அனைவருக்கும் வேலை அவசியம்

அனைவருக்கும் வேலை அவசியம்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது ஒரு சீடருக்கும் இடையிலான இந்த உரையாடல் சமுதாயத்தில் வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

சீடர்: இந்தியாவின் எண்பது சதவிகித மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்துவதே தனது திட்டம் என்றும், இதன்மூலம் மக்கள் கோதுமையை கையில் அறுவடை செய்வதற்கு பதிலாக அறுவடை இயந்திரத்தை பயன்படுத்துவர் என்றும், உழுவதற்கு எருதை பயன்படுத்துவதற்குப் பதிலாக டிராக்டரை பயன்படுத்துவர் என்றும் சமீபத்தில் ஓர் அரசியல்வாதி பேசியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஏற்கனவே பலர் இந்தியாவில் வேலையின்றி உள்ளனர். ஆகவே, இயந்திரங்களை அறிமுகம் செய்தல் நல்ல திட்டமல்ல. நூறு பேரின் வேலையை ஓர் இயந்திரமே செய்துவிடும். ஆனால், நூறு பேர் ஏன் வேலையின்றி இருக்க வேண்டும்? ஓர் இயந்திரத்தை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக ஏன் நூறு பேரை வேலையில் ஈடுபடுத்தக் கூடாது?

இங்கு மேற்கத்திய நாடுகளில் வேலையின்மை அதிகமாக உள்ளது. ஏனெனில், இந்நாடுகளில் அனைத்தும் இயந்திரங்களால் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக பல இளைஞர்கள் செய்வதற்கு ஏதுமின்றி விரக்தியுற்று ஹிப்பிகளாகின்றனர் (சமுதாயத்தைத் துறந்த நாடோடிகள்). இது மற்றொரு வகையான வேலையின்மை. இயந்திரங்களே பல விதங்களில் வேலையின்மை ஏற்படுத்துகின்றன என்பதை எளிதில் உணரலாம்.

அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும்? யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.

சீடர்: நேரத்தை உறிஞ்சும் வேலைகளிலிருந்து இயந்திரங்கள் நமக்கு விடுதலையளிக்கின்றன.” என்று ஒருவர் வாதிடலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: எதற்கு விடுதலை? குடிப்பது, கும்மாளம் போடுவது போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபடுவதற்குதானே. விடுதலை என்பதன் பொருள் என்ன? கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்வதற்காக மக்களுக்கு நேரம் மிச்சப்படுத்தப்பட்டால், அது வேறு விஷயம். கிருஷ்ண உணர்விற்கு ஒருவன் வந்தால், அவனும் முழுநேர சேவையில் ஈடுபடுத்தப்படத்தான் வேண்டும். இந்த இயக்கம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காகவே உள்ளது; உண்டு, உறங்குவதற்காக அல்ல. கிருஷ்ண உணர்வு சமுதாயமாக இருந்தாலும் சரி, வெளி உலகமானாலும் சரி, அனைவரையும் மும்முரமாக வேலையில் ஈடுபடுத்துவதே திட்டமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நல்ல நாகரிகம் வளரும்.

வேத நாகரிகத்தில் தலைவனது கடமை, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அனைவரும் தத்தமது பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்காணிப்பதாகும். அனைவரும் பணியில் அமர்த்தப்பட வேண்டும், அப்போது அமைதி தானே வரும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேலையின்மையும் சோம்பேறிகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. ஹிப்பிகள் சோம்பேறிகளே, அவர்கள் எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை.

சீடர்: தொழில்நுட்பத்தின் மூலம் வேலைகள் வேகமாகவும் சிறப்பாகவும் நடைபெறுகின்றன, உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது. ஆகவே, மனிதர்களின் உற்பத்தித் திறனானது இயந்திரங்களின் உற்பத்தித் திறனைக் காட்டிலும் பன்மடங்கு பின்தங்கி உள்ளது என ஒருவன் வாதிடக்கூடும்.

ஸ்ரீல பிரபுபாதர்: உற்பத்தித் திறன் குறைவாக இருப்பினும் மனிதனை வேலையில் ஈடுபடுத்துவதே சிறந்தது. கீதையில் (18.48) கிருஷ்ணர் கூறுகிறார்:

ஸஹஜம் கர்ம கௌந்தேய

ஸதோஷம் அபி ந த்யஜேத்

ஸர்வாரம்பா ஹி தோஷேண

தூமேனாக்னிர் இவாவ்ருதா: 

நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே, குந்தியின் மகனே, முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருப்பினும், தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது.” மேலும், பேகரி ஸே பேக3ரி அச்சி ஹை என இந்தி பழமொழி ஒன்று கூறுகிறது. பேகரி என்றால் வேலையின்மை,” பேக3ரி என்றால் ஊதியமின்றி வேலை செய்தல்.” இந்தியாவில், கிராமவாசிகள் கடைக்காரரிடமோ கனவானிடமோ சென்று, ஐயா, தயைகூர்ந்து ஏதாவது வேலை தாருங்கள், சம்பளம் எதுவும் தேவையில்லை. தாங்கள் விரும்பினால் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள், இல்லையெனில், அதுவும் வேண்டாம்” என கேட்பதைப் பார்த்திருக்கிறோம். எந்த நேர்மையான மனிதரும் தன்னிடம் வேலை செய்பவனுக்கு உணவு வழங்காமல் இருக்க மாட்டார். இவ்வாறு உடனடியாக வேலையும் தங்குவதற்கு இடமும் கிடைத்துவிடும். பிறகு அவன் நன்றாக வேலை செய்வதைப் பார்த்து அந்த பெரிய மனிதர், சரி, கொஞ்சம் பணத்தைப் பெற்றுக்கொள்,” என்று கூறுவார்.

ஆகவே, வேலையின்றி சோம்பேறியாக இருப்பதைக் காட்டிலும் ஊதியம் ஏதுமின்றி வேலை செய்வது சிறந்தது. வேலையின்றி இருப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், இந்த நவீன நாகரிகத்தில் அதிகளவு இயந்திரங்களின் காரணமாக மக்கள் பலரும் வேலையின்றி சோம்பேறிகளாக இருக்கின்றனர். இது நல்லதல்ல.

சீடர்: இக்கருத்துகள் மிகவும் பழமையானவை என்று பெரும்பாலான மக்கள் கூறுவர். நவீன தொழில்நுட்பம் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்தாலும் அது வேலைப்பளுவிலிருந்து சுதந்திரம் அளிக்கிறது. மக்கள் அச்சுதந்திரத்தை மோட்டார் வாகனங்களில் பயணம் செய்தல், தொலைக்காட்சி, திரைப்படம் பார்த்து மகிழ்தல் போன்றவற்றில் பயன்படுத்துவர்.

ஸ்ரீல பிரபுபாதர்: தொழில்நுட்பம் சுதந்திரத்தை வழங்காது, நரகத்திற்கான பாதையை சுதந்திரமாக்கும். ஒவ்வொருவரும் தனது திறனுக்கேற்ற பணியில் ஈடுபட வேண்டும். உங்களுக்கு நல்ல புத்தி இருந்தால் பிராமணரின் வேலையான சாஸ்திரங்களைப் படித்து, புத்தகங்களை எழுதி அதன் மூலம் மக்களுக்கு அறிவை வளர்க்கலாம். இது பிராமணரின் பணி. வாழ்வாதாரத்தைப் பற்றி கவலையுறத் தேவையில்லை. சமூகம் அதனை வழங்கும். வேத கலாசாரத்தில் பிராமணர்கள் சம்பளத்திற்காக வேலை செய்வதில்லை. வேத இலக்கியங்களைப் படித்து மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதில் அவர்கள் மும்முரமாக இருப்பர், சமுதாயம் அவர்களுக்கு உணவளிக்கும்.

சத்திரியர்களைப் பொருத்தவரை சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அபாயம், தாக்குதல் போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பது சத்திரியர்களின் கடமையாகும்.அதற்காக அவர்கள் வரி வசூலிக்கின்றனர்.

சத்திரியர்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்கள் வைசியர்கள். அவர்கள் பசு பராமரிப்பிலும் உணவு உற்பத்தியிலும் ஈடுபடுவர். இறுதியாக சூத்திரர்கள் இவர்கள் மேற்கண்ட மூன்று சமுதாயத்தினருக்கும் சேவை செய்வர்.

இதுவே சமுதாயத்தின் இயற்கை பிரிவுகளாகும். இது சிறந்தது; ஏனெனில், இது கிருஷ்ணரால் படைக்கப்பட்டது (சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்). அனைவரும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அறிஞர்கள், ஆளுநர்கள், வணிகர்கள், இவர்களுக்கு சேவை செய்வோர் என அனைவரும் பணியில் ஈடுபட வேண்டும். அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி சண்டையிட வேண்டிய அவசியமே இல்லை, வேத காலத்தில் இதுபோன்றெல்லாம் இருக்கவில்லை. அரசனே முதன்மையானவர், அனைவரும் தத்தமது பணிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை அவர் மேற்பார்வையிடுவார். அதன் மூலம் தேவையின்றி அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக்கொள்ள மக்களுக்கு நேரமிருக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் இவை அனைத்திற்குமான முதல்படி, நான் இந்த உடலல்ல,” என்பதை அறிந்துகொள்வதே, இதுவே மீண்டும்மீண்டும் கீதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நான்கு வர்ணத்தைச் சார்ந்தோரும் தத்தமது பணிகளைச் செய்து கிருஷ்ணரை திருப்தி செய்கின்றனர்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment