வாழ்வின் குறிக்கோள்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

வாழ்வின் குறிக்கோள் யாது என்று மக்களிடம் வினவினால், புலன்களால் இந்த உலகப் பொருட்களை அனுபவித்தல் என்றோ இந்த ஜடவுலகில் உயர்ந்த நிலைக்கு வருதல் என்றோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்தல் என்றோ பதில் வரும். இவையெல்லாம் தான் இந்த உடல் என்றும் தனக்கு சம்பந்தமானவற்றை தனது என்றும் நினைப்பதால் ஏற்படுபவை. வாழ்வின் நோக்கமின்றி வாழ்வதைச் சாடும் வகையில் வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை, ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன

பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

“இவ்வழி” என்று இங்கே குறிப்பிடப்படுவது கிருஷ்ண உணர்வு பாதை அல்லது புத்தி யோகம் என்று ஸ்ரீல பிரபுபாதர் தன் பொருளுரையில் விளக்குகிறார். 

கிருஷ்ண உணர்வின் உள்ளடக்கங்களாகிய இறைவனை அறிதல், அவரிடம் அன்பு செலுத்தப் பழகிக்கொள்ளுதல், அன்பைப் பெறுதல் இவையே வாழ்வின் குறிக்கோள் என்பது உறுதியாகிறது.

இந்த ஜடவுலகின் படைப்புகள் யாவும் நிலையற்றவை, அழியக்கூடியவை. தன் உடம்பே அழியக்கூடியது என்பதை மறந்து மனிதர்கள் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். பெரும்பாலானவை மனித குலத்திற்கே இடையூறு விளைவிப்பனவாக உள்ளன. இவற்றை அசுர வேலை என்று பகவத் கீதையின் 16ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகிறார். இந்த நிலையற்ற சிக்கலான வாழ்க்கை நமது வாழ்வின் குறிக்கோள் அல்ல.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) இங்கே பௌதிக உலகில் துன்புறும் ஆத்மாக்களின் மீதான தனது வருத்தத்தை திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:

மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

நம்மைக் கடைத்தேற்றுவதற்காக கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து போதனைகளைத் தொடர்ந்தார். பகவான் கிருஷ்ணர் இந்த மனித குலத்தின் மீது வைத்திருக்கும் கருணையை என்னவென்று கூறுவது? எல்லாவற்றிலும் உயர்ந்த இடமான முழுமுதற் கடவுளின் இருப்பிடத்தை அடைதல் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வரையறுத்துக் காட்டியுள்ளார். மேலும், திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.” இறைவனிடம் சரணாகதி செய்து அன்புத் தொண்டாற்றுவதே எல்லா ஆழ்வார்களுடைய விருப்பமும் தவமும். எல்லா ஆழ்வார்களும் முழுமுதற் கடவுள் கண்ணனையும் அவனது திருஅவதாரங்களையும் கொண்டாடுவதை நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் காணலாம்.

தூய வைணவர்களின் விருப்பம் எங்கிருந்தாலும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு அன்புத் தொண்டாற்றுவதே. அவர்கள் எந்த வகையான முக்தியையும் எதிர்பார்ப்பதில்லை. இதை ஆஞ்சநேயரின் வாழ்விலிருந்தும் காணலாம். ஸ்ரீமத் பாகவதமும் இத்தகைய தூய பக்தியே சிறந்ததென்று குறிப்பிடுகிறது.

பகவான் ஸ்ரீ சைதன்யர் தனது சிக்ஷாஷ்டகம் நான்காவது பாடலில், “எனது ஜன்ம ஜன்மங்களில் கிருஷ்ணா, உனது அன்புத் தொண்டே எனக்குத் தேவை,” என்று கூறுகிறார். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹய, க்ரிஷ்ணேர நித்ய-தாஸ, “ஜீவனுடைய உண்மையான தன்மை கிருஷ்ணருடைய நித்திய அன்புத் தொண்டனாக இருப்பதே,” என்பதே பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாக்கியம். இதை மகா வாக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை ஒருவன் கற்றுத் தேர்ந்தாலும், முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

ஆதிபகவனுக்கு தொண்டாற்றினால், நிலையற்ற வாழ்வின் கடலிலிருந்து விடுபடுவோம்.

2018-06-11T15:13:55+00:00October, 2016|பகவத் கீதை|0 Comments

About the Author:

தயாள கோவிந்த தாஸ் M.Tech., Ph.D. அவர்கள், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண பக்தியைக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment

Caitanya Caritamrita 

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)

மூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்..
ORDER NOW
close-link