அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி

மரணத்தை மறந்த மனிதர்கள்

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். மாமன்னர் யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி? இறுதி யாத்திரைக்கு தயார் செய்வது எப்படி?

இறுதித் தேர்வு

படிக்கும் மாணவனின் திறமை வருட கடைசியில் நடக்கும் தேர்வில் சோதிக்கப்படுகிறது. அந்த வருடம் முழுவதும் அவன் எவ்வாறு படித்தான், எப்படி தன்னைத் தானே தேர்விற்கு தயார் செய்தான் என்பது தேர்வில் அவனுக்கு கிடைக்கும் முடிவில் தெரிந்து விடும். இதைப் போலவே, எல்லா மனிதர்களுக்கும் நிகழும் தேர்வு நாள், அவரவரின் மரண நாளாகும். வாழ்க்கை முழுவதும் என்னென்ன செய்தானோ அவையெல்லாம் மரணத்தின் போது பரிசோதிக்கப்படும். அவன் தன் தேகத்தை விடும் நேரத்தில் பகவானை நினைத்தால், அந்த தேர்வில் அவன் வென்றுவிட்டதாக பொருள்.

அந்த காலே மாம் ஏவஸ்மரன் முக்த்வா கலேவரம்

ய: ப்ரயாதி மத்பாவம்யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:

“யாராயினும் என்னை மட்டுமே எண்ணிக் கொண்டு உடலை விட்டு வெளியேறுவானாயின், உடனேயே எனது இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.” (பகவத் கீதை 8.5)

மேலும் அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் மேலும் கூறுகிறார்:

யம் யம் வாபி ஸ்மரன்பாவம்த்யஜத்-யந்தே கலேவரம்

தம் தம் ஏவைதி கௌந்தேயஸதா தத்-பாவ பாவித:

 “உடலை விடும்போது எந்த உணர்வு நிலையை ஒருவன் எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்த நிலையையே அவன் அடைகின்றான்.” (பகவத் கீதை 8.6)

மாணவனின் திறமை வருடக் கடைசியில் சோதிக்கப்படுவதைப் போல, மனிதனின் தேர்வு மரணத்தில் உருவில் வருகின்றது.

தேர்வில் தோல்வி

சிலர் அந்திம காலத்தில் பக்தி செய்து பகவானை அடைந்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடுகிறார்கள். வாடிய மலர்களை பகவானுக்கு யாரும் அர்ப்பணிப்பதில்லை. ஆனால் வாடி வதங்கிப் போயிருக்கும் முதுமையில் தங்களை அளிக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். முதுமையில் பொதுவாக எல்லோருக்கும் உடல் பலவீனமடைந்து விடும், காதுகள் கேட்காது, கண்களும் சரிவர பார்க்காது, எலும்புகளும் பற்களும் பலவீனமடைந்து விடும். இவ்வாறாக அனைத்து உறுப்புகளும் ஒத்துழைக்க மறுத்து விடும்போது எவ்வாறு ஒருவர் நாம ஜெபம் செய்ய முடியும்? எவ்வாறு பக்தித் தொண்டு செய்ய முடியும்?

சிலர் தீர்த்த ஸ்தலங்களில் இறந்தால் பகவானை அடையலாம் என்பதை அறிந்து கொண்டு, வயதான பிறகு விருந்தாவனத்தில் சென்று அங்கே உயிரை விட்டு பகவானை அடையலாம் என திட்டம் தீட்டுவார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இறந்து விடுவார்கள்; வேறு சில பக்தியற்ற செல்வந்தர்கள் விருந்தாவனத்தில் வீடு வாங்கி குடியும் புகுவார்கள். ஆனால் நோயினால் பாதிக்கப்படும்போது உறவினர்கள் டில்லியிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கும் போது, அங்கே இறந்து விடுவர்.

இளமையிலேயே பக்தித் தொண்டிற்கு வருமாறு நாம் மக்களை அழைக்கும் போது, அவர்கள், “படிக்க வேண்டும், வேலை தேட வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், பிறகு அவர்களின் படிப்பு, திருமணம்…” என்று பட்டியலை வாசிப்பர், அது நீண்டு கொண்டே போகும். வாழ்க்கை முழுவதும் இவ்வாறு இருப்பவர்கள் அந்திம காலத்திலும் அதையே தொடர்கிறார்கள். பக்திக்கு நேரம் இல்லை என்று கூறுபவர்களை எமராஜரும் நேரம் சொல்லாமல் கொண்டு சென்று விடுவார். வாழ்க்கை முழுவதும் தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இறுதிக் கட்டத்திலும் அதுவே தேவைப்படுகிறது. எதை நாம் அதிகமாக செய்கிறமோ அதுதான் இறக்கும் தருவாயில் நினைவிற்கு வரும்.

ஒரு முறை மும்பையில் ஓர் இரயில் நிலையத்தில் பக்தர்கள் புத்தக விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது விபத்து நேர்ந்து ஒரு கூலித் தொழிலாளி பலத்த காயம்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். பக்தர்கள் அவரை கிருஷ்ணரிடம் அனுப்பும் ஆசையால் ஹரே கிருஷ்ண என்று சொல்லுமாறு பலமுறை வேண்டினர். ஆனால் அவனோ அதனைப் புறக்கணித்து விட்டு, பீடி லாவோ, பீடி லாவோ (பீடி கொடுங்களேன்) என துடித்து துடித்து கூறிவிட்டு இறந்து போனான். வாழ்க்கை முழுவதும் பீடி பிடித்தவருக்கு இறுதியிலும் பீடிதான் தேவையாக பட்டது, நினைவிற்கும் வந்தது; கிருஷ்ணர் நினைவிற்கு வரவில்லை. அதாவது, களங்கப்பட்ட ஆத்மாவினால் மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்தல் என்பது அசாத்தியமானதாகும்.

ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் எத்தகைய உணர்வுகளை வளர்க்கின்றனேரா அதுவே மரண நேரத்தில் நினைவிற்கு வரும்.

இறப்பின் துன்பம் அறிந்த குலசேகர ஆழ்வார்

இறப்பு என்பது சிக்கலான நேரம். எப்போது வேண்டுமானாலும் அந்த நேரம் ஒருவரது வாழ்வில் வரலாம். பரீக்ஷித் மகாராஜாவிற்கு ஏழு நாள்களில் இறக்கப் போகிறோம் என்பது தெரிந்தது. அந்த ஒரு வார காலத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவர் மூலம் கேட்டு அவர் பகவானை அடைந்தார். ஆனால் சாதாரண மனிதர்களால் எப்போது மரணம் நேரும் என்று சொல்ல முடியுமா? அந்த நேரத்தில் கிருஷ்ணரை தியானிக்க முடியுமா? மிகவும் கடினம்தான். இதை நாம் அனைவரும் அறிவதற்கே குலசேகர ஆழ்வார் முகுந்த மாலையில் பாடுகிறார்:

க்ருஷ்ண த்வதீய-பாத-பங்கஜ பஞ்ஜராந்தம்

அத்யைவ மே விஷது மானஸ-ராஜ-ஹம்ஸ;

ப்ராண-ப்ரயாண-ஸமயே கப-வாத-பித்தை:

கண்டாவரோதன-விதௌ ஸ்மரணம் குதஸ் தே

“எனதருமை கிருஷ்ணரே! இந்த க்ஷணமே எனது மனமாகிய அன்னம் தங்களின் தாமரைத் தண்டுகளைப் போன்ற திருவடிகளை பற்றிக் கொள்ளட்டும். இறக்கும் தருவாயில் எனது தொண்டையில் காற்றும், பித்தமும், சளியும் அடைத்துக்கொள்ளும். அப்போது உங்களை என்னால் எவ்வாறு நினைக்க முடியும்?” (முகுந்த-மால ஸ்தோத்திரம் 33)

இந்த ஸ்லோகத்தை ஸ்ரீல பிரபுபாதர் பல இடங்களில் மேற்கோள் காட்டி நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார். பல முறை பஜனையாக பாடிக் காட்டினார். நாம் நலமாக இருக்கும் போதே நேரத்தை வீணாக்காமல், காலன் வந்து கதவை தட்டும் வரை காத்திருக்காமல், நாம ஜெபம் செய்ய வேண்டும். சஞ்சலமான மனதை வலியுறுத்தி கிருஷ்ணரை தியானம் செய்ய வைக்க வேண்டியது அவசியம். பட்டுப் பூச்சியாக மாற வேண்டுமென்று தீவிரமாக விரும்பும் கம்பளிப் பூச்சி, ஒரே வாழ்வில் பட்டுப் பூச்சியாக மாற்றப்பட்டு விடுகிறது. அதுபோலவே, நாம் கிருஷ்ணரை வாழ்க்கை முழுவதும் இடையறாது தியானிப்போமாயின், இவ்வாழ்வின் இறுதியில் அவரை நாம் அடைவது உறுதி என ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்.

பக்தர்கள் கற்றுக் கொடுத்த சாகும் கலை

பன்னிரண்டு மகாஜனங்களில் (பக்தர்கள்) ஒருவரான பீஷ்மர் தன் கடமையை பற்றின்றி செய்தார். அம்புப் படுக்கையில் மிகுந்த உடல் வேதனையை அனுபவித்தபோதும் தன் மனதை கிருஷ்ணரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். கிருஷ்ணரின் உத்தரவுப்படி யுதிஷ்டிர மகாராஜாவிற்கு ராஜநீதியைப் பற்றி அறிவுரைகள் வழங்கினார். பிறகு, கிருஷ்ணரைப் புகழ்ந்து விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தைப் பாடி தன் தேகத்தை துறந்தார்.

பீஷ்மர், ஸ்ரீல பிரபுபாதர் போன்ற தூய பக்தர்கள் வாழ்வது எப்படி, இறப்பது எப்படி என்பதை நமக்குக் காட்டினார்கள். பெரியாழ்வாரும் இக்கலையை பின்வரும் பாசுரத்தின் மூலமாக நமக்குக் கற்றுத் தருகிறார்.

துப்புடையாரை அடைவதெல்லாம்

சோர்விடத்தே துணையாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னை அடைந்தேன்.

ஆனைக்கு நீ அருன் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது

அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

அரங்கத்தரவணை பள்ளியானே

ஆழ்வாரை பின்பற்றி நாமும், யானைக்கும் அருள் பாவித்த பகவான் மீது நம்பிக்கை கொண்டு, தொடர்ந்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபம் செய்ய வேண்டும். பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவில் வைத்திருப்பார். ஒருவன் தீவிர பக்தனாக வாழும்பட்சத்தில், அவன் தனது மரண தருவாயில், பகவானை மறந்தாலும் பகவான கிருஷ்ணர் அவனை மறக்க மாட்டார், தன்னை அந்த பக்தனுக்கு நினைவுபடுத்தி விடுவார். அஜாமிளனுக்கு இரண்டாம் சந்தர்ப்பம் கொடுத்தார், பரத மஹாராஜனுக்கு மான் சரீரத்திலும் நினைவு இருக்கும்படி செய்தார், யானையான கஜேந்திரனுக்கு முற்பிறவியில் செய்த பிரார்த்தனைகள் அனைத்தையும் நினைவுபடுத்தினார்.

எனவே, வாழ்க்கை முழுவதும் உண்மையான உள்ளத்தோடு பக்தித் தொண்டு செய்த பக்தனுக்கு வெற்றி நிச்சயம். உடல் வலிமை, இளமை இருக்கும் போது, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்.

வாழ்நாள் முழுவதும் தனது அரசக் கடமையைச் செய்தபடி பக்தித் தொண்டில் ஈடுபட்டிருந்த பீஷ்மர், கிருஷ்ணரை தரிசித்தபடியே தேகத்தைத் துறந்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives