவர்கள் சொல்வது என்னவெனில், மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான், குரங்கு மற்றொரு மிருகத்திடம் இருந்து வந்தது, ஆதியில் அனைத்தும் அணுவிலிருந்து தோன்றியது.

ஸ்ரீல பிரபுபாதர்: (விஞ்ஞானிகளை நோக்கியவாறு) அதெல்லாம் இருக்கட்டும், இப்போது வாதிடும் விஷயத்திற்கு வாருங்கள். நீங்கள் தந்தையால் உருவாக்கப்பட்டீர். இதை ஒப்புக் கொள்கிறீர்களா, இல்லையா? நாம் பார்க்கும் ஒவ்வொன்றும்–கார்கள், வீடுகள் என அனைத்தும் யாரேனும் ஒருவரால் உருவாக்கப்பட்டதுதான். ஆகவே, “படைப்பாளி இல்லை” என்று நீங்கள் எவ்வாறு கூற இயலும்?

தமால கிருஷ்ணர்: அப்படியென்றால் அந்த படைப்பாளியை படைத்தது யார்?

ஸ்ரீல பிரபுபாதர்: அதை பின்னால் விவாதிக்கலாம், குறைந்தபட்சம் படைப்பாளி ஒருவர் உள்ளார் என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.

பக்தர்: சில விஞ்ஞானிகள் படைப்பு சக்தியை ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் படைப்பாளி என்ற நபரை ஏற்க விரும்புவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, அது முறையல்ல. கார் தயாரிப்பவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர் தன் சொந்த கைகளால் காரை வடிவமைப்பது இல்லை. அவரிடம் நிறைய பணம் உள்ளது, அதுவே அவரது சக்தி. காரைத் தயாரிப்பதற்காக அவர் தனது சக்தியை (பணத்தை) பலருக்கும் கொடுக்கின்றார். ஆனால், இறுதியில் அவரே படைப்பாளர். திரு. ஃபோர்டு தனது கார்களை தானாக தயாரிப்பதில்லை. அவரது கம்பெனியின் ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்தே உருவாக்குகின்றனர், ஆனால் படைப்பாளி ஃபோர்டே.  அதுபோலவே ஒவ்வொன்றும் கடவுளால் படைக்கப்படுகிறது. மயாத்யக்ஷேண ப்ரக்ருதி ஸுயதே ஸசராசரம். (பகவத் கீதை 9.10)

ஃபோர்டை போலவே கிருஷ்ணரிடம் ஏராளமான சக்திகளும் உதவியாளர்களும் உள்ளனர். பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ரூயதே. கிருஷ்ணரிடம் அளவற்ற சக்திகள் உள்ளன, அவர் தனது சக்திகள் அனைத்தையும் மேற்பார்வை செய்கின்றார்.

கார் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு குழந்தை அறியாமல் இருக்கலாம். ஆனால், அறிவுடையோர் அதனை அறிவர். அதுபோல, உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை விஞ்ஞானிகள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக யாரேனும் ஒருவரால் படைக்கப்பட்டதே. ஆகவே, கடவுளே படைப்பாளி என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

திரு. ஃபோர்டு தனது கார்களை தானாக தயாரிப்பதில்லை. அவரது கம்பெனியின் ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்தே உருவாக்குகின்றனர், ஆனால் படைப்பாளி ஃபோர்டே.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives