வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள்.  இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.

தகுதியற்ற நபர்கள்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி திரௌபதி என்னும் தனது நாவலில் திரௌபதியை தவறான பெண்ணாக எழுதியிருக்கிறார். மேலும், சாஸ்திரத்தை மதிக்காத சிலரும் அவ்வப்போது திரௌபதியைப் பற்றி சில தவறான கருத்துகளை கூறுவதை நாம் கேட்கிறோம். தெய்வப் பிறவியான திரௌபதியை காமுகியாகக் காட்டுகிறார்கள். திரௌபதியைப் பற்றிப் பேசவும் கருத்து கூறவும் இத்தகைய நபர்களுக்கு தகுதி உள்ளதா? பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? சாஸ்திரங்கள் கூறும் விஷயங்களை உள்ளது உள்ளவாறு வழங்க வேண்டும், அவற்றைத் திரித்து தவறான கருத்துகளை யாரேனும் வழங்கினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 

விவாகரத்தை அனுமதிப்பவர்களுக்கு திரௌபதியைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது? விவாகரத்து என்னும் சொல் உண்மையில் நமது பண்பாட்டில் இல்லாத ஒரு சொல். ஆனால் தற்போதைய உலகில் விவாகரத்து சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரு பெண் எத்தனை முறை வேண்டுமானாலும் மறுமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கற்பிற்கு திலகமாக திகழ்ந்த திரௌபதியை குற்றம் கூறுவதற்கு யாருக்குத் தகுதி உண்டு?

 

ஆணுக்குப் பெண் சமம் என்று வாழும் இக்காலத்தில் கற்பு என்ற சொல்லை பொருட்காட்சியில்தான் வைக்க வேண்டும். கற்பு என்றால் என்ன? அஃது எங்கே கிடைக்கும்? என்கிற நிலையில்தான் இன்றைய மக்கள் இருக்கிறார்கள். தற்போதைய சமுதாயமும் மேற்கத்திய கலாச்சாரமும் பெண்களுக்கு தவறான பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. வேத கலாச்சாரத்தில் பெண்களின் உயர்ந்த நிலையைப் பற்றிக் கூறினால், அவற்றை கற்பனைக் கதைகள் என்று கூறி ஒதுக்கி விடுகின்றனர்.

 

கற்பு என்றால் என்ன?

ஒரு பெண் தன் கணவனைத் தவிர மற்றொர் ஆணை மனம், சொல், மற்றும் செயலால் தீண்டாது இருத்தல் கற்பு எனப்படுகிறது. தனது கணவனை தெய்வத்திற்கு சமமாக நினைத்து, தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு தூய்மையாக தொண்டு புரியும் பெண், கற்பில் சிறந்தவள் என்று போற்றப்படுகிறாள். மிகவும் கடினமான சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டுப் பிரியாமல், அவருக்கு ஒத்துழைப்பவள், கற்புக்கரசி எனப்படுகிறாள். இத்தகைய பெண்கள், “பெய்” என்றால் மழை பெய்யும் என்று திருக்குறள் கூறுகிறது. கற்பு நெறியுடன் வாழ்வதே பெண்கள் மேற்கொள்ள வேண்டிய தவமாகும்.

ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகா, ஒவ்வொரு நாளும் தன் கற்பின் வலிமையால் ஆற்று மணலில் புதிய பானையைச் செய்து அவரின் பூஜைக்காக நீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள், வானத்தில் பறந்தபடி அப்சர பெண்களுடன் சுகித்துக் கொண்டிருந்த கந்தர்வ ராஜனைப் பார்த்த அவள் சற்றே மதி மயங்கினாள். அதன் காரணமாக அன்று அவளால் புதிய பானையைச் செய்ய முடியவில்லை. சிறு மன சஞ்சலமும் தவறு என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டத்தில், கற்புடைய பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைக்கின்றார். அவள் தன் கணவனிடம் உண்மையாக நடந்து கொள்வதோடு வஞ்சனை இல்லாமல் தொண்டு புரிய வேண்டும். கணவன் நல்லொழுக்கம் இல்லாதவனாக, பணம் இல்லாதவனாக, அதிர்ஷ்டம் இல்லாதவனாக, வயதானவனாக, தொடர்ச்சியான நோய்களினால் பாதிக்கப்பட்டவனாக என எந்தவித மோசமான நிலையில் இருந்தாலும், மனைவி அவனை விட்டு ஒருபோதும் விலகக் கூடாது, அவனை விட்டு மற்றொரு காதலனைத் தேடவும் கூடாது. தனது வாழ்வை உயர்த்திக் கொள்ள விரும்பும் பெண், ஒருபோதும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக் கூடாது.

குந்தியிடம் திரௌபதியை பாண்டவர்கள் அறிமுகப்படுத்துதல்.

தூய்மையான திரௌபதி

ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையானதாகும். திரௌபதி ஒரு தெய்வீகப் பிறவி, லக்ஷ்மிதேவியின் அம்சம்; அவளை ஒரு சாதாரண பெண்ணாக நினைத்துவிடக் கூடாது. அவள் அக்னியிலிருந்து தோன்றியவள், தோன்றிய போதே எல்லா தெய்வீக குணங்களுடனும் பேரழகுடனும் தோன்றினாள். சாதாரண மனிதர்களைப் போன்று சிறு குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவள் அல்ல திரௌபதி.

 

வேத கலாசாரத்தில் மிகவுயர்ந்த பெண்களாக கருதப்படுவோர் ஐவர்: ஸ்ரீராமரின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, கௌதம முனிவரின் மனைவி அகலிகை, இராவணனின் மனைவி மண்டோதரி, மற்றும் பாண்டவர்களின் மனைவி திரௌபதி. திரௌபதி ஐவரின் மனைவியாக இருந்தது தவறு என்றால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்திய பாரத பண்பாட்டில், அவள் நிச்சயம் போற்றப்பட்டிருக்க மாட்டாள். பெண்களால் தினமும் நினைக்கப்பட வேண்டிய பெண்களில் ஒருவளாக வைக்கப்பட்டிருக்க மாட்டாள். ஐவரை மணந்தபோதிலும், திரௌபதி ஒரு பத்தினியே. அஃது எவ்வாறு என்று தெரிந்து கொள்வது அறிவுடையோரின் பணி; அது தவறு என்று ஒதுக்கிவிடுவது அறிவிலிகளின் (முட்டாள்களின்) பணி.

மஹாபாரதம் வழங்கும் விளக்கம்

ஐவருக்கு ஒருத்தியை திருமணம் செய்தல் என்பது நிச்சயம் அசாதாரணமான ஒரு செயல். அத்தகு செயல், பொதுவாக தர்மத்திற்கு விரோதமானதாக கருதப்படுவது உறுதி. அவ்வாறு இருக்கையில், தர்மத்தை போதிக்கும் மஹாபாரதத்தில், ஐந்து முக்கிய கதாபாத்திரங்களின் மனைவியாக ஒருத்தி இருப்பது நிச்சயம் விவாதத்திற்கு உரிய விஷயமே. நாம் நமது குறுகிய அறிவைக் கொண்டு விவாதிப்பதற்குப் பதிலாக, மஹாபாரதத்திலேயே இதுகுறித்து நிகழ்ந்த விவாதத்தினை அறிதல் நலம் தரும்.

 

திரௌபதியின் தந்தையான மன்னர் துருபதரால் தனது மகள் ஐந்து சகோதரர்களுக்கு மனைவியாவதை ஏற்க முடியவில்லை. அவர் மன்னர் யுதிஷ்டிரரிடம் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்: “மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனின் மனைவியை மகளைப் போன்று மதிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளைய சகோதரனின் மனைவியைத் தொடுதல் மகளைத் தொடுவதற்கு சமம். ஒரு மன்னன் பல இராணியரை

மணந்து கொள்ள அனுமதி உள்ளது, ஆனால் பல மன்னர்கள் ஒரு இராணியை மணந்து கொள்வது எங்கும் அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மிகவும் கௌரவமானவரும் தர்மத்தின் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவரும் ஆயிற்றே. நீங்கள் எவ்வாறு இவற்றை மீறலாம்?”

துருபதருக்கு யுதிஷ்டிரர் வழங்கிய பதில்: “நல்லொழுக்கம் மிகவும் சூட்சுமமானது. நான் எனது வாழ்வில் ஒருபோதும் பொய் பேசியதில்லை, எனது மனம் ஒருபோதும் பாவத்தைத் தீண்டாது, நான் என்றுமே தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்டதும் இல்லை. இந்த திருமணத்தில் நான் எந்த பாவத்தையும் உணரவில்லை. கௌதம முனிவரின் குலவழியில் வந்த ஜதிலா என்ற பெண் சப்தரிஷிகளை மணந்தாள். மேலும், பிரசேதி என்னும் பெண் பத்து பிரசேதர்களை மணந்தாள். இந்த உதாரணங்கள் வேதங்களில் உள்ளன. இவை பாவமாக கருதப்படவில்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உயர்ந்த தர்மத்தைக் காப்பதற்காக சில சட்டங்களை மீறலாம். திரௌபதியை நாங்கள் ஐவரும் மணக்க வேண்டும் என்பது உயர்ந்த தர்மமாகவும் அரிதான ஒன்றாகவும் ஏற்கப்படலாம்.”

யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார்.

யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார்.

பாண்டவர்கள் ஐவரும் தமது முற்பிறவியில் தேவர்கள் என்பதை எடுத்துரைத்த வியாஸதேவர், துருபத மன்னருக்கு தெய்வீகப் பார்வையை வழங்கி, பாண்டவர்கள் முந்தைய பிறவிகளில் எப்படி இருந்தனர் என்பதைக் காட்டினார். ஆச்சரியமடைந்த துருபத மன்னர் கூப்பிய கரங்களுடன், “மிகவுயர்ந்த முனிவரே, தங்களுடைய அறிவிற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு எதுவும் இல்லை. என் மனம் இப்போது அமைதியடைந்து விட்டது. மேலுலகத்தில் என்ன முடிவு செய்தார்களோ அது நடந்தே தீரும். விதியின் கைகளில் நாங்கள் கருவிகளே. எனது மகள் ஐந்து சகோதரர்களையும் கணவர்களாக ஏற்றுக் கொள்ளட்டும்,” என்று கூறி அனுமதி வழங்கினார்.

 

கிருஷ்ணரிடம் மிக ஆழமான பக்தியையும் முழுமையான சரணாகதியையும் கொண்ட திரௌபதி.

ஸ்ரீல மத்வாசாரியர் அளிக்கும் விளக்கம்

திரௌபதியின் திருமணம் அசாதாரணமான ஒன்று; அத்தகு திருமணம் பொதுவாக ஏற்கத்தக்கதல்ல என்றாலும், அசாதாரணமான பெண்ணாகிய திரௌபதியைப் பொறுத்த வரையில், அஃது ஏற்கத்தக்கது என்பதை மஹாபாரதத்திலிருந்து அறிகிறோம். மேலும், திரௌபதி என்பவள் ஒருத்தி அல்ல என்றும், ஐந்து இந்திரர்களின் மனைவியர் திரௌபதியில் அம்ச அவதாரமாக உள்ளனர் என்றும் ஸ்ரீல மத்வாசாரியர் தனது மஹாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் (அத்தியாயம் 19, ஸ்லோகம் 155) விளக்கமளித்துள்ளார்.

 

யமராஜரின் மனைவியான சியாமளா தேவி, வாயுவின் மனைவியான பாரதி, இந்திரனின் மனைவியான சசி, இரு அஸ்வினி குமாரர்களின் மனைவியான உஷா ஆகிய நால்வரும் திரௌபதியில் அம்ச அவதாரமாக வந்துள்ளனர். அதனால், யமராஜரின் அம்சமான யுதிஷ்டிரர், வாயுவின் அம்சமான பீமன், இந்திரனின் அம்சமான அர்ஜுனன், அஸ்வினி குமாரர்களின் அம்சங்களான நகுலன், சகாதேவன் ஆகியோருக்கு திரௌபதியை திருமணம் செய்வித்ததில் அதர்மம் ஏதும் இல்லை.

இங்கு மற்றொரு சந்தேகமும் வரலாம்: அஸ்வினி குமாரர்கள் (நகுலனும் சகாதேவனும்) இருவர்கள் ஆயிற்றே, அவர்கள் எவ்வாறு ஒருவரை (உஷா அல்லது திரௌபதியை) மணக்கலாம்? ஸ்ரீல மத்வாசாரியர் இதற்கும் விளக்கமளித்துள்ளார், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம் (அத்தியாயம் 12, ஸ்லோகம் 124): தேவர்களான அஸ்வினி குமாரர்கள் என்றுமே பிரிக்கப்பட முடியாதவர்கள். ஒரு மூக்கிற்கு இரண்டு துவாரங்கள் இருப்பதுபோல, அஸ்வினி குமாரர்கள் என்பது இரு உடல்களில் வசிக்கும் ஓர் ஆத்மாவைக் குறிக்கும். மூக்கிற்கான தேவர்களான இவர்கள் இருவருக்கும் ஒரே மனைவி என்பது மிகவும் சரியே.

திரௌபதியின் அசாதாரணமான குணங்கள்

ஐந்து கணவன்களைப் பெற்ற திரௌபதி, ஒரு கணவனிட மிருந்து அடுத்த கணவனிடம் செல்லும்போது மீண்டும் கன்னித் தன்மையைப் பெறும் வரத்தையும் பெற்றிருந்தாள். அவள் பாண்டவர்களுக்கு மத்தியில் சற்றும் பாரபட்சம் பார்க்காமல் தொண்டு செய்தாள். மிகவும் துன்பமான காலத்திலும் பாண்டவர்களுடன் காடுகளில் வாழ்ந்தாள். எந்தவித சுயநலமும் இல்லாமல் அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் தந்தாள், தேவைப்பட்டபோது அவர்களைச் செயலாற்றவும் தூண்டினாள். துன்பங்களும் ஆபத்துக்களும் வந்த நேரத்தில்கூட அவள் தைரியமாகவும் தீர்மானமாகவும் வாழ்ந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்து தூய பக்தியுடன் வாழ்ந்து வந்தாள்.

திரௌபதியின் கிருஷ்ண பக்தி

கிருஷ்ணரிடம் மிக ஆழமான பக்தியையும் முழுமையான சரணாகதியையும் திரௌபதி கொண்டிருந்தாள். கிருஷ்ணரின் திருநாமத்தை நினைவு கூறுவோர் உடனடியாக அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கையில் தனது முழு வாழ்க்கையையுமே கிருஷ்ணருக்காக அர்ப்பணித்த திரௌபதியை எந்தவொரு பாவமும் தீண்ட இயலாது என்பதை உணர வேண்டும்.

 

திரௌபதியின் வாழ்க்கை துயரங்களும் துன்பங்களும் நிறைந்தது. அவற்றில் மிகவும் கொடுமையானது: துரியோதனனின் ஆணைப்படி குரு வம்சத்தினரின் அரசவைக்கு துச்சாதனனால் இழுத்து வரப்பட்டதாகும். எல்லோர் எதிரிலும் அவளது புடவையை இழுத்து அவளை நிர்வாணமாக்க துச்சாதனன் முயற்சி செய்தான். தன்னைக் காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த உடன், அவள் தனது இரு கைகளையும் உயர்த்தி கிருஷ்ணரிடம் கதறினாள்.

 

“சங்கு, சக்கரம், மற்றும் கதையை திருக்கரங்களில் ஏந்தியவரே! துவாரகா புரியில் வாழ்பவரே! அடியவர்களை ஒரு நாளும் நழுவ விடாதவரே! கோவிந்தரே! செந்தாமரைக் கண்களைக் கொண்டவரே! அடைக்கலம் புகுந்த என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.”

 

ஒருமுறை, கிருஷ்ணரின் கைவிரலில் ரத்தம் வந்ததைக் கண்ட திரௌபதி, தனது புடவையைக் கிழித்து கட்டு போட்டாள். அந்த தூய்மையான அன்பிற்குப் பரிமாற்றமாக,

பெரும் ஆபத்து நேரத்தில் அவளுக்கு மிக நீண்ட புடவையைக் கொடுத்து பகவான் காப்பாற்றினார்.

பெரிதும் மதிக்கப்படும் திரௌபதி

தெய்வீக குணங்களைக் கொண்டிருந்த திரௌபதிக்கு பல பெயர்கள் உள்ளன. யாக வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து தோன்றியதால் யக்ஞசேனி என்றும், பாண்டவர்களை மணந்ததால் பாஞ்சாலி என்றும், மஹாபாரதத்தில் முக்கிய பங்காற்றியதால் மஹாபாரதி என்றும் அழைக்கப்படுகிறாள். மேலும், விதர்ப நாட்டில் பணிப்பெண்ணாக வாழ்ந்த காலத்தில் சைரேந்தி என்றும் அழைக்கப்பட்டாள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், அவள் ஒரு தீவிர கிருஷ்ண பக்தை என்பதாலும் கிருஷ்ணரைப் போன்று கருமை நிறம் கொண்டவள் என்பதாலும், கிருஷ்ணா என்றும் போற்றப்படுகிறாள். இன்றும் அவளை திரௌபதி அம்மன் என்று கோயில் கட்டி மக்கள் வழிபடுகின்றனர்.

திரௌபதியை மதிக்க கற்போம்

பக்திக்கும் கற்பு நெறிக்கும் உதாரணமாக விளங்கிய திரௌபதியை அவளது உயர்ந்த குணங்களுக்காக மதிக்க கற்போம். அவள் கற்புக்கரசி என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தனது கணவனுக்குத் தொண்டு செய்வதில் திரௌபதியின் உதாரணத்தினை அனைத்து பெண்களும் பின்பற்ற வேண்டும். அதே சமயத்தில் பலரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்களுக்கு கணவன் என்பவன் ஒருவனே, பல கணவன்கள் ஏற்கத்தக்கதல்ல என்பதை உணர்ந்து கற்புடன் வாழ வேண்டும்.

திரௌபதியின் திருமணம் அசாதாரணமானது; மிகவுயர்ந்த நபர்களான வியாசர், நாரதர் மட்டுமின்றி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணராலும் அங்கீகரிக்கப்பட்ட அத்திருமணத்தையும் தெய்வப் பிறவியான திரௌபதியையும் குறை கூறுதல் சற்றும் ஏற்கத்தக்கது அல்ல. அவள் அனைவராலும் மதித்து போற்றத்தக்கவள் என்பதை உணர்ந்து நடத்தல் சிறந்தது.

 

திருமதி. கீதா கோவிந்த தாஸி வேலூர் நகரத்தைச் சார்ந்தவர்; கணிப்பொறி வல்லுநராகப் பணியாற்றும் தன் கணவருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.