வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

இன்றைய இளைஞர்கள் பொதுவாக படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலைவது வாடிக்கையாகிவிட்டது. வேலை தேடுவதே ஒரு வேலையாகிவிட்ட இந்த சமுதாயத்தில் இளைஞர்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். இந்த கட்டுரையில் இளைய சமுதாயம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சற்று காண்போம்.

பெற்றோர்களின் விருப்பம்

பொதுவாக, பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு குழந்தைப் பிறந்தவுடன் அதனை பெரிய டாக்டராகவோ பொறியியல் வல்லுநராகவோ கணிப்பொறி வல்லுநராகவோ ஆக்குவதற்காக பெரியபெரிய கனவுகளைக் காண்கின்றனர். அதனை நினைவுபடுத்துவதற்காக குழந்தைகளை சிறுவயதிலிருந்தே, நீ பெரிய மருத்துவராக வர வேண்டும்,” பொறியாளராக வர வேண்டும்,” என்று சொல்லிச்சொல்லி வளர்க்கின்றனர். இவர்களுடைய பெற்றோர்களும் அவர்களை அவ்வாறே சொல்லி வளர்த்திருப்பார்கள், இவர்கள் நிறைவேற்ற முடியாமல் போனதை மகன்களை வைத்து அடைய பெரும் பாடுபட்டு வளர்ப்பார்கள்.

இவ்வாறாக, அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சரியான அடித்தளம் அமைக்க வேண்டும் என்று எண்ணி, பணத்தை இலட்சஇலட்சமாக செலவிட்டு, பள்ளிப் படிப்பை முடிக்க வைப்பார்கள். பல கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற பெற்றோர்களின் கனவினை சாதகமாக பயன்படுத்தி, கல்வியை ஒரு நல்ல வியாபாரமாக மாற்றி இருப்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. பெற்றோர்கள் தங்களுடைய விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதையும் காண முடிகிறது.

கல்லூரிப் போராட்டம்

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அடுத்த போராட்டம் ஆரம்பமாகி விடும். எந்தக் கல்லூரியில் சேர்க்க வேண்டும், எந்தப் படிப்பு படிக்க வேண்டும் என்று கணக்குப் போட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு வழியாக ஏதாவது ஒரு மிகப்பெரிய கல்லூரியில் பிள்ளைகளைச் சேர்த்து, பல இலட்சங்கள் செலவு செய்து, பிள்ளைகளின் படிப்பிற்காக பெற்றோர்கள் நடத்தும் பல போராட்டங்களைக் காண்கிறோம்.

ஆனால், பிள்ளைகளோ கல்லூரிகளிலேயே சீரழிகின்றனர். இன்றைய கல்விக்கூடங்களில் போதைப் பொருட்கள், தவறான பாலுறவு முதலிய விஷயங்கள் சகஜமாகி வருகின்றன. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்பதில் செலுத்தும் ஆர்வத்தில், ஒரு சிறு பங்கைக்கூட அவர்களுடைய ஒழுக்கத்தில் செலுத்துவதில்லை. இஃது இளைஞர்களுக்கு தவறான சுதந்திரத்தை அளித்து அவர்களுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றுகிறது. ஒருவழியாக கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இதன்பிறகு அவர்கள் எப்படி சமுதாயத்தோடு போராடுகிறார்கள் என்பது மிகப்பெரிய கூத்து.

வேலை தேடும் படலம்

எப்படியோ பட்டம் வாங்கியாகி விட்டது. இனி குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம்தான் என்று பெற்றோர்கள் பெரிய கோட்டையைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கு நடப்பதோ வேறு, இளைஞர்கள் தங்களுடைய சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக, ஊர்ஊராக, மாவட்டம்மாவட்டமாக என்று பல வழிகளில் அலைந்துஅலைந்து வேலை தேடுகின்றனர். எங்கு பார்த்தாலும் வேலை காலி இல்லை என்றுதான் பதில் வரும். அப்படியே கிடைத்தாலும், படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. நாம் ஏன் இவ்வளவு செலவு செய்து படித்தோம் என்று இந்த இளைஞர்களுக்கு அவ்வப்போது தோன்றும்.

இப்படியாக வேலை தேடுவதிலும் நிரந்தரமில்லா பணியிலும் காலம் வேகமாக கடந்து செல்லும், வயதும் ஏறிக் கொண்டே செல்லும். இப்படியாக, இவர்களுடைய பெற்றோர்களுடைய வாழ்க்கை எவ்வாறு கனவாக முடிந்ததோ, அவ்வாறே இவர்களுடைய வாழ்வும் கனவாகவே சென்றுவிடும். இவ்வாறு வீணாகும் மனித வாழ்க்கையை எவ்வாறு நெறிபடுத்தி வாழ முடியும்? அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்ன?

 

பாரதத்தின் பெருமை

நாம் வாழக்கூடிய பாரத பூமி மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகும். ஏனெனில், இங்குதான் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இராமர், பகவான் ஸ்ரீ சைதன்யர் முதலிய அவதாரங்களும், பகவானின் மிகச்சிறந்த பக்தர்களான இராமானுஜர், மத்வர், நிம்பார்கர், விஷ்ணு ஸ்வாமி, ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், ஸ்ரீல பிரபுபாதர் முதலியோரும் தோன்றினர். மேலுலகங்களிலுள்ள தேவர்களும் பாரத பூமியில் பிறக்கக் காத்திருக்கின்றனர்.

மேலும், ஜகந்நாத புரி, விருந்தாவனம், ஹரித்வார், இராமேஸ்வரம், பிரயாகை, மதுரா, காஞ்சி போன்ற பல்லாயிரக்கணக்கான திருத்தலங்கள் பாரதத்தில் இன்றும் உள்ளன. ஆன்மீக வாழ்விற்கு பாரதமே சிறந்த இடம். எங்களது கிருஷ்ண பக்தி இயக்கம், ஜாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடுகள் ஏதுமின்றி, உலகெங்கிலுமுள்ள மக்களை கோயில்களுக்கு அழைத்து ஆன்மீக வாழ்வைப் பூரணமாக்கிக் கொள்ள உதவுகிறது.

இளைஞர்களுக்கான பயிற்சி

பாரத பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த வேலை காத்துக் கொண்டிருக்கிறது, அந்த வேலை பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் கொடுக்கப்பட்டது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம், சிபாரிசு கடிதம் என எந்தத் தேவையும் இல்லை; இஃது அனைவருக்கும் மிக எளிமையான முறையில் கொடுக்கப்படுகிறது.

மற்ற வேலைகளில் எவ்வாறு பயிற்சி காலம் தேவைப்படுகிறதோ, அவ்வாறே இந்த வேலையிலும் பயிற்சி தேவைப்படுகிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் என்று அழைக்கப்படும் இஸ்கான் அமைப்பின் கோயில்களே அந்த பயிற்சிக் கூடங்கள். இங்கு கிருஷ்ண பக்தியை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதுகுறித்த எளிமையான பயிற்சி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கோயில்களில் சேரும் இளைஞர்களுக்கு, ஜப தியானம், பிரம்மசரியம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்கள், கிருஷ்ண சேவை முதலியவற்றில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியின் கால அளவு நபருக்குத் தகுந்தாற்போல மாறுபடும். சுமார் ஒன்று அல்லது இரண்டு வருட பயிற்சியில், மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து முக்கிய வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களிலிருந்தும் சீடப் பரம்பரையில் வந்த ஆச்சாரியரான தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் வழங்கப்பட்ட நூல்களிலிருந்தும் ஆன்மீக விஞ்ஞானம் போதிக்கப்படுகிறது. நன்நெறிகளுடனும் ஒழுக்கத்துடனும் நல்ல ஒரு கிருஷ்ண பக்தராக வருவதற்கு இப்பயிற்சி உதவும்.

முறையான பயிற்சி பெற்ற இளைஞர்கள் உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபடலாம்.

பயிற்சிக்குப் பின்னர்

போதிய பயிற்சியைப் பெற்ற இளைஞர்கள், மக்களிடையே கிருஷ்ண பக்தியின் அவசியத்தை எடுத்துரைக்கும் திருப்பணியில் ஈடுபட வேண்டும். இதற்கு இணையான பணி வேறு எதுவும் இல்லை. பிரச்சாரப் பணியில் ஈடுபடும் பக்தனே தமக்கு மிகவும் பிரியமானவன் என்று கிருஷ்ணர் கீதையில் உரைக்கிறார் (18.69). பாரதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கிருஷ்ண பக்தியை ஏற்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கூறியுள்ளார். இஸ்கானில் பயிற்சி பெற்று தொடர்ந்து சேவை செய்ய விருப்பமுள்ள பக்தர்களுக்கு இதில் எந்த சிரமமும் இருக்காது.

பாரதத்தில் பிறந்த அனைவரும் புண்ணியசாலிகளாக கருதப்படுகின்றனர், பாரத வர்ஷத்தில் பிறந்ததால் இயற்கையாகவே கிருஷ்ண உணர்வும் பக்தியும் இரத்தத்தில் கலந்துள்ளது. அந்த பக்திக்கு சிறிது பயிற்சியளித்தால், அவர்கள் அனைவரும் கற்பூரம் போல பற்றிக்கொள்வர். எனவே, இளைஞர்கள் எவ்வளவுதான் தீய சகவாசத்தினால் சீரழிந்திருந்தாலும், அவர்கள் கிருஷ்ண பக்தியினால் பக்குவமடைவதை பல சூழ்நிலைகளில் கண்கூடாக கண்டுள்ளோம். அவ்வாறு பக்குவமடைந்த இளைஞர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான மக்களை பக்குவப்படுத்தும் பணியில் ஈடுபட விரும்புவது இயற்கையே. உண்மையில், மக்கள் பலரும் இதனைப் பெற காத்துக் கொண்டிருக்கின்றனர், எடுத்துரைப்பதற்குத்தான் இளைஞர்கள் குறைவு.

சைதன்ய மஹாபிரபு ஒவ்வொருவரையும் குருவாகுமாறு அறிவுறுத்துகிறார். உலகமே கிருஷ்ண பக்தியின்றி துன்பத்தில் ஆழ்ந்துள்ளது. சைதன்ய மஹாபிரபு சொல்கிறார்:

ஆமார ஆஜ்ஞாய குரு ஹய, என்னுடைய ஆணையின்படி குருவாகுங்கள்.”

குருவாகி என்ன செய்ய வேண்டும்?”

யாரே தேக, தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ், பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணரைப் பற்றி உபதேசிக்க வேண்டும்.”

இதுவே மஹாபிரபுவின் ஆணை, கிருஷ்ண உபதேசத்தை மட்டும் பிரச்சாரம் செய்யுங்கள். அதுபோதும்.

மேலும், எல்லா இந்தியர்களுக்கும் மஹாபிரபு இந்த வாய்ப்பையும் வலிமையையும் நல்கியுள்ளார்.

பாரத-பூமிதே ஹைல மனுஷ்ய-ஜன்ம யார,

ஜன்ம-ஸார்தக கரி கர பர-உபகார

பாரத பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் தங்களது வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொண்டு, மற்றவர்களின் வாழ்விற்காக திருப்பணியில் ஈடுபட வேண்டும்.” (ஆதி லீலை 9.41) 

ஒவ்வோர் இந்தியனும் கிருஷ்ண பக்தியைப் பரப்ப வேண்டும் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆணையிட்டுள்ளார்.

என்ன இலாபம்?

ஒரு சிலர் துரதிர்ஷ்டவசமாக, பகவத் கைங்கரியத்தில் பணம் சம்பாதிக்கலாமா என்றுகூட யோசிக்கின்றனர். ஆனால் பணத்தைக் காட்டிலும் பெரிய இலாபத்தை நாம் அடைவோம். அந்த இலாபத்தைப் பெற நாம் இவ்வுலகத்தின் சின்னஞ்சிறு இலாபங்களைக் கைவிடுதல் அவசியம். இஸ்கானில் முழுநேரமாக சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பக்தர்கள் பார்த்துக்கொள்வர். இங்கு கிடைக்கும் சம்பளம், பணம் அல்ல; மாறாக, எல்லையில்லா ஆனந்தம், நிம்மதி, அமைதி, மற்றும் மனநிறைவு. இவற்றிற்காகவே மக்கள் பலரும் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர், ஆனால் அவற்றை அடைய முடியாமல் தவிக்கின்றனர். இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவனும் அந்த அமைதியை அடைய முடியாமல் தவிக்கின்றானே! இளைஞர்களே சிந்திப்பீர்!

கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்வதே மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த சேவையாகும். இதுவே சைதன்ய மஹாபிரபு இந்தியர்களுக்குக் கொடுத்துள்ள வேலை. இந்த வேலைவாய்ப்பை வாழ்க்கையில் முழு மூச்சாக ஏற்று, அவர் நமக்களித்த கட்டளைகளை நிறைவேற்றினால், நாம் இந்த பௌதிக உடலை விட்டபின் பகவானுடைய நித்திய லோகமான கோலோக விருந்தாவனத்தை அடைவோம்.

இந்த பெயரளவு பௌதிக வளர்ச்சி, கல்வி, பொருளாதார முன்னேற்றம் போன்ற மாய வஸ்துக்களைத் தவிர்த்து கிருஷ்ண பக்தி பிரச்சாரத்தில் இணைய இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

இளைஞர்களே வாருங்கள்! மொத்த உலகையும் கிருஷ்ண பக்தியில் மூழ்கடிப்போம்!