வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

உலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய பெரியபெரிய ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் இல்லாதவர்களை இன்றைய உலகம் வினோதமாகக் காண்கிறது. ஆன்மீகத்தை அறிய ஆவல் கொண்டுள்ள நபர்களும்கூட, இவற்றின் மூலமாக ஆன்மீக விஷயங்களைப் பெற விரும்புகின்றனர். எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை விவாதிக்கலாம்.

எல்லாம் கிருஷ்ணரின் சேவையில்

நவீன கால ஓட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. பல்வேறு துறைகளில் பின்னிப்பிணைந்து விட்ட இவற்றை ஆன்மீகத் துறையில் பயன்படுத்தலாமா?

நிச்சயம் பயன்படுத்தலாம். இந்த கட்டுரையைக்கூட பலரும் சமூக வலைத்தளங்களில் படிக்க நேரிடலாம். கிருஷ்ண பக்தியை மக்களிடையே வழங்குவதற்கும் கிருஷ்ண பக்தியைப் பெறுவதற்கும், நாம் எல்லாவித கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே என்பதால், அனைத்தையும் நிச்சயம் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறு ஈடுபடுத்தும்போது, அவை பக்குவமானவையாக மாறுகின்றன. அதன்படி, சமூக வலைத்தளங்களையும் கிருஷ்ணரின் சேவையில் பக்குவமாகப் பயன்படுத்தினால், அவையும் பக்குவமடைய இயலும்.

சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் மக்களை அணுக வேண்டுமெனில், பக்தர்களும் அத்தகு தளத்திற்குச் சென்றால்தான் முடியும். இதை உணர்ந்திருக்கும் காரணத்தினால், நமது இஸ்கான் பக்தர்களில் சிலர் இத்தளங்களை தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்கான முக்கிய ஊடகமாகப் பயன்படுத்தி, இதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாரம்பரிய வழிமுறை

இஃது ஒருபுறம் இருக்க, ஆன்மீக விஷயங்களை அறிவதற்கு தன்னுணர்வு பெற்ற ஒரு குருவை அணுகி, அடக்கத்துடன் அவருக்கு சேவை செய்து, அவரிடம் ஆன்மீகம் சார்ந்த வினாக்களை எழுப்ப வேண்டும் என்று பகவத் கீதையில் (4.34) கிருஷ்ணர் கூறுவதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆன்மீக அறிவு என்பது சாதாரண கல்வியைப் போன்று தகவல்களைச் சேகரித்து தன்னை அறிவுடையவன் என்று காட்டிக்கொள்வதற்கு அல்ல. இந்த அறிவு ஆன்மீக குருவினால் சீடனின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டு அவனால் உண்மையாக உணரப்படுவதாகும். குருவின் திருப்தியே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான முக்கிய வழியாகும். எனவே, அவருக்கு சேவை செய்து பணிவுடன் கேட்டல் என்பது அவசியமாகின்றது. இதுவே ஆன்மீகத்திற்கான பாரம்பரிய வழிமுறை. இந்த வழிமுறையே சாஸ்திரங்களின் பல இடங்களில் மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நவீன காலத்திற்கு இந்த வழிமுறை சாத்தியமா? எல்லாராலும் ஆன்மீக குருவிற்கு சேவை செய்து ஆன்மீக அறிவைப் பெற முடியுமா? காலத்திற்கு ஏற்றாற் போல வழிமுறையை மாற்றிக்கொள்ள வேண்டாமா? மாற்றலாம். ஆன்மீக குருவிற்கான சேவைகளில் பல வகை உள்ளன, அந்த சேவைகளை வேண்டுமானால் நாம் காலத்திற்கு ஏற்றாற் போல மாற்றிக்கொள்ளலாம்; ஆனால் சேவை செய்தல்” என்னும் அடிப்படை விதியினை என்றும் மாற்றவியலாது. எனவே, ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான பாரம்பரிய வழிமுறை எல்லா காலத்திற்கும் நிச்சயம் பொருந்தக் கூடியது.

ஆன்மீக விஷயங்களை அறிவதற்கு முறையான பக்தரை அணுகி அவரிடமிருந்து கேட்பதே பக்குவமான பாரம்பரிய வழியாகும்.

எதுவும் மாற்று அல்ல

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, இணையம், பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள், காணொளிக் காட்சிகள் என எதுவுமே பாரம்பரிய வழிமுறையினை மாற்றி விட முடியாது. இன்றைய உலகில் கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்புவதற்கான பெரும் தேவை உள்ளது. எனவே, இஸ்கான் இயக்கத்தின் குருமார்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர், இது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆன்மீக குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதற்கு வாய்ப்பில்லாத அத்தகு தருணங்களில், பக்தர்கள் நிச்சயம் நவீன கருவிகளைக் கொண்டு குருவின் உபன்யாசங்களைக் கேட்கலாம். அதே நேரத்தில், குருவிடமிருந்தும் மூத்த பக்தர்களிடமிருந்தும் கேட்பதற்கான நேரடி வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது அதனை வலுவாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட உபன்யாசத்தை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கேட்பதற்கும், குரு அல்லது மூத்த பக்தரின் முன்பாக பணிவுடன் அமர்ந்து கேட்பதற்கும் இடையே நிச்சயம் வேறுபாடு உண்டு.

“ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சர்க்கரை” என்று ஒரு பழமொழி உண்டு. சர்க்கரையே கிடைக்காத ஊரில், சிறிதளவு இனிப்புத் தன்மை கொண்ட இலுப்பம் பூவினை சர்க்கரையாகப் பயன்படுத்தலாம் என்பது அதன் பொருள். அதுபோல, ஆன்மீக விஷயங்களை நேரடியாகக் கேட்பதற்கான வாய்ப்பு நமக்கு எப்போதும் கிட்டுவதில்லை என்பதால், பதிவிறக்கம் செய்யப்பட்ட உபன்யாசங்களைக் கேட்பது நமக்கு அவசியமாகிறது. நாம் தினமும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளோம், வேலைக்காக பல மணி நேரம் பயணிக்கின்றோம்; இத்தகு சூழ்நிலையில் நமது ஆன்மீக வாழ்வினைத் தக்கவைப்பதற்கு மேற்கூறிய உபன்யாச முறைகள் நிச்சயம் பேருதவியாக அமைகின்றன. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களைப் பின்பற்றுவதால் விளையும் சில பக்கவிளைவுகள் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக அமைவதால், அவற்றைப் பயன்படுத்தும் ஆன்மீக அன்பர்கள் அந்த பக்கவிளைவுகளை அறிந்து செயல்படுதல் அவசியம்.

நம்பகத் தன்மை

சமூக வலைத்தளங்களில் பெறப்படும் செய்திகளில் இருக்கும் முதல் பிரச்சனை: நம்பகத் தன்மை.

வானொலி, தொலைக்காட்சி என உலகம் சுருங்கியதைக் கணக்கிடும்போது, உலகம் சுருங்கச்சுருங்க இத்தகு ஊடகங்களிலிருந்து பெறப்படும் தகவல்களும் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன என்பது தெரிகிறது. தூர்தர்ஷன் செய்தியை நம்பிக்கையுடன் கேட்ட மக்களால், இன்றைய சுருங்கிய உலகில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் காட்டப்படும் மாறுபட்ட செய்திகளின் காரணத்தினால், எதையும் நம்பிக்கையுடன் கேட்க முடிவதில்லை. இதன் அளவுகோல் சமூக வலைத்தளங்களில் அதிகம். அரசியல் விஷயங்களில் பொய்யும் புரட்டும் அள்ளிவிடப்படுவதை சிறிதேனும் அறிவுடையோர் அறிவர். அதே நேரத்தில், ஆன்மீகத் தகவல்களின் பெயரிலும் பல்வேறு போலிப் புரட்டுகள் உள்ளன என்பதைத்தான் பலரும் அறியார். ஏனெனில், மக்களிடம் அரசியல்குறித்து சிறிதேனும் அறிவு உள்ளது, ஆன்மீகம்குறித்து அறிவே இல்லையே.

இந்தப் படத்தைப் பகிருங்கள் (share), அதிர்ஷ்டம் வரும்” என்பதைக்கூட பலரும் நம்பி பகிர்கின்றனர். நவீன கால கிராபிக்ஸ் வசதியுடன், இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் படங்கள் பலவும் இத்தளங்களில் பரவலாக வலம் வருகின்றன. சிலர் இவற்றைப் போலி என அறிந்துகொள்வர்.

ஆயினும், புனையப்பட்ட கதைகள், போலியான தத்துவங்கள், பகவத் கீதை என்ற பெயரில் பல்வேறு உளறல்கள் என பல விதங்களில் பொய்யான தகவல்கள் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தாராளமாகப் பகிரப்படுகின்றன. நமது ஊர் மக்களுக்குதான் பகவத் கீதை தெரியாதே, யார் எதைச் சொன்னாலும் நம்பி, அதனை விரும்பி பகிர்கின்றனர் (like and share). இவ்வாறாக, சமூக வலைத்தளங்கள் மற்றெல்லா ஊடகங்களைக் காட்டிலும் நம்பகத்தன்மையில் குறைந்தவையாக உள்ளன.

இடது பக்கத்திலுள்ள ஆலயம் சமூக வலைத்தளத்தின் எண்ணற்ற பொய் தகவல்களில் ஒன்று. இஃது இலங்கையில் ஒரு கடலின் நடுவே உயரிய குன்றின்மீது இராவணனால் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது என்று செய்தி பரப்பப்பட்டது. ஆனால், அஃது உண்மையில் கிராஃபிக்ஸில் மாற்றப்பட்ட படமாகும், இவ்விடம் தாய்லாந்து நாட்டிலுள்ள கோ பிங் கான் என்னும் தீவு என்பதை வலது பக்கப் படம் காட்டுகிறது.

நிற்காமல் ஓடும் மனம்

தொலைக்காட்சியில் ஒரே அலைவரிசையை நீண்ட நேரம் பார்த்த காலம் மாறி, ஒன்றை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்காத காலம் வந்து விட்டது. கையில் உள்ள ரிமோட் (remote), அலைவரிசைகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த அணுகுமுறை மேலும் அதிகம். எவராலும் ஒரு படத்தை அல்லது நிழற்படத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடிவதில்லை. தங்களது ஸ்மார்ட் போனில் ஆள்காட்டி விரலைத் தேய்த்துதேய்த்து பலருக்கு விரலில் வலிகூட வந்து விடுகிறது. ஆனால் மனம் நிற்பதே இல்லை. மக்களின் மனம் கலி யுகத்தில் பெரும்பாலும் ரஜோ குணத்திலும் தமோ குணத்திலுமே இருக்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த ரஜோ குணத்தை இந்த சமூக வலைத்தளங்கள் மேன்மேலும் தூண்டுகின்றன என்றால் அது நிதர்சனமான உண்மை.

நிற்காமல் ஓடும் மக்களின் மனம் ஆன்மீக விஷயங்களை அறிவதற்குத் தேவையான பொறுமை” என்னும் முக்கிய குணத்தை இழந்து விடுகிறது. மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது நிச்சயம் சிரமமான ஒன்றே, அஃது இந்த நவீன ஊடகங்களின் உதவியால் மேலும் சிரமமானதாக மாறியிருப்பதால், இவற்றை கலியின் கம்பீரமான கருவிகள்” என்று கூறலாம். ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு நிலையான ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் மிகவும் அவசியம். இவற்றை இந்த சமூக வலைத்தளங்கள் நிச்சயம் சிதைக்கின்றன.

பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்களைக் கையில் எடுத்தால், பொதுவாகவே ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருக்கக்கூடிய மக்கள் பலருக்கும் உறக்கம் வந்து விடுகிறது. இந்த சமூக வலைத்தளங்கள் அக்குணங்களை மேலும் ஊக்குவிப்பதால், அமர்ந்து படிப்பதற்கான பக்குவத்தையும் ஸத்வ குணத்தையும் பக்தர்களுக்கு படிப்படியாக குறைந்து விடும் என்பது வருந்தத்தக்க உண்மை.

மேலும், சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களால், அதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உபன்யாசங்களைக்கூட சில நிமிடங்களுக்கு மேலாக பார்க்கவோ கேட்கவோ முடியாது. மனம் அவர்களை அடுத்த விஷயத்தை நோக்கி இழுத்துச் சென்று விடுகிறது. இது நாம் நடைமுறையில் காணும் உண்மை. சமூக வலைத்தளத்தில் மனதைப் பறிகொடுத்தவர்களால், ஒரு மணி நேர உபன்யாசத்தைக்கூட (வலைத்தளத்திலிருந்து பெற்றால்கூட) கவனத்துடன் கேட்க முடிவதில்லை.

உண்மையில் நிகழ்ந்த சம்பவம்: ஒருநாள் காலை வாட்ஸ்அப் வேலை செய்யாமல் நின்றுவிட்டது. அந்நேரத்தில் ஜபம் செய்த ஒரு பக்தர் தனது ஜபம் சிறப்பாக இருந்தது என்பதைப் பகிர்கிறார். ஆனால், அஃது ஏன் என்பதை அவர் அறியவில்லை.

மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் பகிர்தல்

பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் முதலியவற்றில் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே பதிவிடுகின்றனர் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தங்களது துன்பமான சிரமமான தருணங்களையும் அன்றாட பிரச்சனைகளையும் பெரும்பாலானோர் பதிவிடுவதில்லை. ஆயினும், அப்பிரச்சனைகள் இருக்கத்தானே செய்கின்றன. வாழ்வில் ஒருமுறைகூட பார்த்திராத எண்ணற்ற நண்பர்களின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் காண்பவன், அவனை அறியாமலேயே வாழ்க்கை என்றால் இவ்வாறு மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்னும் பொய்யான உணர்வினைப் பெறுகிறான். அதன் விளைவாக, வாழ்வின் துன்பங்களை அவன் உணர மறுக்கிறான், துன்பங்கள் அவனைத் துவட்டும்போது தனக்கு மட்டுமே அவை வருவதாக எண்ணி பெரும் மன அழுத்தத்தில் உறைகிறான்.

வாழ்வின் பிரச்சனைகளை பெரும்பாலானோர் இத்தகு தளத்தில் பதிவிட விரும்புவதில்லை. அவை அவர்களது மூளையில் ஏதோ ஓர் இடத்தில் மறைக்கப்பட்டு விடுகின்றன. மற்றவர்கள் தனது மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக சில போலியான பதிவுகளை வெளியிடுவோரும் உள்ளனர். எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் கணவன், மனைவி இருவரும் வலைத்தளத்தில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக, திருமண நாள் கொண்டாட்டம் என்று சில புகைப்படங்களைப் பதிவு செய்கின்றனர். திருமண வாழ்க்கை என்றால் ஆங்காங்கே சில கசப்பான உறவுகளும் இருக்கும் என்ற யதார்த்தத்தை இது மறக்கடித்து விடுகிறது. இதன் விளைவாக, சண்டை வந்தால், விவாகரத்து” என்று உடனே ஓடுகின்றனர்.

 

எனது கருத்திற்கு என்ன மதிப்பு

சமூக வலைத்தளத்தின் மற்றொரு பிரச்சனை என்னவெனில், இங்கே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். அதாவது, யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து கூறலாம். நமக்கு அந்த நபரைப் பற்றி தெரிந்திருக்கலாம், தெரியாமல் இருக்கலாம், எனது கருத்து” என்று கூறி ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த விஷயத்தை உளறுவதற்கு இந்த வலைத்தளங்கள் முக்கிய ஊடகமாகத் திகழ்கின்றன. ஆன்மீக வாழ்வின் ஆரம்பப் பாடமே, நமது கருத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது, சாஸ்திரங்களின் கருத்திற்கே மதிப்பு, சீடப் பரம்பரையில் வரும் ஆன்மீக ஆச்சாரியர்களின் கருத்திற்கே மதிப்பு,” என்பதாகும். வலைத்தளங்களில் நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் நன்கு வளர்ந்த ஆல மரத்திற்கு எதிராகக் கருத்து கூறுவதைக் காண்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் என்னும் இந்த மாயை இன்றைய ஜனநாயக அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு நிச்சயம் பொருந்தாது. இங்கே ஆச்சாரியர்களின் கருத்திற்கும் சாஸ்திரத்தின் கருத்திற்குமே மதிப்பு உண்டு, சாதாரண நபர்களின் கருத்திற்கு மதிப்பு கிடையாது. ஆச்சாரியர்களின் கருத்தை ஒத்திருந்தால் மட்டுமே மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பு உண்டு. இந்த புரிந்துணர்வை சமூக வலைத்தளங்கள் சூட்சும ரீதியில் கெடுத்து விடுவதால், இவை ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக அமைகின்றன.

இடைவிடாமல் போனைப் பார்த்து வளைந்து அடிமையான கழுத்துதான் ஃபேஸ்புக் அடையாளமோ!

நல்ல பக்தரை அறிய முடியுமா?

ஃபேஸ்புக்கில் ஒருவர் இடும் தகவலை வைத்து, அவரை நல்ல பக்தர் என்று நம்மால் முடிவு செய்து விட முடியாது. ஒருவர் நன்றாக உபன்யாசம் வழங்கலாம், நன்றாக கட்டுரை எழுதலாம், ஆர்வத்தைத் தூண்டும் குறுந்தகவல்களை வழங்கலாம்; ஆனால் அவருடைய உண்மையான ஆன்மீகப் புரிந்துணர்வு என்ன என்பதை வாழ்வில் அவருடன் பழகினாலன்றி நம்மால் முழுமையாக உணர முடியாது. நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நபர் நம்பத்தகுந்தவராக இருந்தால், அவருடைய உரைகளை பதிவிறக்கம் செய்து கேட்கலாம். வெறும் வலைத்தளத்தில் மட்டும் ஒருவரைக் காண்கிறோம் என்றால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நாம் நிச்சயம் அறிய இயலாதே.

கிருஷ்ண பக்தியின் அறிவு என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல. கிருஷ்ண பக்தருக்குரிய முறையான நடத்தையுடன் ஒருவர் வாழ்ந்தால் மட்டுமே, அவரால் கேட்பவர்களின் இதயத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நல்ல பேச்சாளராக இருப்பவர் உபன்யாசத்திற்குப் பின்னர், ஓர் உணவகத்திற்குச் சென்று ஏதோ ஒரு உணவை வாங்கி உண்பவராக இருக்கலாம். வெறும் உபன்யாசத்தை மட்டும் கேட்டால், சொந்த நடத்தையை அறிய முடியாது. ஒருவரது பேச்சும் நடத்தையும் வேறுபடுவதை நம்மால் எவ்வாறு உணர முடியும்? எனவே, யாரிடமிருந்து கேட்கிறோம் என்பதில் நிச்சயம் கவனம் தேவை.

பல்வேறு போலி சாமியார்கள் கவர்ச்சிகரமான சில வசனங்களை சமூக வலைத்தளங்களில் உதிர்த்து விட்டு, அதன் மூலமாக இலட்சக்கணக்கான மக்களைப் பின்தொடரச் செய்கின்றனர். வசனங்கள் வாய்மையானவையா என்பதை யாரும் சோதிப்பதில்லை. எது வாய்மை என்பது தெரியாதே! அபத்தமான விஷயத்தை உளறினாலும், அந்த உளறலை ஓர் அழகிய டிசைனில் அற்புதமான வண்ணங்களுடன் வலைத்தளத்தில் பதிவிட்டால், அந்த உளறலை லைக் செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

 

­­­

உண்மையான தேடல் உடையோர், ஆதியில் கிருஷ்ணரால் பிரம்மாவின் இதயத்தில் வழங்கப்பட்ட ஆன்மீக ஞானத்தை குரு சீடப் பரம்பரையில் முறையாகப் பெறுவதற்கு முயல்வர்

உண்மையான தேடல் இருந்தால்…

உங்களுக்கு உண்மையான தேடல் இருந்தால், நீங்கள் பெறக்கூடிய தகவல்கள் உண்மையானவையா என்பதையும் பேசுபவர் (அல்லது சொல்பவர்) நேர்மையானவரா என்பதையும் நிச்சயம் சோதிக்க வேண்டும். இவ்வாறு சோதிக்காவிடில், ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற முடியாது. முன்னரே கூறியபடி, இன்றைய உலகில் இதுபோன்ற நவீன காலக் கருவிகளின் மூலமாக ஆன்மீக அறிவைப் பெறுவதை நிச்சயம் புறக்கணிக்க முடியாது. நம்மிடம் உள்ள எல்லா வசதிகளையும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துவதே நமது கொள்கை.

எனவே, இத்தகு சமூக வலைத்தளங்களை யாம் முற்றிலுமாக ஒதுக்கவில்லை. ஆயினும், யார் கூறும் தகவல்களைக் கேட்கிறோம் என்பதில் கவனமாகச் செயல்படும்படி வாசகர்களை அறிவுறுத்துகிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உண்மையிலேயே ஆன்மீக விஷயங்களை அறிவதில் ஆர்வமுடையவராக இருப்பின், உங்களது ஸ்மார்ட் போனை தினமும் ஒரு மணி நேரமாவது ஓரமாக வைத்து விட்டு, ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைக் கையில் எடுத்து, அதிலுள்ள ஆன்மீக அமிர்தத்தை பருகுங்கள்.