ஏகாதசி, விரதங்களில் முதன்மையானது

Must read

ஏகாதசி தோன்றிய கதை

(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)

கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.

அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்து, பற்பல ஆயூதங்களுடனும் அஸ்திரங்களுடனும் ஓர் அழகான மங்களகரமான மகள் தோன்றினாள். அசுரனுடன் தொடர்ந்து போரிட்ட தேவி, இறுதியில் அவனது தலையை வெட்டி வீழ்த்தினாள்.

பகவான் விஷ்ணு துயிலெழுந்த போது, முராசுரன் மரணமடைந்திருப் பதையும், தன்முன் கூப்பிய கரங்களுடன் இருக்கும் தேவியையும் கண்டு, “நீ யார்?” என்று வினவினார். “தங்கள் உடலிலிருந்து தோன்றியவள் நான், உறக்கத்திலிருந்த தங்களை இந்த அசுரன் கொல்ல முயன்றதால், நான் இவனைக் கொன்று விட்டேன்,” என்று அவள் பதிலளித்தாள். மகிழ்ச்சியுற்ற பகவான், “என்னுடைய ஆன்மீக சக்தியான நீ, ஏகாதசி (பதினொன்றாவது) திதியில் தோன்றியதால், ஏகாதசி என்று அழைக்கப்படுவாய். நீ தோன்றிய நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நிலையை அடைவர்,” என்று வரம் நல்கினார். பின்னர், சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி, ஒவ்வொரு மாதத்திலும் இருமுறை வெவ்வேறு ரூபங்களில் தோன்றினாள்.

 

வைகுண்ட வாசலில் எழுந்தருளும் நம்பெருமாள். இடம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது மற்றெல்லா ஏகாதசி விரதத்திற்கும் சமமானது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருத்தல் என்பது வைஷ்ணவ மரபில் அவசியமான ஒன்றாகும்.

சமஸ்கிருதத்தின் மார்கஷீர்ஷ மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி, மோக்ஷத ஏகாதசி என்று பொதுவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மார்கழி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசியே மோக்ஷத ஏகாதசி எனப்படுகிறது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சமஸ்கிருத மாதங்களுக்கும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மாதங்களுக்கும் சற்று வேறுபாடு இருப்பதால், சந்திர நாள்காட்டியின் மோக்ஷத ஏகாதசியும் சூரிய நாள்காட்டியின் மோக்ஷத ஏகாதசியும் சில நேரங்களில் மாறி வருவது வழக்கம். இந்த முறை அவை இரண்டும் ஒரே நாளில் (டிசம்பர் 17) வருவது சிறப்பே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தது, மோக்ஷத ஏகாதசியன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வைகுண்ட வாசல்

வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருப்பதி பாலாஜி கோயில் உட்பட பல்வேறு வைஷ்ணவ திருத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அன்றைய தினத்தில் வைகுண்ட துவாரம் திறக்கப்படுவதாக ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் கூறுகின்றது.

வைகுண்ட வாசல், சில நேரங்களில் “ஸ்வர்க வாசல்” என்று அழைக்கப்படுவதுண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. முழுமுதற் கடவுளான பகவான் நாராயணர் வீற்றிருக்கும் இடம் வைகுண்டம்; அதாவது, கவலைகளற்ற இடம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்ட பிராப்தி அடைந்தவர்கள், பிறப்பும் இறப்பும் கொண்ட இந்த பௌதிக உலகத்திற்குத் திரும்புவதில்லை. நாம் வாழும் பூலோகத்திற்குச் சற்று மேலே தேவர்கள் வசிக்கும் இடம் ஸ்வர்கம் எனப்படுகிறது. ஸ்வர்க லோகமும் இப்பௌதிக உலகைச் சார்ந்ததே என்பதால், ஸ்வர்க லோகத்தை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்க வேண்டியது நிச்சயம். எனவே, வைகுண்ட வாசல் என்பதை ஸ்வர்க வாசல் என்று அழைப்பது பொருத்தமற்றதாகும்.

ஏகாதசி விரதம்

ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உள்ளன: அமாவாசைக்குப் பின் பதினொன்றாவது நாள், பௌர்ணமிக்குப் பின் பதினொன்றாவது நாள். ஏகாதசி என்னும் சொல்லுக்கு, “பதினொன்றாவது நாள்” என்று பொருள். ஏகாதசி என்பது அனைத்து பக்தர்களும் விரதம் அனுசரிக்க வேண்டிய திருநாளாகும். இதில் தவறுவது மிகப்பெரிய குற்றம். ஏகாதசியன்று கொடூரமான பாவங்கள் தானியங்களில் தங்குவதால், உன்னத நன்மையைப் பெற விரும்புவோர், அன்றைய நாளில் தானியங்களைத் தவிர்த்து, விரதம் அனுசரித்தல் அவசியம்.

லௌகீக வாழ்வில் இன்பமடைவதற்கும் பொருள் சேகரிப்பதற்காகவும் ஏகாதசியைப் பின்பற்றுதல் கூடாது. ஏகாதசி விரதமானது முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹரியைத் திருப்தி செய்வதற்காக மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். ஏகாதசி விரதத்தை அனுசரிப்பதால் வரக்கூடிய பல்வேறு பௌதிக நன்மைகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபோதிலும், இதன் முக்கியமான பலன், முழுமுதற் கடவுளின் மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொள்வதே என்பதை நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம்.

நூறு பிறவிகளில் சேர்ந்த பாவங்கள் ஒருமுறை ஏகாதசியை அனுசரிப்பதால் விலகிவிடும். மேலும், ஏகாதசி திருநாளில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றி (குறிப்பாக, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் பகவத் கீதையிலிருந்து) கேட்பவர்கள், மிகவுயர்ந்த பலனை அடைவர். பாம்புகளில் அனந்தரும், பறவைகளில் கருடனும், மரங்களில் ஆல மரமும், இலைகளில் துளசி இலையும் சிறப்பானதாகத் திகழ்வதைப் போன்று, விரதங்களில் ஏகாதசி விரதமே மிகச்சிறந்ததாகும்.

விரதம் அனுசரிக்கும் முறை

(ஸ்ரீபாத் பக்தி விகாஸ ஸ்வாமி அருளிய “பக்தி யோகம்–ஓர் அறிமுகம்” என்னும் புத்தகத்திலிருந்து)

ஸ்ரீல பிரபுபாதர் சாஸ்திரங்களின் பரிந்துரைப்படி, தானியங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், பயிறு வகைகள் ஆகியவற்றை உண்ணாமல் எளிய முறையில் விரதம் இருந்தார். சில பக்தர்கள் ஏகாதசியன்று பழங்கள் மட்டும் உண்பர், சிலர் நீர் மட்டும் பருகுவர், சிலர் நீர்கூட அருந்த மாட்டார்கள். (இதற்கு நிர்ஜல விரதம் என்று பெயர்)

அனைத்து பக்தர்களும் பின்வரும் உணவுப் பொருள்களை ஏகாதசியன்று அறவே தவிர்க்க வேண்டும்: எல்லா விதமான தானியங்கள், பருப்பு, பயிறு வகைகள், பீன்ஸ் போன்ற காய்கள், கடுகு, இவற்றிலிருந்து தயாரித்தவை (கோதுமை மாவு, கடுகு எண்ணெய், இத்யாதி), மற்றும் இவை அடங்கிய உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பொடி செய்யப்பட்ட நறுமணச் சரக்குப் பொருள்களைப் பார்த்து வாங்கவும். அவற்றில் மாவு கலந்திருந்தால் ஏகாதசியன்று பயன்படுத்தக் கூடாது.

ஏகாதசியன்று சவரம் செய்து கொள்வதும் நகம் வெட்டுவதையும் தவிர்த்தல் அவசியம்.

ஏகாதசி விரதமானது, மறுநாள் துவாதசி அன்று முடிக்கப்படுகிறது. தானியங்களால் தயார் செய்த பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் விரதம் முடிக்கப்பட வேண்டும். ஏகாதசி நாள்களையும் விரதம் முடிக்க வேண்டிய நேரத்தையும் அறிய, கௌடீய வைஷ்ணவ நாள்காட்டியைப் பார்க்கவும் (ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம்). இஸ்கானில் பயன்படுத்தப்படும் வைஷ்ணவ நாள்காட்டியை மட்டும் உபயோகிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஏகாதசி நாள்களும் பிற விசேஷ நாள்களும் மற்ற சம்பிரதாய பண்டிதர்களின் கணிப்பில் சற்று மாறுபடலாம். ஏகாதசி விரதத்தின் உண்மையான குறிக்கோள், வெறுமனே உண்ணாமலிருப்பது அல்ல; கோவிந்தனைப் பற்றிக் கேட்கவும் சொல்லவும் மிகுந்த நேரம் ஒதுக்குவதே. ஏகாதசியன்று போதுமான நேரமுடைய பக்தர்கள் இருபத்தைந்து அல்லது அதற்கு மேற்பட்ட சுற்று ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டுமென்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives