மின் தட்டுப்பாடு, தீர்வு உண்டா?

Must read

வழங்கியவர்: ஸவ்யஸாசி தாஸ்

மின் பற்றாக்குறை–தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. மற்ற மாநிலங்களிடமிருந்து தினசரி பல கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும்போதிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னை உட்பட அனைத்து நகரங்களையும் கிராமங்களையும் மின் பற்றாக்குறை பாடாய்ப்படுத்துகிறது.

தினசரி அதிகரித்துவரும் நம்முடைய மின் தேவையை சமாளிக்க, அனல் மின் சக்தியை நாம் வெகுவாக நம்பியுள்ளோம், தமிழ்நாட்டில் பெறப்படும் 75 சதவிகித மின்சக்தி அனல் மின்நிலையத்திலிருந்து பெறப்படுவதே. புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்களின் மூலம் நமது தேவையை எட்ட முடியும் என்றும், தற்போதைய சூழ்நிலை நிச்சயம் முன்னேற்றமடையும் என்றும், காற்றாலை போன்ற வசதிகளின் மூலமும் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான திறன் தமிழகத்தில் உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எப்போது மின் பற்றாக்குறை தீரும்? எப்போது தொழிற்சாலைகள் இரவும் பகலும் உழைத்து நமது வர்த்தகத்தை பெருக்கும்? எப்போது நமது எண்ணற்ற வீட்டு உபயோகப் பொருட்களும் இயந்திரங்களும் நமக்கு வசதியை ஏற்படுத்தும்? என்று நாம் நமது கைகளைக் கட்டிக்கொண்டு காத்துக் கொண்டுள்ளோம்.

இதுவே, தமிழகத்தின் மிகப்பெரிய கனவு. 1960களில் இவ்வாறு கனவு கண்ட அமெரிக்கர்களின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? தயவுசெய்து தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.

உலகையே மிரட்டும் பிரச்சனை

தமிழ்நாடு மட்டுமின்றி மொத்த இந்தியாவும், ஏன் மொத்த உலகமுமே இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வழங்கப்படாதது ஏன்? ஏனெனில், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அச்சமூட்டும் வகையில் இருப்பதாலும், இதற்கான தீர்வு யாருக்கும் புலப்படவில்லை என்பதாலும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழிமுறை, நெருப்புக் கோழி தனது பகைவனைக் கண்டதும் தலையை மண்ணில் புதைத்துக் கொள்வதைப் போல, நெருக்கடியைப் பற்றி பேசாமல் இருப்பதே.

அமெரிக்க நாட்டிலுள்ள சராசரி குடிமக்கள்கூட இந்த நெருக்கடியையும் இதனால் ஏற்படக்கூடிய விளைவு களையும் பற்றி அறியாத நிலையில் இருக்கும்போது, சராசரி இந்தியனைப் பற்றி என்ன சொல்வது?

“நம் நாட்டு மக்களில், ஐம்பதில் ஒருவருக்குக்கூட நாம் எதிர்கொள்ளவிருக்கும் மிகமுக்கிய பிரச்சனையைப் பற்றி ஏதும் அறியாமல் உள்ளனர்.” –ரோஸ்கோ பர்ட்லெட் (அமெரிக்க விஞ்ஞானி)

“(பெட்ரோல் தீர்ந்த பின்பு) நம்மால் தற்போது யூகித்துப் பார்க்க முடியாத ஒரு புதிய சூழ்நிலையைக் கொண்ட உலகினுள் நாம் நுழைய உள்ளோம்–அந்நாள் வெகுதொலைவில் இல்லை” –கோலின் சம்பேல் (பெட்ரோலிய ஆராய்ச்சி நிபுணர், எக்ஸோன், மொபில், ஷெல் கம்பெனிகளின் ஆலோசகர்)

மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் எரிசக்தி பிரச்சனை

சுமார் 150 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய தொழிற்சாலை நாகரிகம், கட்டுக்கடங்காத அதன் பசியைத் தீர்ப்பதற்கான வளங்கள் இல்லாததால், தற்போது இறங்குமுகத்தை அடைந்துள்ளது. பல இலட்சக்கணக்கான வருடங்களாக இயற்கையால் உருவாக்கப்பட்ட வளங்கள் அனைத்தையும், இன்றைய சமுதாயம் 150 ஆண்டுகளில் ஏறக்குறைய அழித்துவிட்டது.

175 பேர் கொண்ட அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பெட்ரோலிய கழகம், 2007ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் உலகிலுள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் விடுத்த அறிவிப்பில், 2015ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், மற்றும் எரிவாயுவின் பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெட்ரோலிய உலகத்தின் இறுதி நாள்களை நாம் எண்ணிக் கொண்டுள்ளோம்.” –மைக் பவ்லின், 1999 (அர்கோ நிறுவனத்தின் தலைவர்)

தற்போதைய தொழிற்சாலை நாகரிகத்தில், எண்ணெய் 33 சதவிகிதமும், நிலக்கரி 27 சதவிகிதமும், எரிவாயு 21 சதவிகிதமும் பங்களிக்கின்றன. இம்மூன்றுமே ஒருமுறை தீர்ந்துவிட்டால் மீண்டும் உற்பத்தி செய்ய முடியாதவை.

1950இல் கிங் ஹுப்பர்ட் என்னும் பெட்ரோலிய ஆராய்ச்சியாளர், பெட்ரோலிய பொருள்களின் உற்பத்தி 1970களில் மிகவுயர்ந்த நிலையை எட்டும் என்றும், அதன்பின்னர் படிப்படியாகக் குறைந்து அழிந்துவிடும் என்றும் கூறினார். அவர் கூறியது உலகெங்கிலும் நிறைவேறி வருவதை ஆராய்ச்சியாளர்கள் யாரும் மறுப்பதற்கில்லை.

நிலக்கரியைப் பொறுத்தவரையில், அனைத்து எரிபொருள்களிலும் மிகவும் மோசமானது என்று அறியப்படுகிறது. 43 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்ஸைடு இதிலிருந்து வெளிவருகிறது. பெட்ரோலியத்தைக் காட்டிலும், நிலக்கரி அதிகளவில் இருப்பினும், சுற்றுப்புற சூழல் காரணமாக அது குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. –EIA எனப்படும் எரிபொருள் தகவல் மையத்தின் கூற்று.

அதிகரித்து வரும் எரிசக்தி தேவை

உலகளவில் எரிசக்தியின் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் இரண்டு சதவிகித அளவில் அதிகரித்து வருகிறது. கடைசி இருபது ஆண்டுகளில் எரிசக்தியில் பாதி அளவினை தொழிற்சாலைகள் பயன்படுத்தியுள்ளன என்பது அதிர்ச்சிதரும் தகவல். உலக மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் உள்ள அமெரிக்கர்கள், உலகின் எரிசக்தியில் 25 சதவிகிதத்தை பயன்படுத்துகின்றனர்.

உலக மக்கள் தொகையில் 37 சதவிகித மக்களைக் கொண்ட இந்தியாவும் சீனாவும் தற்போது மேற்கத்திய நாடுகளைப் போன்று வாழ்வதற்கு முயற்சிப்பதால், இவர்களின் தேவை ஆண்டுதோறும் 5 முதல் 6 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

எனவே, எப்படிப் பார்த்தாலும் இயற்கை எரிபொருள்கள் கூடிய விரைவில் தீர்ந்துவிடும்.

ஆனால், இயற்கை எரிபொருள்கள் தீர்ந்துபோவதற்கு முன்பு, நிரந்தரமான மாற்று எரிசக்தியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிடுவர் என்று ஒருவர் வாதிடலாம்.

மாற்று எரிசக்தியின் நிலை

தற்போதைய உலகில் மாற்று எரிசக்திகள் 13 சதவிகிதம் மட்டுமே பயன் தருகின்றன என்றும், அடுத்த இருபது வருடங்களுக்கு இந்நிலையில் மாற்றம் இருக்காது என்றும் எரிபொருள் தகவல் மையம் (EIA) தெரிவித்துள்ளது. அதிக முதலீடு, விலையுயர்ந்த இயந்திரங்கள், தொழில்நுட்ப சவால்கள் போன்றவை இதற்கு காரணங்களாக அமைகின்றன. மேலும், இவற்றிலிருந்து நாம் பெறும் உற்பத்தியை விட செலவு அதிகமாக இருப்பது கவலையைத் தரும் ஒன்றாகும்.

தற்போது குறைவான அளவில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் அணுசக்தி நமக்கு கை கொடுக்கும் என்று பேசப்பட்டு வந்தாலும், எரிபொருள் தகவல் மையத்தின் கூற்றுப்படி, இயற்கையின் சீற்றங்கள், தீவிரவாதிகள், கழிவுப் பொருள்கள் முதலிய பிரச்சனைகளால் அணுசக்தியின் அளவு கணிசமாகக் குறையுமேயொழிய அதிகரிக்க வாய்ப்பில்லை.

அழிவை எதிர்நோக்கும் மின்சக்தி

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளால் மின்சக்தி அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. மற்ற எரிசக்திகளைக் காட்டிலும் மின்சக்தியின் உபயோகம் உலகளவில் இரண்டு மடங்கும், இந்தியாவில் மூன்று மடங்கும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்சக்தி என்பது, தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய நாகரிகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகெங்கிலும் பல்வேறு எரிசக்திகளைப் பெறுவதற்காக சுமார் 800,00,00,000 கோடி ரூபாய் செலவிட வேண்டும் என்றும், அதில் 60 சதவிகிதம் மின்சக்திக்காக என்றும் சர்வதேச அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. அமெரிக்கா உட்பட கடனில் சிக்கித் தவிக்கும் அனைத்து நாடுகளும் இதனை மாபெரும் சவாலாக கருதுகின்றன. இந்தியாவினால் இச்சவாலை சமாளிக்க முடியுமா? எவ்வளவு பணத்தை நம்மால் இதில் முதலீடு செய்ய முடியும்?

மின் தட்டுப்பாடு என்பது தொழிற்சாலை நாகரிகத்தில் எதிர்பார்க் கப்பட்ட ஒன்று என்று பல்வேறு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எவ்வளவு தான் மின் உற்பத்தியை அதிகரித்தாலும், மின்சக்தியின் தேவை நிச்சயம் அதைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

தீர்வு என்ன?

உலக மக்கள் அனைவரின் தேவைக்கும் தகுந்த அளவில் மின்சக்தி உள்ளது, ஆனால் அவர்களின் பேராசைக்கு ஏற்ற அளவில் இல்லை!

மின்சக்தியை செலவிடுவதில் பித்துப்பிடித்து அலையும் தற்போதைய சமுதாயம், தன்னுணர்வை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினால் இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு ஏற்படும். இல்லையெனில், எவ்வளவுதான் நாம் முயற்சி செய்தாலும், பிரச்சனை தற்காலிகமாக விலகலாம்; ஆனால் நிச்சயம் மீண்டும் வரும்.

உயிர்வாழிகள் ஜடத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்னும் அறிவை மக்களிடம் புகட்ட வேண்டும், கல்வி மற்றும் கலாச்சார கூடங்களில் இந்த அறிவினைப் புகட்டினால், நமது சமுதாயத்தின் நிலை நிச்சயம் மாற்றம் பெறும், சமுதாயம் தன்னையுணர்ந்த சமுதாயமாக மாறும். ஜடப் பொருள்களின்மீது தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி அடக்கி ஆள்வதற்கான எண்ணம் மக்களிடமிருந்து விலகும். இன்றைய தொழிற்சாலை நாகரிகத்தில் அத்தகு எண்ணம் வேரூன்றியுள்ளதால், சுற்றுப்புற சூழ்நிலை குறித்த பல்வேறு பிரச்சனைகள் மனித சமுதாயத்தை பாதிக்கின்றன.

“நவீன நாகரிகத்தின் அடிப்படைக் கொள்கையே தவறாக உள்ளது. பெயரளவில் முன்னேறியிருக்கும் அறிஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே, “நான் இந்த உடல்” என்று எண்ணுகின்றனர். எனவே, அடிப்படைக் கொள்கையே தவறாக இருப்பதால், இவர்களின் நாகரிக முன்னேற்றம் தவறான பாதையில் உள்ளது.” –தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்

காமோபபோக-பரமா ஏதாவத் இதி நிஷ்சிதா:

“மனித நாகரிகத்தின் முக்கியத் தேவை புலன்களைத் திருப்தி செய்வதே என்று அவர்கள் (அசுரர்கள்) நம்புகின்றனர்.” (பகவத் கீதை 16.11)

நான் யார் என்பதை அறியாதவர்களும், தங்களைத் தவறாகப் புரிந்துகொள்பவர்களும் புலனின்பத்தின் பாதையிலேயே ஈடுபடுவர் என்பதை இப்பதம் விளக்குகின்றது. உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே காரணம்.

இவ்வுலகில் இயற்கையுடன் ஒத்து வாழ்ந்த நமது முன்னோர்கள் பல இலட்சம் வருடங்களாக எதிர்கொள்ளாத பிரச்சனைகளை, இயற்கைக்கு எதிரான, இயற்கையை சுரண்டக்கூடிய நவீன தொழிற்சாலைகளின் காரணத்தினால் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. செயற்கையான ஆடம்பர வாழ்வை நமக்கு வழங்கும் இத்தொழிற்சாலைகளால், நமது அமைதியான வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது என்பதை சற்றேனும் சிந்திக்கத் தெரிந்த எவரும் புரிந்துகொள்ள முடியும்.

தொழிற்சாலையின் தாக்கம் அதிகம் இல்லாமல், இயற்கையுடன் இணைந்து எளிமையாகவும் இனிமையாகவும் மகிழ்வாகவும் வாழக்கூடிய எண்ணற்றோர் இன்றும் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, எவ்வித அடிப்படைக் காரணமும் இன்றி, கிராம வாழ்க்கை பின்தங்கிய வாழ்க்கை என்னும் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் இலாபம் பெறத் துடிக்கும் நகரத்து வியாபாரிகளின் பிரசாரத்தினால், கிராம வாசிகளும் பேராசையை வளர்த்துக் கொண்டு, அமைதியான கிராம வாழ்விலிருந்து நரகம் போன்ற நகர வாழ்விற்கு மாறிவருகின்றனர்.

நகரத்தில் வசிக்கும் சராசரி மனிதனின் மின்தேவை கிராமத்தில் வசிக்கும் சராசரி மனிதனின் மின்தேவையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு அறியலாம். நகர மயமாக்கம் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் எளிமையாக வாழ்ந்து உயர்ந்த சிந்தனைகளுடன் திகழ வேண்டும். இதுவே இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு.

எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்

“எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை” என்னும் கொள்கையுடன் சமுதாயத்தை வடிவமைக்க வேண்டும் என்று இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். தனது சீடர்களைப் பண்ணை நிலங்கள் அமைத்து, தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக உலகம் முழுவதும் இருந்த மக்கள் வாழ்ந்ததுபோல, எளிமையான வாழ்க்கையை வாழுமாறு அவர் வழிநடத்தினார். மக்கள் தங்களது வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிலத்திலிருந்தும் பசுக்களிடமிருந்தும் பெற்று, தங்களது நேரத்தையும் சக்தியையும் சேமித்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று பகவானின் திருநாமத்தை உச்சரித்து, ஆன்மீக இலக்கை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் அடையக்கூடிய ஆனந்தத்தினால், ஒருவன் செயற்கையான ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி, மனித வாழ்வின் பக்குவநிலையான இறையன்பையும் அடைய முடியும்.

அத்தகைய சமுதாயத்தில், மின் பற்றாக்குறை உட்பட எந்தவொரு செயற்கையான பிரச்சனைக்கும் இடமில்லை. மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து இறுதியில் இறைவனை அடைய முடியும்.

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives