வழங்கியவர்: இராம நரசிம்ம தாஸ்

 

தற்கொலை, தற்கொலை, தற்கொலை–இன்றைய செய்தித்தாள்களில் தற்கொலை செய்திகள் வராத நாள்களே கிடையாது எனலாம். தூக்குப்போட்டு தற்கொலை, விஷம் குடித்து தற்கொலை, ரயில் முன் பாய்ந்து தற்கொலை, கிணற்றில் விழுந்து தற்கொலை, மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தற்கொலை என பல வகையான தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலையால் தீர்வு ஏற்படும் என்று நினைக்கின்றனர், அதனை சற்று ஆராய்வோம்.

தற்கொலை எண்ணம் ஏன் வருகின்றது?

விரும்பியதை அடைய முடியாதபொழுது, தனது இன்பத்திற்கு மற்றவர்கள் தடை விதிக்கும்பொழுது, மற்றவர்களால் அவமானப்படுத்தப்படும்பொழுது, கோபம் அறிவை மறைக்கும்பொழுது என பல நேரங் களில் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன. அச்சமயத்தில், தற்கொலை செய்து கொண்டால் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும் என்று அவர்கள் நினைப்பதே தற்கொலைக்கான முக்கிய உந்துதலாக அமைகிறது, ஆனால் அந்த எண்ணம் அறியாமையின் உச்சகட்டமாகும். தற்கொலை துன்பத்திலிருந்து நம்மை விடுவித்து விடுமா? நிச்சயம் இல்லை. தற்கொலை நமது துன்பத்தை மேலும் அதிகரித்து சிக்கல்களையும் அதிகரிக்கும் என்பதே உண்மை. ஆனால் பெரும்பாலான நபர்கள் இதை அறிவதில்லை. அதனால் தான், தற்கொலை எண்ணங்கள் மனதில் எழுகின்றன.

கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்

நாம் பிறக்கும்போதே நம்முடைய பூர்வ ஜென்ம கர்மத்தின்படி மரண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. நமது கர்ம வினைகளுக்கேற்ப ஜட இயற்கையின் மூலம் நமக்கு ஜட சரீரம் கிடைக்கின்றது. இன்பமோ துன்பமோ அதனைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தாக வேண்டும் (பகவத் கீதை 2.14), குளிர், வெப்பம் போன்றவற்றை பொறுத்துக்கொள்வதைப் போல புலன்களால் வரக்கூடிய தோன்றிமறையும் இன்பதுன்பங்களையும் பொறுத்துக் கொண்டு, அவற்றால் பாதிக்கப்படாமல் நமது பணியினைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நமது உண்மையான நிலை

 

இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர்: வீழ்ச்சியடைந்தவர்கள், வீழ்ச்சியடையாதவர்கள். இந்த ஜடவுலகில் உள்ள நாம் அனைவரும் வீழ்ச்சியடைந்தவர்கள் என்றும், ஆன்மீக உலகில் நித்தியமாக வாழ்பவர்கள் வீழ்ச்சியடையாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கடவுளின் சட்டத்தினை மீறி சுதந்திரமாக அனுபவிக்க விரும்பிய காரணத்தினால், இந்த ஜடவுலகில் வைக்கப்பட்டுள்ளோம்.

இந்த உலகம் ஒரு சிறைச்சாலையைப் போன்றது, குற்றவாளிகள் வசிக்கும் இடமாகும், நாம் அனைவரும் குற்றவாளிகளே. நமது குற்றத்தை உணர்ந்து செய்த பாவங்களைக் களைந்து, இறைவனிடம் அன்பு செலுத்தும்போது, நாம் மீண்டும் அவரது நிரந்தரமான இருப்பிடத்திற்குச் செல்ல முடியும். அதாவது, சிறையிலிருந்து விடுபட முடியும். சிறைச்சாலையில் உள்ள நபருக்கு அவரது குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சிறை வாழ்க்கையின் அளவு நீடிக்கிறது. ஆனால் அந்த நபர் சிறையிலிருந்து தப்பியோடுவதற்கு தகாத வழியில் முயற்சி செய்தால், அவர் சிறைக் காவலர்களால் பிடிக்கப்பட்டு சிறை வாசத்தின் அளவு அதிகரித்து விடும்.

அதுபோலவே, ஒருவன் தற்கொலை செய்யும்போது, இவ்வுலக சட்டங்களுக்கு காவலராக இருப்பவர்கள் அதற்குத் தண்டனையாக அவனை மேன்மேலும் அதிக துன்பங்களுடன் இந்த உலகத்தில் வைப்பர்.

கடவுள் கொடுத்த பரிசு

கடவுள் கொடுத்த பரிசு இந்த மனித உடல். மனிதனால் மட்டுமே சிந்திக்க முடியும். நாம் யார், கடவுள் யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நான் ஏன் துன்பப்படுகின்றேன் என்பனவற்றை மனிதனால் மட்டுமே கேட்க முடியும். “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப 84 இலட்சம் உயிரினங்களில் மனித உடல் மிகவும் உயர்வானது. மற்ற உயிரினங்களில் உள்ளதுபோலவே நமது உடல் அமைந்திருந்தாலும், உயர்ந்த அறிவை (சிந்திக்கும் திறனை) நமக்கு பகவான் கொடுத்துள்ளார். கடவுள் கொடுத்த இந்த உயர்ந்த உடலை வைத்து அவரை உணர்வதற்கு பதிலாக, நாம் அறியாமையில் மூழ்கி இந்த உடலை அழித்துக்கொள்வது நல்லதல்ல. நமக்கென்று விதிக்கப்பட்ட விதியின்படி துன்பம் நம்மைத் தேடி வருவதைப் போல இன்பமும் நம்மைத் தேடி வரும்.

பேயாக வேண்டும்

நமக்கு இரண்டு விதமான உடல்கள் உள்ளன. ஸ்தூல மற்றும் சூட்சும உடல். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது ஸ்தூல உடல். இந்த ஸ்தூல உடலினுள் கண்ணுக்கு தெரியாத சூட்சும உடல் ஒன்று உள்ளது. அது மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்றினால் ஆனதாகும். நாம் ஓர் உடலிலிருந்து மறு உடலிற்குச் செல்லும்போது, ஸ்தூல உடல் மட்டுமே மடிகிறது, சூட்சும உடல் நம்முடனே வரும்.

ஆனால் அடுத்த ஸ்தூல உடல் கிடைப்பதற்கான நேரத்திற்கு முன்பாக, நாம் தற்கொலை செய்து கொண்டால், அடுத்த ஸ்தூல உடல் கிடைக்கும் வரை சூட்சும உடலுடன் மட்டுமே திரிய வேண்டும். அவ்வாறு சூட்சும உடலுடன் திரிபவர்களே பேய் என்று அழைக்கப்படுகின்றனர். நிறைவேறாத ஆசையுடன் திரியும் பேயின் வாழ்க்கை அதிக துன்பத்தை வழங்குவதாகும். இந்த உலகின் இயற்கையே துன்பமானது (பகவத் கீதை 8.15), அதில் நாம் ஏன் அதிக துன்பத்தை வரவழைக்க வேண்டும்?

இந்த உடல் வாடகை வீடு

இந்த உடலானது ஒரு வாடகை வீடு போன்றதாகும். நாம் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கின்றோம் என்றால், அந்த வீட்டில் வாழலாமே தவிர அந்த வீட்டை இடிக்க நமக்கு உரிமையில்லை. அப்படி இடித்தோம் என்றால் அது சட்டத்திற்கு விரோதமானது. அதுபோலவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொடுத்த இந்த உடலை உபயோகிப்பதற்கு (பக்தியைச் செய்வதற்கு) மட்டுமே நமக்கு உரிமை உள்ளது, இடிப்பதற்கு அல்ல.

நமது உண்மையான கடமை

சிறைச்சாலையினுள் இருக்கும் நாம் எவ்வாறு நல்லவர்களாக மாறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து பாவச் செயல்களில் ஈடுபட்டு சிறை வாசத்தை அதிகரித்துக் கொள்ளக் கூடாது. பகவானின் அம்சங்களாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள், ஆனால் அவரது தொண்டில் ஈடுபடாதபட்சத்தில் நாம் விரக்தியையே சந்திக்க வேண்டி வரும். பௌதிக சுகம் ஆரம்பத்தில் சுகம்போலத் தோன்றினாலும், இறுதியில் விஷமாக மாறும். பௌதிக சுகத்தில் விரக்தி ஏற்படும்போது அது தற்கொலையில் முடிகின்றது. எனவே, என்றும் இன்பம் தரும் நமது உண்மையான கடமையான பக்தித் தொண்டில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். அதுவே நமது மனித வாழ்வின் முறையான பலனாகும்.

பகவானின் சேவையில் ஈடுபடுவதே நமது உண்மையான தர்மம், அது மட்டுமே மகிழ்ச்சி தரும்.

இறுதியாக

தற்கொலை செய்வதென்பது நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வாக அமையாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஜீவனின் உண்மையான பிரச்சனை பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி என்பவையே, அவற்றிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதே மனித வாழ்வின் குறிக்கோள். ஒவ்வொரு ஜீவனும் குறிப்பாக மனித உடல் பெற்றுள்ள ஜீவன்கள் அனைவரும் மரணம் நம்மை நெருங்குவதற்குள் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு உடலை விடுபவன் அவரது உலகத்தை அடைகிறான், இதில் சிறிதும் சந்தேகமில்லை. (பகவத் கீதை 8.5) அதுவே உண்மையான விடுதலை. இந்த கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவால் கொடுக்கப்பட்டு ஸ்ரீல பிரபுபாதரால் உலகெங்கும் பரப்பப்பட்ட ஹரே கிருஷ்ண, “ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்று திருநாமத்தை உச்சரித்து அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுவதன் மூலமாக, யார் வேண்டுமானாலும் மிக எளிதில் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வைக் காண முடியும், நிரந்தரமான மகிழ்ச்சியையும் பெற முடியும். நாம் அதைத் தேடலாமே!