அணுவிலிருந்து அண்டம் வரை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பதினோறாவது அத்தியாயம்

காலத்தைப் பற்றிய விதுரரின் கேள்விக்கு மைத்ரேயர் பின்வருமாறு தொடர்ந்து விளக்கமளித்தார்–இப்பிரபஞ்சம் முழுவதும் அணுவிலிருந்து அண்டம் வரை உயிர்களின் பல்வகைத் தோற்றங்களைக் கொண்டதாகும். உலகப் பொருட்களின் இறுதி மூலக்கூறு, பிரிக்க முடியாத துகளான அணு என்று அழைக்கப் படுகிறது. இவ்வணுக்களின் கூட்டினாலேயே ஜடவுடலும் ஜடவுலகமும் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வடிவங்கள் அழிக்கப்பட்ட பிறகும் அணுவானது எப்பொழுதும் கண்களுக்குப் புலனாகாத தனித்தன்மை உடையதாக இருக்கிறது.

(குறிப்பு: நவீன அணுவியல் கொள்கை, பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

அணுக்களின் இணைப்பைக் கொண்டு காலத்தைக் கணக்கிடலாம். இரு அணுக்கள் சேர்ந்து ஓர் இரட்டை அணுவாகிறது. மூன்று இரட்டை அணுக்கள் சேர்ந்து த்ரஸரேணு எனப்படும் ஆறு அணுக்களாக ஆகிறது. இந்த த்ரஸரேணுவை ஜன்னல் திரையின் துளைகளின் வழியே வரும் சூரிய ஒளியில் காணலாம், இது வான்நோக்கிச் செல்வதை நாம் தெளிவாகக் காணலாம்.

மூன்று த்ரஸரேணுக்கள் சேர்வதற்கான காலம் த்ருடி என்றழைக்கப்படுகிறது. நூறு த்ருடிகள் சேர்ந்து ஒரு வேத ஆகும். மூன்று வேத அளவுகள் இணைந்து ஒரு லவ எனப்படுகிறது.

மூன்று லவாக்கள் இணைந்தது ஒரு நிமேஷம் என்றும், மூன்று நிமேஷங்கள் இணைந்தது ஒரு க்ஷணம்    என்றும், ஐந்து க்ஷணங்கள் இணைந்தது ஒரு காஷ்டா என்றும், பதினைந்து காஷ்டாக்கள் இணைந்தது ஒரு லகு (சுமார் இரண்டு நிமிடங்கள்) என்றும், பதினைந்து லகுக்கள் இணைந்தது ஒரு நாடிகை அல்லது தண்டம் என்றும், இரண்டு தண்டங்கள் இணைந்தது ஒரு முகூர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆறு அல்லது ஏழு தண்டங்கள் இணைந்தது ஒரு யாமம் அல்லது பிரஹரம் (சுமார் மூன்று மணி நேரம்)ஆகும், நான்கு யாமங்கள் இணைந்தது ஒரு பகல் அல்லது ஓர் இரவு நேரமாகிறது (பன்னிரண்டு மணி நேரம்), பதினைந்து பகல்களும் பதினைந்து இரவுகளும் இணைந்தது ஒரு பக்ஷம் (இரண்டு வாரங்கள்) என்று அழைக்கப்படுகின்றது. சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் என இரண்டு பக்ஷங்கள் உண்டு.

இரண்டு பக்ஷங்கள் அல்லது நான்கு வாரங்கள் இணைந்தது ஒரு மாதம் என்றும், இரண்டு மாதங்கள் இணைந்தது ஒரு ருது அல்லது பருவம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆறு மாதங்கள் இணைந்தது ஒரு அயனமாகும், உத்தர அயனம், தக்ஷின அயனம் என இரண்டு அயனங்கள் உண்டு. இரண்டு அயனங்கள் இணைந்தது ஒரு வருடம் என்றும், ஒரு மனிதனின் ஆயுள் சராசரியாக நூறு வருடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நமது ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள் ஆகும், நமது ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். பரம புருஷ பகவானின் கட்டளைப்படி  இயங்கும் சூரியனானது அனைத்து வித்தியாசமான காலக் கணக்கீடுகளுக்கும் மையமாகத் திகழ்கிறது. நித்திய காலத்தில் நம்மை பாதிக்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள், ஒளிக் கோளங்கள், அணுக்கள் போன்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் தமக்குரிய கோளப் பாதைகளில் சுழல்கின்றன.

இவ்வாறு சூரியனிலிருந்து அணு வரை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறித்த காலத்திற்குரிய கோளப் பாதை உள்ளது. அதுவே ஸம்வத்ஸரமாகும்.

சூரியன் தம் அளவற்ற வெப்பத்தாலும் ஒளியாலும் அனைத்து உயிர்களுக்கும் புத்துணர்ச்சி தருகிறார். உலகப் பற்றின் மாயையிலிருந்து விடுவிப்பதற்காக அவர் உயிர்களின் வாழ்நாளைக் குறைக்கின்றார். இவ்வாறு தம் கோளப் பாதையில் மிகுந்த விசையுடன் சுழல்கிறார்.இவையனைத்தும் பரமபுருஷ பகவானின் சக்தியான நித்திய காலத்தின் கட்டுப்பாட்டில்  கீழ் இருப்பவையாகும். ஆகையால், அவரை உரிய வழிபாட்டுப் பொருட்களுடன் வணங்குவதன் மூலம் நமது மரியாதையை செலுத்துதல் வேண்டும்.

நான்கு யுகங்கள்

ஒரு சதுர் யுகம் எனப்படுவது ஸத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய நான்கும் சேர்ந்ததாகும்.

ஸத்ய யுகம் = 4,800 தேவ வருடங்கள்   =  17,28,000 மனித வருடங்கள்

திரேதா யுகம் = 3,600 தேவ வருடங்கள் =  12,96,000 மனித வருடங்கள்

துவாபர யுகம் = 2,400 தேவ வருடங்கள்  =  8,64,000 மனித வருடங்கள்

கலி யுகம் = 1,200 தேவ வருடங்கள்  =  4,32,000 மனித வருடங்கள்

ஸத்ய யுகத்தில் மனித இனம் சமய அறநெறிகளை முறையாகக் காத்து வந்தது. ஆனால் பிற யுகங்களில் சமய தர்மத்தின் நெறிமுறைகள் படிப்படியாகக் குறைந்து, அதர்ம பழக்கவழக்கங்கள் அதிகரித்து வந்துள்ளன.

பிரம்மாவின் பகல்

ஆயிரம் சதுர் யுகங்கள் பிரம்ம லோகத்தில் ஒரு பகலாகும். அதுபோன்ற காலம் பிரம்ம லோகத்தின் ஓர் இரவாகும். பிரம்மதேவரின் இரவு முடிந்தவுடன் அவரது பகல் பொழுதில் மூவுலகங்களின் படைப்பு மீண்டும் ஆரம்பமாகிறது. பிரம்மதேவரின் ஒரு பகல் பொழுதில் ஒருவர் பின் ஒருவராக 14 மனுக்கள் ஆட்சி செய்கின்றனர். ஒவ்வொரு மனுவின் ஆயுளும் சுமார் 71 சதுர் யுகங்களாகும். அது 8,52,000 தேவ வருடங்கள் அல்லது 30,67,20,000 மனித வருடங்களாகும். ஒவ்வொரு மனு தோன்றும்போதும் சப்தரிஷிகள், இந்திராதி தேவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் அவருடனேயே தோன்றுகின்றனர்.

பிரம்ம தேவரின் பகல் பொழுதில் ஸ்வர்கம், மர்த்யம், பாதாளம் எனும் மூவுலகங்களும் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்களின் சுழற்சியில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், பித்ருக்கள் போன்றோர் தத்தம் கர்ம வினைகளின் பலன்களுக்கேற்ப தோன்றவும் மறையவும் செய்கின்றனர்.

பிரபஞ்சத்தைக் காப்பதற்காக பகவான் ஒவ்வொரு மனுவின் ஆட்சிக் காலத்திலும் பற்பல அவதாரங்களை மேற்கொள்கிறார்.

பிரம்மாவின் இரவு

பிரம்மதேவரின் இரவு ஆரம்பிக்கும்பொழுது ஸங்கர்ஷணரின் வாயிலிருந்து வரும் ஊழித்தீயானது நூறு தேவ வருடங்கள் அல்லது 36,000 மனித வருடங்கள் எரிந்து கொண்டே இருக்கும். அதையடுத்து வரும் 36,000 வருடங்கள் புயற் காற்றுடன் கூடிய கன மழை பொழியும், கடல்களும் சமுத்திரங்களும் பொங்கிப் பிரவேசிக்கும். இந்த 72,000 ஆண்டுகளில் நிகழும் மாற்றத்தால் மூன்று உலகங்களின் ஒரு பகுதி அழியும்.

முழுமுதற் கடவுள் அந்த பிரளய வெள்ளத்தின் மீது அனந்தனைப் படுக்கையாகக் கொண்டு, விழிகள் மூடி துயில் கொண்டிருப்பார். அப்பொழுது ஜன லோகத்தைச் சேர்ந்தவர்கள் தமது கரங்களைக் கூப்பி அவரது அளவற்ற புகழைப் போற்றிக் கொண்டிருப்பர்.

பிரம்மாவின் வாழ்நாள்

பிரம்மதேவரின் ஆயுளான நூறு வருடங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் பகுதி ஏற்கனவே முடிந்துவிட்டது, இரண்டாவது பகுதி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிராம-கல்பம் எனப்படும் பிரம்மதேவரின் முதற் பகுதியின் ஆரம்பத்தில் அவர் தோன்றினார். அப்பொழுது அவருடன் சேர்ந்து வேதங்களும் தோன்றின. அவரது வாழ்நாளின் இரண்டாம் பகுதியின் ஆரம்பம் வராஹ கல்பம் எனப்படுகிறது.

பிரம்மதேவரின் நூறாண்டு காலமானது, ஜகத் காரணமான மஹாவிஷ்ணுவிற்கு ஒரு விநாடிக்கும் குறைவான நேரமாகும்.

பிரம்மதேவரின் நூறாண்டு காலமானது, ஜகத் காரணமான மஹாவிஷ்ணுவிற்கு ஒரு விநாடிக்கும் குறைவான நேரமாகும்.

கிருஷ்ணர் காலத்தைக் கட்டுப்படுத்துதல்

அணுவில் தொடங்கி பிரம்மதேவரின் ஆயுள் வரை பல்வேறு பரிமாணங்களையும் கட்டுப்படுத்துவது நித்திய காலமே ஆகும். இக்காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணரே. நாம் இருக்கும் இப்பிரபஞ்சத்தின் அளவு நானூறு கோடி மைல்களாகும். இது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் போன்ற எட்டு பூதங்களின் மூலக்கூறுகளால் ஆனது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் மூலப் பொருட்களின் அடுக்குகள் ஒவ்வொன்றும் முந்தையதைவிட பத்து மடங்கு பருமன் அதிகமாக உடையதாகும். அதாவது, பிரபஞ்சத்தின் அளவு நானூறு கோடி மைல், அதைச் சுற்றியுள்ள நில அடுக்கின் அளவு அதைவிட பத்து மடங்கு பெரியதாகும். நீர் அடுக்கின் அளவு அதைவிட பத்து மடங்கு பெரியதாகும். இதுபோல ஒவ்வொரு அடுக்கும் பத்து மடங்கு பெரியதாகும்.

இதுபோன்ற எண்ணற்ற பிரபஞ்சங்களை மஹாவிஷ்ணு தம் சுவாசக் காற்றில் தோற்றுவிக்கின்றார். இவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓர் அம்சம் ஆவார். எனவே, ஸர்வ காரண காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives