நாவிற்கு ஒரு சீரிய பணி

நாக்கு என்பது மனிதர்களின் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்; அதனை எங்ஙனம் பயன்படுத்துவது என்பது குறித்த ஒரு விரிவான விளக்கம்.

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

நாவினைப் பயன்படுத்தி நாம் செய்யும் முக்கிய செயல்கள் இரண்டு: சுவைத்தல், பேசுதல். நாவினை பயன்படுத்தியே உடலைப் பராமரிக்கக்கூடிய உணவினைச் சுவைக்கின்றோம், எலும்புகள் இல்லாத அந்த நாவினைக் கொண்டுதான் மற்றவர்களுடன் பேசி நமது கருத்துகளை பரிமாறி வருகிறோம். இவ்வாறாக, மனிதன் மட்டுமன்றி எல்லா ஜீவராசிகளுக்கும் நாக்கு என்னும் உறுப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இன்று நாம் பேசும் பேச்சுகள்

இன்றைய சமுதாயத்தில் நாவினைப் பயன்படுத்தி பல்வேறு செயல்கள் ஆற்றப்படுகின்றன. குறிப்பாக நம்முடைய உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதில் நாவினை வைத்து பேசப்படும் பேச்சுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வரலாற்றை எடுத்து பார்த்தால், பெரிய விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், போராட்ட வீரர்கள் என பல தரப்பினரும் நாவினை வைத்தே தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தினர். காரல்மார்க்ஸ், லெனின், சுபாஷ் சந்திர போஸ், காந்தி போன்ற தலைவர்கள் தங்களுடைய நாவினை உபயோகித்த விதமே அவர்களுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவியாக அமைந்தது.

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. யார் வேனுமானாலும் எதை வேண்டுமானும் பேசுவதற்கு முழு உரிமை உள்ளது, அதற்கு எந்த தடையும் இல்லை. பொதுவாக, பேசாமல் இருப்பது மக்களுக்கு சாத்தியமல்ல என்றுகூட சொல்வார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், பேசாமல் இருந்தால் சிலருக்கு தலையே வெடித்துவிடுவதுபோல தோன்றும். காரணம் என்னவெனில், நம்முடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் நம்மால் இருக்க முடியாது. அரசியல், சினிமா, நாடகம் உட்பட அனைத்து துறைகளும் பேச்சை வைத்தே இயங்குகிறது என்றால் மிகையாகாது.

நாம் பேசும் பேச்சுகளால், என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதை நாம் என்றைக்காவது சிந்தித்து பார்த்து பேசியது உண்டா? “யாகாவராயினும் நா காக்க” என்று திருவள்ளுவர் நாவினைப் பற்றி பேசுகிறார். எதைக் கட்டுப்படுத்தாவிடினும் நாவினைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லாவிடில் அது சோகத்தையே கொடுக்கும்.

தேர்தல் என்று வந்துவிட்டால், மக்களிடம் என்னே உற்சாகம்! எவ்வாறு பிற கட்சிகளை தாக்கி பேசுவது, திட்டங்களை வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது என ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும் முழு முனைப்புடன் செயல்படுகின்றனர். சினிமா துறையில் பேசப்படும் பேச்சுகளோ, பெரும்பாலும் வன்முறைகளை பற்றிய வசனங்களாகவும் பாலுறவைத் தூண்டும் வசனங்களாகவும் உள்ளன.

ஒருவருடைய பேச்சை வைத்தே அவர் எப்படிபட்ட நபர் என்பதைக் கூறிவிட முடியும். தற்காலத்தில் நாக்கினைப் பயன்படுத்தி அடுத்தவர்களை எவ்வாறு புண்படுத்த முடியும், திட்டுவது, பொய் கூறுவது, புறம் சொல்வது, சமுதாயத்தை தவறான வழியில் செலுத்துவது போன்ற தேவையற்ற விஷயங்களை மக்கள் பேசி வருகின்றனர். நமது பேச்சுக்களுக்கான அனைத்து விளைவுகளையும் நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். இன்று நம்முடைய பேச்சினால் நாம் அடுத்தவரை புண்படுத்தினால், நாமும் அதேபோல் புண்பட வேண்டியிருக்கும்.

 

தவளைகளின் பேச்சுகள்

இன்றைய மனித சமுதாயம், நாவினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாமல் இருக்கும் கரணத்தினால், அவர்கள் தங்களின் மனம் போகும் வழியில் நாவினைப் பயன்படுத்துகின்றனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் ஒரு உதாரணம் கொடுப்பது உண்டு. இன்றைய மக்களின் பேச்சு தவளை கத்துவதற்கு ஒப்பானதாகும். தவளை தனது கத்தலின் மூலமாக பாம்பிற்கு அழைப்பு விடுவிக்கின்றது: “பாம்பே, இதோ நான் இங்கே இருக்கின்றேன், என்னை வந்து உணவாக சாப்பிடு.” இவ்வாறாக, தவளையின் கத்தல் அதற்கு மரணத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அவ்வாறே இன்று பெயரளவில் நாகரிக முன்னேற்றமடைந்துள்ள மக்கள், தங்களுடைய பேச்சின் மூலமாக, நரகத்தின் வாயில்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

கிருஷ்ண பக்தியில் பேச்சின் செயல்பாடுகள்

கிருஷ்ண பக்தியின் மூல ஆதராமே நாவில் இருந்தே துவங்குகிறது. நம்முடைய கிருஷ்ண பக்தியானது நாவினால் செய்யப்படும் இரண்டு செயல்களினால் ஆரம்பிக்கிறது. ஒன்று, நாவினை வைத்து நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்வித்த பிரசாதத்தை உண்ணலாம். மற்றொன்று இந்த நாவினைப் பயன்படுத்தி (நமது பேசும் திறனைப் பயன்படுத்தி) கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த இரண்டு சேவைகளை நாவினைப் பயன்படுத்தி நாம் செய்யும் மாத்திரத்தில், அது நாவினை சரியான முறையில் பயன்படுத்துவதாகும். இல்லையெனில், இந்த நாவானது நம்முடைய புலன்களை மேன்மேலும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

பேசும் திறனை பல ஆச்சாரியர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதை நாம் காணலாம். ஸ்ரீமத் பாகவதத்தை முதலில் உரைத்த சுகதேவ கோஸ்வாமி, அதனை மீண்டும் நைமிஷாரண்யத்தில் பேசிய சூத கோஸ்வாமி, சைதன்ய மஹாபிரபு, ஆறு கோஸ்வாமிகள் ஆகியோர் உட்பட, சமீப கால ஆச்சாரியர்களான பக்திவினோத தாகூர், பக்திசிந்தாந்த சரஸ்வதி தாகூர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் என அனைத்து பக்தர்களும், தங்களுடைய நாவினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடுவதிலும், கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி விவாதிப்பதிலும், கிருஷ்ண பக்தியை அனைத்து ஜீவன்களுக்கும் பிரச்சாரம் செய்வதிலும் ஈடுபடுத்தினர். இதன் வாயிலாக அவர்கள் தங்களுடைய நாவினை கிருஷ்ணரின் சேவையில் சரியான முறையில் உபயோகித்து உன்னதமான ஆனந்தத்தை அடைகின்றனர். சைதன்ய மஹாபிரபு நமக்கு கட்டளையிட்டுள்ளார்: யாரே தேகோ தாரே கஹோ க்ருஷ்ண உபதேஷ். அதாவது, யாரைப் பார்த்தாலும் எங்கு சென்றாலும், கிருஷ்ணரைப் பற்றிய தத்துவங்களை மட்டுமே பேசுங்கள். சைதன்ய மஹாபிரபுவின் இந்த கட்டளையினைப் பின்பற்றி, நித்யானந்த பிரபு, ஹரிதாஸ தாகூர் ஆகிய இருவரும் வீடு வீடாகச் சென்று, ஒவ்வோர் இல்லத்தின் கதவுகளையும் தட்டி, அவர்களுடைய பாதத்தில் நமஸ்காரம் செய்து, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்யுமாறு வேண்டுவர். நம்முடைய பேசும் திறனை கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்தும்படி சைதன்ய மஹாபிரபு இட்ட கட்டளையினை அவர்கள் செவ்வனே நிறைவேற்றினர். மேலும், அதே கட்டளையினைப் பின்பற்றி, ஸ்ரீல பிரபுபாதரும் தனது நாவினை எப்போதும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்தினார்; உலகம் முழுவதும் இஸ்கான் என்னும் ஹரே கிருஷ்ண இயக்கத்தினைக் கொண்டு சென்றார்.

ஸ்ரீல பிரபுபாதர் இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை மற்ற மடங்களைப் போல அல்லாமல், பேசும் சக்தியை உபயோகிக்கும் பிரசார இயக்கமாக ஸ்தாபிதம் செய்தார். இந்த இயக்கத்தில் அதிகாலை வேளையில் நிகழும் மங்கள ஆரத்தி, சூரிய உதயத்திற்குப் பின்பு நிகழும் சிருங்கார ஆரத்தி, குரு பூஜை, மாலை வேளையில் நிகழும் சந்திய ஆரத்தி மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், தங்களது நாவினை கிருஷ்ணரின் திருநாமத்தினைப் பாடுவதில் செவ்வனே உபயோகிக்கின்றனர். மேலும், அவர்கள் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களைப் படிப்பதிலும் பேசுவதிலும் நாவினை உபயோகிக்கின்றனர்.

ஸ்ரீமத் பாகவதத்தினை நைமிசாரண்யத்தில் உரைத்த சூத கோஸ்வாமி தனது நாவினை சீரிய முறையில் பயன்படுத்தினார்.

கிருஷ்ண பக்தியினை சிரத்தையுடன் ஏற்பவர்களுக்கு, புத்தக விநியோகம், பத்திரிகை (பகவத் தரிசனம்) விநியோகம், கிருஷ்ணரின் போதனைகளை மனித சமுதாயத்தின் நன்மைகளுக்காக பிரச்சாரம் செய்தல் என பல சேவைகளை ஸ்ரீல பிரபுபாதர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் பக்தர்கள் தங்களுடைய நாவினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்த உதவுகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தன்னுடைய நாமம் ஒலிக்க வேண்டும் என்று சைதன்ய மஹாபிரபு கட்டளையிட்டுள்ளர். கிருஷ்ண பக்தியை தீவிரமாக பயிற்சி செய்து உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதே பணியினை மக்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது ஜீவனுக்கு உண்மையான ஆனந்தத்தை வழங்குவதோடு, மீண்டும் இந்த ஜனன மரண சூழற்சியிலிருந்து காப்பாற்றுகின்றது. பாரதத்தில் பிறக்கும் நல்வாய்ப்பைப் பெற்ற அனைவரும் இந்த கிருஷ்ண பக்தியை தீவிரமாக பயிற்சி செய்து, உலகம் முழுவதும் உள்ள கட்டுண்ட ஜீவன்களை விடுவிக்க வேண்டும். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் விருப்பம். அப்போது நம்முடைய நாவினை நாம் முறையாகப் பயன்படுத்த இயலும்.

மற்ற யுகங்களை காட்டிலும் இந்த கலி யுகம் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த யுகத்தின் தர்மமான நாம சங்கீர்த்தனத்தை நாவினைக் கொண்டு செயல்படுத்தினால், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்ட பின்னர், பகவானை நோக்கி செல்ல முடியும். தன்னுடைய பக்தர்கள் எப்போதும் தன்னைப் பற்றி பேசுவதில் ஆனந்தம் கொள்கின்றனர் என்று பகவத் கீதையில் (10.9) கிருஷ்ணர் கூறுகிறார். இதுவே பக்தர்கள் தங்களுடைய நாவினை பயன்படுத்தும் விதமாகும்.

மனிதர்களாகிய நாம் மட்டுமே நாவினை பயன்படுத்தி கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிக்க முடியும். பெறற்கரிய மனித உடலைப் பெற்ற நாம் நமது நாவினை பயன்படுத்தி மஹா மந்திரத்தை உச்சரிக்காவிடில், நமக்கும் பிற ஜீவராசிகளுக்கும் பெரியதாக வித்தியாசமில்லை. எனவே, நமது நாவினை கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பதிலும் கிருஷ்ணரைப் பற்றி பேசுவதிலும் ஈடுபடுத்துவோமாக.

கலி யுகத்தின் தர்மமான நாம சங்கீர்த்தனத்தை நாவினைக் கொண்டு செயல்படுத்தினால், இந்த உடலை விட்ட பின்னர், நாம் நிச்சயமாக பகவானை நோக்கி செல்ல முடியும்.

2017-01-12T11:33:20+00:00November, 2014|பொது|0 Comments

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment