புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

Must read

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, புனித ஸ்தலங்களில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்ற இதழ்களில், திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல் ஆகியவற்றைக் கண்டோம். தற்போது, விக்ரஹ ஆராதனை என்பது குறித்து அறியலாம்.

வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்

விக்ரஹம் என்றால் என்ன?

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில் இங்குத் தோன்றுகின்றார். மணல், களிமண், மரம், கல், மனம், உலோகம், மணிகள், வரைபடங்கள் ஆகிய எட்டு விதங்களில் அவர் தோற்றமளிக்கும்போது, அவருக்கு விக்ரஹம் என்று பெயர். விக்ரஹத்திற்கும் பகவானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 1) விருந்தாவனத் திலிருந்த கோபால் என்னும் பகவானின் விக்ரஹம் அங்கிருந்து ஒரிசாவிலுள்ள வித்யா நகரம் என்னும் கிராமத்திற்கு சாட்சி சொல் வதற்காக நடந்து வந்தார்; சாட்சி கோபால் என்று பெயரும் பெற்றார். 2) ரெமுணா என்னுமிடத்திலுள்ள கோபிநாதர் விக்ரஹம் மாதவேந்திர பூரி என்னும் ஆச்சாரியருக்காக கீர் எனப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த் தத்தினை ஒளித்து வைத்தார்; கீர் திருடிய கோபிநாதர் என்ற பெயரையும் பெற்றார்.

விக்ரஹத்திற்கும் சிலைக்கும் உள்ள வேறுபாடு

ஆச்சாரியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பஞ்சராத்ர விதிமுறையின்படி வழிபடப்படும் பகவானின் ரூபம், விக்ரஹம் எனப்படும். விக்ரஹம் சாக்ஷாத் ஸ்ரீ பகவானே. ஆனால் சாதாரண சிலையோ பகவான் அல்ல, அச்சிலையில் பகவான் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. எனவே, விக்ரஹங்களை வழிபடுவது சிலையை வழிபடுவது அல்ல.

பக்தியின் சக்தி வாய்ந்த அங்கம்

பக்தியின் அங்கங்களாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி 64 விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஐந்து அங்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை ஐந்தினைத் தவிர மீதமுள்ள 59 அங்கங்களில் குறைந்தது 35 அங்கங்களாவது விக்ரஹ வழிபாட்டுடன் தொடர்பு டையவையாகும். உதாரணமாக, விழாக்களை அனுஷ்டித்தல், விக்ரஹங்களின் முன்பு நடனமாடுதல், விக்ரஹங்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு வணங்குதல் போன்ற அங்கங்கள் விக்ரஹ வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. முழு நம்பிக்கையுடனும் அன்புடனும் விக்ரஹ வழிபாட்டில் ஈடுபடும்படி ஸ்ரீல ரூப கோஸ்வாமி வலியுறுத்துகிறார். ஆனால் அந்த அன்பும் நம்பிக்கையும் ஒருவர் எவ்வாறு விக்ரஹங்களை புரிந்து கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்ததே. விக்ரஹம் சாக்ஷாத் பகவானே என்னும் அறிவு இதற்கு மிகவும் அவசியம்.

 

விக்ரஹ வழிபாடு

பகவான் தனது காரணமற்ற கருணையால் அர்சா விக்ரஹ ரூபத்தில் அவதரிக்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்களும் அவரைக் காணலாம், வழிபடலாம், தொண்டு செய்யலாம். சட்டதிட்டங்களை சரிவர கடைப்பிடித்து விக்ரஹ வழிபாடு செய்தால், அஃது ஒருவனை பக்தித் தொண்டில் நிலைத்திருக்கச் செய்யும். இந்த விக்ரஹ வழிபாட்டின் மூலம் ஒருவர் தனது எல்லா புலன்களையும் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த முடியும். அர்சா விக்ரஹ ஆராதனை என்பது பிரஹலாதரால் உரைக்கப்பட்ட ஒன்பது வகையான பக்தி முறைகளில் ஒன்று. விக்ரஹ வழிபாட்டின் பல்வேறு செயல்கள் மிகவும் நுட்பமானவையாகவோ சடங்காகவோ தோன்றலாம், ஆனால் இவற்றை நாம் முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கடைப்பிடித்தால் வழிபாட்டின் குறிக்கோளான கிருஷ்ண பிரேமையை அடைய முடியும். விக்ரஹ ஆராதனையின் நுட்பங்களை விளக்குவதற்காக நாரத பஞ்சராத்ரம், ஹரி பக்தி விலாஸ் ஆகிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் “பஞ்சராத்ர பிரதீப” என்னும் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

முக்கிய அம்சம்

கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருத்தல்; அவரை ஒருபோதும் மறவாது இருத்தல் ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளை நிறைவேற்றும் பொருட்டு விக்ரஹ வழிபாட்டின் அனைத்து சட்டதிட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஏன் விக்ரஹ வழிபாடு

திருநாம ஜெபம் செய்வதன் மூலமாகவே ஒருவர் கிருஷ்ண பிரேமையை அடையலாம். அப்படியெனில், ஒருவர் ஏன் தீட்சை பெற்று, விக்ரஹ வழிபாட்டின் மந்திரங்களைப் பெற வேண்டும் என்ற கேள்வி எழலாம். நாம் ஜடவுடலைப் பெற்றிருக்கும் காரணத்தினால் நாம் எளிதில் களங்கமடைந்து விடுவோம், விக்ரஹ வழிபாட்டில் நாம் ஈடுபடும்போது நமது எல்லா புலன்களும் பகவானின் நேரடித் தொண்டில் ஈடுபடுத்தப்படுகின்றன, களங்கமடைந்துள்ள நமது மனதையும் நிதான நிலைக்கு கொண்டு வர முடியும். எனவே, புனித நாம ஜெபம் மட்டுமே இறையன்பை வழங்குவதற்குப் போதுமானது என்றபோதிலும், விக்ரஹ வழிபாடு விசேஷமாக வலியுறுத்தப்படுகிறது.

“ஒரு பக்தர் தனது முழு மனதுடன் ஆத்மார்த்தமாக கிருஷ்ணருக்குத் தொண்டு செய்தால், அற்புதமான ஆடைகளை அவருக்கு அர்ப்பணித்தால், ஒரு பூவை அர்ப் பணித்தால், கிருஷ்ணர் புன்னகைப்பார். கிருஷ்ணரின் அது போன்ற புன்னகையை ஒரு முறை பெற்றுவிட்டால்போதும். உனது வாழ்வின் குறிக்கோள் பூர்த்தியடையும்,” என்று ஸ்ரீல பிரபுபாதர் தனது பாகவத உரையொன்றில் கூறுகிறார்.

தகுதிகள்

விக்ரஹ வழிபாடு செய்வதற்குத் தகுதிகள் அவசியம், ஓர் ஆன்மீக குருவை அணுகி அவரிடம் தீட்சை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தீட்சை பெறாவிடில், பஞ்சராத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி விக்ரஹங்களை வழிபட இயலாது. குறிப்பிட்ட விக்ரஹங்களுக்கு குறிப்பிட்ட மந்திரங்கள் உள்ளன, அம்மந்திரங்களை முறையான ஆன்மீக குருவிடமிருந்து பெற வேண்டும். அவ்வாறு பெறப்படாத மந்திரங்கள் வெறும் அகர வரிசையின் எழுத்துகளாக இருக்குமேயொழிய அவற்றில் சக்தி இருக்காது. ஸம்ப்ரதாய-விஹீனா யே மந்த்ராஸ் தே நிஷ்பலா மதா:, “அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயத்தில் (குரு-சீடப் பரம்பரையில்) வரும் குருவிடமிருந்து பெறப்படாத மந்திரங்களுக்கு பலன் கிடையாது,” என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்ரஹங்கள் மிகவுயர்ந்த தரத்தில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கட்டளையிட்டுள்ளார்.

வீட்டில் வழிபாடு செய்தல்

ஆரம்ப நிலையிலுள்ள பக்தர்கள் (தீட்சை பெறாத பக்தர்கள்) தங்களது வீடுகளில் பகவான் மற்றும் அவரது தூய பக்தர்களின் படங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிரதிஷ்டை செய்ய வேண்டிய அவசியமில்லை, தீட்சை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இவ்வாறு வழிபாடு செய்து பயிற்சி பெற்ற பக்தர்கள், அனுபவத்தினால் முன்னேறிய பின்னர், உலோகம், மரம், அல்லது கல்லாலான விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். ஆன்மீக குருவிடம் தீட்சை பெற்ற பின்னர், அத்தகு வழிபாட்டினை தொடங்குதல் உசிதமானது, விக்ரஹம் என்றால் குருவின் அனுமதியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான்.

வழிபடும் விதம்

வீட்டில் விக்ரஹ வழிபாடு செய்வதற்கு வழிபாட்டு அறை ஒன்று தனியாக இருத்தல் மிகவும் நன்று. ஹரி பக்தி விலாஸ் போன்ற அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்களின்படி, பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல பல்வேறு விதமான வழிபாடும் பூஜையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, இல்லத்தில் செய்யப்படும் வழிபாடு நமது சக்திக்கேற்ப இருக்கலாம். வீட்டு வழிபாட்டில் சில விதிகள் தளர்த்தப் பட்டாலும் கஞ்சத்தனம் கூடாது. மிகவும் ஏழையாக இருந்தாலொழிய நல்ல தரமான ஊதுபத்தி மற்றும் மலர்களுக்காவது ஏற்பாடு செய்ய வேண்டும்

பூஜை பீடம் அமைக்கும் விதம்

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் படம் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கீழ் பஞ்ச தத்துவ படமும் நரசிம்மரின் படமும் இருக்க வேண்டும். அவர்களுக்குக் கீழ் ஆறு கோஸ்வாமிகளின் படமும் குரு பரம்பரையின் படமும் வைத்தல் அவசியம். கீழிருக்கும் படத்தில் காணப்படுவதுபோல அமைக்கலாம்.

கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள்

குளித்த பின்பே பூஜை அறைக்குள் நுழைய வேண்டும், தூய்மையான உடைகளை உடுத்த வேண்டும். பூஜைக்கு பட்டாடை மிகவும் உகந்தது, பருத்தியுடையும் ஏற்கக்கூடியதே. கம்பளி தூயதாக இருந்தாலும் விக்ரஹ வழிபாட்டில் உபயோகப்படுத்தக் கூடாது. பாலியஸ்டர், டெரிகாட்டன், செயற்கை நூல் உடைகள் போன்றவற்றை விக்ரஹ வழிபாட்டின் போது தவிர்க்க வேண்டும். முறையான வைஷ்ணவ பண்பாட்டின்படி உடையணிய வேண்டும். ஆண்கள் தோதியும் (பஞ்ஜகச்சமும்) அங்கவஸ் திரமும் அணிய வேண்டும், பெண்கள் சேலை அணிய வேண்டும். மேற்கத்திய நாகரிகத்தின் உடைகளை அணியக் கூடாது. உடலின் மேற்பகுதியில் 12 இடங்களில் வைஷ்ணவ திலகம் இட்டிருக்க வேண்டும்.

பூஜை பொருள்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூஜை பொருள்கள் மட்டுமின்றி பூஜை பீடம், வழிபாட்டு அறை ஆகியவற்றையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருத்தல் அவசியம்.

முக்கிய சேவைகள்

ஆரத்தி, நைவேத்யம், சமைத்தல், அலங்காரம் செய்தல், ஓய்வு கொடுத்தல் போன்றவை அன்றாடம் செய்யப்பட வேண்டிய சேவைகள். தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்டுள்ள “பக்தி யோகம்–ஓர் அறிமுகம்” என்னும் புத்தகத்தில் இதுகுறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டில் பல்வேறு ஆரத்திகளை செய்ய முடியாவிட்டாலும், காலையில் மங்கள ஆரத்தியும் மாலையில் சந்திய ஆரத்தியும் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. கோவில்களில் பொதுவாக எட்டு முறை ஆரத்தியும் ஏழு முறை நைவேத்தியமும் செய்யப்படுவது வழக்கம்.

சமையலறையை பூஜை பீடத்தைப் போலவே பராமரிக்க வேண்டும். குளித்து, தூய ஆடைகளுடன், சமைக்கும் உணவை ருசி பார்க்காது சமைக்க வேண்டும். பகவானின் திருப்திக்காக சமைக்கின்றோம் என்ற உணர்வுடன் சமைக்க வேண்டும். சமையலறையில் சாப்பிடுவதோ, நாம் சாப்பிடும் பாத்திரங்களை சமைக்கும் பாத்திரங்களுடன் கலப்பதோ கூடாது. சமைக்கப்படும் உணவில் மீன், முட்டை, மற்றும் இதர அசைவப் பொருள்களோ, வெங்காயம், பூண்டு ஆகியவையோ இருக்கக் கூடாது.

சமைக்கப்பட்ட உணவின் மீது துளசி இலைகளை வைத்து, பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்வதற்கு, ஸ்ரீல பிரபுபாதரின் பிரணாம மந்திரம், சைதன்ய மஹாபிரபுவின் பிரணாம மந்திரம், கிருஷ்ண மந்திரம் ஆகியவற்றை மூன்று முறை மணியை அடித்தபடி உச்சரிக்க வேண்டும். பூஜை அறையை விட்டு வெளியில் வந்து, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜெபம் செய்யவும். பின்னர், மீண்டும் பூஜை அறைக்குள் நுழைந்து, நைவேத்யம் செய்யப்பட்டவற்றை எடுத்துவிடவும். தற்போது அனைத்து உணவும் பிரசாதமாகி விட்டன. பிரசாதத்தை ஏற்போர் பாவமற்ற உணவை ஏற்கின்றனர் என்பது மட்டுமன்றி, கிருஷ்ண பக்தியிலும் நல்ல முன்னேற்றமடைவர்.

விக்ரஹ வழிபாடு குறித்து மேலும் விளக்கங்களை பெற அருகிலுள்ள இஸ்கான் கோவில்களை அணுகவும், அல்லது மூத்த இஸ்கான் பக்தர்களை தொடர்பு கொள்ளவும்.

பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதில் அடுத்த அங்கமான, புனித ஸ்தலத்தில் வசித்தல், என்பது குறித்து அடுத்த இதழில் விவரிக்கப்படும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives