வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

கல்வி, தொழிற்சாலை, விஞ்ஞானம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இன்றைய நவீன சமுதாயம் வளர்ச்சியடைந்து விட்டதாக அறிகிறோம். இந்த வளர்ச்சி நல்ல மாற்றமா? இதனால் மனிதனும் இதர ஜீவராசிகளும் நல்ல பலனை அடைந்துள்ளார்களா? இதைப் பற்றிய ஒரு பார்வையை இப்போது காண்போம்.

நவீன சமுதாயம்

நாம் வாழும் பாரத நாட்டில், அதன் இயல்பான பாரம்பரியத்தை அதாவது ஆன்மீக கலாசாரத்தை விட்டு நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாசாரத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக நம்மை அடிமைப்படுத்த தொடங்கினர். பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தை தகர்த்தால் மட்டுமே இப்பூமியின் மக்களை அடிமைப்படுத்துவது சாத்தியம் என்று கருதினர். சிறிது சிறிதாக அவர்களுடைய கல்வி மற்றும் கலாசாரத்தை நம்மீது தினித்தனர். வேறு வழியின்றி பாரத மக்களும் அதனைக் கடைபிடிக்க தொடங்கினர். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், இந்தியா சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சென்றுவிட்டாலும், அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கத்திய கலாசாரமும் கல்வி முறையும் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, உண்மையான வேத கலாசாரத்தை இன்று நாம் ஏறக்குறைய இழந்து நிற்கின்றோம்.

கல்விமுறையின் குறைபாடுகள்

அந்நியர்களின் கல்வி முறையைப் பின்பற்றுவதால், இன்று நாம் பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையை புறக்கணிக்கின்றோம். இந்த பௌதிக கல்வி முறையானது நம்மை ஆன்மீக கலாசாரத்திலிருந்து விலகச் செய்கிறது. எவ்வாறு பணம் சம்மாதிப்பது, எவ்வாறு அதிகமான புலனின்பங்களை அனுபவிப்பது போன்றவற்றை மட்டுமே அடிப்படையாக வைத்து இன்றைய கல்விமுறை உள்ளது. ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் உரையாற்றும்போது, உடலில் உள்ள ஆத்மாவைப் பற்றிய கல்வி உங்கள் நாட்டில் சொல்லி தரப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பினார். உலகம் முழுவதும் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் உள்ளபோதிலும், ஆத்மா சம்மந்தபட்ட கல்வி எங்குமே இல்லாதது நிச்சயம் மிகப்பெரிய குறைபாடே. இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய மகன்களும் மகள்களும் மிகப்பெரிய மருத்துவராக, பொறியியல் வல்லுநராக, அல்லது மிகப்பெரிய விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, வாழ்வின் மாபெரும் துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, மற்றும் நோயிலிருந்து விடுபடுவதைப் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இவ்வளவு ஏன், அவர்களே அதைப் பற்றி நினைப்பதில்லை. தன் மகனை சான்றோன் (ஆன்மீக அறிவில் தேர்ச்சி பெற்றவன்) என்று கேட்டு மகிழ்ந்த தாய்மார்களின் காலம் கடந்து விட்டதோ!

அரசியல் தலைவர்களும் மக்களைத் தவறாக வழி நடத்துவதில் மிகவும் திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர். அனைவரும் கல்வி பெற வேண்டும் என்று குரல் கொடுத்து, கல்வித் துறையை அவர்கள் நல்ல வியாபாரமாக்கி விட்டதை நாம் கண்கூடாக காண்கிறோம். அனைவருக்கும் கல்வி கொடுப்பதால், அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்ததா என்றால், அதுவும் இல்லை. எத்தனையோ படித்த இளைஞர்கள் வேலையின்றி அலைகழிக்கப்படுவதைக் காண்கிறோம். மாணவர்கள் ஆசிரியர்களைக் கொலை செய்வது, மிரட்டுவது, ஆசிரியர்கள் மாணவிகளைப் பாலியல் தொந்திரவு செய்வது போன்றவற்றை ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். நவீன கால கல்வி முறையின் பிரதிபலிப்பே இது.

இன்றைய பல்கலைக் கழகங்களில் எவ்வளவோ துறைகள் உள்ளபோதிலும் ஆத்மா விஞ்ஞானத்தை அறிவதற்கு எந்தவொரு துறையும் இல்லை.

தொழில்நுட்பத்தின் குறைபாடுகள்

 

அடுத்ததாக, இன்றைய நவீன சமுதாயத்தின் வளர்ச்சியாக கருதப்படும் தொலைக்காட்சி, இணையம் (இன்டர்நெட்), செய்தித்தாள்கள், செல்போன் போன்றவை நம்மை மேலும் ஆன்மீகத்திலிருந்து விலக்குவதற்கு வழி செய்கின்றன. இவை மக்களின் புலன்களைத் தூண்டிவிட்டு புலனின்பத்தை அதிகரிக்கச் செய்து புலன்களை மாசடையச் செய்கின்றன. ஆண் பெண் இனக் கவர்ச்சி என்பது திருமணம் முடிந்தபின்னர் என்ற நிலை மாறி, இன்று அதனை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் மாபெரும் வியாபார பொருளாக மாற்றி, திருமணம் என்னும் புனிதமான சடங்கினை கொச்சைப்படுத்திவிட்டனர். சினிமா துறை இதில் பெரும் பங்கு வகிக்கிறது. பல்வேறு ஊடகங்களின் காரணத்தினால் மனிதர்கள் தங்களுடைய உணர்வுகளை பரிமாறிக் கொள்வது மிகவும் குறைந்து விட்டது. இளைய சமுதாயத்தினர் இணையத்தின் தவறான விஷயங்களால் கவரப்பட்டு, தங்களது அரிதான மனித வாழ்க்கையை தவறாக உபயோகிக்கின்றனர்.

ஒழுக்கமின்மை

நவீன சமுதாயத்தின் மற்றொரு மிகப்பெரிய வளர்ச்சி, மக்கள் ஒழுக்கமின்றி இருத்தல். தவறான பாலுறவு, மாமிச உணவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம் ஆகிய நான்கு ஒழுக்கமற்ற செயல்களில் மக்கள் அனைவரும் மிகவும் சுலபமாக ஈடுபடுகின்றனர். இதனால் தூய்மை, வாய்மை, தயை, தவம் போன்ற ஒழுக்கச் செயல்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிடுகின்றன. ஒழுக்கமற்ற செயல்களைத் தடை செய்வதற்கு அரசியல் தலைவர்களும் முன்வருவதில்லை. அவற்றை எவ்வாறு அதிகப்படுத்துவது என்றே செயல்படுகின்றனர். கலி யுகத்தில் தலைவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக மக்களை ஏமாற்றுபவர்களாக இருப்பர் என்று ஸ்ரீமத் பாகவதம் பன்னிரண்டாம் காண்டத்தில் கூறப்பட்டிருப்பதை இன்று நாம் நேரில் கண்டு வருகிறோம்.

நவீன சமுதாயத்திலுள்ள பெண்கள் மிகவும் சுதந்திரமாக வலம் வருவதை நாகரிகமாக கருதுகின்றனர். பாரத பாரம்பரியத்தின்படி, பெண்கள் தங்களது சிறுவயதில் தந்தையின் பாதுகாப்பிலும் திருமணம் முடிந்ததும் கணவனின் பாதுகாப்பிலும் வயதான பின்னர் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். அத்தகு கட்டுப்பாடும் ஒழுக்கமும் நவீன சமுதாயத்தில் இல்லாத காரணத்தினால், பல்வேறு தகாத உறவுகள் வளர்ந்து வருகின்றன. கொடூர மனம் கொண்ட மனிதர்கள் மாமிச உணவை விரும்புகின்றனர்; அதிலும் சிலர் தாய்க்கு சமமாக மதிக்கப்பட வேண்டிய பசுவைக் கொன்று உண்கின்றனர்.  பசுவின் பாலை நாம் அருந்துகிறோம், பால் நின்றவுடன் அவளை கசாப்புக் கூடகங்களுக்கு அனுப்புகின்றனர். இஃது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு வழிகளில் மக்கள் ஆன்மீக கலாசாரத்தை விட்டு விலகியுள்ளதால், அதிக அளவு வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளில் மனிதன் சிக்கிக் கொண்டுள்ளான்.

மாமிச உணவு, மது, தகாத பாலுறவு போன்ற தீய செயல்கள் நவீன சமுதாயத்தின் அங்கங்களாக மாறி வருகின்றன.

விஞ்ஞானிகளின் குறைகள்

மற்றுமொரு மாபெரும் ஏமாற்று வேலை என்னவெனில், இன்றைய விஞ்ஞானிகள். அணுகுண்டுகளையும் போர்க் கருவிகளையும் உருவாக்கி அவர்கள் மக்களுக்கு அழிவைத் தேடித் தருகின்றனர். நிலவிற்குச் சென்று மண் கொண்டு வருகிறேன் என்று கூறி, ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு விஞ்ஞானியின் கருத்தை மற்றொரு விஞ்ஞானி முறியடித்து, பொது மக்களை பைத்தியமாக்குகின்றனர். விஞ்ஞானம் என்ற பெயரில் ஏமாற்று வேலை மட்டுமே நடக்கிறது. விமானம், ஒலிப்பெருக்கி, மின்சாரம் போன்ற விஞ்ஞானிகளின் சில படைப்புகள் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்தப்படலாம். அவ்வாறு நாம் கிருஷ்ண சேவைக்காக அவற்றை ஈடுபடுத்தாவிடில், அவை அனைத்தும் வீண் என்று கூறிய ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை எவ்வாறு கிருஷ்ண சேவையில் பயன்படுத்துவது என்பதை நவீன உலகிற்கு எடுத்துரைத்தார். நவீன சமுதாயத்தின் குறைபாடுகளை முழுமையாக பட்டியலிட்டால், அது மாபெரும் புத்தகமாகவே வந்துவிடும்.

இதற்கான தீர்வு

ஆன்மீக கலாசாரத்தை மக்களிடம் மீண்டும் ஸ்தாபிதம் செய்து, வேத கால நாகரிகத்தை ஏற்படுத்துவதே இன்றைய சமுதாய பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வாகும். ஆன்மீக பண்பாட்டை வளர்ப்பதற்கு ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முதல் யுகமான ஸத்ய (கிருத) யுகத்தில் பகவான் ஹரியை தியானித்து என்ன பலன்களை பெற்றார்களோ, திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து என்ன பலன்களை அடைந்தார்களோ, துவாபர யுகத்தில் விக்ரஹ வழிபாடுகளால் என்ன பலன்களைப் பெற்றார்களோ, அந்த பலன்கள் அனைத்தையும் நாம் வாழும் கலி யுகத்தில் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினால் மட்டுமே பெற்றுவிட முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.52) உறுதியாக கூறுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் என்னும் இந்த மாபெரும் ஸங்கீர்த்தன இயக்கத்தை ஆரம்பித்து, பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் பிரச்சாரம் செய்த சூழலில், உலகின் பௌதிக பிரச்சனைகளுக்கும் இதுவே தீர்வு என்பதை பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார், நிரூபித்தும் உள்ளார். ஒருமுறை நீண்ட வறட்சியினால் துன்பத்தில் மூழ்கியிருந்த ஹைதராபாத் நகரில் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினால் ஸ்ரீல பிரபுபாதர் மழையை வரவழைத்தார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று பக்தர்கள் ஒன்றுகூடி கீர்த்தனம் செய்த அன்றைய தினமே மிகப்பெரிய அளவில் அங்கே மழை பெய்தது.

பசுவதை தடைச் சட்டம், மது ஒழிப்புச் சட்டம், சூதாட்ட தடைச் சட்டம், விபச்சார விடுதிகளை மூடுதல் போன்றவை அமலுக்கு வர வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தர்களாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். கிருஷ்ண பக்தர் ஒருவர் என்று நாட்டை ஆள்கின்றாரோ, அன்றுதான் அந்நாட்டில் சுபிட்சம் ஏற்படும். கிருஷ்ண பக்தி என்பது ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டது, அனைத்து சமய பிரிவினருக்கும் பொதுவானது.

மனித வாழ்க்கை என்னும் அரிய வாய்ப்பினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதற்கும் ஆன்மீக உலகை அடைவதற்கும் பயன்படுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற போலியான சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது. கலி யுகத்தின் புத்திசாலிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நாம ஸங்கீர்த்தனத்தினால் வழிபடுவர் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) கூறப்பட்டுள்ளது. எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதே உண்மையான புத்திசாலித்தனம். நிதான புத்தி உடைய ஒவ்வொருவரும் சற்று யோசித்து பார்க்க வேண்டும்: இன்றைய நவீன சமுதாயத்தின் வளர்ச்சி நமக்கு திருப்தியளிக்கிறதா? நிச்சயம் இல்லை. ஆனால் யாரும் அதனை யோசிப்பதில்லை, மாயை அதற்கு தடையாக உள்ளது. அந்த தடையை விலக்கி கிருஷ்ண பக்தியை ஏற்று, ஹரி நாமத்தை ஊரெங்கும் எடுத்துச் செல்வோம்.

ஹரி நாமத்தை நமக்கு வழங்குவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்:

 

ப்ரிதிவீதே ஆசே யத நகராதி க்ராம

ஸர்வத்ர ப்ரசார ஹைபே மோர நாம

 

அதாவது, ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் தன்னுடைய நாமம் உச்சரிக்கப்படும் என்று கூறினார். அவருடைய ஆணைப்படி, நாம் அனைவரும் ஒன்றுகூடி, ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனத்தினால் இன்றைய வாழ்வின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை அடைவோமாக. இந்த ஆன்மீக புரட்சியை உலகம் முழுவதும் ஏற்படுத்தி அனைவரையும் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் சரணடைய வைப்போம் என்று ஒவ்வொருவரும் சூளுரைப்போம்.

நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக அவதரித்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சீடர்களும்.