துருவனின் சரிதம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 8-9

சிவபெருமானின் கருணையால் தக்ஷன் யாகத்தை நிறைவேற்றி பகவான் விஷ்ணுவின் ஆசியைப் பெற்றதை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில் துருவ மஹாராஜனின் சரித்திரத்தைக் காண்போம்.

துருவன் புறக்கணிக்கப்படுதல்

ஸ்வாயம்புவ மனுவின் புதல்விகளான தேவஹூதி, அகூதி, ப்ரசூதி ஆகியோரைப் பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அவரது இரு மகன்கள்: பிரியவிரதர், உத்தானபாதர். இவர்களில் உத்தானபாதரின் சந்ததியினரைக் காணலாம்.

உத்தானபாதருக்கு சுனீதி, சுருசி என்று இரண்டு மனைவியர், அவருக்கு சுருசியிடம் மிகுந்த பிரியம் இருந்தது, சுனிதியிடம் அவ்வளவு பிரியமில்லை. ஒருநாள் சுருசியின் மகன் உத்தமன் உத்தானபாதரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது சுனிதியின் மகன் துருவனும் தனது தந்தையின் மடியில் அமர விரும்பி அவருக்கு அருகில் சென்றான்.

அப்பொழுது அங்கிருந்த சிற்றன்னை சுருசி துருவனிடம் கூறினாள், மன்னரின் மடியிலோ அரியணையிலோ அமரும் தகுதியை நீ பெறவில்லை. அதை அடைவதற்கு கடுமையான தவம் மேற்கொண்டு பரம புருஷரை திருப்தி செய். அவரது கருணையினால் அடுத்த பிறவியில் நீ என் வயிற்றில் பிறந்தால் அத்தகுதியை அடையலாம்.”

ஐந்து வயதே நிரம்பிய துருவன் தனது சிற்றன்னையின் கடுஞ்சொற்களால் அடிபட்ட பாம்புபோல கோபத்தால் பெருமூச்சுவிட்டபடி, மௌனமாக இருக்கும் தன் தந்தையை விடுத்து, அழுது கொண்டே தன் தாயிடம் சென்றான்.

தாயின் அறிவுரை

அழுதபடி வந்த மகனை அள்ளி அரவணைத்த அன்னை, மாளிகையில் இருந்தவர்களின் மூலம் நடந்ததை அறிந்தாள். தன் சக கிழத்தியின் கடும் வார்த்தைகளை நினைத்து, செந்தாமரை மலரில் இருக்கும் பனித்துளிகள் போல, அவளது எழிலான முகத்தில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின.

அத்துயர்மிக்க சூழ்நிலைக்கு மாற்று ஏதும் அறியாத அவள் பெருமூச்சு விட்டாள். திக்கற்ற அந்நிலையிலும் திட சித்தத்துடன் அவள் கூறினாள், எனதன்பு மகனே, என்ன செய்வது, உனது தந்தைக்கு என்மீது அன்பு இல்லையே! உன் சிற்றன்னையின் வார்த்தைகள் கடுமையாக இருப்பினும், அவை உண்மைதானே கண்ணே! அவளது அறிவுரைப்படி தாமதமின்றி முழுமுதற் கடவுளை வணங்குவதில் முழு மூச்சுடன் ஈடுபடுவாயாக. ஏனெனில், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட பகவானின் திருவடிகளை வழிபட்ட தாலேயே உனது கொள்ளு தாத்தா பிரம்ம தேவர், இப்பிரபஞ்சத்தைப் படைக்கும் தகுதியைப் பெற்றார்.

உனது தாத்தா ஸ்வாயம்புவ மனு, இடையறாத யாகங்கள், தானங்கள் செய்து பக்தியுடன் பரம புருஷரை துதித்து அவரை திருப்திப்படுத்தி எல்லா சுகங்களை அடைந்தார். தேவர்களை வணங்குவதால் இவற்றை அடைய இயலாது. ஆருயிர் மைந்தனே, உனக்குரிய ஸ்வதர்மத்தினை நிறைவேற்றுவதன் மூலம் தூய்மை அடைந்து பகவானை உள்ளத்தில் நிலைபெறச் செய்து ஒரு கணமும் தொய்வின்றி அவரது தொண்டில் ஈடுபடுவாயாக. பரம புருஷ பகவானைத் தவிர வேறு யாரும் உனது துன்பத்தைப் போக்க வல்லவர் இல்லை. பிரம்மதேவர், ஏனைய தேவர்கள், மஹாலக்ஷ்மி உட்பட அனைவரும் அவரது திருவடிகளுக்கே தொண்டு புரிகின்றனர்.”

தனது அன்னையின் அறிவுரைகளைச் செவியுற்ற துருவன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, புத்திசாலித்தனத்துடனும் மாறாத உறுதியுடனும் அரண்மனையை விட்டு வெளியேறினான். துருவனின் உறுதியை அறிந்த பகவான் முக்காலமும் அறிந்தவரான தேவரிஷி நாரதரை துருவனிடம் அனுப்பி வைத்தார்.

நாரதரின் அறிவுரை

நாரதர் துருவனிடம் கூறினார், துருவனே, மான அவமானத்தால் நீ பாதிக்கப்படாதே, ஒவ்வொருவரும் தனது முந்தைய செயல்களின் விளைவுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். புத்தியுடையவன் நன்மை, தீமை இரண்டையும் பகவானின் ஏற்பாடாக எண்ணி ஏற்றுக்கொள்ள வேண்டும். யோக முறையில் பரம புருஷரை திருப்திப்படுத்துவது குழந்தையான உனக்கு மிகவும் கடினமானதாகும். ஏனெனில், பற்பல பிறவிகளில் முயன்றும், துறவு நெறிகளைக் கடைப்பிடித்தும்கூட பல யோகிகளால் பகவானைக் காண இயலவில்லை. எனவே, நீ வீடு திரும்புதல் நலம். தக்க வயதை அடைந்தவுடன் நீ இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.”

துருவன் நாரதரின் அறிவுரைகளை மதித்துப் போற்றியபோதிலும், சிற்றன்னையின் கடுஞ் சொற்களால் தாக்குண்ட நிலையில் இருக்கும் தனது மனதில் அவரது வார்த்தைகள் நிற்கவில்லை என்று தெரிவித்தான்.

துருவன் மேலும் கூறினான், நீங்கள் பிரம்மதேவரின் புத்திரர். உலக நன்மைக்காக கையில் வீணை ஏந்தி பகவானது நாமங்களைப் பாடியபடி மூவுலகங்களிலும் சஞ்சாரம் செய்கிறீர். எனவே, மூவுலகிலும் சிறந்ததும், என்னுடைய முன்னோர்களாலும் மற்றவர்களாலும் அடையப்படாததுமான ஓர் உயர்ந்த இடத்தை அடைய விரும்பும் எனக்கு, ஏற்றதொரு மார்க்கத்தை நீங்கள் உபதேசிக்க வேண்டுகிறேன்.”

துருவனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதர் கருணையுடன் அவனுக்கு உபதேசம் வழங்கலானார், குழந்தாய், உன் தாயார் உபதேசம் செய்த மார்க்கமே உனக்கு உயர்ந்த நன்மையை வழங்கக்கூடியது. அந்த உபாயம் பகவான் வாஸுதேவரே. ஆகவே, உனது மனதை ஒருமுகப்படுத்தி, அவரை பூஜிப்பாயாக. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களில் ஒருவன் எதை அடைய வேண்டு மாயினும், அதற்கு பகவான் நாராயணரையே பூஜிக்க வேண்டும்.

குழந்தாய், உனக்கு எல்லா மங்கலமும் உண்டாகட்டும். யமுனை நதிக்கு அருகில் இருக்கும் மதுவனத்திற்குச் சென்று அங்கே பகவானை பூஜிப்பாயாக. யமுனையில் மும்முறை நீராடி அஷ்டாங்க யோக விதிமுறைகளைக் கடைப்பிடித்து முழுமுதற் கடவுளை தியானிப்பாயாக.”

அதனைத் தொடர்ந்து, தியானத்திற்கு உதவும் விதமாக பகவான் நாராயணரின் ரூபத்தைப் பற்றி நாரதர் துருவனுக்கு விளக்கினார், பரம புருஷ பகவான் அனைவரிலும் மிகுந்த பேரழகுடையவர், காலை இளஞ்சூரியனைப் போன்ற விழிகளும் இதழ்களும், கருநீல வண்ண திருமேனியையும் உடையவர், வனமாலையை அணிந்திருப்பவர், நான்கு திருக்கரங்களில் முறையே சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பவர். பகவானது இந்த அற்புத திருமேனியை எப்பொழுதும் தியானிக்க வேண்டும்.”

நாரதர் தொடர்ந்தார், மேலும், நான் உனக்கு மிக இரகசியமான மந்திரத்தையும் உபதேசிக்கின்றேன். ஓம் நமோ பகவதே வாஸுதேவாய. இது பகவான் கிருஷ்ணரை வழிபடுவதற்குரிய பன்னிரண்டு எழுத்து மந்திரமாகும். பகவானுக்கு பூக்களையும் பழங்களையும் நிவேதனம் செய்து இம்மந்திரத்தை ஜபிப்பாயாக. பகவானை வழிபட்டு மந்திரத்தை தினமும் உச்சரித்து, அவரது உன்னத செயல்களையும் தியானம் செய். மந்திரத்திற்கும் தனக்கும் வேறுபாடில்லாத பகவானை மந்திரங்களை உச்சரித்து இதயத்தினுள் வழிபடுவாயாக.”

இவ்வாறு நாரதரால் உபதேசிக்கப்பட்ட துருவன் அவரை வலம் வந்து நமஸ்கரித்தான். பிறகு, மதுவனத்தை நோக்கிச் சென்றான். துருவன் மதுவனத்திற்குச் சென்றவுடன் நாரதர் உத்தானபாதரின் அரண்மனைக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார், உங்களது புத்திரனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். விரைவில் அவனது கீர்த்தி மூவுலகிலும் வியாபிக்கப் போகிறது.”

துருவனின் சாதனை

மதுவனத்தை அடைந்த துருவன் நாரதரின் அறிவுரைப்படி முழுமுதற் கடவுளை வழிபட்டான். முதல் மாதம் தனது உடலைப் பேணுவதற்காக மூன்று நாள்களுக்கு ஒருமுறை கனிகளை மட்டும் உண்டான். இரண்டாம் மாதம் ஆறு நாள்களுக்கு ஒருமுறை காய்ந்த புல்லையும் இலைகளையும் உண்டான். மூன்றாம் மாதம் ஒன்பது நாள்களுக்கு ஒருமுறை நீரை மட்டும் பருகினான். நான்காம் மாதம் மூச்சுப் பயிற்சியில் வெற்றி பெற்று 12 நாள்களுக்கு ஒருமுறை காற்றை மட்டும் சுவாசித்தான். ஐந்தாம் மாதம் மூச்சையும் நிறுத்தி எவ்வித அசைவும் இன்றி ஒற்றைக் காலில் நின்று தன் மனதில் முழு கவனத்துடன் முழுமுதற் கடவுளை வழிபட்டான். அனைத்து படைப்புகளின் மூலாதாரமாகவும் அனைத்து உயிர்களின் நாயகராகவும் விளங்கும் முழுமுதற் கடவுளை அவன் இதயத்தில் பற்றிக் கொண்டதும், விஸ்வாத்மாவான விஷ்ணுவைப் போலவே கனமானவனாக மாறினான். பூமியின் ஒரு பகுதி கீழ்நோக்கி இறங்கியது.

துருவன் தன் உடலின் துவாரங்கள் அனைத்தையும் மூடியபோது, பிரபஞ்சத்திலுள்ள தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே தேவர்கள் பகவானை சரணடைந்து காத்தருளும்படி வேண்டினர்.

அதற்கு பகவான், கவலை வேண்டாம், இச்சூழ்நிலைக்கு காரணம் துருவனின் தவமே, அவனுக்கு நான் விரைவில் தரிசனம் தந்து அனைத்தையும் சரிசெய்து அனைவருக்கும் நலமளிப்பேன்,” என்று உறுதி கூறினார்.

பகவானின் ஆசி

பகவானின் இன்மொழிகளால் சாந்தமடைந்த தேவர்கள் விடைபெற்று சென்றபின், அவர் கருட வாகனத்தில் அமர்ந்து தமது தொண்டன் துருவனைக் காண மதுவனத்திற்குச் சென்றார்.

அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த துருவன், தன் மனதில் நிலைத்திருந்த பகவானின் திருவுருவம் மறைந்ததால் கண் விழித்தான். கண்ணெதிரே அதே பகவானின் நேரடி தரிசனம் கிடைக்கப் பெற்றதும், பேரின்ப அதிர்ச்சியுடன் அவன் செய்வதறியாது திகைத்தான். பகவானது திருவடிகளில் விழுந்து வணங்கி, அவற்றை முத்தமிட்டு, இரு கைகளால் ஆரத் தழுவினான். உடனே பகவானைப் போற்றித் துதித்துப் பாடுவதற்குப் பேராவல் கொண்டான். எனினும், சிறுவனாக இருந்தமையால் அதைச் சரியாக செய்ய இயலாமல் தடுமாறினான்.

இதைப் புரிந்துகொண்ட பகவான் தமது திவ்ய சங்கினால் துருவனின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். இவ்வாறு துருவன் பகவானின் மகத்தான கருணையைப் பெற்று கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்கத் தொடங்கினான்.

பரம புருஷ பகவானே, தாங்கள் என்னுள் புகுந்து எனது பேசும் சக்தியை உயிர்ப்பித்தீர்கள், தங்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள். பல்வேறு சக்திகளைக் கொண்ட தாங்கள், புற சக்தியால் பௌதிக உலகைப் படைக்கிறீர்கள். பிரம்மதேவர் தங்களிடம் சரணடைந்துள்ளதால், தங்களின் அருளால் அவரால் இரண்டாம் நிலை படைப்பைச் செய்ய முடிகிறது. புலனுகர்ச்சிக்காக தங்களை வழிபடுவோர் நிச்சயம் மாயா சக்தியால் கவரப்பட்டவர்களே. தங்களுடைய தூய பக்தர்களிடமிருந்து தங்களது புகழைக் கேட்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியானது, தேவலோக இன்பங்கள் மற்றும் அருவ பிரம்மஜோதியில் ஐக்கியமாகும் இன்பத்தைவிட கோடிக்கணக்கான மடங்கு உயர்ந்ததாகும்.

பகவானே, இடையறாது தங்களது அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் தொடர்பில் நான் எப்போதும் இருக்கும்படி எனக்கு அருள்புரிவீராக. அந்தத் தொடர்பால், பௌதிகச் செல்வங்களின் மீதுள்ள பற்றுதலிலிருந்து விலகியிருக்க முடியும். தங்களை நேரில் தரிசித்ததால் தங்கள் திருவுருவமானது கற்பனையானதல்ல என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். தாங்களே இந்த அண்ட சராசரங்களை வயிற்றில் தாங்கும் முழுமுதற் கடவுள், தாங்களே பிரபஞ்சத்தைக் காக்கும் விஷ்ணு.

அனைத்து நல்லாசிகளின் பரம வடிவமே, நான் மன்னனாகி ஆட்சி செய்வதைக் காட்டிலும், தங்களது தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என நன்கு உணர்ந்து கொண்டேன். அறியாச் சிறுவனான என்னை தாய்போல் காக்கும் கருணைக் கடலன்றோ தாங்கள்.”

வேதங்களின் முடிவிற்கேற்ப பிரார்த்தித்த துருவனிடம் பரம புருஷ பகவான் கூறினார், அன்பார்ந்த அரச குமாரனே, உன் உள்ளத்தில் உள்ள ஆசை நிறைவேற்றுவதற்கு கடினமானதாயினும்கூட, அது நிறைவேற நான் அருள்புரிவேன். உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும். அனைத்து கிரகங்களுக்கும் அச்சாக விளங்கும் வடமீன் எனும் ஒளிமிகுந்த கிரகத்தை உனக்கு பரிசளிக்கப் போகிறேன். அது காலத்தினால் அழியாதது. உன் தந்தைக்குப் பிறகு இந்த உலகை நீ 36,000 வருடங்கள் மாறாத இளமையுடன் ஆட்சி புரிவாய். உனது சிற்றன்னை சுருசியும் அவளது மகன் உத்தமனும் காட்டில் அகால மரணமடைவார்கள்.”

(சுருசி துருவனுக்கு இழைத்த வைஷ்ணவ அபராதத்தினால் இந்நிலையை அடைந்தாள்.)

பகவான் மேலும் கூறினார், மிகப்பெரிய யாகங்களையும் தான தர்மங்களையும் செய்து நீ இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்வாய், ஜடவுடலை நீத்தபின் என் உலகை அடைந்து நித்ய வாழ்வைப் பெறுவாய். மீண்டும் இந்தத் துன்பமயமான உலகிற்கு வர மாட்டாய்.”

இவ்விதமாக ஆசிர்வதித்த பகவான், துருவ மஹாராஜனின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு தம் இருப்பிடம் திரும்பினார்.

துருவனின் மகிழ்ச்சியின்மை

தன் விருப்பத்திற்கேற்ப அனைத்து வரங்களையும் பகவானிடமிருந்து பெற்ற பின்பும் துருவ மஹாராஜன் மகிழ்ச்சியடையவில்லை. அதற்கான காரணங்கள்:

* பக்தித் தொண்டின் பலனாக முழுமுதற் கடவுள் தன்முன் காட்சி தந்தபோது, துருவன் தன் மனதில் முன்பிருந்த உலகியல் தேவைகளை நினைத்து வெட்கினான்.

* பற்பல பிறவிகளில் யோகம், தவம் மற்றும் விரதங்களை அனுஷ்டித்து அரிதாகக் கிடைக்கப் பெறும் பகவானின் தரிசனத்தைப் பெற்றும், தனது புத்தியின்மையால் அழியக்கூடிய செல்வத்தை விரும்பியதால் வருந்தினான்.

* பழி உணர்ச்சியால் தன் ஆன்மீக குருவான நாரதரின் உயர்ந்த அறிவுரைகளைப் பின்பற்ற இயலாத தன் தவறை எண்ணி வருந்தினான்.

* மாயையின் கோரப்பிடியில் சிக்கி, சகோதரனை எதிரியாக பாவித்த தன் மனநிலைக்காக நாணமுற்றான்.

முடி சூட்டுதல்

துருவ மஹாராஜன் மதுவனத்திலிருந்து தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டான். இச்செய்தியை தூதர்கள் மூலம் செவியுற்ற மன்னர் உத்தானபாதர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இழந்த மகனை மீண்டும் பெறும் பாக்கியத்தை அடைந்த ஆனந்தத்துடன் சங்குகள், துந்துபிகள் மற்றும் வேத மந்திரங்கள் ஒலிக்க ராஜமரியாதையுடன் மகனை வரவேற்றார்.

துருவன் அவர்களைக் கண்டவுடன் பாதம் பணிந்து வணங்கினான். அவனது சிற்றன்னை சுருசி கண்களில் கண்ணீருடன், எனதன்பு மகனே, நீ நீண்ட நாள் வாழ்வாயாக,” என்று மனதார வாழ்த்தினாள். தந்தை உத்தானபாதர் மீண்டும்மீண்டும் மகனை உச்சிமுகர்ந்து கண்ணீரால் நீராட்டினார்.

பெற்ற தாயான சுனீதி அன்பு மேலிட அவனை அரவணைத்தாள். அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரும், முலையிலிருந்து சுரந்த பாலும் கலந்து அம்மகனை நனைத்தது. இது மிகச்சிறந்த மங்கல அறிகுறியாகும்.

சகோதரர்களான துருவ மஹாராஜனும் உத்தமனும் மிக்க அன்புடனும் ஒற்றுமையுடனும் எல்லாவித கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறப்பாக வளர்ந்தனர். ராஜரிஷியான தந்தை உத்தானபாதர் துருவனின் சிறப்பான செயல்களையும் செல்வாக்கையும் எண்ணி மிகவும் திருப்தியுற்றார். மக்கள் துருவனின் மீது கொண்டிருந்த பாசத்தையும் அமைச்சர்கள் அவரை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து, துருவனை இந்த பூமண்டலத்தின் மன்னராக முடிசூட்டினார்.

பின், உத்தானபாதர் உலக வாழ்வைத் துறந்து வானபிரஸ்த வாழ்வை ஏற்று கானகம் நோக்கிச் சென்றார். துருவ மஹாராஜனின் ஆட்சி மற்றும் அற்புதச் செயல்களை அடுத்த இதழில் காணலாம்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives