அனைவருக்கும் சமமான நீதி

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கடவுள் பாரபட்சமற்றவர் எனும் பட்சத்தில், ஒருவர் பல கோடிகளை சம்பாதிப்பதும் மற்றொருவர் பெருத்த நஷ்டத்தால் துன்பப்படுவதும் ஏன்? ஒருவர் காப்பாற்றப்படுவதும் மற்றொருவர் கொல்லப்படுவதும் ஏன்?

ப்ராயேணைதத் பகவதஈஷ்வரஸ்ய விசேஷ்டிதம்

மிதோ நிக்னந்தி பூதானிபாவயந்தி ச யன் மித:

உண்மையில் அனைத்தும் பரம புருஷ பகவானின் விருப்பத்தினால்தான் நடைபெற்றுள்ளன. சில சமயங்களில் மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர், வேறு சமயங்களில் அவர்கள் ஒருவரையொருவர் பாதுகாக்கின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.15.24) 

பௌதிக உலகில் இன்பம் கிடையாது, துன்பம் மட்டுமே உண்டு என்பதை அறிவதே ஆன்மீக உணர்வின் முதல்படியாகும். வாழ்க்கைப் போராட்டத்தில் துன்பத்தை சிறிதளவேனும் குறைக்க முடிந்தால், அதையே நாம் இன்பமாக நினைக்கிறோம்; ஆனால் உண்மையில் இன்பம் என்று ஏதுமில்லை. பகவத் கீதையில் பரம அதிகாரியான கிருஷ்ணர், இந்த ஜடவுலகத்தினை து:காலயம், துன்பம் நிறைந்த இடம்,” என்று கூறுகிறார். இதுவே உண்மை.

ஜடவுலகம் துன்பத்திற்கானது

ஒருவன் துன்பத்தை இன்பமாக எடுத்துக்கொண்டால் அவனை அறிவற்றவன் என்றும், துன்பத்திற்கு முடிவைத் தேடுபவனை அறிவுள்ளவன் என்றும் அழைப்போம். உதாரணமாக, அரசாங்கத்தால் முதல்தர வகுப்பைச் சார்ந்த கைதிகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது. அதே சமயம் மூன்றாம்தர வகுப்பினரும் சிறையில் உள்ளனர். இருவருமே துன்பத்தை அனுபவிக்கும் சிறைக் கைதிகள்தான். முதல் வகுப்பைச் சார்ந்தவன் தான் இன்பமாக இருப்பதாக நினைத்தால், அவன் முதல்தர முட்டாளாவான். சிறை என்பது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கல்ல; துன்பத்திற்கானது. ஆகையால், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பாடுகிறார், அனாதி கர்ம-பலே படி ’பவார்னவ-ஜலே தரிபாரே ந தேகி உபய: எனது கர்ம வினைப் பயனால், நான் பௌதிக வாழ்வெனும் பெருங்கடலினுள் விழுந்துவிட்டேன். இந்த துன்பத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியை என்னால் காண இயலவில்லை.”

நாம் சுதந்திரமானவர்களல்ல

துன்பங்கள் நிறைந்த ஜடவுலகம் எனும் சிறைச்சாலையில் சுதந்திரமாக எதையும் நம்மால் செய்யவியலாது. நான் சுதந்திரமானவன்,” என்று எல்லாரும் நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல. கிருஷ்ணர் பகவத் கீதையில் (3.27) கூறுகிறார்:

ப்ரக்ருதே: க்ரியமாணானிகுணை: கர்மாணி ஸர்வஷ:

அஹங்கார-விமூடாத்மாகர்தாஹம் இதி மன்யதே

இயற்கையின் விதிகளால் அனைவரும் கட்டுப் படுத்தப்படுகின்றனர், ஆனால் அறிவற்றவர்கள் தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதாக நினைக்கின்றனர்.” 

உண்மையில் கிருஷ்ணரே அனைத்தையும் செய்கிறார். பாகவதத்தின் இந்த ஸ்லோகத்தில், கூறப்பட்டுள்ளதுபோல, ப்ராயேணைதத் பகவத ஈஷ்வரஸ்ய விசேஷ்டிதம்: அனைத்தும் பகவானது விருப்பத்தினாலேயே நடைபெறுகின்றது.” அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டில் உங்களால் எதையும் செய்ய இயலாததைப் போலவே, உலகத்தின் உயர் அதிகாரியான கிருஷ்ணரின் அனுமதியின்றி நம்மால் எதையும் செய்யவியலாது.

கிருஷ்ணரின் செயல்கள் உன்னதமானவை

மிதோ நிக்னந்தி பூதானி பாவயந்தி ச யன் மித: அவரது விருப்பத்தினால் மக்கள் சில சமயங்களில் ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர், சில சமயங்களில் ஒருவரையொருவர் பாதுகாக்கின்றனர்.” அவ்வாறெனில், கிருஷ்ணர் சமயத்திற்கேற்றவாறு சிந்திப்பவரா, பாரபட்சமானவரா? இல்லை. கிருஷ்ணரது செயல்கள் தைவ, உன்னதமானவை. கிருஷ்ணர் நீதிபதியைப் போன்றவர். ஒரு வழக்கில் ஒருவனை குற்றவாளியாக தீர்மானித்து நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார், மற்றொரு வழக்கில் ஒருவனுக்கு பல இலட்சங்களை சன்மானமாக வழங்குகிறார். அப்படியெனில், அவர் பாரபட்சமானவரா? இல்லை. அவர் சட்டத்தின்படி செயல்படுகிறார், அவ்வளவே. மரண தண்டனை கிடைக்கும்படியான சூழ்நிலையை ஒருவன் தனக்குத்தானே உருவாக்குகிறான். மற்றொருவன் பல இலட்சங்களை சன்மானம் பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறான். அனைத்தும் அவரவரின் செயல்களைப் பொறுத்தது.

உயர்ந்த ஆளுநரின் மேற்பார்வையில் (தைவ-நேத்ரேன), நாம் பல விதங்களில் செயல்படுகிறோம். நமது செயல்களின் விளைவுகளுக்கு ஏற்ப பலவிதமான உடல்களைப் பெற்று இன்புறவோ துன்புறவோ செய்கின்றோம். இதுவே நமது நிலை. கிருஷ்ணர் பகவத் கீதையில், ஸமோ  ஸர்வ-பூதேஷு, தான் அனைவருக்கும் நடுநிலையானவன் என்று கூறுகிறார். அவ்வாறு இல்லையெனில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? ஒருவன் கொலை செய்யப்படட்டும், மற்றொருவன் பல இலட்சங்களை சன்மானமாகப் பெறட்டும் என பாரபட்சமாக மனம்போன போக்கில் கடவுள் செயல்படுகிறாரா? இல்லை. நமக்கான சூழ்நிலைகளை நமது செயல்களால் நாமே உருவாக்கிக்கொள்கிறோம். இதை நாம் அறிய வேண்டியது அவசியம்.

கடவுளின் சட்டம்

நான் யாரேனும் ஒருவனைக் கொலை செய்தால், நானும் கொல்லப்படுவேன் என்பது நாட்டின் சட்டம். இயற்கை அல்லது கடவுளின் சட்டமும் அதுபோலவே செயல்படுகிறது. ஆனால், நாம் நமது முற்பிறவிகளை மறந்துவிட்டோம். நான் முற்பிறவியில் ஒருவனைக் கொன்றதால், அவன் தற்போது என்னைக் கொல்கிறான்,” என்று யாரும் உணர்வதில்லை. நமது முற்பிறவிகளை நாம் மறந்தாலும் கிருஷ்ணர் மறப்பதில்லை. அவர் நமக்கு நினைவூட்டுகிறார்: முற்பிறவியில் இக்குழந்தை உன்னைக் கொன்றது, தற்போது நீ இக்குழந்தையை கருவிலேயே கொன்றுவிடு.” கிருஷ்ணர், உபத்ரஸ்ட, சாட்சியாளர்,” என்றும் அனுமந்த, அனுமதி வழங்குபவர்” என்றும் அழைக்கப்படுகிறார். அவர் அனைத்தையும் காண்கிறார், கர்மவினைப் பயன்களின்படி இன்பதுன்பத்தை எவ்வாறு அடைவது என்பதை அவர் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார். சிலரைக் கொல்வதற்கும் சிலரைக் காப்பதற்கும் கிருஷ்ணர் நமக்கு நினைவூட்டுகிறார்.

இதில் தவறேதுமில்லை. இதுவே அனைவருக்கும் சமமான நீதியாகும். அனுமதி வழங்குவதால் கிருஷ்ணர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்று நினைக்கக் கூடாது. அவர் என்றுமே நடுநிலையானவர். கடவுளின் விருப்பத்திற்கு மாறான நமது செயல்களின் விளைவுகளாலேயே நாம் துன்புறுகிறோம். எனவே, குறைந்தபட்சம் நமது நலன் கருதியாவது கடவுளின் விருப்பம் என்னவென்பதை அறிந்துகொள்ள எப்போதும் முயற்சிக்க வேண்டியது நமது கடமையாகும். இந்த மனிதப் பிறவி கடவுளின் விருப்பத்தை அறிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பாகும். அவர் தனது விருப்பத்தை பகவத் கீதையில் (18.66) ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. அனைத்து செயல்களையும் துறந்து என்னிடம் சரணடைவாயாக.” என்று தெளிவாகக் கூறுகிறார். கடவுளின் விருப்பம் என்ன என்பதை நான் அறியேன்” என்று யாரும் கூறிவிட முடியாது. மேலும், அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி: அனைத்து பாவ விளைவுகளிலிருந்தும் உன்னை விடுவித்து பாதுகாக்கிறேன்,” என்று சரணடைவதன் பலனையும் அவரே கூறியுள்ளார்.

நீங்கள் நன்றாக கல்வி கற்று கலாச்சாரத்துடன் இருந்தால், சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள்; அயோக்கியனாக இருந்தால், துன்பப்படுவீர்கள். அதுபோலவே, நமது பாவச் செயல்களின் விளைவாக நாம் துன்புறுகிறோம், புண்ணியச் செயல்களின் விளைவாக இன்புறுகிறோம். இதுவே இயற்கையின் நியதி, இது கர்ம-பந்த என்று அழைக்கப்படுகிறது. கடவுளின் விருப்பம் யாது? நமக்கான கடமை என்ன? போன்றவற்றை அறியாத வரையில், நாம் பாவ புண்ணியச் செயல்களை உருவாக்கி, சில நேரங்களில் மகிழ்ச்சியையும் சில நேரங்களில் துன்பத்தையும் அடைய நேரிடும்.

எனவே, நமது கடமை என்னவென்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்? தற்போது அதை நாம் மறந்திருக்கிறோம். ந தே விது ஸ்வார்த கதிம் ஹி விஷ்ணு:, நமது பௌதிகச் சூழ்நிலையில் வாழ்வின் குறிக்கோளை மறந்திருக்கிறோம். எனவே, கிருஷ்ணர் இங்கே அவதரிக்கிறார். பகவத் கீதையில் (4.7) அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத… ததாத்மானம் ஷ்ருஜாம்யஹம், மக்கள் தங்களது கடமைகளை மறக்கும்பொழுது, நான் வருகிறேன்.”

நீதிபதி சிலருக்கு தண்டனை வழங்குவதும் சிலருக்கு சன்மானம் வழங்குவதும் அவரது பாரபட்ச நிலையைக் காட்டுவதாகாது.

நமது கடமை சேவை செய்வதே

நமது உண்மையான கடமை பரம புருஷரான கிருஷ்ணருக்கு சேவை செய்வதே. ஆனால் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மறந்து காமம், கோபம், மயக்கம் போன்றவற்றிற்கு சேவை செய்வதால், அதன் பலனாக நாம் பல பிரச்சனைகளைப் பெறுகிறோம். சேவை செய்வதே நமது நிலை, யாரும் சேவையிலிருந்து விடுபட்டிருக்க இயலாது. அது சாத்தியமில்லை. ஆனால் நமது சேவையை யாருக்கு செய்வது என்பதை நாம் அறிவதில்லை, அதை மறந்திருக்கிறோம்.

காமாதீனாம் கதி ந கதிதா பலிதா துர்நிதேஷா, அறியாமையில் இருக்கும் மனிதர்கள் காமம், கோபம், பேராசை, மோகம் போன்றவற்றிற்கு சேவை செய்கின்றனர். காமம் அல்லது மோகத்தினால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொலை செய்கிறான். நாம் எப்போதும் சேவை செய்கிறோம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் காமம், பேராசை போன்றவற்றிற்கு சேவை செய்கிறோம். இவற்றிற்கு சேவை செய்வதால் விரக்தி மட்டுமே கிட்டும் என்பதை உணர்ந்தால், அதன் பின்னர் நமது சேவை மனப்பான்மையை கிருஷ்ணரை நோக்கித் திருப்புவோம். அதுவே கிருஷ்ண அவதாரத்தின் குறிக்கோள். கிருஷ்ணர் கூறுகிறார், நீ ஏற்கனவே சேவை செய்து கொண்டிருக்கிறாய், உன்னால் சேவை செய்வதிலிருந்து விலகியிருக்க இயலாது. ஆயினும், உனது அந்த சேவை தவறான இடத்தில் உள்ளது. அதை மாற்றி நீ எனக்கு சேவை செய்தால் மகிழ்ச்சியடைவாய்.” இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

கொல்லாதிருப்பாயாக

பலவிதமான ஆசைகளுக்கு சேவை செய்வதால் நாம் பலவிதமான சூழ்நிலைகளை உருவாக்குகிறோம். செய்யக்கூடாதவை என தெரிந்தும் சில நேரங்களில் நாம் அவற்றைச் செய்கிறோம். நாம் காமம், பேராசை போன்றவற்றிற்காக எவ்வளவோ சேவை செய்திருக்கிறோம்; இருப்பினும், அவை கருணையின்றி, செய்து கொண்டே இரு, செய்து கொண்டே இரு”என கட்டளையிடுகின்றன. நாம் துன்புற்றாலும் காமம், பேராசைகளின் கட்டளைகளைப் பின்பற்றுகிறோம். இவ்விதமாக, நமது கர்மாவை நாமே செய்கிறோம். அறிவார்ந்த மனிதன் சிந்திப்பான், கீழ்த்தரமான ஆசைகளுக்காக நான் பன்னெடுங்காலமாக சேவை செய்து வருகிறேன், ஆனால் நானும் மகிழ்ச்சியடையவில்லை, எனது ஆசைகளும் திருப்தியடையவில்லை.” காமத்தால் பீடிக்கப்பட்டவனின் ஆசைகள் ஒருபோதும் திருப்தியுறாது, நாவின் திருப்திக்காக மனிதன் எவ்வளவோ விலங்குகளைக் கொன்றிருக்கிறான், அதனை நிறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றலாம், ஆனால் நிறுத்துகிறானா? இல்லையே! அவன் கொல்கிறான், கொல்கிறான், கொன்று குவித்துக் கொண்டே இருக்கிறான். ஆனாலும் ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. பலவித அப்பாவி விலங்குகளைக் கொன்றுவிட்டேன். போதும்! நிறுத்திவிடுகிறேன்” என்று அவன் நிறுத்துகிறானா? இல்லை, நிறுத்துவதேயில்லை.

பைபிளின் வாசகம் கொல்லாதிருப்பாயாக,” ஆனால் மக்கள் கொல்கின்றனர், கொல்கின்றனர், கொன்று குவிக்கின்றனர். அதே சமயம் அமைதி யையும் திருப்தியையும் அவர்கள் விரும்பு கின்றனர். பார்த்தீர்களா! பைபிள் கூறுகிறது, கொல்லாதிருப்பாயாக,” கொல்லும் செயலில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் மகிழ்ச்சியை விரும்புகின்றனர். எனவே, கிருஷ்ணர் கூறுகிறார், உலகப் போரால் கொல்லப்படுங்கள்.” நீங்கள் கொல்லப்பட வேண்டியது கட்டாயம், அதற்கான சூழ்நிலையை நீங்களே உருவாக்கினீர்கள்; ஆகையால் நீங்கள் கொல்லப்பட்டாக வேண்டும். நீங்கள் அமெரிக்கன், ஆங்கிலேயன், ஜெர்மானியன், இது, அது என்று உங்களது தேசத்தை நினைத்து கர்வம்கொள்ளலாம், ஆனால் நீங்கள் கொல்லப்படப் போவது திண்ணம். இதுவே இந்த நவீன நாகரிகத்தின் நிலையாகும். அனைத்தும் கடவுளின் விருப்பத்தின் பேரில் நடைபெறுகின்றது. ஈஷ்வர்யஸ்ய விசேஷ்டிதம். நீங்கள் பல விலங்குகளைக் கொன்றிருக்கிறீர்கள்? அதனால் ஒரேயொரு அணுகுண்டு போதும், மனித இனத்தையே அழிப்பதற்கு.

அனைத்தும் கடவுளின் விருப்பத்தால் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது இந்த அயோக்கியர்களுக்குத் தெரியாது. ஒருவன் மற்றொருவனைக் கொன்றால், அதற்கு தூக்கு தண்டனையை நாட்டின் சட்டம் நிறைவேற்றும்போது, பரம அதிகாரியான கிருஷ்ணர் சும்மா இருப்பார் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் கொன்று குவித்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் உங்களுக்கு தண்டனை ஏதுமிருக்காது என்று நினைக்கிறீர்களா? கட்டாயம் இல்லை. நீங்கள் தொற்றுநோயாலும் வறட்சியாலும் கொல்லப்படுவீர்கள், உங்களது தாயால் கருவிலேயே கொல்லப்படுவீர்கள். கருவில் பாதுகாப்பு உள்ளது, ஆனால் அங்கும் நீங்கள் கொல்லப்படலாம். மனித நாகரிகம் தினந்தோறும் கொலை அதிகரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது.

கிருஷ்ணரிடம் சரணடைவதே நமது கதி, அவர் நம்மை நிச்சயம் பாதுகாப்பார்.

நமக்கு கதி கிருஷ்ண சரணாகதியே

ஆகவே, நாம் அனைத்தையும் கிருஷ்ணரிடம் ஒப்படைக்கிறோம். கடவுளின் சட்டங்களிலிருந்து விடுபட்டிருப்பது சாத்தியமில்லை. நாம் சரணடைந்தாக வேண்டும், பகவானே கிருஷ்ணா, பல பிறவிகளில் நான் பாவங்களைச் செய்தும் மகிழ்ச்சியடையவில்லை. எனவே, நான் உங்களிடம் சரணடைகிறேன். தங்களிடம் சரணடைந்தவர்களைப் பாதுகாப்பதாக தாங்கள் வாக்களித்துள்ளீர்கள். தயவுசெய்து எனது பாவ விளைவுகளிலிருந்து என்னைப் பாதுகாத்து உங்களது சேவையில் ஈடுபடுத்துங்கள்.” இதுவே கிருஷ்ண பக்தி இயக்கமாகும்.

(தமிழாக்கம்: வேங்கடேஷ்)

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment