வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

இந்து சமயத்தில் பல கடவுள்களை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. விஷ்ணு, சிவன், விநாயகர், லக்ஷ்மி, அம்மன், முருகன், சனி என பலரும் இதில் அடங்குவர். 33 கோடி தேவர்களைக் கொண்ட பட்டியல் போதவில்லை என்று சிலர் நினைப்பதாகத் தெரிகிறது. இல்லாவிடில், ஏன் புதுப்புதுக் கடவுள்கள் உருவாக்கப்படுகின்றனர்?

புதுக் கடவுள்கள் இன்றைய இந்து மதத்தில் ஃபேஷனாகி விட்டனர். தனக்கென்று ஒரு புதுக் கடவுளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் புதுக் கடவுளின் படங்களை செல்போனில் பதிவேற்றி, வாரம் ஒருமுறை வழிபாட்டிற்குச் சென்று, தினம் ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, முடிந்தால் அந்த புதுக் கடவுளுக்காக கோயிலையும் எழுப்பி, பல வழிகளில் இந்த நவீன இந்துக்கள் தங்களது நம்பிக்கையை அந்தப் புதுக் கடவுளிடம் ஒப்படைக்கின்றனர். இவற்றைச் சற்று ஆராயலாமே.

புதுக் கடவுள்கள் சாத்தியமா?

கடவுள் என்றால் என்ன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். கடவுள் என்பவர் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவர் என்பதை அனைவரும் ஏற்பர். அவ்வாறு இருக்கையில், கடவுள் எவ்வாறு புதிதாக உருவெடுக்க முடியும்? புதுக் கடவுள் என்பதற்கு ஏதேனும் பொருள் உண்டோ? நிச்சயம் இல்லை. கடவுள் யார் என்பதை சாஸ்திரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதையும், சிவன், பிரம்மா முதலிய பல்வேறு இதர தேவர்கள் இவ்வுலகில் முழுமுதற் கடவுளின் பிரதிநிதியாகச் செயல்படுகின்றனர் என்பதையும் பகவத் கீதையைப் படித்தால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

நிறைமதி கொண்டோர் கிருஷ்ணரை வழிபடுகின்றனர் என்பதையும் குறைமதி கொண்டோர் தேவர்களை வழிபடுகின்றனர் என்பதையும் நாம் கீதையிலிருந்து அறிகிறோம். அந்த தேவர்கள் யார் என்னும் பட்டியலும் நமக்கு பல்வேறு சாஸ்திரங்களிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. எனவே, ஒருவர் பல்வேறு தேவர்களை வழிபடுவதாக இருந்தாலும், அந்தப் பட்டியலில் இருப்பவர்களே தேவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். மனதிற்குத் தோன்றிய உருவங்களை கற்பனை செய்து புதுப்புதுக் கடவுள்களை உருவாக்குதல் நிச்சயம் கண்டிக்கத்தக்கது, அயோக்கியத்தனமானது.

எல்லா தேவர்களையும் உள்ளடக்கிய விஸ்வரூபத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்தார். புதுக் கடவுள்களால் காட்ட இயலுமா?

பழைய கடவுளின் புது அவதாரமாக இருக்கலாமே?

“இவர் புதுக் கடவுள்,” என்று கூறினால், மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, குறுக்கு புத்தி கொண்ட சில தீயோர், சாதாரண மனிதனை வேதங்களில் உள்ள முழுமுதற் கடவுள் அல்லது தேவர்களின் அவதாரமாக அறிவித்து விடுகின்றனர். இதன்படி, அந்த புதுக் கடவுள்கள் தங்களை “கிருஷ்ணரின் அவதாரம்,” “சிவனின் அவதாரம்,” “அம்மனின் அவதாரம்,” என பல வகைகளில் எடுத்துரைத்து, மக்களின் அபிமானத்தைப் பெற முயல்கின்றனர். மக்களும் பெரும்பாலும் அறியாமையினால் இருப்பதால், இந்த புதுக் கடவுள்களை பழைய கடவுள்களின் புதிய அவதாரங்கள் என்று நினைத்து, தங்களது பூஜையறையில் இணைத்து விடுகின்றனர்.

சிவன் என்றால் யார் என்பதைக்கூட தெளிவாக எடுத்துரைக்க முடியாதவர்கள், சிவபெருமானைப் பற்றி கற்பனையான வடிவங்களை உருவாக்கி, அவரை கடவுளின் தளத்திலிருந்து ஒரு யோகியின் தளத்திற்குக் கொண்டு வந்து, தன்னையும் ஒரு யோகியாகக் காட்டி, சிவபெருமானுக்குரிய வழிபாட்டினை தனக்கு திசைதிருப்பும் வகையில் மனசாட்சியற்ற ஏமாற்றுக்காரர்களாக உள்ளனர்.

மக்கள் ஒரு விஷயத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம். விஷ்ணு வழிபாடு பிரதானமாக இருக்கும் இடத்தில் வரக்கூடிய புதுக் கடவுள்கள் விஷ்ணுவின் அவதாரமாகப் பார்க்கப்படுகின்றனர்; சிவ வழிபாடு பிரதானமாக இருந்தால், அங்கே சிவ அவதாரங்கள் புதுக் கடவுள்களாக வருகின்றனர். அம்மனின் வழிபாடு அதிகமாக இருந்தால், அங்கே ஆண்களேகூட வெட்கமின்றி தங்களை அம்மனின் அவதாரமாகக் கூறி ஏமாற்றுகின்றனர். ஏன் இந்த பிழைப்பு என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது, இறை நம்பிக்கையில் கை வைத்து விட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கிவிடுவார்களே!

சிவபெருமான் கடலளவு விஷத்தைப் பருகினார், இந்த புது சிவன்களிடம் 10 மில்லி சயனைடு கொடுத்து பருகச் சொல்லுங்கள்.

உண்மையான அவதாரமும் புதுக் கடவுள்களும்

கடவுளின் உண்மையான அவதாரம் சாஸ்திரங்களில் ஏற்கனவே கூறப்பட்டவராக இருக்க வேண்டும். சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாத நபரை நிச்சயம் கடவுளாக ஏற்கக் கூடாது. மேலும், கடவுளின் அவதாரம் என்பவர் மனித சக்திக்கு அப்பாற்பட்ட உன்னத விஷயங்களைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். “படத்திலிருந்து விபூதி கொட்டியது,” “கும்பிட்டேன், நோய் விலகியது,” “வாயிலிருந்து லிங்கம் எடுத்தார்,” “எண்ணெய் கொப்பரையில் கை விட்டு வடை சுட்டார்,” என்பன போன்ற சின்னஞ்சிறு அதிசயங்கள் யாரையும் கடவுளாக மாற்றி விடாது.

கடவுள் என்பவர் ஏன் ஒரேயொரு தங்கச் சங்கிலியைக் கொடுக்க வேண்டும்? தங்கத்தை வரவழைக்க முடிந்தால், ஏன் தங்க மலையை வரவழைக்கக் கூடாது? அதில் ஏன் கஞ்சத்தனம்? நோயைப் போக்க முடிந்தால், அவருக்கு ஏன் மருத்துவமனை? சாஸ்திரங்களில் கிருஷ்ணரோ விஷ்ணுவோ சிவனோ, மருத்துவமனைக்குச் சென்றதாக எங்காவது கூறப்பட்டுள்ளதா?

கிருஷ்ணர் ஏழு வயதில் கோவர்தன மலையை  தன் சுண்டு விரலால் ஒரு வாரம் குடையாக தூக்கிப் பிடித்தார், இந்த புதுக் கடவுள்கள் ஒரு செங்கல்லை ஒரு வாரம் தூக்கிப் பிடிக்கட்டுமே! கிருஷ்ணர் விஸ்வரூபத்தைக் காட்டினார், அதைக் காட்டலாமே! மக்களுடைய புதுக் கடவுள்களில் ஒருவர், “இன்னும் சில நாளில் விஸ்வரூபம் காட்டுகிறேன்,” என்று சொல்லியே காலத்தைக் கழித்து விட்டார்; இப்போது கிருஷ்ணரின் மறைமுக தொண்டர்கள் (அதுதாங்க, எம தூதர்கள்) அவருக்கு வேறு
விஸ்ஸ்ஸ்…வரூபத்தைக் காட்டிக் கொண்டிருப்பர்.

சரி, சிவபெருமான் கடலளவு விஷம் பருகினார், இந்த புது யோகி சிவன்களிடம் 100 மில்லி, அல்லது 10 மில்லி சயனைடு சாப்பிடச் சொல்லுங்களேன்.

நம்பிக்கைக்கு காரணம் என்ன?

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக மக்களின் வாழ்வில் சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதை வைத்து மக்களும் பல்வேறு அதிசயங்கள் நிகழ்வதாக மனதில் கற்பனை செய்துகொள்கின்றனர். உடனே தங்களது பூரண நம்பிக்கையை அத்தகு புதுக் கடவுள்களில் வைத்து விடுகின்றனர்.

கடவுளின் உண்மையான அவதாரத்தையும் போலியையும் பிரித்துப் பார்ப்பது கடினமல்ல. மிகவும் எளிது. ஆயினும், சராசரி மக்கள் அடிமட்ட முட்டாள்களாக இருப்பதாலும் உணர்ச்சிவயப்
படுபவர்களாக இருப்பதாலும், வெளியில் எவ்வளவு புத்திசாலிகளாகத் தெரிந்தாலும், ஆன்மீகம் என்று வந்துவிட்டால் சிந்திக்கும் திறனைத் தொலைவில் வைத்து விடுகின்றனர்.

மனிதன் எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக அணுக முயல்கிறான், ஆனால் மதம் என்று வந்து விட்டால் மட்டும், ஏன் அந்த மூளையில் களிமண்ணை நிரப்புகிறான்? மத விஷயங்களை அறிவுபூர்வமாக அணுகாமல், உணர்ச்சிபூர்வமாக அணுகுவதே இதுபோன்ற புதுக் கடவுள்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன.

புதுக் கடவுள்களைப் பின்பற்றுவோர் செம்மறி ஆட்டு மந்தைகளைப் போன்று முட்டாள்தனமாகச் செயல்படுகின்றனர்.

எல்லாரும் கடவுளா?

யாரேனும் அப்படியே அறிவுபூர்வமாக அணுகினால், அப்போது இந்த புதுக் கடவுள்கள் ஒரு கொள்கையை வைத்துள்ளனர்: “நான் மட்டும் கடவுள் இல்லை, எல்லாருமே கடவுள்தான். நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லாரும் கடவுள். நான் இதை உணர்ந்து விட்டேன், நீ உணரவில்லை. என்னை வழிபட்டு அதை உணர்ந்துகொள்.” என்னே அபத்தம்!

“உணர்ந்துவிட்டாய் அல்லவா, குடி, 10 மில்லி விஷத்தை!” என்று கூறிப் பாருங்கள். ஆனால் அவ்வாறு நீங்கள் சிந்திப்பதற்கு முன்பாக, அவர்கள் குழப்பமான தத்துவங்களைக் கூறி மக்களின் எதார்த்த அறிவை மறைத்து விடுவர். அந்த அறிவுடைய மனிதனின் அறிவும் மாயையினால் கவரப்பட்டு, “ஆஹா, நானும் கடவுள், கூடிய விரைவில் உணர்ந்து விடுவேன்,” என்று மயக்கத்தின் உச்சிக்கே சென்று விடுவான். உலகத்தை அடக்கியாள விரும்பும் ஜீவனுக்கு, “நான் கடவுள்,” என்னும் எண்ணம் அவனை அறியாமையின் உச்சத்திற்குக் கொண்டு சென்று விடுகிறது. அவனும் வாழ்க்கை முழுவதும் அந்த புதுக் கடவுளை வழிபட்டு தானும் கடவுளாகி விடலாம் என்று எதிர்பார்த்து, வாழ்க்கையை வீணடித்து விடுகிறான். இந்த புதுக் கடவுளோ மேலும் பல கோடிகளை வங்கியில் சேர்த்து விடுகிறார்.

செம்மறி ஆட்டு மந்தை

சிலர் உணர்ச்சிவயப்பட்டு புதுக் கடவுள்களிடம் செல்கின்றனர், சிலர் அறிவுபூர்வமாக என்று எண்ணி அறிவை இழக்கின்றனர்; வேறு சிலரோ, முற்றிலும் செம்மறி ஆட்டு மந்தைகளைப் போல, “அவன் செல்கிறான், நான் செல்கிறேன்,” என்ற எண்ணத்தில், புதுக் கடவுள்களைப் பின்தொடர்கின்றனர். ஏதேனும் ஒரு கோயிலுக்கு நூறு பேர் சென்றால், அதற்கு இவனும் செல்வான். அவ்வளவுதான் இவனது அறிவு.

இந்தத் தன்மை இவனை உண்மையான கோயிலுக்கு அழைத்துச் சென்றால், அஃது அவனது அதிர்ஷ்டம். உதாரணமாக, “திருப்பதிக்கு எல்லாரும் புரட்டாசியில் செல்கின்றனர், நானும் செல்கிறேன்,” என்று சென்றால், அது பரவாயில்லை. அவர்கள் அதிர்ஷ்டசாலி ஆடுகள். ஆனால், “____ கோயிலுக்கு இவ்வளவு கூட்டம் வருகிறது, இந்தியாவில் இப்போது அதிகமான கூட்டம் இங்குதான் வருகிறது, தெரியுமா?” என்று கூறி, ஒரு புதுக் கடவுளின் இடத்திற்கு (அது கோயில் இல்லை) சென்றால், அவர்களை துரதிர்ஷ்டசாலி ஆடுகள் என்றே கூற வேண்டும்.

குருடர்களால் வழிகாட்டப்படும் குருடர்களாக மக்கள் அனைவரும் சாக்கடையில் போய் விழுகின்றனர்.

தேவர்களால் வழங்கப்படும் நன்மைகள் யாவும் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்தே பெறப்படுவதால், அவரை வழிபடுவதே சாலச் சிறந்ததாகும்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில்

புதுக் கடவுள்கள் இன்று புதுக் கடவுள்களாக இருப்பர். ஒருவேளை அவர்களது பொய்யான பிரச்சாரமும் மக்களுடைய பொய்யான நம்பிக்கையும் களையப்படாவிடில், இன்னும் 50 ஆண்டுகளில், இந்த புதுக் கடவுள்களுக்கு எதிராக யாரும் எதுவும் கூற முடியாது என்ற நிலை வந்து விடும். இந்த போலிக் கடவுளும் அவதாரங்களில் ஒருவராக சேர்க்கப்பட்டு விடுவார். ஏற்கனவே இவ்வுலகில் அதுபோன்ற பல புதுக் கடவுள்கள் வந்து, இன்று பழைய கடவுள்களாக மக்களுடைய பூஜை அறைகளில் தவறாமல் இடம் பெற்று விட்டனர்.

பெரும்பாலான வீடுகளில் கிருஷ்ணர், பெருமாள், சிவன், முருகன், அம்மன், விநாயகர் ஆகியோருடைய படங்களைக் காட்டிலும், ஒரு காலத்தில் புதுக் கடவுளாக இருந்து, இன்று வழக்கமான கடவுளாக மாறி விட்ட போலிகளின் படங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. ஐந்து சாமி படம் என்று ஒரு வழக்கம் உள்ளது; ஏற்கனவே அந்த ஐந்து சாமிகளில், ஒரு சாமியை மாற்றி விட்டு, புதுக் கடவுள் பல வீடுகளில் உள்ளே நுழைந்து விட்டார்.

சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகள் ஏற்கனவே புக்கிங் ஆகி விட்டது என்பதால், இந்த புதுக் கடவுள்கள் இதர கிழமைகளுக்கு போட்டியிட்டு இடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் என்ன நிகழுமோ. இன்னும் எத்தனை புதுக் கடவுள்கள் வருவார்களோ தெரியவில்லை.

யாரை வழிபட வேண்டும்?

பௌதிக நன்மைகளை விரும்புவோரின் வழிபாட்டிற்காக வேத சாஸ்திரங்கள் பல்வேறு தேவர்களை அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழிபடும்படி பரிந்துரைக்கின்றன. உதாரணமாக, நோயை குணப்படுத்த சூரியனை வழிபட வேண்டும், செய்யப்போகும் செயலில் தடைகளை நீக்க விநாயகரை வழிபட வேண்டும், நல்ல கணவனைப் பெற (அல்லது கணவன் நலமாக இருக்க) அம்மனை வழிபட வேண்டும் என பல வழிகாட்டுதல்கள் உள்ளன.

ஆயினும், இந்த தேவர்களாலும் தேவிகளாலும் வழங்கப்படும் நன்மைகள் அனைத்தும் தற்காலிகமானவை என்றும், அற்ப புத்தி கொண்டவர்களுக்கு உரித்தானவை என்றும், உண்மையான அறிவுடையவர்கள் எல்லாச் சூழ்நிலையிலும் கிருஷ்ணரையே வழிபட வேண்டும் என்றும் பகவத் கீதை தெரிவிக்கின்றது. மேலும், இந்த தேவர்களை வணங்குபவர்கள் அவர்களுடைய அழியக்கூடிய லோகத்திற்குச் செல்வர் என்றும், கிருஷ்ணரை வணங்குவோர் அவரது நித்தியமான லோகத்திற்குச் செல்வர் என்றும் கீதை கூறுகிறது.

வேத சாஸ்திரங்கள் இறுதியில் கிருஷ்ணர் அல்லது விஷ்ணு என்னும் ஒரே நபரை இலக்காக முன்வைக்கின்றன, இதில் ஐயமில்லை. இருப்பினும், பெரும்பாலான மக்கள் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு தேவர்களை வழிபட விரும்புகின்றனர் என்பதும் உண்மை. அவ்வாறு விரும்புவோர், கிருஷ்ணரது வழிபாட்டின் உயர்நிலையை பகவத் கீதையிலிருந்து அறிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது.

இல்லாவிடில், குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட தேவர்களை மட்டுமாவது வழிபடுங்கள், புதுக் கடவுள்களைத் தவிர்த்து விடுங்கள். இருக்கும் கடவுள்கள் போதவில்லையா, ஏன் இந்த புதுக் கடவுள்களின் ஃபேஷன்? இந்த புதுக் கடவுள்களால் உண்மையில் யாருக்கும் எந்தவொரு நன்மையும் வழங்க முடியாது. இவர்கள் போலியானவர்கள், இவர்களை நம்புதல் சாஸ்திரத்திற்கு விரோதமானது. பாபா, யோகி, அம்மா முதலிய பல பெயர்களில் இந்த புதுக் கடவுள்கள் வலம் வருகின்றனர். எச்சரிக்கை விடுப்பது எமது கடமை, மற்றவை உங்கள் கையில்!