டார்வின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

உயிரற்ற ஜடப் பொருட்களிலிருந்து உயிர் உற்பத்தியாகி, அது படிப்படியாக முன்னேறி, பின்னர் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்னும் டார்வின் பரிணாமக் கொள்கையினை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களுடனான பின்வரும் உரையாடலில் முறியடிக்கின்றார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த ஜடவுலகம் ஸத்வ, ரஜோ, தமோ (நற்குணம், தீவிர குணம், அறியாமை குணம்) ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டது. இவை எல்லா இடங்களிலும் செயல்படுகின்றன. இம்மூன்று தன்மைகளும் எல்லா உயிரினங்களிலும் வெவ்வேறு அளவு விகிதங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, சில மரங்கள் நேர்த்தியான பழங்களைத் தருகின்றன, மற்றவை எரிப்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன. மிருகங்களிலும் இந்த மூன்று குணங்கள் காணப்படுகின்றன. பசு நற்குணத்தையும், சிங்கம் தீவிர குணத்தையும், குரங்கு அறியாமை குணத்தையும் சார்ந்தது. டார்வினின் கொள்கைப்படி, டார்வின் தந்தை ஒரு குரங்கு (சிரிக்கின்றார்), எவ்வளவு முட்டாள்தனமான கொள்கையை உருவாக்கியிருக்கிறார்!

டா. சிங்க்: சில உயிரின வகைகள் வாழும் போராட்டத்தில் நிலைத்திருக்க முடியாமல், மடிந்து மறைந்து போகின்றன என்று டார்வின் கூறுகிறார். தொடர்ந்து நிலைத்திருக்கவல்ல உயிரினங்கள் நிலைக்கின்றன என்றும், மற்றவை இல்லாமல் போகின்றன என்றும், நிலைத்தலும் நிலையாமல் போவதும் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: எதுவுமே இல்லாமல் போவதில்லை. குரங்கினம் மறைந்து போகவில்லை. டார்வினின் மூதாதை யரான குரங்கு இன்னும் இருக்கிறதே.

கரந்தரர்: இயல்பான தேர்வு முறை ஒன்று செயல்படுவதாக டார்வின் கூறுகிறார். தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார், ஆனால் இப்படி தேர்ந்தெடுப்பது யார்?

ஸ்ரீல பிரபுபாதர்: அவர் ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும். ஒன்றை உயிர்வாழ விடுவதும் மற்றொன்றை மடிய விடுவதும் யார்? இதற்கான கட்டளையை வழங்கும் அதிகாரம் படைத்த ஒருவர் இருக்க வேண்டும். அந்த அதிகாரி யார் என்பது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கூறுகிறார்: மயாத்யக் க்ஷேண ப்ரக்ருதி:இயற்கை எனது மேற்பார்வையில் செயல்படுகிறது.” (பகவத் கீதை 9.10)

டா. சிங்க்: வெவ்வேறான உயிரினங்கள் ஒரே சமயத்தில் படைக்கப்படவில்லை என்றும், படிப்படியாக பரிணாமித்துள்ளன என்றும் டார்வின் கூறுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியானால், பரிணாமம் எவ்வாறு செயல்படத் துவங்கியது? அதற்கு அவர் என்ன விளக்கம் தருகிறார்?

கரந்தரர்: டார்வினின் கொள்கையை ஒப்புக்கொள்ளும் இன்றைய விஞ்ஞானிகள், முதலில் தோன்றிய உயிரானது இரசாயன ரீதியில் உற்பத்தியானது என்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: உயிர் இரசாயனப் பொருட்களிலிருந்து தோன்றியது என்றால், உங்களுடைய முன்னேறிய விஞ் ஞானத்தைக் கொண்டு, உங்கள் சோதனைக் கூடங்களில் இரசாயன ரீதியாக நீங்கள் ஏன் உயிரை உற்பத்தி செய்யக் கூடாது?

கரந்தரர்: வருங்காலத்தில் உயிரை உற்பத்தி செய்யப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: எந்த வருங்காலம்? இக்கட்டான கேள்வியை எழுப்பினால், “வருங்காலத்தில் செய்வோம்,” என்று பதிலளிக்கின்றனர். ஏன், வருங்காலத்தில்? இஃது அர்த்தமற்ற பேச்சு. அவர்கள் அவ்வளவு தூரம் முன்னேறியிருந்தால், இரசாயனங்களிலிருந்து உயிரை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை இப்போதே செய்து காட்ட வேண்டும். இல்லாவிடில், அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன அர்த்தம்? அவர்களின் பேச்சு அர்த்தமற்றது.

கரந்தரர்: உயிரை சிருஷ்டிக்கும் இறுதி தருவாயில் இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: முன்பு சொன்னதையே வேறு விதமாகச் சொல்கிறார்கள்: “வருங்காலத்தில் செய்வோம்.” உயிரின் தோற்றத்தைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். உயிர் இரசாயனப் பொருட்களிலிருந்து உற்பத்தியானது என்பதை விரைவில் நிரூபித்துக் காட்டுவோம் என்று அவர்கள் கூறுவது, பின்தேதியிட்ட காசோலையை வழங்குவதைப் போன்றதாகும். அப்படியொரு காசோலையை நான் உங்களுக்கு வழங்கி, நாளை என் கணக்கில் பணமில்லாமல் போனால், என் காசோலைக்கு என்ன மதிப்பு? தங்களின் விஞ்ஞானம் ஆச்சரியகரமானது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சனை எழும்போது, அதற்கான விடையினை பின்பு தருவதாகக் கூறுகிறார்கள்.

என்னிடம் கோடிக்கணக்கில் பணமிருப்பதாக வைத்துக்கொள்வோம். என்னிடம் நீங்கள் பணம் கேட்டால், “தருகிறேன், ஆனால் நீண்ட காலம் கழித்த பின்தேதியிட்ட காசோலை தருகிறேன், சம்மதமா?” என்று நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் புத்திசாலியாக இருந்தால், தற்போது ஐந்து டாலர்களாவது கையில் தந்துவிடுங்கள், ஏதாவது கிடைத்த திருப்தியிருக்கும் என்று சொல்வீர்கள். அதுபோல, இந்த விஞ்ஞானிகள் தங்கள் சோதனைக் கூடங்களில் ஒரு சிறுபுல்லை உற்பத்தி செய்தாலாவது சற்று திருப்தி இருக்கும். ஆனால் அவர்கள் அதைக்கூட உற்பத்தி செய்ய இயலாதவர்களாக உள்ளனர். இருந்தும், உயிர் இரசாயனங்களிலிருந்து தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள். என்னே அபத்தம்? இதைக் கேட்பவர் இல்லையா?

கரந்தரர்: இரசாயன விதிமுறைகளின்படி உயிர் உண்டாவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: விதிமுறை என்றவுடனேயே, அந்த விதியை ஒருவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனாலும் தங்களது சோதனைக் கூடங்களில் ஒரு சிறு புல்லைக்கூட உற்பத்தி செய்ய அவர்களால் முடியாது. இவர்கள் எப்படிப்பட்ட விஞ்ஞானிகள்?

டா. சிங்க்: எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது, இறுதியில் எல்லாம் ஜடப் பொருளிலிருந்து வந்தது என்ற முடிவிற்கு வர வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். உயிருள்ள பொருள் உயிரற்ற பொருளிலிருந்து வந்துள்ளது என்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியானால், இப்போது உயிர்ப்பொருள் எங்கிருந்து வருகிறது? முன்னொரு காலத்தில் உயிர் உயிரற்ற பொருளிலிருந்து தோன்றியது என்கிறீர்கள், ஆனால் இப்போது அப்படியில்லை என்கிறார்களா? இப்போது அந்த எறும்பு எங்கிருந்து வருகிறது? வெறும் தூசியிலிருந்தா?

டா. சிங்க்: உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

ஸ்ரீல பிரபுபாதர்: (டா. சிங்கை ஒரு ஜடவாத விஞ்ஞானியின் இடத்தில் வைத்து) சரி, விஞ்ஞானி அவர்களே, இப்போது ஏன் உயிர் ஜடப் பொருளிலிருந்து தோன்றுவதில்லை? அப்போது தோன்றியது என்கிறீர்கள், அயோக்கியனே, இப்போது ஏன் ஜடப் பொருளிலிருந்து உயிர் வருவதில்லை?

உண்மையில், இப்படிப்பட்ட விஞ்ஞானிகள் அயோக்கியர்கள், உயிர் ஜடப் பொருளிலிருந்து வந்ததாக குழந்தைத்தனமாகக் கூறுகிறார்கள். அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, இருந்தும் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். நமது கிருஷ்ண பக்தி இயக்கம் இவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். உயிரை ஏன் உற்பத்தி செய்ய இயலவில்லை? கடந்த காலத்தில் உயிர் ஜடப் பொருளிலிருந்து தோன்றியது என்றும், வருங்காலத்திலும் அவ்வாறு நிகழும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இப்போது ஏன் நிகழ்வதில்லை? ஏன் வருங்காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்? இது முரண்பாடாக இல்லையா? இது குழந்தைத்தனமான அபத்தம்.

கரந்தரர்: கடந்த காலத்தில் உயிர் ஜடப் பொருளிலிருந்து தோன்றியது என்றும், வருங்காலத்தில் அதே வழியில் உயிரை உண்டாக்கப் போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இஃது என்ன பிதற்றல்? உயிர் ஜடப் பொருளி லிருந்து தோன்றுகிறது என்பதை அவர்களால் தற்போது நிரூபிக்க முடியாது என்னும் பட்சத்தில். கடந்த காலத்தில் இப்படித்தான் உயிர் தோன்றியது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

டா. சிங்க்: அவர்கள் அனுமானிக்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: யாருமே அனுமானிக்கலாம், ஆனால் அது விஞ்ஞானமாகாது. எல்லாரும் எதையாவது அனுமானிக்கலாம். உங்களுக்கு ஒரு அனுமானம், எனக்கு ஒரு அனுமானம். ஆனால் அதற்கெல்லாம் நிரூபணம் வேண்டும். உயிர் உயிரிலிருந்து தோன்றுகிறதென்று நம்மால் நிரூபிக்க முடியும். ஒரு தகப்பனுக்குக் குழந்தை பிறக்கிறது, தகப்பனுக்கும் உயிர் இருக்கிறது, குழந்தைக்கும் உயிர் இருக்கிறது. தகப்பன் ஓர் உயிரற்ற கல்லாக இருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினால், அவர்களிடம் அதற்கு என்ன பிரமாணம் (சாட்சி) இருக்கிறது? எங்கே அவர்களது பிரமாணம்? உயிர் உயிரிலிருந்து தோன்றுகிறது என்பதை நாம் எளிதில் நிரூபித்துவிடலாம். மூல உயிர் கிருஷ்ணர், அதையும் நிரூபிக்க முடியும். ஆனால் ஒரு கல்லிற்கு குழந்தை பிறந்தது என்பதற்கு என்ன பிரமாணம்? உயிர் ஜடப் பொருளிலிருந்து தோன்றுகிறது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது என்பதால், அவர்கள் அதனை வருங்காலத்திற்கு ஒத்திப்போட்டிருக்கிறார்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives