பக்தித் தொண்டின் விரிவான விளக்கம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 ஸ்கந்தங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், இருபத்தொன்பதாம் அத்தியாயம்

சென்ற இதழில் பக்தித் தொண்டை செயல்படுத்துவதற்கான கபிலதேவரின் அறிவுரைகளைப் பார்த்தோம். இந்த இதழில் கபிலர் பக்தித் தொண்டைப் பற்றி விரிவாக விளக்குவதைக் காணலாம்.

குணங்களுடன் கூடிய பக்தித் தொண்டு

அன்னை தேவஹூதி கபிலரிடம் வினவினாள்: “எனதருமை பகவானே, ஆத்மாவின் குணநலன்கள் மற்றும் மொத்த ஜட இயற்கையைப் பற்றிய ஸாங்கிய தத்துவத்தை இதுவரை விளக்கினீர்கள். அனைத்து தத்துவங்களின் இறுதி இலக்கான பக்தித் தொண்டைப் பற்றி தயவுசெய்து விளக்கியருளுங்கள்.

வாழ்வின் பேரிடர்களான பிறப்பு இறப்பின் தொடர்ச்சி முறையை தயவுசெய்து விளக்குங்கள். அதைக் கேட்பதன் மூலம் இந்த ஜடவுலகின் செயல்களிலிருந்து பற்றற்று இருக்க முடியும். புண்ணிய செயல்களில் ஈடுபட்டிருப்போரை பாதிக்கும் காலத்தைப் பற்றியும் விளக்குங்கள்.

“இந்த ஜடவுலகில் தங்களின் ஜடச் செயல்களால் திருப்தியுறாமல் கட்டுண்ட ஆத்மாக்கள் களைப்படைந் துள்ளனர். அவர்களுக்கு பக்தி யோகம் எனும் அறிவொளியை வழங்கி அருள்புரியும்படி வேண்டுகிறேன்.”

இவ்வாறு வினவிய அன்னையிடம் மகிழ்ச்சியுற்ற பகவான் கருணையுடன் பேசலானார்: அன்புள்ள அன்னையே, தங்கள் குணங்களுக்கேற்ப பக்தி நெறிகளை மக்கள் அனுஷ்டிக்கின்றனர். பொறாமை, தற்பெருமை, வன்முறை, கோபம் போன்றவற்றுடன் செய்யப்படும் பக்தித் தொண்டு அறியாமையாகிய தமோ குணத்தில் உள்ளது. உலக இன்பம், புகழ், செல்வம் போன்றவற்றை அடையும் விருப்பத்துடன் செய்யப்படும் பக்தித் தொண்டு ரஜோ குணத்துடன் கலப்படமாகி உள்ளது. தன் செயல்களின் பலனை பகவானுக்கு அர்ப்பணிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பக்தித் தொண்டு ஸத்வ குணத்தில் உள்ளது.”

தூய பக்தித் தொண்டு

பகவான் கபிலர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்: பகவானின் உன்னத நாமங்களையும் திவ்ய குணங்களையும் கேட்ட மாத்திரத்திலேயே, கங்கை நதிபோல மனமானது எவ்வித தடையுமின்றி பகவானை நோக்கி கவரப்படுவது தூய பக்தித் தொண்டின் வெளிப்பாடாகும்.

ஸாலோக்யம் (பகவானின் உலகில் வசிப்பது), ஸார்ஷ்டி (பகவானைப் போன்ற செல்வத்தை பெறுதல்), ஸாமீப்யம் (பகவானுக்கு அருகில் இருத்தல்), ஸாரூப்யம் (பகவானைப் போன்ற ரூபத்தைப் பெறுதல்), ஸாயுஜ்யம் (பகவானது பிரம்ம ஜோதியில் கலத்தல்) முதலிய ஐவகை முக்திகளை பகவானே வழங்கினாலும் தூய பக்தர்கள் அவற்றை ஏற்பதில்லை.

தூய பக்தித் தொண்டால் ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பைக் கடக்க முடியும். ஒரு பக்தர் உலகியல் இலாபங்களைக் கருதாது, விதிக்கப்பட்ட கடமைகளை பக்தியுடன் நித்தியமாக நிறைவேற்ற வேண்டும். பக்தர் தினமும் பகவானின் விக்ரஹங்களை தரிசித்தல், விக்ரஹங்களின் பாத கமலங்களை வணங்குதல், வழிபாட்டிற்குரிய பொருட்கள், வந்தனங்களை அர்ப்பணித்தல் போன்றவற்றை துறவு மனப்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், ஸத்வ குணத்தில் நிலைபெற்று, எல்லா உயிரினங் களையும் ஆன்மீக நோக்குடன் காண வேண்டும்.

பக்தர், அறியாமையில் இருப்பவர்களிடம் கருணையுடனும், சமமானவர்களிடம் நட்புடனும், தூய பக்தர்களான ஆன்மீக குரு மற்றும் ஆச்சாரியர்களிடம் மிக்க பணிவுடனும் மரியாதையுடனும் பக்தித் தொண்டு புரிபவராக இருக்க வேண்டும்.

பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கிருஷ்ண உணர்வில் முழு தகுதி பெற்று, எல்லா இடங்களிலும் பகவானின் இருப்பை உணரும் பக்தர், பகவானின் திருநாட்டிற்குச் செல்ல முடியும்.

விக்ரஹ ஆராதனை

கோயிலில் பகவானின் விக்ரஹத்தை வழிபடும் ஒருவர் எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் பகவான் பரமாத்மாவாக இருப்பதை உணராதவராயின் அவரது வழிபாடு போலியானதாகும்.

அதுபோல, மற்ற உயிர்களிடம் பொறாமையும் பகையுணர்ச்சியும் உடையவரும், எல்லா உயிர்வாழிகளிடமும் பகவான் குடிகொண்டிருப்பதை அறியாதவருமான ஒரு பக்தர் தனது முறையான வழிபாட்டினால்கூட பகவானை மகிழ்விக்க இயலாது.

அதேசமயம், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றி, பகவானின் விக்ரஹத்தை முறையாக வழிபடுபவர் தன் இதயத்திலும் பிற ஜீவராசிகளின் இதயத்திலும் பகவான் இருப்பதை உணர முடியும்.

நன்னடத்தை–

அனைவரது இதயத்திலும் ஆத்மாவும் பரமாத்மாவும் இருப்பதை உணர்ந்து, அவரை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் மற்ற உயிரினங்களின் தேவையறிந்து தானத்தையும் நட்பையும் மேற்கொள்ள வேண்டும்.

அன்பு அன்னையே! உயிரற்ற பொருட்களை விட உயிருள்ளவை உயர்ந்தவை; உயிர் இருப்பதை வெளிப்படுத்துபவை மேலும் மேம்பட்டவை; வளர்ச்சியடைந்த உணர்வுநிலையுடன் உள்ள விலங்குகள் அவற்றை விட மேம்பட்டவை; புலனுணர்வை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை.

தொடுபுலன் உணர்வை மட்டும் வளர்த்துக்கொண்ட உயிர்களை விட சுவை புலன் உணர்வை வளர்த்துக் கொண்டவை மேம்பட்டவை, அவற்றை விட முகரும் புலனை வளர்த்துக் கொண்டவை மேம்பட்டவை, கேட்கும் புலனை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை. அவற்றுள் பொருட்களை வேறுபடுத்தி உணரக்கூடியவை மேம்பட்டவை. அவற்றைவிட மேம்பட்டவை மேல், கீழ் வரிசைப் பற்கள் உடையவை. அவற்றைவிட பல கால்களை உடையவை மேம்பட்டவை. நான்கு கால்களை உடையவை அதைவிட மேம்பட்டவை. மனித உயிர்கள் இன்னும் மேம்பட்டவை.

மனித உயிர்களில் தகுதி மற்றும் செயல்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமுதாயம் சிறந்தது, அதில் புத்திசாலியான பிராமணர்கள் சிறந்தவர்கள், வேதங்களின் உட்பொருளையும் நோக்கத்தையும் அறிந்தவர்கள் இன்னும் சிறந்தவர்கள். எல்லா சந்தேகங்களையும் போக்க வல்லவர்கள் மேலும் சிறந்தவர்கள். பிராமணக் கொள்கைகளை கண்டிப்புடன் கடைபிடிப்பவர் அவர்களை விடச் சிறந்தவர். எல்லா ஜட களங்கங்களிலிருந்தும் விடுபட்டவர் அவரை விட மேலானவர். பிரதிபலனை எதிர்பாராது பக்தித் தொண்டை நிறைவேற்றும் தூய பக்தர் அனைவரிலும் மேலானவர்.

எனவே, தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி, பகவானாகிய என்னிடம் முழுமையாக ஈடுபட்டு, தனது செயல்களை எனக்கு அர்ப்பணித்து என்னைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லாத தூய பக்தரைவிட சிறந்தவரென்று வேறு யாருமில்லை.

பகவானின் கால ஸ்வரூபம்

பரம புருஷ பகவானே பிரம்மன் மற்றும் பரமாத்மாவின் மூல காரணம் ஆவார். நித்தியமான அவரது செயல்கள் திவ்யமானவை. அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவரான அவரையே ஒவ்வொருவரும் அணுக வேண்டும்.

எல்லா மாற்றங்களுக்கும் காரணமான காலம், பகவானின் மற்றோர் அம்சமாகும். இதை அறியாதவர்கள் அச்சம் கொள்கிறார்கள். எல்லா வேள்விகளின் அனுபவிப்பாளராகவும், எல்லாரின் தலைவராகவும் நலன்விரும்பியாகவும் நித்திய துணைவராகவும் இறுதி அடைக்கலமாகவும் இருக்கும் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதித்துவமே காலம்.

பகவானின் மீதான பயத்தால் காற்று வீசுகிறது. கதிரவன் ஒளி வீசுகிறது, மழை பொழிகிறது. மற்ற கிரகங்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைகள், பருவகாலத் தாவரங்கள் மற்றும் பூக்கள் மலர்ந்து காய்கனிகளை அதனதன் பருவத்தில் கொடுக்கின்றன.

நதிகள் பாய்ந்தோடுவதும், கடல் தன் கரையை கடக்காமல் இருப்பதும், நெருப்பு எரிவதும், பூமி அதன் மலைகளுடன் அண்டத்தின் நீரில் மூழ்காமல் இருப்பதும் பரம புருஷ பகவானிடம் உள்ள பயத்தாலேயே ஆகும்.

பகவானின் பிரதிநிதியாகிய காலம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. அன்றாட வாழ்வில்கூட அனைத்து தரப்பு மக்களும் காலத்தின் வழிநடத்துதலில் தத்தம் காரியங்களை மேற்கொள்வதை நாம் காண்கிறோம்.

அனைவரும் அஞ்சும் மரண தேவனையும் அழிக்கும் வல்லமை படைத்தது காலம். ஆனால் பகவான், பக்தித் தொண்டு, பக்தர்கள் ஆகியவை என்றும் நிலைத்திருப்பவை. அனைவரையும் ஆட்டுவிக்கும் காலம் அவர்களை பாதிப்பதில்லை.

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment