வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனை–எப்போதும் ஏதாவதொரு பிரச்சனை இருந்து கொண்டே உள்ளது–தற்போது இருப்பதோ மின்சாரப் பிரச்சனை. இது வழக்கத்திற்கு மாறாக நீடித்து வருவது அனைத்து தரப்பினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குத் தீர்வு உண்டா என்பது குறித்து, திரு. ஸவ்யஸாசி தாஸ் அவர்கள், பகவத் தரிசனத்தின் 2011, ஜுலை மாத இதழில் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார். மக்கள் மின்சாரத்தை நம்பி வாழும் வாழ்க்கை முறையிலிருந்து மாற்று வழியைத் தேட வேண்டும் என்று அவர் அக்கட்டுரையில் விவரித்திருந்தார்.

தற்போது அதே மின்சாரப் பிரச்சனையினை மாற்று கோணத்தில் அணுகும் முயற்சியே இக்கட்டுரை.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம், எட்டு மணி நேரம்–இவற்றைக் கடந்து எங்கோ சென்று விட்டது–மின்சாரமின்றி தமிழக மக்கள் தவிக்கும் நேரம். மின் தட்டுப்பாட்டினைப் போக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை, ஆனால் மின் தேவையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

காரணம் தேடலாம்

எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வினைத் தேடுவதற்கு முன்பாக காரணத்தினைத் தேடுவது நன்று. புதிய மின்திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை, அனல் மின் நிலையங்கள் வேண்டிய மின்சாரத்தினை உற்பத்தி செய்யவில்லை, காற்றாலைகள் பொய்த்துவிட்டன என பல்வேறு காரணங்களை அரசியல் தலைவர்களும் பொறியியல் வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கின்றனர். எல்லா காரணங்களுக்கும் மேலாக முக்கிய காரணமாகத் திகழ்வது மின்தேவை அதிகரித்து விட்டதே என்பதை அனைவரும் அறிவர்.

மின்தேவை அதிகரிப்பதற்கான காரணம் என்ன? மின்தேவையைக் குறைப்பதோ மின்தேவைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதோ சாத்தியமா? நிச்சயம் சாத்தியமல்ல என்பதே உடனடி பதில். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் கிடையாது. நகரங்களில் மின்சாரம் இருந்தபோதிலும், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன அறைகள், மிக்ஸி, கிரைண்டர் போன்று மின்சாரத்தை அதிக அளவில் இழுக்கக்கூடிய ஆடம்பரப் பொருட்கள் கிடையாது. ஆனால் இன்றோ அவையனைத்தும் பெரும்பாலான வீடுகளை அபகரித்துள்ளன. ஒரு காலக் கட்டத்தில் இல்லாமல் இருந்தவை இன்று அத்தியாவசியத் தேவையாகி விட்டன. ஒரு காலக் கட்டத்தில் எதனை வீண் செலவு என்று மக்கள் நினைத்தனரோ, அதனை இன்று முக்கிய செலவாக நினைக்கின்றனர். இதனால் நாட்டின் மின்தேவை பல மடங்கு உயர்ந்து விட்டது, தொடர்ந்து மேலும் உயர்வு பெறும்ஶீஇதில் சந்தேகம் ஏதுமில்லை.

வசதிகளைப் பெறுவதற்கான பேராசை

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மின்சாரம் ஏதுமின்றி வாழ்ந்து வந்த மக்கள் தற்போது மின்சாரமின்றி சில நிமிடங்கள்கூட வாழத் திணறுகின்றனர். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி இல்லாமல் வாழ்ந்த மக்கள், இன்று ஏதேனும் ஒரு தொலைக்காட்சித் தொடரை (சீரியலை) சில நிமிடங்கள் பார்க்க முடியாமல் போய்விட்டால் திணறுகின்றனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அம்மிக்கல், ஆட்டுக்கல் கொண்டு இட்லிமாவு அரைத்தவர்கள், இன்று கிரைண்டர் சுற்றாவிடில் இட்லி இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு செல்போன் இல்லாமல் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது ஏதேனும் ஓரிடத்தில் பத்து நிமிடத்திற்கு சிக்னல் இல்லாவிடில் திணறுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், சொகுசான வாழ்க்கையை நோக்கிய மனிதனின் தொடர் ஏக்கம், ஒவ்வொரு நாளும் அவனுக்கு புதிது புதிதாக பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்துள்ளது.

சொகுசான வாழ்க்கை என்பது வெறும் மாயையே. வசதியான வாழ்க்கையைப் பெற வேண்டி கடினமாக உழைக்கும் மனிதன், சாதாரண நிம்மதியான வாழ்க்கையையும் இழந்துவிடுகிறான் என்பதை அறிஞர்கள் கண்கூடாகக் காண முடியும். ஆனால் அறிவிலிகளோ அதனைக் காண இயலாமல், வசதிகளை அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து முயல்கின்றனர். அவர்கள் அடையும் வசதிகள் அனைத்தும், “வசதிகள்” என்று அவர்கள் மனதில் கற்பனை செய்யப்படுபவையே அன்றி, உண்மையான வசதிகள் அல்ல. அத்தகைய வசதிகளைப் பெறுவதற்கான பேராசை இருக்கும்வரை, மின்தேவை என்றும் அதிகரித்துக் கொண்டே செல்லும். அனைத்திற்கும் எல்லை உண்டு, ஆசைக்கு எல்லையே இல்லை. அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று நினைப்பது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று.

ஒரு காலக் கட்டத்தில் எதனை வீண் செலவு என்று மக்கள் நினைத்தனரோ, அதனை இன்று முக்கிய செலவாக நினைக்கின்றனர்.

மின்சாரத்தின் வருங்காலம்

கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கி விட்டால் தடையற்ற மின்சாரத்தைப் பெறலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் மேலே குறிப்பிட்டபடி, பேராசை மக்களிடம் ஊக்குவிக்கப்படும்வரை தடையற்ற மின்சாரத்தைப் பெறுவது சாத்தியமல்ல என்பதை உணர்த்த விரும்புகிறோம். மின்சாரத்தின் உற்பத்தி இயற்கை வளங்களைச் சார்ந்துள்ளது என்பதையும், மின்தட்டுப்பாடு மேன்மேலும் அதிகரித்து, மின்சாரம் முற்றிலுமாக நின்றுவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் யாம் முன்னரே (பகவத் தரிசனம், ஜுலை 2011) கண்டோம். தடையற்ற மின்சாரத்தைப் பெறுவது எப்படி என்பதை சற்று ஆய்ந்து பார்க்கலாம்.

தடையற்ற மின்சாரம்

மேற்கத்திய உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தடையற்ற மின்சாரம் என்பது வழக்கத்தில் உள்ளது. இலண்டனில் எப்போதாவது மின்வெட்டு நேர்ந்தால், அதனை நமது ஊரிலுள்ள பத்திரிகைகள்கூட செய்தியாக வெளியிடுவதைக் காண்கிறோம். அவர்களிடம் நம்மைக் காட்டிலும் தொழில்நுட்பமும் இயற்கை வளமும் அதிகமாக இருப்பதே இதற்கான அடிப்படை காரணம். நாமும் நம்முடைய தொழில்நுட்பத்தை அவர்களுக்கு இணையாக வளர்க்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். சிலர் வளம் நிறைந்த அந்த நாடுகளுக்கு இடம்பெயரலாம் என்றும் நினைக்கின்றனர்.

உண்மையில் தடையற்ற மின்சாரத்தினை விரும்புவோருக்கு எளிதான உடனடித் தீர்வு, எந்த இடத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்குமோ அந்த இடத்திற்குச் செல்வதாகும். இந்தியாவின் மும்பை நகரில்கூட தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் மும்பைக்கோ வெளிநாடுகளுக்கோ செல்வது என்பது எத்தனை மக்களுக்கு நடைமுறையில் சாத்தியமாகும்? பண வசதி படைத்தோர் அதுபோன்ற இடங்களுக்குச் சென்று தடையற்ற மின்சாரத்தினை அனுபவிக்கலாம். அனைவருக்கும் இது சாத்தியமற்ற ஒன்று.

தடையற்ற மின்சாரம் கிடைக்கும் அத்தகைய நகரங்களுக்கு அனைவரும் இடம்பெயர்வோம் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அனைத்து மக்களும் அங்கு சென்றுவிட்டால், நிச்சயம் அங்கும் மின்வெட்டு நிகழும் என்பதை அனைவரும் அறிவர்.

மின்தேவை இல்லாத இடத்தை நோக்குவோம்

மின்வெட்டு இல்லாத இடத்தை நோக்கிச் செல்வது நிச்சயம் புத்திசாலித்தனம். அத்தகைய ஓர் இடத்தைப் பற்றிய இரகசிய தகவல் எம்மிடம் உள்ளது. அந்த இடத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது. ஏனெனில், அங்கு மின்சாரத்திற்கான தேவை இல்லை.

நமக்கு ஏன் மின்சாரம் அவசியமாக உள்ளது? மின்சாரம் இல்லையேல் இன்றைய உலகம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மின்சாரம் அனைத்திற்கும் அவசியமாக உள்ளது. இருப்பினும், ஒளியைக் கொடுப்பதே மின்சாரத்தின் மிக முக்கியப் பணியாக உள்ளது. யாம் குறிப்பிடும் இடத்தில் மின்சாரத்தின் ஒளி அவசியமில்லை. அங்குள்ள நகரங்கள் அனைத்தும் சுய ஒளி கொண்டவை. இருள் என்பதே அங்கு கிடையாது. நமது மின்விளக்குகள் அங்கு தேவையில்லை, அலங்கார விளக்குகளும் தேவையில்லை.

வெளிச்சம் இருந்தால் மட்டும் போதுமா? காற்று வேண்டுமே! மின்விசிறி இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் யாம் கூறும் இடத்தில், எப்போதும் இனிய தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கும், அங்கு விசிறிக்கு எந்தவொரு அவசியமும் இல்லை. கோடையின் கொடிய வெப்பமும் அங்கு இல்லை என்பதால், ஏ.சி.க்கான அவசியமும் அங்கு இல்லை.

மின்விசிறி வேண்டாம், சரி. எங்களின் துன்ப வாழ்விற்கு மத்தியில் சற்று இன்பத்தைக் கொடுத்து பொழுதைக் கழிக்க உதவும் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு மின்சாரம் வேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம். யாம் கூறும் இடத்தில், உங்களுக்கு துன்பங்கள் ஏதும் இல்லை, அங்கு நீங்கள் ஒருபோதும் களைப்படைய மாட்டீர்கள். பொழுதுபோக்கு சாதனங்களுக்கான அவசியமும் அங்கு இல்லை. ஏனெனில், அங்கிருக்கும் ஒவ்வொருவரும் மாபெரும் கவிஞர்கள். அவர்களது பேச்சுகளே பாடலைப் போன்று இருக்கும், அவர்களது நடையே நாட்டியத்தைப் போன்று இருக்கும், பல்வேறு இசைக் கருவிகள் அங்குள்ள பலரால் இனிமையாக என்றும் வாசிக்கப்படும். ஆடல், பாடல், இசை என எல்லாவற்றையும் நேரில் அனுபவிக்கும்போது, யாரேனும் தொலைக்காட்சியை எதிர்பார்ப்பார்களா?

தொலைக்காட்சி வேண்டாம், சரி. எங்களின் உணவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டியானது மின்சாரம் இல்லாமல் எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் தொடரலாம். யாம் கூறும் அந்த அற்புதமான நாட்டில், உணவுப் பொருட்கள் என்றும் கெட்டுப் போகாது. அங்குள்ள செடிகளும் கொடிகளும் உங்களுக்குத் தேவையான பழங்களையும் காய்கறிகளையும் என்றும் புத்தம் புதிதாக (ஃபிரஷ் ஆக) வழங்க வல்லவை. அங்குள்ள மரங்கள் நீங்கள் கேட்கும் பழங்களைக் கொடுக்கும். குளிர் காலத்தில் மாம்பழம் கேட்டாலும் கிடைக்கும். உங்களின் குளிர்சாதன பெட்டியில் குளிர்காலம் வரை மாம்பழத்தைத் தக்க வைக்க முடியுமா?

குளிர்சாதன பெட்டி வேண்டாம், சரி. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நீர் வேண்டுமே, மின்சாரம் இல்லாவிடில் தண்ணீர் மோட்டார் இயங்காது என்று தாங்கள் ஆட்சேபிக்கலாம். யாம் கூறும் இடத்தில், தண்ணீர் மோட்டாருக்கான அவசியமும் இல்லை. அங்குள்ள நீர் மிகவும் தூய்மையானது. அமிர்தம் போன்ற சுவை கொண்டது, தாங்கள் விரும்பும் இடத்தில் கிடைக்கக்கூடியது. மோட்டார் கொண்டு மேலே ஏற்றி பல நாள்கள் வைத்திருந்து உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. என்றும் எப்போதும் தூய்மையான சுவையான நீரை அங்கு நீங்கள் பருகலாம், அதே நீரில் நீராடவும் செய்யலாம்.

மோட்டார் வேண்டாம், சரி. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும், அவ்வாறு செல்வதற்கு கார்களும் பேருந்துகளும் விமானங்களும் எங்களுக்கு உதவுகின்றன–மின்சாரம் இல்லாவிடில் இவற்றைக் கட்டுப்படுத்தும் சிக்னல்கள் ஏதும் வேலை செய்யாதே என்று நீங்கள் எண்ணலாம். யாம் கூறும் இடத்தில் நிறைய விமானங்கள் உள்ளன. அங்குள்ள விமானங்கள் இங்குள்ளவற்றைப் போன்று காதைக் கிழிக்கும் பேரொலியுடன் இயங்குபவை அல்ல, அவ்வப்போது கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்குபவையும் அல்ல. அங்குள்ள விமானங்கள் சகல வசதிகளும் பொருந்தியவை, விரும்பும் இடத்திற்கு உங்களை விரைவாக அழைத்துச் செல்பவை, என்றும் நொறுங்கி விழாதவை.

சிக்னல்கள் வேண்டாம், சரி. நாங்கள் அங்கு தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும், உடுத்துவதற்கு உடை வேண்டும், வாழ்வதற்கு பல்வேறு பொருட்கள் வேண்டும்–அவையனைத்திற்கும் மின்சாரம் நிச்சயம் வேண்டுமே என்று நீங்கள் உரைக்கலாம். யாம் கூறும் இடத்தில், இதற்கும் அவசியம் இல்லை. அங்கு நீங்கள் சென்றால் போதும். அங்குள்ள அரசாங்கம் உங்களுக்கென்று விலைமதிப்பற்ற கற்களால் கட்டப்பட்ட வீட்டிற்கு உடனடியாக ஏற்பாடு செய்துவிடும். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்தும் கிடைத்துவிடும், உங்களுக்கு சிரமம் ஏதுமில்லை.

அப்படியெனில், அங்கு மின்சாரமே தேவையில்லையா என்று நீங்கள் பெருமூச்சுடன் கேட்பதை யாம் உணர்கிறோம். ஆம். அங்கு மின்சாரம் தேவையில்லை. மின்சாரத்தினால் நீங்கள் இங்கு அடையும் அனைத்து நன்மைகளையும் அங்கு நீங்கள் பரிபக்குவமாகப் பெற முடியும்.

மின்விளக்கு வேண்டாம், மின்விசிறி வேண்டாம், தொலைக்காட்சி வேண்டாம், குளிர்சாதனப் பெட்டி வேண்டாம், மோட்டார் வேண்டாம், இதர மின்பொருட்களும் வேண்டாம் இவை ஏதுமின்றியே மகிழ்ச்சியான வாழ்வைக் கொடுக்கும் அந்த இடத்தை நோக்குவோம்.

அஃது எந்த இடம்?

அஃது எந்த நாடு, உடனடியாகக் கூறுங்கள் என்ற ஆவல் உங்களிடம் இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

யாம் கூறும் அந்த இடம், நமது கண்களுக்குப் புலப்படும் இந்த ஜட உலகத்திலிருந்து பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பாலுள்ளது. அது சிறிய இடம் அல்ல, பெரிய நாடு அல்ல, பெரிய கண்டமும் அல்ல, பெரிய பிரபஞ்சமும் அல்ல–மாறாக, கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் அனைத்தையும் சேர்த்தால், அந்த இடத்தில் ஒரு கால் பகுதியே இருக்கும்–அந்த அளவிற்கு அது ஒரு மிகப்பெரிய இருப்பிடம். அந்த மாபெரும் உலகம், வைகுண்ட உலகம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்டம் என்றால், கவலைகள் இல்லாத இடம் என்று பொருள்.

அந்த வைகுண்ட லோகத்தில் எண்ணற்ற கிரகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் முழுமுதற் கடவுளான விஷ்ணு ஆட்சி செய்கிறார். அவர் தனது பல்வேறு ரூபங்களில் (நாராயணர், முகுந்தர், கேசவர், ஜனார்தனர் போன்ற எண்ணிலடங்காத ரூபங்களில்) ஏதேனும் ஒன்றின் மூலமாக அங்கு வீற்றுள்ளார். அங்குள்ள லோகங்களில் உயர்ந்த லோகமான கோலோக விருந்தாவனம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமாகும். அங்குள்ள எந்தவொரு கிரகத்தை நாம் அடைந்தாலும், மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நம்மால் உணர முடியும். பூரண ஆனந்தத்துடன் விஷ்ணுவின் தொண்டில் நாம் அனைவரும் அங்கு நிரந்தரமாக வசிக்க முடியும், அங்கு வசிப்பவர்களுக்கு மரணம் கிடையாது. அங்கு சென்றவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பி வர வேண்டியதில்லை.

 

நம்முடைய உலகத்திலிருந்து பல்லாயிரம் கோடி மைல் தொலைவிலுள்ள அந்த இடம் வைகுண்டம் எனப்படுகிறது. அங்குள்ள எண்ணற்ற கிரகங்கள் ஒவ்வொன்றிலும் பகவான் விஷ்ணு தனது குறிப்பிட்ட ரூபத்தில் வீற்றுள்ளார்.

இவற்றிற்கு என்ன ஆதாரம்?

யாம் கூறுபவை எதுவும் கற்பனை அல்ல. நமது புலன்களால் நிச்சயம் இவற்றை எத்தனை வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் அறிய முடியாது. ஆனால் சாஸ்திரங்களை நாம் ஏற்றுக் கொண்டால், வைகுண்ட லோகங்களை ஏற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஏன் நாம் சாஸ்திரங்களை ஏற்க வேண்டும் என்பதை பகவத் தரிசன வாசகர்களுக்கு ஏற்கனவே உணர்த்தி உள்ளோம்.

யாம் கூறிய தகவல்கள் சாஸ்திரங்களின் பல்வேறு இடங்களில் கூறப்பட்டிருந்தாலும், பிரம்ம சம்ஹிதையில் (5.56) இவை மிகவும் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன.

ஷ்ரிய: காந்தா: காந்த: பரம-புருஷ: கல்ப-தரவோ

த்ருமா பூமிஷ் சிந்தாமணி-கண-மயி தோயம் அம்ருதம்

கதா கானம் நாட்யம் கமனம் அபி வம்ஷீ ப்ரிய-ஸகி

சித்-ஆனந்தம் ஜ்யோதி: பரம் அபி தத் ஆஸ்வாத்யம் அபி ச

“பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக உலகிலுள்ள ஒவ்வொரு மரமும் வேண்டியதை வழங்கும் கற்பக மரங்கள், அங்குள்ள நிலம் சிந்தாமணிக் கற்களால் ஆனது, நீர் அமிர்தம் போன்றது, ஒவ்வொரு வார்த்தையும் பாடல், ஒவ்வொரு அடி நடையும் நடனம், கிருஷ்ணரின் பிரியமான துணையாக இருப்பதோ அவரது புல்லாங்குழல். அங்குள்ளவை அனைத்தும் பூரண தெய்வீக ஆனந்தத்தின் தன்மையைக் கொண்டவை.”

மேலும், பகவத் கீதையில் தன்னுடைய இடத்தைப் பற்றி கிருஷ்ணர் கீழ்க்காணும் ஸ்லோகத்தில் (15.6) கூறுவதையும் யாம் இக்கட்டுரைக்கு ஆதாரமாக ஏற்கின்றோம்.

ந தத் பாஸயதே ஸூர்யோ  ந ஷஷாங்கோ ந பாவக:

யத் கத்வா ந நிவர்தந்தே  தத் தாம பரமம் மம

“எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.”

பாவக: என்னும் சொல், நெருப்பைக் குறிக்கும் என்றபோதிலும், ஒளியைக் கொடுக்கும் மின்சாரமும் இதில் அடங்குவதால், ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ணரின் உலகம் மின்சாரத்தினால் ஒளியூட்டப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றார்

 

அங்கு எவ்வாறு செல்லலாம்?

ஆன்மீக உலகத்தைப் பற்றிய இத்தகு அற்புதமான தகவல்களைக் கேட்பவர்கள் நிச்சயம் அங்கு செல்வதற்கு ஆர்வம் கொள்வர். ஆனால் இங்குள்ள எந்தவொரு போக்குவரத்து சாதனத்தையும் வைத்து அங்கு செல்ல இயலாது. இங்குள்ள விமானங்கள் ஆன்மீக உலகை அடைவதற்கு உரியவை அல்ல. ஆன்மீக உலகிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கென்று குறிப்பிட்ட விமானங்கள் உள்ளன. இங்குள்ள விமானங்களில் ஏறி, வேற்று நாட்டிற்குச் செல்வதற்கு முன்பாக, பல்வேறு வழிமுறைகளையும் பரிசோதனைகளையும் நாம் தாண்டிச் செல்ல வேண்டும். அதுபோல, ஆன்மீக விமானத்தில் நாம் ஏற விரும்பினால், அதற்கான வழிமுறையினைப் பயிற்சி செய்ய வேண்டும்.

களங்கமற்ற உணர்வுடன் மரண நேரத்தில் நாம் கிருஷ்ணரை நினைத்தால், உடனடியாக ஆன்மீக விமானத்தில் ஏற முடியும். இருப்பினும், மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பதற்கு நாம் இப்போதிருந்தே பயிற்சி செய்ய வேண்டும். கிருஷ்ணர் கீதையின் எட்டாவது அத்தியாயத்தில் (8.7) கீழ்காணும் அறிவுரையை அர்ஜுனனுக்கு வழங்குகிறார்:

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு  மாம் அனுஸ்மர யுத்ய ச

மய்யர்பித-மனோ-புத்திர்  மாம் ஏவைஷ்யஸ்யஸம்ஷய:

“எனவே (மரண நேரத்தில் என்னை நினைப்பதற்கு), அர்ஜுனா, என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை.”

அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட இந்த அறிவுரை நம் அனைவருக்கும் பொருத்தமானதாகும். நாம் நம்மை பூரண கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்த வேண்டும், அவ்வாறு செய்வதால் நிச்சயம் கிருஷ்ணரின் கோலோக விருந்தாவனத்தை அடைய முடியும். கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்தல், கிருஷ்ண பக்தர்களுடன் சங்கம் கொள்ளுதல், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களை பக்தர்களிடமிருந்து கேட்டல் போன்றவை கிருஷ்ண உணர்வில் ஒருவர் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களாகும். இந்த வழிமுறை மிகவும் எளிதானது. ஜாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, இதனை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்து பக்குவநிலையை அடைய முடியும் என்பதை கிருஷ்ணர் கீதையில் (9.32) உறுதி செய்கிறார்.

கிருஷ்ணரின் கோலோக விருந்தாவனத்தில் இருக்கும் மரங்கள் அனைத்தும் விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள். பேச்சுகள் அனைத்தும் பாடல்கள், நடையே நாட்டியம், அவ்வுலகம் ஆனந்தத்தின் இருப்பிடம்.

தற்போதைய பிரச்சனை தீருமா?

மரணத்திற்குப் பின் கிருஷ்ண லோகம் செல்வோம்; இருப்பினும், தற்போதைய வாழ்வில் மின்சாரம் இல்லையேல் மகிழ்ச்சி இல்லையே என்று சிலர் எண்ணலாம். உண்மை என்னவெனில், கிருஷ்ண பக்தியின் வழிமுறை மிகவும் ஆனந்தமயமானது. இஃது ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. கிருஷ்ண பக்தன், மின்சாரம் இருந்தால் அதனை கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துவான்; மின்சாரம் இல்லாவிடில் அதற்காக வருந்த மாட்டான். கிருஷ்ணரின் நாமத்தை உச்சரித்து, கிருஷ்ண கதைகளைக் கேட்டு என்றும் மகிழ்ச்சியாக வாழ்வான். அவனது மகிழ்ச்சி மின்சாரத்தை அடிப்படையாக வைத்து அமைவதில்லை.

எனவே, என்றென்றும் நம்மை மகிழ்ச்சியில் வைத்திருக்கும் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்வோம்! மின்சாரத்தின் அவசியம் துளியும் இல்லாத கிருஷ்ண லோகம் செல்வோம்!