துரோணரின் மகன் தண்டிக்கப்படுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

 

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஏழாம் அத்தியாயம்

 

வியாஸரின் வேண்டுகோளுக்கு இணங்கிய நாரதர், தனது பிறப்பு மற்றும் தன்னுணர்விற்கான செயல்களை விளக்கியதை சென்ற இதழில் கண்டோம். அவர் அங்கிருந்து விடை பெற்று, தனது வீணையை மீட்டியவாறு பயணத்தைத் தொடர்ந்தார்.

ஆறாம் அத்தியாயத்தின் இறுதி ஸ்லோகத்தில், பரம புருஷ பகவானின் செயல்களைப் புகழ்வதால் ஸ்ரீல நாரத முனிவருக்கு  எல்லா புகழும் வெற்றியும் உண்டாகட்டும் என்றும், பகவானைத் துதிப்பதால் அவர் தாமே மகிழ்ச்சியடைவதுடன் பிரபஞ்சத்திலுள்ள துன்பப்படும் ஆத்மாக்கள் அனைவருக்கும் உற்சாகமூட்டுகிறார் என்றும் சூத கோஸ்வாமி நாரதரைப் புகழ்ந்தார். ஸ்ரீ நாரத முனிவர் சென்ற பிறகு, உன்னத சக்தி வாய்ந்த வியாஸதேவர் என்ன செய்தார் என்ற சௌனகரின் விசாரணைக்கு சூத கோஸ்வாமி ஏழாம் அத்தியாயத்தில் பதிலளிக்கத் தொடங்குகிறார்.

 

வியாஸரின் தீர்க்கதரிசனம்

ஸ்ரீல வியாஸதேவர் சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில் ஸம்யாப்ராஸம் என்னுமிடத்தில் அமர்ந்து நீரைத்தொட்டு புனிதமடைந்து, களங்கமற்ற தன் மனதை தியானத்தில் நிலைநிறுத்தினார். பரவச நிலையை அடைந்த முனிவரால் முழுமுதற் கடவுளையும் அவரது முழுக்கட்டுப்பாட்டில் இருந்த அவரது வெளிப்புற சக்தியையும் காண முடிந்தது. மேலும், உயிர்வாழிகள் தங்களை ஜடவுடலாக எண்ணுவதால் ஆழ்ந்த துன்பத்தில் மூழ்கியிருப்பதையும் கண்டார்.

இந்தத் தவறான எண்ணத்தை (மாயையை) பக்தி யோக முறையால் களைய முடியும். ஆனால் மக்கள் இதைப் பற்றி அறியாதவர்களாக இருப்பதால், ஸ்ரீல வியாஸதேவர் பக்தி யோக முறையை விளக்கும் ஸ்ரீமத் பாகவதம் எனும் பெரும் இலக்கியத்தைத் தொகுத்தார். இந்த அற்புதமான வேத இலக்கியத்தைக் கேட்ட மாத்திரத்தில் பகவான் கிருஷ்ணரின் மீதான அன்பான பக்தித் தொண்டின் உணர்வுகள் இதயத்தில் முளை விடுகிறது; வருத்தம். மாயை, மற்றும் பயத்தின் தீயை அஃது அணைத்து விடுகிறது.

 

திரௌபதி அஸ்வத்தாமனை விடுவிக்குமாறு அர்ஜுனனிடம் வேண்டுதல்.

ஆத்மாராமர்கள்

சௌனகர் சூதரிடம், “சுய திருப்தி கொண்டவராக இருந்த சுகதேவர் ஏன் பாகவதம் கற்கும் சிரமத்தை மேற்கொண்டார்?” என வினவ, அதற்கு சூத கோஸ்வாமி பின்வருமாறு பதில் கூறினார்: “எல்லாவகையான ஆத்மாராமர்களும் (ஆத்மாவில் இன்பம் காண்பவர்களும்) தன்னுணர்வுப் பாதையில் நிலைபெற்றவர்களே; இருப்பினும், அவர்கள் பகவானின் உன்னதமான குணங்களால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள், அவருக்கு கலப்படமற்ற தூய பக்தித் தொண்டைச் செய்ய விரும்புகின்றனர்.”

ஸ்ரீ நாரதரின் கருணையால், ஸ்ரீமத் பாகவதம் எனும் மிகச்சிறந்த காவியத்தை வியாஸதேவரால் கூற முடிந்தது. பிரம்ம-வைவர்த புராணத்தின்படி, ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அவரது தாயின் கருவில் இருந்தபோதே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். அவர் பகவானின் உன்னத செயல்களில் பற்றுதல் கொள்ள வேண்டும் என்பதற்காக, பாகவதத்தின் சாராம்சத்தை அவர் கருவிலிருந்தபோதே ஸ்ரீல வியாஸதேவர் உபதேசித்தார். வியாஸரின் கருணையால் சுகதேவர் அக்கருத்தை கிரகித்துக் கொண்டார். பகவானின் தெய்வீக குணங்கள் கவர்ச்சிமிக்கவையாக இருப்பதால், அவர் (சுகதேவர்) அருவ பிரம்மத்தில் முழுமையாக ஆழ்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, பகவானின் உன்னத உருவத்திற்குச் செய்யும் பக்தியை உறுதியாக ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும் பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு, செயல்கள், மற்றும் முக்தியைப் பற்றியும், பாண்டவர்களின் துறவைப் பற்றியும் சூத கோஸ்வாமி விளக்கத் தொடங்கினார்.

அஸ்வத்தாமனைக் கொல்ல அர்ஜுனன் உறுதியெடுத்தல்

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர், கௌரவர் என இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். இறுதியில், பீமசேனனின் கதாயுதத்தால் தொடைகள் உடைபட்டு துரியோதனன் நிலத்தில் வீழ்ந்துகிடந்த நிலையில், துரோணரின் மகனான அஸ்வத்தாமன் தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து புதல்வர்களின் தலைகளைக் கொய்து, துரியோதனனின் மகிழ்ச்சிக்காக அவற்றை அவனிடம் வெகுமதியாக அளித்தான். ஆனால் திருதராஷ்டிரரின் மகனான துரியோதனன் அந்த வெறுக்கத்தக்க செயலை அங்கீகரிக்கவில்லை.

தன் மகன்கள் கொலை செய்யப்பட்டதை அறிந்த திரௌபதி துக்கம் தாளாமல் பலமாகக் கதறி அழுதாள். தன் அன்பு மனைவியை சாந்தப்படுத்தும் விதமாக அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்: “எனது காண்டீபத்திலிருந்து புறப்படும் அம்புகளால் அஸ்வத்தாமனின் தலையைக் கொய்து உன்னிடம் சேர்த்தபின், உன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பேன். மகன்களின் உடல்களை அடக்கம் செய்தபின் அஸ்வத்தாமனின் வெட்டுண்ட தலைமீது நின்று நீ ஸ்நானம் செய்யும்போது உன் துன்பத்திலிருந்து நிச்சயம் விடுபடுவாய்.”

 

அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரம் ஏவுதல்

தன் வீரமொழிகளில் திரௌபதியை ஆறுதல்படுத்திய அர்ஜுனன் ஆயுதங்கள் நிரம்பிய தன் ரதத்தில் ஏறினான். தனது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்குத் தேரோட்டுவதற்காக பகவான் கிருஷ்ணர் கடிவாளங்களைக் கையில் பிடிக்க, பிராமணரின் மகனைத் தேடி தேர் புறப்பட்டது. வெகு தூரத்தில் அர்ஜுனன் வருவதைக் கண்ட அஸ்வத்தாமன் குதிரைகளைத் துரிதப்படுத்தித் தன் ரதத்தை வெகு வேகமாகச் செலுத்தி தப்பிக்க முயற்சித்தான். ஆயினும், சிறிது நேரத்தில் அவனது குதிரைகள் களைப்படைந்துவிட்டன. தன் இறுதி ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை ஏவுவதைத் தவிர தன் பாதுகாப்புக்கு வேறு வழியில்லை என அவன் கருதினான்.

நீரைத் தொட்டு தூய்மையடைந்த அஸ்வத்தாமன், அந்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினான். (அதைத் திரும்பப்பெறும் வழி அவனுக்குத் தெரியாது.) அதன்பின், மிகவும் பிரகாசமான வெளிச்சம் எல்லா திசைகளிலும் பரவத் தொடங்கியது. அவ்வெளிச்சம் மிகவும் தீவிரமடைய அச்சம் நிறைந்த குரலில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டான், “எனதன்பு பகவானே, நீங்கள் முழுமுதற் கடவுள், தங்களின் பக்தர்களின் இதயங்களில் பயமின்மையை உண்டாக்கவல்லவர். தற்போது எல்லா திசைகளையும் விழுங்கும் அபாயகரமான ஒளி என்னவென்பதை நீங்கள் ஒருவரே அறிவீர். எனக்கு இதனை எடுத்துரைத்து அருள்வீராக.”

அர்ஜுனன் பிரம்மாஸ்திரம் ஏவுதல்

அஸ்வத்தாமன் தனது மரணத்தைத் தவிர்க்கும் பய உணர்வில் விடுத்துள்ள பிரம்மாஸ்திரத்தால் இந்த பயங்கர ஒளி பரவுகிறது. மற்றொரு பிரம்மாஸ்திரமே இந்த தகிக்கும் வெப்பத்தை நிஷ்பலமாக்க முடியும். உன் அஸ்திரத்தால் இதை நீ தோற்கடிக்க வேண்டும்,” என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.

அர்ஜுனன் முதலில் நீரைத் தொட்டு தூய்மையடைந்து, பகவான் கிருஷ்ணரை வலம் வந்து தன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். இரு அஸ்திரங்களின் சக்தி இணைந்தபோது மூவுலகிலுள்ள அனைவரையும் தகிக்கச் செய்தது. எல்லா கிரகங்களும் அழிந்துவிடும் அபாயத்தை உணர்ந்த அர்ஜுனன் பகவானின் விருப்பப்படி உடனடியாக இரு அஸ்திரங்களையும் திரும்பப் பெற்றான். அவனது கண்கள் தாமிர குண்டுகளைப் போல் கோபத்தில் பளபளக்க, துரோணரின் மகனை மிகவும் சாமர்த்தியமாக கைது செய்து விலங்கைக் கட்டுவதுபோல கயிற்றால் பிணைத்தான்.

பாண்டவ கூடாரத்தில் தர்ம சங்கடம்

தனது கைதியை கூடாரத்திற்கு இழுத்துச் செல்ல அர்ஜுனன் முற்பட்டபோது அவனிடம் பகவான் கூறினார்: “தூக்கத்திலிருந்த அப்பாவிக் குழந்தைகளைக் கொன்ற இந்த பிராமண பந்துவிடம் கருணைகாட்டி விடுவித்துவிடக் கூடாது. இவன் போர் விதிகளை மீறி கொலை செய்தவன். இத்தகைய கொடூரமான இழிவான நபரைக் கொல்வது உகந்த செயலே. அஸ்வத்தாமனைக் கொல்வது அவனது நன்மைக்காகவே. இவனை தண்டிக்காமல் விட்டால், இவன் தான் செய்த பாவங்களுக்காக நரகத்தில் துன்புற நேரிடும். திரௌபதிக்கு அளித்த வாக்குறதியை நினைவில் கொண்டு, உன் குடும்பத்தினரைக் கொன்ற இக்கொலைகாரனைக் கொன்றுவிடு.”

கிருஷ்ணர் அர்ஜுனனை இவ்வாறு சோதித்தாலும், அர்ஜுனன் அஸ்வத்தாமனைக் கொல்ல விரும்பவில்லை. கூடாரத்தை அடைந்ததும் தன் மகன்களின் இழப்பை எண்ணி வருந்திக் கொண்டிருந்த திரௌபதியின் முன் அஸ்வத்தாமனை நிறுத்தினான். துரோணரின் கட்டப்பட்ட மகனைக் கண்ட திரௌபதி, குற்றமற்ற நடத்தையும் நல்ல இதயமும் கொண்ட பெண்மணி என்பதால், பிராமணர்களக்குத் தரவேண்டிய மரியாதையை அவனுக்கு அளித்தாள். தன் கணவன்மார்களின் குருதேவரது மகன் ஒரு விலங்கைப் போல பிணைக்கப்பட்டிருந்ததை அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

திரௌபதி அர்ஜுனனிடம் வேண்டினாள், “தயவுசெய்து இவரை விடுவித்துவிடுங்கள். இவர் ஒரு பிராமணர் என்பதால் நமக்கு ஆன்மீக குருவாகக் கருதப்பட வேண்டியவர். இவனின் தாயான கிருபி, தனக்கு ஒரு மகன் இருப்பதால், கணவருடன் உடன்கட்டை ஏறவில்லை. அவளும் என்னைப் போல் மகனை இழந்து வாழ்நாள் முழுவதும் வருந்துவதை நான் விரும்பவில்லை. சத்திரியர் பிராமணர்களை அவமதித்து கோபமூட்டினால், அக்கோபமானது அவர்களின் குடும்பம் முழுவதையும் எரித்துவிடும்.”

திரௌபதியின் கூற்றை யுதிஷ்டிரரும் முற்றிலுமாக ஆமோதித்தார். நகுலன், சகாதேவன், ஸாத்யகி, பகவான் கிருஷ்ணர், அர்ஜுனன், பெண்கள், மற்றும் அங்கிருந்த அனைவருமே அதனை ஏற்றனர். ஆயினும், கடுமையாக ஆட்சேபித்த பீமசேனர், அஸ்வத்தாமன் உடனடியாகக் கொல்லப்பட வேண்டும் என்றார். அவ்வாறு செய்யவும் அவர் தயாரான போது, திரௌபதி அவரைத் தடுக்க முயற்சித்தாள்.

கிருஷ்ணர் வழங்கிய தீர்வு

அச்சமயத்தில் குறுக்கிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் இருகைகளை வெளிப்படுத்தி நான்கு கரமுடையவரானார். குழப்பத்துடன் நின்றிருந்த அர்ஜுனனின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தவாறு பகவான் கிருஷ்ணர் அறிவித்தார்: “ஒரு பிராமண பந்துவின் உடலைக் காயப்படுத்தக் கூடாது. ஆனால் அவன் ஓர் அக்கிரமக்காரனாக இருந்தால் அவனைக் கொல்ல வேண்டும். மேலும், அர்ஜுனா, நீ திரௌபதிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதே சமயம் சாஸ்திரத்தின் இக்கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பீமனையும் என்னையும்கூட திருப்திப்படுத்தும் வகையில் நீ செயல்பட வேண்டும்.”

கிருஷ்ணர் இருபொருளில் பேசினாலும், அவரது நோக்கத்தை அர்ஜுனன் புரிந்து கொண்டான். தனது வாளைக் கொண்டு அஸ்வத்தாமனின் தலையிலிருந்த முடியையும் மணியையும் வெட்டியெடுத்து விட்டான். தன் தரமற்ற செயலால் ஏற்கனவே ஒளியை இழந்திருந்த துரோணரின் மகன், மணியையும் இழந்து பெருமளவு பலம் குன்றினான். பின்னர், அஸ்வத்தாமன் விடுவிக்கப்பட்டு பாண்டவ கூடாரத்திலிருந்து விரட்டப்பட்டான். பெரும் வீரனான அவனுக்கு இந்த அவமானம் மரணத்தைவிட மோசமானதாகும்.

ஏழாம் அத்தியாத்தின் பகுதிகள்

(1) வியாஸரின் தீர்க்கதரிசனம் (1-7)

சௌனகரின் விசாரணை

பகவானும் அவரது சக்திகளும்

அனர்த்தங்களை களைவதற்கான வழி

 

(2) ஆத்மாராமா (8-11)

தன்னில் திருப்தியடைந்தவர்கள்

முக்தி பெற்றவர்களையும் கவர்வது எது?

 

(3) அஸ்வத்தாமனைக் கைது செய்தல் (12-40)

அஸ்வத்தாமனின் குற்றம்

அர்ஜுனனின் சபதம்

பிரம்மாஸ்திரம்

அர்ஜுனனுக்கு பரீட்சை

 

(4) அஸ்வத்தாமன் பெற்ற தண்டனை (41-50)

திரௌபதியின் கருணை

பீமனின் ஆவேசம்

அர்ஜுனனின் நீதி

 

(தொடரும்)

அடுத்த இதழில்: எட்டாம் அத்தியாயம்

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives