கயா

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.
[et_pb_section fb_built=”1″ _builder_version=”3.22″][et_pb_row _builder_version=”3.25″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.25″ custom_padding=”|||” custom_padding__hover=”|||”][et_pb_text _builder_version=”3.27.4″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat”]

விஷ்ணுபாத கோயில்

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

கயா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழகான ஃபல்கு நதிக்கரையில் அமைந்திருப்பதே கயா என்னும் புனித க்ஷேத்திரமாகும். இதிகாசங்களான இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இந்த கயா க்ஷேத்திரம் நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு, அத்வைத ஆச்சாரியர், இராமசந்திர பகவான் முதலிய பலரும் உலக மக்களின் தர்ம நெறி வாழ்விற்கு முன்னுதாரணமாக, கயாவிற்கு வருகை புரிந்து தமது மூதாதையர்களுக்கு பிண்டம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான இந்த கயாவின் மஹாத்மியத்தைச் சற்று காண்போம்.

கயாசுரன்

அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற்கொண்டபோது தேவலோகமே நடுங்கியது. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மாவை நாடினர், பிரம்மதேவர் தேவர்களுடன் சிவபெருமானை நாடினார், சிவபெருமானோ அனைவருடன் இணைந்து விஷ்ணுவை நாடினார். தேவர்களின் பயத்தைப் போக்க பகவான் விஷ்ணு கயாசுரனிடம், வேண்டிய வரத்தைக் கேள்,” என நேரடியாகக் கூறினார். இதைக் கேட்டு தேவர்கள் நடுங்கிப் போனார்கள்.

இருப்பினும், கயாசுரன் உடனடியாக பகவான் விஷ்ணுவிடம், தேவர்கள், ரிஷிகள், துறவிகள் முதலியோரைக் காட்டிலும் என் உடல் புனிதமாகப் போற்றப்பட வேண்டும், என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் கிட்ட வேண்டும்,” என வரமளிக்குமாறு வேண்டினான். விஷ்ணு பகவானும் கயாசுரனின் விருப்பத்தை வரமாக அருளினார். இதைக் கேட்ட தேவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கயாசுரன் பெற்ற வரத்தின் விளைவுகளை தேவர்கள் பின்னால் உணரத் தொடங்கினர்.

சுலபமாக ஸ்வர்கத்தை அடைதல்

கயாசுரனின் வரத்தை அறிந்த பலர் தங்களது இறுதி காலத்தில் அவனை தரிசித்து சுலபமாக ஸ்வர்க்கத்தை அடைந்தனர். இதனால் நரக லோகம் முழுவதும் கலைக்கப்பட்டு விடுமோ என்கிற கவலையில் எமராஜர் பிரம்மதேவரை நாடினார். நரக லோகம் கலைக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அதே சமயத்தில் நரக வேதனையின் அனுபவ பயமே ஒருவரை நல்வினை பாதைக்குத் தூண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என எமராஜர் வாதாடினார். தீய செயல்களைச் செய்தாலும் கயாசுரனின் ஸ்பரிச தொடர்பினால் கடைத்தேறி விடலாம் என்கிற தைரியம் ஏற்பட்டுவிட்டால், இயற்கையின நியதியே குளறுபடியாகிவிடும் என்றும் எமராஜர் தெரிவித்தார்.

எமராஜரின் செய்தியில் உண்மை இருப்பதை உணர்ந்த பிரம்மா அவரை அழைத்துக் கொண்டு பகவான் விஷ்ணுவை நாடினார். பகவான் விஷ்ணுவும் கயாசுரனிடம் விஷயத்தை ஒளிவு மறைவின்றி கூறி, ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு அவனது உடலை தானமாகக் கேட்டார். ஒரு நல்ல காரியத்திற்கு தன் உடல் பயன்படுமானால் அதைக் காட்டிலும் வேறு மகிழ்ச்சி இல்லை என்று கூறிய கயாசுரன் உடனடியாக வேள்விக்காக தன் உடலை அர்ப்பணித்தான்.

வேள்வி

தேவர் உலகமே பிரம்மாவின் தலைமையில் நடைபெற்ற அந்த வேள்வியில் பங்கெடுத்து கொண்டது. அத்தருணத்தில் கயாசுரனின் உடல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது. பிரம்மாவால் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஆட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அப்போது பகவான் விஷ்ணு தனது கதாயுதம் மூலமாக கயாசுரனின் உடல் ஆட்டத்தை நிறுத்தினார், கயாசுரனுடைய மார்பின் மீது தர்மசிலா என்கிற கல்லை வைத்து, தம் திருப்பாதத்தை அதன்மீது அழுத்தினார். கயாசுரன் யாகத்திற்காக உடலை அர்ப்பணித்த இடமே கயா என்று பெயர் பெற்றுள்ளது.

கயாசுரன் உயிர்விடுவதற்கு முன் விஷ்ணு பகவானிடம் மீண்டும் ஒரு வரம் கேட்டான். எல்லா தெய்வங்களும் தன் உடலில் உறைய வேண்டும் என்றும், இந்த க்ஷேத்திரம் கயா” என்று தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும், இத்திருத்தலத்தில் பிண்டம், சிரார்த்தம் விடுபவர்களின் பித்ருக்கள் அனைவரும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்றும், அவர்களை எந்த வகையான பாவமும் தீண்டக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டான். கயாசுரனின் வரம் தேவர்களையே மெய்சிலிர்க்க வைத்தது.

பகவான் விஷ்ணு தனது திருப்பாதத்தால் கயாசுரனை அழுத்துதல்

பிண்டம் விடுதல்

கயாசுரன் பெற்ற வரத்தினால் மூதாதையர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவிற்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என ஏங்கி காத்திருப்பர். கயாவில் பிண்டம் வழங்கிய பின்னர், வேறு எங்கும் பிண்டம் வழங்கத் தேவையில்லை என்பது ஐதீகம். கயாசுரனின் உடல் பதினெட்டு மைல் நீளம் கொண்டதால், கயாவில் பிண்டம் விடுவதற்கு பல இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பிரயாகையில் தலைமுடியை மழிப்பதும், காசியில் தண்டம் தரிப்பதும், கயாவில் பிண்டம் வழங்குவதும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

சைதன்ய மஹாபிரபுவின் கயா பயணம்

சைதன்ய மஹாபிரபுவின் கயா பயணம் பல முக்கிய உபதேசங்களை உள்ளடக்கியதாகும். சைதன்ய மஹாபிரபு தமது தந்தை ஜகந்நாத மிஸ்ரரின் மறைவிற்குப் பிறகு நவத்வீபத்திலிருந்து கயாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அவர் அங்கிருந்த பிராமணர்களிடம் விஷ்ணு பாதத்தின் புகழைக் கேட்டு பரவசப்பட்டார், அவ்விடத்தில் ஈஸ்வர புரியைக் கண்டவுடன் தமது கயா பயணம் வெற்றியடைந்து விட்டதாகக் கூறினார்.

சைதன்ய மஹாபிரபு ஈஸ்வர புரியிடம் தெரிவித்தார், புனித க்ஷேத்திரத்தில் யாருக்கு பிண்டம் அர்ப்பணிக்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே விடுதலை பெறுவர். ஆனால் உங்களை தரிசிப்பவர்கள் இலட்சக்கணக்கான மூதாதையர்களை உடனடியாக பௌதிக பந்தத்திலிருந்து விடுவிக்க முடியும்.”

கயாவில் உறவினர்கள் இறந்தவர்களுக்காக பிண்டம் கொடுத்தல்

உலக மக்களுக்கு முன்னுதாரணம்

சைதன்ய மஹாபிரபு ஸ்வயம் கிருஷ்ணரே எனும் போதிலும் அவர் உலக மக்களுக்கு முன்னுதாரணமாக கயாவில் பல லீலைகளை அரங்கேற்றினார். சைதன்ய மஹாபிரபு கயாவில் பரிந்துரைக்கப்பட்ட இடங்களான பிரேத கயா, ஸ்ரீராம கயா, யுதிஷ்டிர கயா முதலிய இடங்களில் முறையாக பிண்டம் செலுத்தி, இறுதியாக விஷ்ணு பாதத்தை மலர்மாலை மற்றும் சந்தனத்தால் வழிபட்டார்.

சைதன்ய மஹாபிரபு இவ்வாறாக சில நாள்கள் கயாவில் தங்கியிருந்தபோது ஈஸ்வர புரியை அடிக்கடி அணுகி தம்மை சீடனாக ஏற்று தீக்ஷை அளிக்குமாறு மன்றாடுவார். ஆன்மீக குருவை எதற்காக அணுக வேண்டும், எந்த மனநிலையில் அணுக வேண்டும் என்பதை சைதன்ய மஹாபிரபு உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். தீக்ஷை பெற்ற பிறகே அவர் கிருஷ்ண பிரேமையின் பரவசத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சைதன்ய மஹாபிரபு முந்தைய காலத்தில் ஸ்ரீ இராமசந்திரராக அவதரித்தபோது, கயாவில் தமது தந்தை தசரதருக்கு பிண்டம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தசரதருக்கு பிண்டம் விடுதல்

ஒருமுறை தசரதருக்கு பிண்டம் வழங்குவதற்காக இராமர், இலட்சுமணர், சீதை ஆகிய மூவரும் கயாவிற்கு வருகை புரிந்தனர். இராமரும் இலட்சுமணரும் ஃபல்கு நதியில் நீராடியபோது, சீதை கரையில் இருந்தாள். அப்போது சீதையின் முன்பாகத் தோன்றிய தசரதர் தமக்கு உடனடியாக பிண்டம் வேண்டும் என்றார். சிறிதும் தாமதிக்கக் கூடாது என தசரதர் வலியுறுத்தியதால், சீதை வேறு வழியில்லாமல் அரச மரம், ஃபல்கு நதி, பசு, துளசி, பிராமணர் ஆகிய ஐந்து சாட்சிகளின் முன்னிலையில் மண்ணைக் கொண்டு தசரதருக்கு பிண்டம் வழங்கினாள்.

பிறகு இராமசந்திர பகவான் தனது தந்தைக்கு பிண்டம் வழங்கத் தொடங்கியபோது, அதனை ஏற்பதற்கு தசரதர் தோன்றவில்லை. அப்போது சீதை நடந்த உண்மையை விளக்கி சாட்சிகளை அழைத்தாள். இராமர் மீதான பயத்தினால் அரச மரத்தை தவிர மற்றவர்கள் சாட்சி கூற முன் வரவில்லை. அதனால் கோபமடைந்த சீதை, ஃபல்கு நதி எப்போதும் வறண்டு காணப்படும், பசுவின் பின்புறத்தை மட்டுமே மக்கள் வழிபடுவர், பிராமணர்கள் பேராசையின் காரணமாக திருப்தியற்ற நிலையில் இருப்பர், துளசி குப்பைமேடுகளில் வளரும் என்று நால்வரையும் சபித்தாள். பிறகு, கயாவிற்கு வருகை புரியும் யாத்திரிகர்கள் அனைவரும் அரச மரத்திற்கு பிண்டம் வழங்குவர் என்று சீதை அரச மரத்தை நோக்கி ஆசிர்வதித்தாள். இப்பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

வறண்டு காணப்படும் ஃபல்கு நதி

சீதையால் ஆசிர்வாதிக்கப்பட்ட அரச மரம்

எனது கயா பயணம்

கயாவிற்கான எனது முதல் பயணம் பகவத் தரிசன குழுவினருடன் பாக்கியமான முறையில் அமைந்தது. கயாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்தவாறு மிகவும் புகழ்பெற்ற விஷ்ணுபாத கோயிலை அணுகியபோது, கோயிலின் பிரம்மாண்டமும் பழமையும் அனைத்து பக்தர்களையும் கவர்ந்தது. அதே போன்று மாலை வேளையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கயாவின் முக்கிய வீதியில் நாம ஸங்கீர்த்தனம் செய்தபோது, அது சைதன்ய மஹாபிரபுவின் பிரேம நாம ஸங்கீர்த்தன சுவையை நினைவுகொள்ளும் வகையில் ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்தியது.

நாங்கள் புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவிற்கு அருகில் தங்கியிருந்தோம். அவர் ஞானம் பெற்ற இடத்தில் நாம ஜபம் செய்தபோது, ஸ்ரீல பிரபுபாதருடைய நூல்களில் காணப்படும் ஞானத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக எண்ணிப் பார்த்தேன். புத்தர் கோயிலின் முன்புறத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த பழமையான ஜகந்நாதர், பலதேவர், சுபத்திரை தேவியின் கம்பீரமான கோயில் அனைத்து பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தற்போது கயாவில் புதிய இஸ்கான் கிளை கோயிலும் தொடங்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு கயா யாத்திரை சிரமமின்றி உதவிகரமாக உள்ளது. கொல்கத்தாவில் இருந்து ஏழு மணிநேர இரயில் பயணத்தில் கயாவை அடையலாம்.

கயாவில் உள்ள கௌடீய மடத்தில் காணப்படும் ஜகந்நாதர், பலதேவர், சுபத்திரை மற்றும் சைதன்யர், ராதா கிருஷ்ணர் விக்ரஹங்கள்

விஷ்ணுபாத கோயில்

கயாவில் பிண்டம் வழங்குவதற்காக பெரும்பாலான மக்கள் வருகின்றனர். இருப்பினும், அதற்கு மூல ஆதாரமாக அமைந்திருப்பது பகவான் விஷ்ணுவின் பாதத்துடன் இங்கு அமைந்திருக்கும் திருக்கோயிலாகும். பகவான் விஷ்ணுவின் திருப்பாதம் சங்கு, சக்கரம், கதாயுதம் முதலிய ஒன்பது அறிகுறிகளுடன் சுமார் 40 சென்டி மீட்டர் நீளத்தில் கல்லின் மீது அமையப் பெற்றுள்ளது. பாதத்தைச் சுற்றிலும் வெள்ளியினால் ஓர் அரண் அமைக்கப்பட்டு மக்கள் பாதத்தினை வழிபடுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழமையான இத்திருத்தலத்தின் தற்போதைய கட்டிடங்கள் 1787இல் இந்தோர் பகுதியின் இராணியான அகல்யா பாய் ஹோல்கரால் எழுப்பப்பட்டன. பெரிய கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரம் 100 அடி உயரம் கொண்டதாகும். கோயிலின் முற்றத்தில் எட்டு வரிசையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் அமையப் பெற்றுள்ளன. கோயில் கோபுரத்தின் உச்சியில் 51 கிலோ எடையுள்ள தங்கக் கொடி அமைந்துள்ளது.

கோயில் வளாகத்தினுள் சீதைக்கு சாட்சி கூறி அமரத்துவம் பெற்ற சிறப்பான அரச மரமும் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி பல்வேறு சிறிய சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. கோயில் வளாகத்திலிருந்து வெளியே வந்தால், சுமார் 100 படிக்கட்டுகளுடன் கூடிய படித்துறையைக் காணலாம். இந்த ஃபல்கு நதி பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது, சில சமயங்களில் சுமார் ஓர் அடி ஆழத்திற்கு நீர் காணப்படும் என்று கூறுகின்றனர். முன்னரே கூறியபடி, சீதையின் சாபமே இதற்கு காரணம்.

பகவான் விஷ்ணுவின் திருப்பாதம்

கயா க்ஷேத்திரம்

கயாவில் புனித தீர்த்தம் இல்லாத இடமே இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது, கௌடீய வைஷ்ணவர்கள் கயா க்ஷேத்திரத்தை குரு பக்தி க்ஷேத்திரமாக போற்றுவதால் ஆன்மீக குருவின் உபதேசங்களை உற்சாகத்துடன் கடைபிடிப்பதற்கு விஷ்ணு பாத கோயிலில் தீவிர பிரார்த்தனைகளைச் செய்தோம்.

[/et_pb_text][et_pb_sidebar area=”sidebar-project” _builder_version=”4.9.10″ _module_preset=”default”][/et_pb_sidebar][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives