மக்களுக்கு நன்மை பயக்கும் கேள்விகளுக்கான விடைகள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு இந்த இதழில் தொடங்கி, இனிவரும் இதழ்களில் தொடர்ந்து வழங்க உள்ளோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் அத்தியாயம்

முதல் அத்தியாயத்தின் சுருக்கம்

ஸ்ரீல வியாஸதேவர், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கிய பிறகு, ஸ்ரீமத் பாகவதம் தூய்மையானது என்றும் பௌதிக நோக்கங்களற்றது என்றும் புகழ்கிறார். மேலும், சுகதேவரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டதால் அஃது அமிர்தம் போன்றதாகும். நைமிஷாரண்யத்தில் சௌனக ரிஷியின் தலைமையில் கூடிய முனிவர்கள் சூத கோஸ்வாமியை குருவாக ஏற்று, அவரிடம் உலக நன்மைக்கான ஆறு கேள்விகளைக் கேட்டனர். இக்கேள்விகளுக்கு இரண்டாம் அத்தியாயத்தில் சூத கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்குகிறார்.

சூத கோஸ்வாமி தனது குருவை வணங்குதல்

மாமுனிவர்களின் கேள்விகளை கவனத்துடன் கேட்ட சூத கோஸ்வாமி, அதனால் மிகவும் திருப்தியுற்று, முதலில் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமிக்கு வணக்கங்களைத் தெரிவித்தார். “அறியாமையை கடப்ப தற்குத் துன்பப்படும் பௌதிகவாதிகளின் மீதான எல்லையற்ற கருணையால், வேத ஞானத்தின் சாரமும் பரம இரகசியமுமான ஸ்ரீமத் பாகவதத்தை அவர் போதித்தார்,” என்று சுகதேவ கோஸ்வாமியைப் புகழ்ந்த பின்னர், பரம புருஷரான நாராயணருக்கும், தெய்வீகத் தன்மை பெற்றவரான நர-நாராயண ரிஷிக்கும், கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கும், ஆசிரியரான ஸ்ரீல வியாஸதேவருக்கும் சூத கோஸ்வாமி தனது வணக்கங்களைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, முனிவர்களின் கேள்விகள் பாராட்டுதலுக்குரியவை என்றும், அவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருப்பதால் உலக நன்மைக்கு உகந்தவை, மங்களகர மானவை என்றும் கூறினார்.

மனித குலத்திற்கான உயர்ந்த நன்மை

முனிவர்களின் கேள்விகளுக்கான பதிலை ஒன்றன்பின் ஒன்றாக சூத கோஸ்வாமி உரைக்கத் தொடங்கினார். முழுமுதற் கடவுளின் (கிருஷ்ணரின்) உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதே மனித குலத்திற்கு மிகவுயர்ந்த நன்மையை நல்கும். மேலும், அத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் ஏதுமின்றியும் இடையூறின்றியும் இருக்க வேண்டும்; அதுவே ஆத்மாவிற்கு பூரண திருப்தியைத் தருவதும் மனித குலத்தின் உயர்ந்த கடமை அல்லது தர்மமும் ஆகும்.

எல்லா சாஸ்திரங்களின் சாரம்

பக்தி யோகமே பக்குவமான, முழுமையான ஆன்மீகச் செயலாகும். இதனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர் காரணமற்ற ஞானத்தைப் பெறுவது மட்டுமின்றி, ஜடவுலகப் பற்றுதல்களிலிருந்து எளிதில் விடுதலை பெறுகிறார். இத்தகு பக்தியோகம் எந்தவொரு மற்ற வழிமுறையின் உதவியையும் நாடியிருப்பதில்லை.

முழுமுதற் கடவுளின் செய்திகளைக் கேட்பதற்கான ஆவல் நம்மில் தற்போது மறைந்துள்ளது, நாம் செய்யும் முயற்சிகள் அந்த ஆவலைத் தூண்டும்படி இருக்க வேண்டும்; இல்லையெனில், நமது எல்லா முயற்சிகளும் வீண் உழைப்பே ஆகும். ஏனெனில், மனித வாழ்வு தன்னையறிதலுக்கானது.

பறவையின் கூட்டை சுத்தப்படுத்துவதால் மட்டுமே பறவையை திருப்தி செய்ய இயலாது. பறவையின் தேவைகளை ஒருவர் உள்ளபடி அறிந்திருக்க வேண்டும். அதுபோலவே ஆத்மாவை மூடியுள்ள உறைகளான உடலையும் மனதையும் மட்டும் திருப்தி செய்வதால் ஆத்மாவை திருப்தி செய்ய இயலாது. பரம புருஷரின் உன்னத செயல்களைக் கேட்பதாலும் பாடுவதாலும் மட்டுமே ஆத்மா திருப்தி அடையும்.

எனவே, இந்த மதிப்புமிக்க மனித வாழ்வினை வெறுமனே பௌதிக இலாபங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தக் கூடாது. மேலும் ஒருவர் அடைகின்ற பொருளாதார முன்னேற்றத்தை முழுமுதற் கடவுளின் சேவைக்காகவே பயன்படுத்த வேண்டும், தம் சொந்த புலனின்பத்திற்காக அல்ல.

பூரண உண்மையின் மூன்று நிலைகள்

பூரண உண்மை (பரம்பொருள்) ஒன்றே எனினும், ஒருவரின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, பிரம்மன், பரமாத்மா, பகவான் என்று மூன்று நிலைகளில் ஆன்மீகிகளாலும் சாஸ்திரங்களாலும் விளக்கப்படுகிறது. இம்மூன்று நிலைகளில், பகவானை அதாவது முழுமுதற் கடவுளை நேரடியாக திருப்தி செய்வதே வாழ்வின் மிகவுயர்ந்த இலக்காகும்.

எனவே, அறிவுள்ள ஒருவர், முழுமுதற் கடவுளைப் பற்றிக் கேட்டல், அவரது புகழைப் பாடுதல், அவரை நினைத்தல் மற்றும் அவரை வழிபடுவதில் சிதறாத கவனத்துடன் எப்போதும் ஈடுபட வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இடையறாது நினைத்தல் எனும் கூரிய வாளைக் கொண்டு, பக்தர்கள், கர்மத்தின் இறுக்கமான முடிச்சுகளை வெட்டி விடுகின்றனர். கர்ம முடிச்சுகளை வெட்டி வீழ்த்த உதவும் கிருஷ்ண கதையை அடக்கத்துடன் கேட்பதை எந்த புத்திசாலி மனிதன்தான் தவிர்ப்பான்?

ஸ்ரீமத் பாகவதத்தை முறையாகக் கேட்டல்

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கான ஆர்வம் தூய பக்தர்களுக்கு சேவை செய்வதால் பெறப்படுகிறது. அதன் பின், பகவானைப் பற்றிக் கேட்பதில் ஒருவர் மிகவும் தீவிரமாக ஈடுபடும்போது, அவரது இதயத்தில் பரமாத்மாவாக வீற்றிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் பௌதிகப் புலனின்பத்திற்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார். இதனால் கிருஷ்ண கதையைக் கேட்பது மட்டுமே மிகவுயர்ந்த புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.

அவ்வாறு தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைத் தொடர்ந்து கேட்பதால், இதயத்திலுள்ள களங்கங்கள் அநேகமாய் முழுமையாக அழிக்கப்பட்டு, முழுமுதற் கடவுளின் மீதான பக்தித் தொண்டானது உறுதியான முறையில் நிலைநிறுத்தப்படுகிறது. அச்சமயத்தில் ரஜோ, தமோ குணங்களின் விளைவுகளான காமம், பேராசை போன்றவை இதயத்திலிருந்து மறைந்து விடுகின்றன.

இதனால் ஒருவர் சுத்த-ஸத்வ குணத்தில் மகிழ்ச்சியாக நிலைபெறுகிறார். அந்த உன்னதமான நிலையில், முழுமுதற் கடவுளைப் பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவில் நிலைபெறும் பக்தர், அனைத்து பௌதிகத் தொடர்புகளிலிருந்தும் சந்தேகங் களிலிருந்தும் விடுதலை அடைகிறார்.

பௌதிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்ட நிலையில், தன்னை நித்திய ஆத்மாவாக உணர முடியும், தான் பகவானின் நித்ய சேவகன் என்ற உண்மையான உறவைப் புரிந்துகொள்ள முடியும். இக்காரணத்திற்காகவே, நினைவிற்கெட்டா காலத்திலிருந்தே மஹாத்மாக்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கலப்படமற்ற தூய பக்தித் தொண்டாற்றி வந்துள்ளனர்.

வாஸுதேவரே எல்லாவற்றின் மூலம்

எப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கும் பகவான் முக்குணங்களுடன் மறைமுகமாகத் தொடர்பு கொண்டுள்ளார். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்காக, அவர், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய குண அவதாரங்களை மேற்கொள்கிறார். இம்மூவரில் ஸத்வ குண அவதாரமான பகவான் விஷ்ணுவிடமிருந்து அனைத்து மக்களும் முடிவான நன்மையைப் பெறலாம்.

முக்தி பெறுவதில் தீவிரமானவர்கள் நிச்சயமாக பொறாமை அற்றவர்கள், அவர்கள் அனைவரையும் மதிக்கின்றனர்; இருப்பினும், தேவர்களின் கோர ரூபங்களை விலக்கி, விஷ்ணு மற்றும் அவரது விரிவங்கங்களின் ஆனந்தமய ரூபங்களை மட்டுமே அவர்கள் வழிபடுகின்றனர். ஏனெனில், அனைத்து ஞானம், யாகம், யோகம் மற்றும் தவங்களின் இறுதியான இலக்கு முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. அவருக்கு அன்புத் தொண்டாற்றுவதே உண்மையான தர்மமாகும்.

புருஷ அவதாரங்களின் விளக்கம்

பௌதிகப் படைப்பின் துவக்கத்தில், வாஸுதேவராகிய பூரண முழுமுதற் கடவுள் தம் உன்னத நிலையில் காரணோதகஷாயி விஷ்ணுவாக தமது அந்தரங்க சக்தியால் காரணம் மற்றும் விளைவினைப் படைக்கிறார். பின்னர், அவர் கர்போதகஷாயி விஷ்ணுவாக விரிவடைந்து பிரபஞ்சங்களினுள் நுழைகிறார். அதன் பின்னர், க்ஷீரோதகஷாயி விஷ்ணுவாக–படைக்கப்பட்ட ஜீவன்களின் உடல்களில் பரமாத்மாவாக–நுழைந்து எல்லாவற்றிலும் வியாபிக்கிறார். இவ்வாறாக பிரபஞ்சங்களின் எஜமானரான பகவான், புருஷ அவதாரங்களாக எல்லா கிரகங்களையும் பராமரிக்கிறார்.

கிருஷ்ணர் தோன்ற காரணம்

கட்டுண்ட ஆத்மாக்களை தம் உன்னத லீலைகளால் கவர்ந்து, சுத்த ஸத்வ குணத்தில் உள்ளவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்துச் செல்வதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் தோன்றுகிறார். கிருஷ்ணர் தோன்றுவதற்கான இக்காரணத்துடன் இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து, விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களைப் பற்றியும் தர்மம் யாரிடம் தஞ்சமடைந்தது என்பதைப் பற்றியும் மூன்றாம் அத்தியாயத்தில் (அடுத்த இதழில்) காண்போம்.

இரண்டாம் அத்தியாயத்தின் ஆறு பகுதிகள்

(1) சூத கோஸ்வாமி தன் குருவை வழிபடுதல் (1–4)

கேள்விகளால் திருப்தி

குருவின் கருணையைப் புகழ்தல்

வணங்கப்பட வேண்டியவர்கள்.

(2) பதில்களின் துவக்கம் (5–10)

கலப்படமற்ற பக்தித் தொண்டே மனித குலத்திற்கு நன்மையளிப்பது

பக்தி யோகமே அனைத்து சாஸ்திரங்களின் சாராம்சம்

(3) பூரண உண்மையின் மூன்று நிலைகள் (11–15)

பிரம்மன்–ஆரம்ப நிலை; பரமாத்மா–இரண்டாம் நிலை; பகவான்–இறுதி நிலை

(4) ஸ்ரீமத் பாகவதத்தை முறையாகக் கேட்டல் (16–22)

பக்தர்களுக்கு சேவை செய்வதால் கேட்பதில் ஆர்வம் கிடைக்கிறது.

கிருஷ்ணருக்குகான பக்தித் தொண்டு நிலைபெறுகிறது.

முக்குணங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

(5) வாஸுதேவரே எல்லாவற்றின் மூலம் (23–29)

யோகம், யாகம், ஞானம் மற்றும் தவங்களின் இலக்கு கிருஷ்ணரே.

(6) பதில்களின் தொடர்ச்சி (30–34)

புருஷ அவதாரம்–மூன்று விஷ்ணுக்கள்

கிருஷ்ணர் தோன்ற காரணம்–தூய ஆத்மாக்களை மீட்பதே.