பிரபுபாதரின் புத்தகங்களை அனைவருக்கும் கொடுங்கள்

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருநாள் காலை எட்டு மணி அளவில் எனது இல்லத்தருகே இருந்த ஒரு கோயிலில் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது கோயிலிலிருந்து விரைந்து வெளியேறிய ஒருவரிடம் பகவத் கீதையைக் காட்டி விளக்கத் தொடங்கினேன். ஆர்வத்துடன் செவிமடுத்த அவர், அவசர பணியினை காரணம் காட்டி எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு, பிறகு தொடர்புகொள்வதாகக் கூறிச் சென்றார். சில நாள்களுக்குப் பின் என்னைத் தொடர்பு கொண்ட அவர், தமது மனைவியுடன் எனது இல்லத்திற்கு வந்து பகவத் கீதையைப் பெற்றார். அன்று முதல் இன்று வரை பகவத் கீதையைப் பயின்று கிருஷ்ண பக்தியைத் தமது குடும்பத்துடன் இணைந்து எங்களுடன் பயிற்சி செய்து வருகின்றார். ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதை உண்மையுருவில் நூலுடன் அவருக்கு ஏற்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த சங்கமே இன்றைக்கு அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்பம் என்று அவரும் அவரது மனைவியும் நன்றி பாராட்டாத நாளே இல்லை.

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை விநியோகிக்கும் பக்தர்களிடம் இதைப் போன்ற எண்ணிலடங்கா நிகழ்வுகளை நாம் கேட்டறியலாம். இன்று இஸ்கானில் உள்ள பக்தர்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படிப்பதாலேயே தங்களது ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறி ஆனந்தமாக வாழ்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். அவ்வகையில், ஸ்ரீல பிரபுபாதரின் மகத்தான புத்தகங்களை விநியோகிப்பதன் மகிமைகளையும் அதன் அவசியத்தையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

உண்மையான அறிவு – ஆத்ம ஞானம்

நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சென்று தனது உடலின் நோயை குணப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளான், அதில் கவனக் குறைவாக இருப்பது தனது உடலைப் பாதிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்துள்ளான். ஆனால் அதே வேளையில் உடலுக்குள் கட்டுண்டு கிடப்பதே தன்னுடைய (ஆத்மாவின்) உண்மையான நோய் என்பதையும் அதை குணப்படுத்துவதற்கான மருத்துவத்தை அறியாதவனாகவும் அவன் உள்ளான். ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த அறிவு, சிந்தனைகள், மன நிம்மதி உள்ளிட்ட பூரண ஞானத்தையும் பக்தியையும் அளிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை. நாம் உடல் அல்ல, ஆத்மா” என்ற அறிவைப் பெற்று அதனை உணர, அன்றாட வாழ்விற்கான போதனைகளைக் கொண்ட இப்புத்தகங்களை நாம் படித்தேயாக வேண்டும். மேலும், ஆன்மீக மருந்தாகத் திகழும் இப்புத்தகங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் முழு ஆர்வத்துடன் அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். ஏனெனில், பகவத் கீதை (2.40) குறிப்பிடுவதுபோல, இப்புத்தகங்களை விநியோகிப்பவரும் அதனைப் பெறுபவரும் முற்றிலும் ஆன்மீகமயமான தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவதால், அவர்கள் எவ்வித இழப்புமின்றி பூரண ஆன்மீகப் பலனை அடைகின்றனர்.

பகவானின் காரணமற்ற கருணை

அத்தகைய ஆன்மீகப் பலன்களைப் பெற விழையும் ஒருவருக்கு பகவானின் காரணமற்ற கருணை இன்றியமையாதது. கலி யுக மக்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவும் அமைதியற்றவர்களாகவும் அற்ப ஆயுள் உடையவர்களாகவும் இருப்பர் என்று ஸ்ரீமத் பாகவதம் (1.1.10) கூறுகின்றது. அப்படிப்பட்ட மக்களும் பகவானுடைய தூய பக்தரின் சங்கத்தின் மூலமாக, பகவான் கிருஷ்ணரது கருணையைப் பெற்றால், அவர்களது பாவங்கள் அனைத்தும் பொசுக்கப்பட்டு, பகவானின் தூய பக்தித் தொண்டைப் பெற முடியும். அந்த தூய பக்தர், தமது சங்கத்தால், பௌதிக நோய் எனும் காட்டுத் தீயால் தவிக்கும் கீழ்நிலை மக்களையும் கடல்போன்ற பகவானின் காரணமற்ற கருணையை சூரியனைப் போன்று முகந்து, மேகங்களைப் போன்று தாங்கி, காற்றைப் போல எடுத்துச் சென்று, மக்களின் மீது பொழிந்து நிரந்தர ஆன்மீக நிவாரணத்தை வழங்க முடியும். பகவான் கிருஷ்ணரின் தூய பக்தரானஶ்ஸ்ரீல பிரபுபாதரின் சங்கத்தை அவரது புத்தகங்களின்

மூலமாக அனைவரும் எளிதில் பெற்று பயனடையலாம். எனவே, சூரியனைப் போன்ற இப்புத்தகங்களை நாம் இல்லந்தோறும் விநியோகித்தால், மக்களை விழுங்கியுள்ள பௌதிக இருளை அவர்களிடமிருந்து அகற்றி விட முடியும்.

 

ஆத்மா, புத்தி, மனம், உடல்-தூய்மை

பௌதிக புலன்களைக் காட்டிலும் மனம் சக்தி வாய்ந்தது என்றும், மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஆத்மா புத்தியைவிட உயர்ந்தது என்றும் பகவத் கீதை உபதேசிக்கிறது. ஆத்மா, பௌதிக இயற்கையை ஆதிக்கம் செய்யவே தனது விருப்பத்தைப் பயன்படுத்துவதால், மாயா சக்தியின் வலையில் சிக்கித் தவிக்கின்றது. மாறாக, ஆத்மா தனது விருப்பத்தை பகவான் கிருஷ்ணரது ஆன்மீக சேவையில் ஈடுபடுத்தும்போது, ஆத்மாவுடன் சேர்ந்து புத்தி, மனம், புலன்கள் என அனைத்தும் தூய்மையடைகின்றன. அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் ஆன்மீக அறிவை உள்ளது உள்ளபடி வழங்கும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அனைவரும் தங்களது சுய விருப்பத்தை கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுத்தி பயனடையலாம். ஆதலால், இப்புத்தகங்களை அனைவரிடமும் விநியோகிப்பது அவசியம்.

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் சூரியனைப் போன்று இருளில் மூழ்கியிருக்கும் மக்களைக் காப்பாற்றக் கூடியது.

கல்லையும் கரைக்கும் ஆற்றல்

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் ஆன்மீக சக்தி முழுமையாக அடங்கியுள்ளதாலேயே, உலகின் மூலை முடுக்குகள் எங்கும் கிருஷ்ண பக்தி இயக்கம் இன்று பரவியுள்ளது. இப்புத்தகங்களை பரந்து விரிந்த அளவில் விநியோகித்து அனைவரும் அதனைப் படிக்க உதவியதாலேயே, பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று தங்களது பாவகரமான வாழ்க்கையை விட்டொழித்து தூய பக்தியில் முன்னேறியுள்ளனர் என்றால், அது மிகையாகாது. மேலை நாடுகளிலுள்ள பெரும்பாலான மக்கள் நாத்திக கொள்கைகளில் வெறியுடன் செயல்பட்டு அசுர மனப்பான்மையுடன் கல்நெஞ்சம் படைத்தவர்களாக வாழ்கின்றனர். அத்தகு மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஏற்படுத்திய இடையூறுகளையும் சித்ரவதைகளையும் பொறுத்துக்கொண்டு, ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் இப்புத்தகங்களை பரவலாக விநியோகித்தனர். அவ்வாறு அந்த பக்தர்கள் புத்தக விநியோகத்தில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இன்று ஏராளமான கிருஷ்ண பக்தர்கள் அந்நாடுகளில் தூய பக்தியை தங்களது உயிர் மூச்சாகப் பயிற்சி செய்து வருகின்றனர்.

பகவானைப் பற்றிய பூரண ஞானம்

கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அனைத்து உயிர்வாழிகளும் அவரது நித்திய சேவகர்கள் என்னும் வேத கருத்திற்கேற்ப தூய பக்தித் தொண்டு மூலம் பகவான் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதால் மட்டுமே அனைத்து ஜீவன்களும் திருப்தியடைய முடியும் எனும் உண்மைகளை ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் போதிக்கின்றன. ஸம்சாரக் கடலைக் கடக்க உதவுகின்ற ஆன்மீகப் படகு என்ற போர்வையில் மாயாவாதம், அருவவாதம், பௌதிகவாதம், சூன்யவாதம் போன்ற பல்வேறு பாதைகள் கட்டுண்ட அப்பாவி ஆத்மாக்களை விழுங்கும் திமிங்கலங்கள் அல்லது முதலைகளாக இருக்கின்றன. இவ்வனைத்து அபாயங்களையும் அப்புறப்படுத்தி, குரு, சாது, சாஸ்திரத்தின் அடிப்படையில் பகவானின் தாமரைத் திருவடிகள் எனும் ஆன்மீகப் படகை தமது புத்தகங்கள் மூலம் ஸ்ரீல பிரபுபாதர் அடையாளம் காட்டுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பகவத் கீதையில், ஆயிரமாயிரம் மனிதர்களுள் யாரேனும் ஒருவரே தம்மை முழுமையாகப் புரிந்துகொள்வதாக கூறுகிறார். உலகின் உண்மையான மத ஒற்றுமையை நிலைநாட்டி, கட்டுண்ட ஆத்மாக்களை சரியான ஆன்மீகப் பாதையில் ஸ்ரீல பிரபுபாதர் (குறிப்பாக, தன்னையறியும் விஞ்ஞானம் போன்ற தமது புத்தகங்களின் மூலம்) வழிநடத்திச் செல்கிறார்.

பிரபுபாதரை திருப்திப்படுத்துவோம்

பணமோ கட்டிடமோ வேறு எதுவுமே எனக்குத் தேவையில்லை, என் புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் காண விரும்புகிறேன். நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பதால், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” (பிரகலாதானந்தருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 28.8.1973)

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தக விநியோகத்தை உலகெங்கும் அதிகரிப்பதன் மூலம், அவர் நிச்சயம் திருப்தியடைகின்றார் என்பது மேற்குறிப்பிடப்பட்ட அவரது கடிதத்தின் மூலம் தெளிவாகின்றது. ஆன்மீக குருவை திருப்திப்படுத்துவதே பகவான் கிருஷ்ணரை உடனடியாக திருப்திப்படுத்தும் எளிய வழி என்பதால், நாம் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை உற்சாகத்துடன் விநியோகிப்போமாக.

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்கள்

About the Author:

mm
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

Leave A Comment