மனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், முதல் இரண்டு அத்தியாயங்கள்.

மூன்றாவது ஸ்கந்தத்தில், ஸ்வாயம்புவ மனுவின் மூன்று புதல்விகளில் ஒருத்தியான தேவஹூதி கர்தமரை மணந்து ஒன்பது புதல்விகள் மற்றும் ஒரு புதல்வனை (பகவான் கபிலதேவரை) ஈன்றதைக் கண்டோம். நான்காவது ஸ்கந்தத்தின் முதல் இரண்டு அத்தியாயத்தில் மனுவின் மற்ற இரு புதல்விகளான ஆகூதி, பிரசூதி ஆகியோரின் வம்சங்களையும் தேவஹூதியின் ஒன்பது புதல்விகளின் வம்சங்களையும் தக்ஷன் சிவபெருமானுக்கு இட்ட சாபத்தையும் காண இருக்கின்றோம்.

ஆகூதியின் வம்சம்

ஸ்வாயம்புவ மனு தனது மகள் ஆகூதியை பிரஜாபதி ருசிக்கு ஓர் நிபந்தனையுடன் (அவர்களுக்கு பிறக்கும் புத்திரனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனும்) கன்னிகா தானம் செய்தார். அவர்களுக்கு பரம புருஷரின் அவதாரமான யக்ஞர் என்ற ஆண் மகனும் லக்ஷ்மியின் விரிவங்கமான தஷிணா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

ருசி பெண் குழந்தையைத் தன்னுடன் வைத்துக் கொண்டு மகனை ஸ்வாயம்புவ மனுவிடம் ஒப்படைத்தார். தஷிணாவிற்கு துஷிதர்கள் எனும் 12 புதல்வர்கள் பிறந்தனர். ஸ்வாயம்புவ மனுவின் மன்வந்தரத்தில் பகவான் யக்ஞர் இந்திர பதவியை வகித்தார். மனு தனது மற்றொரு மகளான பிரசூதியை தக்ஷனுக்கு மணமுடித்தார்.

தேவஹூதி புத்ரிகளின் வம்சம்

தேவஹூதி-கர்தமரின் ஒன்பது புதல்விகளும் ஒன்பது முனிவர்களை மணந்தனர். அவர்களில் கலா என்பவள், மரீசி முனிவரை மணந்து கஸ்யபர், பூர்ணிமா எனும் இரு குழந்தைகளைப் பெற்றாள்.

அனசூயையை மணந்த அத்ரி முனிவர் ருக்ஷம் எனும் மலைக்குச் சென்று தவம் புரிந்தார். காற்றை மட்டும் உட்கொண்டு ஒற்றைக் காலில் நின்ற வண்ணம் அவர் நூறு வருடங்கள் தவம் புரிந்தார். பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர் அவரின் முன்பு காட்சி தந்தனர். பிரம்மதேவரின் அம்சமாக சந்திரனும், விஷ்ணுவின் அம்சமாக தத்தாத்ரேயரும், சிவனுடைய அம்சமாக துர்வாசரும் அத்ரி முனிவருக்கு புதல்வர்களாகத் தோன்றினர்.

சிரத்தை அங்கிரா முனிவரை மணந்து நான்கு புதல்விகளையும், உதத்யர், பிருஹஸ்பதி என்ற இரு புதல்வர்களையும் பெற்றாள். அவிர்பூ புலஸ்திய முனிவரை மணந்து அகத்தியர் மற்றும் விஸ்ரவானைப் பெற்றாள். இந்த விஸ்ரவானுக்கு இடவிடா, கேசினீ என இரு மனைவியர். இடவிடாவுக்கு குபேரனும் கேசினீக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோரும் பிறந்தனர்.

புலஹ முனிவரின் மனைவியான கதி மிகச்சிறந்த முனிவர்களான மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள். மாமுனிவரான கிரதுவின் மனைவி கிரியா அறுபதாயிரம் மகன்களைப் பெற்றாள். அவர்கள் வாலகில்யர்கள் எனப்பட்டனர். வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியிடம் ஏழு முனிவர்களைப் பெற்றார். அவர்களில் சித்ரகேது தலைசிறந்தவர். அதர்வான் முனிவரின் மனைவி சித்தி என்பவள் அஸ்வசிரான் எனும் மகனைப் பெற்றாள்.

பிருகு முனிவர் தன் மனைவி கியாதியிடம் தாதா, விதாதா என்ற இரு மகன்களையும் ஸ்ரீ எனும் ஒரு மகளையும் பெற்றாள்.  மேரு முனிவரின் இரு புதல்விகளான ஆயதி மற்றும் நியதி என்பவர்கள் தாதா மற்றும் விதாதாவை மணமுடித்து மிருகண்டரையும் பிராணரையும் ஈன்றெடுத்தனர். மிருகண்டரிடமிருந்து மார்கண்டேயரும், பிராணரிடமிருந்து வேதசிரானும் பிறந்தனர். வேதசிரானின் மகன் சுக்ராசாரியர் ஆவார்.

நர-நாராயண ரிஷிகள்

பிரசூதியின் வம்சம்

பிரம்மதேவரின் புதல்வரான தக்ஷன் மனுவின் மகளான பிரசூதியை மணம் புரிந்து 16 புதல்விகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் பதின்மூவரை தர்மராஜன் மணந்தார். அவர்களில் மூர்த்தி என்பவளிடமிருந்து தர்மராஜன் நர-நாராயணரைப் பெற்றெடுத்தார்.

தக்ஷனின் மற்றொரு மகளான ஸ்வாஹா என்பவள் அக்னி தேவனை மணந்து, பாவக, பவமான, சுசி ஆகிய மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு மகளான ஸ்வாதா என்பவள் பிதாக்கள் என்பவர்களை மணந்து வயுனா, தாரிணீ ஆகிய புதல்விகளைப் பெற்றெடுத்தாள். சிவபெருமானை மணந்த சதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. காரணம் என்னவெனில், தமது தந்தை தக்ஷன் சிவபெருமானிடம் பகைமை கொண்டு அவரை அவமதித்ததால், அவள் தம் இளம் பருவத்திலேயே யோகத் தீயில் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

இதனைச் செவியுற்ற விதுரர் மைத்ரேயரிடம் வினவினார், மகளிடம் மிகவும் அன்பு கொண்ட தக்ஷன் அவளை ஏன் அவமதித்தார்? மேன்மையானவர்களில் சிறந்தவரான சிவபெருமானின் மீது தக்ஷன் ஏன் பகைமை கொண்டார்? மருமகனும் மாமனாரும் ஏன் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும், சதி தமது உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாள் என்பதையும் தயைகூர்ந்து விளக்குவீராக.”

விதுரரால் வினவப்பட்ட மைத்ரேயர் அதுகுறித்து தொடர்ந்து பேசலானார். முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.

மகரிஷிகளே, தேவர்களே, சான்றோர்களின் ஒழுக்கம் குறித்து நான் கூறும் கருத்தைச் சற்றே கேளுங்கள். இதை நான் அறியாமையினாலோ பொறாமையினாலோ கூறுவதாக எண்ண வேண்டாம். சிவபெருமான், லோக பாலகர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கிறார். எனது புதல்வியை மணந்த மருமகனாக இருந்தும் பெரியவர்களை மதிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கவில்லை. என்னை கண்டதும் இனிய மொழிகளால் வரவேற்கவோ எழுந்து நிற்கவோ இல்லை.

இவர் நல்லவர் போல அந்தணர்களின் முன்னிலையில் அக்னி சாட்சியாக எனது மகளை விவாஹம் செய்து கொண்டார். அதனால் எனக்கு சிஷ்யனானார். எனது மகள் மான் விழியாள்; இவரது கண்களோ குரங்கின் கண்களை ஒத்திருக்கின்றன. என்னைக் கண்டவுடன் எழுந்து நமஸ்கரிக்க வேண்டிய இவர், வாக்கினால்கூட என்னை உபசரிக்கவில்லையே!

விருப்பமின்றி ஒருவன் நான்காம் வர்ணத்தவனுக்கு வேதத்தை சொல்லிக் கொடுத்ததுபோல, நானும் விருப்பமின்றியே இவருக்கு என் மகளை மணமுடித்தேன். இவர் அசுத்தமாக இருப்பவர், அஹங்காரமுள்ளவர், உலக மரியாதைகளை மதிக்காதவர். பிரேதங்கள் வசிக்கும் மயானத்தில் பூதகணங்களுடன் ஆடித் திரிகிறார். பித்தனைப் போல தலைவிரி கோலமாய் ஆடையின்றி திரிகிறார். சிதையின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார். மனிதர்களுடைய எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் ஆபரணமாக அணிகிறார். பெயரளவில் மட்டுமே இவர் சிவன் (மங்களமானவர்), உண்மையில் அசிவன் (மங்களமற்றவர்). தமோ குணம் நிறைந்த பூத, பிரேதங்களின் தலைவர். இப்பேர்பட்ட இவருக்கு பிரம்மதேவரின் பரிந்துரையால் என் மகளை திருமணம் செய்து கொடுத்தேனே! அந்தோ பரிதாபம்!”

இவ்வாறு தக்ஷன் சிவபெருமானை பலவாறு இழிந்துரைத்தபோதும், அவர் சாந்த ஸ்வரூபியாக மறுமொழி ஏதும் கூறாது சஞ்சலமற்று இருந்தார். இதனால் தக்ஷனின் சினம் எல்லை மீறியது, வேள்வியின் அவிர்பாகத்தைப் பெற தேவர்கள் தகுதியானவர்கள் எனும்போதிலும் தேவகணங்களில் தாழ்ந்தவராகிய இவருக்கு இனிமேல் அவிர்பாகம் கிடையாது,” என்று கூறி ஜலத்தைத் தொட்டு சாபமிட்டார்.

தக்ஷன் சிவபெருமானை சபித்ததைக் கண்டு நந்திதேவர் ஆத்திரமுற்றார். கோபத்தில் அவரது கண்கள் சிவந்தன. தக்ஷனையும் அவர் சாபமிட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களையும் கொடிய வார்த்தைகளினால் பின்வருமாறு சபித்தார்:

தக்ஷன் இவ்வுடலே எல்லாம் என்று ஏற்றுக் கொண்டவர். விஷ்ணு பாதத்தினை மறந்து பாலுறவு வாழ்வில் பற்று மிகுந்து அலைவதால், அதற்கு தண்டனையாக ஓர் ஆட்டின் தலையைப் பெறட்டும். சிவபெருமானை தக்ஷன் சபிக்கும்போது அதனை அனுமதித்த பிராமணர்கள் ஜனன மரணச் சுழற்சியில் இருக்கட்டும். வேதங்களின் மலர் சொற்களில் மயங்கி சிவபெருமானின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மந்த மதியாளர்கள் எப்போதும் பலன் தரும் செயல்களிலேயே பற்றுடையோராக இருப்பாராக. அவர்கள் செய்யும் தவம், விரதம் போன்றவை உடலைப் பேணுவதற்காக ஆகட்டும். வீடுகள்தோறும் சென்று இரந்து பிழைக்கட்டும்.”

அந்தணர்கள் சபிக்கப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் எதிர் சாபமிட்டார், சிவபெருமானை திருப்தி செய்வதற்கென்று விரதமிருப்பவர்கள் நாத்திகர்களாக மாறி சாஸ்திர விதிகளை மீறி நடப்பார்களாக. ஆசாரமற்று அறிவிலிகளாக ஜடை தரித்து, சாம்பல் பூசி திரிவார்களாக. சான்றோர்கள் ஏற்கும் இந்த வேத நெறிகளை அற்பமாக பேசியதால், சிவனையே தெய்வமாகக் கொள்வீர்.”

இவ்வாறு ஒருவருக்கொருவர் எதிர் சாபமளித்துக் கொள்வதைக் கண்டு வருந்திய சிவபெருமான் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார். பிரஜாபதிகள் தாங்கள் ஆரம்பித்த வேள்வியை முடித்து பிரயாகையில் நீராடி தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியை அடுத்த இதழில் காண்போம்.

தக்ஷன் சிவபெருமானை அவமதித்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives