வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

 

பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் தற்போதைய குழப்பமான சூழ்நிலையில், கார்கள் அதிக வேகத்துடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஆனால் அவர் களுக்கு “வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பது தெரியாது, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? இவ்வளவு வேகமாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி என்ன வேலை?” என்று அவர்களில் யாரிடமாவது வினவினால், ஒவ்வொருவரும் கூறுவர்: “எனக்கு அலுவல் உள்ளது, நான் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறேன்.” “என்ன அலுவல்?” என்று கேட்டால், “சிறிது பணம் சம்பாதித்து, குடும்பத்தைப் பராமரிப்பதே அலுவல்.” பகலில் சிறிது பணம் சம்பாதித்தும் குடும்பத்தைப் பராமரிப்பதும், இரவில் தூங்குவதும் காமத்தில் ஈடுபடுவதும்–இது வாழ்க்கையின் குறிக்கோளா?

பேராசிரியர்: வாழ்க்கையின் குறிக்கோள் அஃது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து ஒருவிதமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன், வேறு எதுவும் போதிக்கப்படவில்லை. நான் எவ்வாறு வேறுவிதமான வாழ்க்கையை அடைய முடியும்?

பிரபுபாதர்: அதை எவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும் என்பதை இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் நாங்கள் கற்பிக்கிறோம். எனவே, தலைமை ஏற்று நடத்தக்கூடிய எல்லா நபர்களையும் இந்த இயக்கத்தைப் புரிந்து கொண்டு இதில் சேருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதுவே எங்கள் விண்ணப்பம்.

பேராசிரியர்: ஒரு கேள்வி, குடும்பத்தைப் பராமரிப்பது, படுக்கைக்குச் செல்வது, காமத்தில் ஈடுபடுவது என்பவையே வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் இவை வாழ்க்கையின் ஒரு பகுதி.

பிரபுபாதர்: இதை நானும் அறிவேன், ஒவ்வொருவரும் அறிவர். ஆனால் அதற்கு மேலே வாழ்க்கைக்குச் சில குறிக்கோள்கள் இருக்க வேண்டும்.

பேராசிரியர்: ஆனால், நான் நினைப்பது என்னவெனில், ஒரு விதமான அடக்கம், பணிவு போன்றவை தேவை.

பிரபுபாதர்: இல்லை. பணிவு மனப்பான்மை என்பது ஒரு நல்ல தகுதியே, ஆனால் மிருகங்களிடம்கூட பணிவு இருப்பதை நாம் காணலாம். அதன் குரல் வளையை நீங்கள் வெட்டினால் அஃது எதுவும் கூறாது. எனவே, பணிவுடைமை என்பது வேறு விஷயம்; ஆனால் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்? உண்மையில் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நாம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்து விட்டு வெறுமனே கழுதையைப் போன்று பணிவுடையவர்களாகி விட்டால், அது நல்ல தகுதி ஆகிவிடுமா? கழுதை கூடப் பணிவாக உள்ளது. அதன் மீது டன் கணக்கில் சுமை ஏற்றுகிறீர்கள்; அஃது எதிர்ப்பு தெரிவிக்காது, மிகவும் பணிவாக உள்ளது.

பேராசிரியர்: வாழ்க்கையின் குறிக்கோள் தெய்வீகத்தை அடைவது.

பிரபுபாதர்: ஆமாம், சரி. வாழ்க்கையின் குறிக்கோள் தெய்வீகத்தை உணர்வது. ஆனால் அவர்கள் அதனை மறந்து, புலனுகர்ச்சியையே வாழ்க்கையின் குறிக் கோளாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

பேராசிரியர்: நாம் உணர வேண்டிய தெய்வீக நிலை என்ன?

பிரபுபாதர்: தெய்வீகம் என்றால் பூரண உண்மை. தெய்வீகம் என்று நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?

பேராசிரியர்: தெய்வீகம் என்பதை பிரபஞ்சத்தின் உணர்வாகவும் கடவுளைத் தேடுவதாகவும் நான் பொருள் கொள்கிறேன்.

பிரபுபாதர்: ஆமாம், நீங்கள் கூறுவது சரி. மிருகங்களால் தெய்வீகத்தைப் பற்றி விசாரணை செய்ய முடியாது என்பதால், இந்த மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது. மனிதன் தெய்வீகத்தில் நாட்டமில்லாது இருந்தால், அவன் மிருகமே! உடல் சம்பந்தப்பட்ட தேவைகளான, உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காத்துக் கொள்வது ஆகியவற்றில் மட்டும் சிரத்தையாக இருப்பவன் மிருகமே. “நாய் தெருவில் உண்கிறது; நாம் அருமையான சுவையான உணவு வகைகளை உண்கிறோம்,” என்று நீங்கள் நினைத்தால், அது நாகரிக முன்னேற்றமாகாது; ஏனெனில், இரண்டுமே உண்ணும் விஷயம்தான். அதுபோலவே, உறங்குதல்–மிருகங்கள் தெருவில் உறங்குகின்றன; நாம் ஓர் அருமையான தங்குமிடத்தில் உறங்குகிறோம். ஆனால் தூங்கும்போது கனவில் நாம் மிருகங்களைவிட பல பயங்கரமான விஷயங்களைக் காண்கிறோம். எனவே, உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது–இவை மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பொதுவான விஷயங்கள். எனவே, மனிதன் தெய்வீகத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பும் போதுதான், மிருகத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறான். அது வேதாந்த சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது, அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ, தற்போது மனித உடல் நமக்குக் கிடைத்துள்ளது, நாம் பிரம்மன் அல்லது தெய்வீகத்தைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். எனவே, நம்முடைய உடலின் தேவைகள் எளிமையாக்கப்பட வேண்டும். தெய்வீகத்தைப் பற்றி விசாரணை செய்ய நேரத்தை சேமிக்க வேண்டும். எனவே, தெய்வீகத்தைப் பற்றி விசாரணை செய்யாதவரை, நாம் இரண்டு கால் மிருகமே! இதுதான் கலாச்சாரம். இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள்.

பேராசிரியர்: ஐரோப்பிய சரித்திரத்தில் தெய்வீகத்தைத் தேடுதல் என்னும் பெயரில் பல போர்கள் நடந்தன; மனிதர்களுக்கிடையில் வெறுப்பும் பகையும் தோன்றின. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்–ஸ்பெயினில் புலனாய்வு என்ற பெயரால் பல மக்களை எரித்தார்கள். மேலும், தெய்வீகத்தைத் தேடுதல் என்ற பெயரால் பல கெட்ட விஷயங்கள் நடந்துள்ளன. நீங்கள் கூறும் செயல் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

பிரபுபாதர்: வேறுபாடு என்னவெனில், நாங்கள் எடுத்துரைக்கும் தெய்வீக நிலை, மனதிற்கும் உடல் சம்பந்தப்பட்ட செயல்களுக்கும் அல்லது புத்திக்கும்கூட அப்பாற்பட்டது. ஐரோப்பிய தத்துவவாதிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் உண்மையில் தெய்வீகம் என்றால் என்ன என்றே தெரியாது. அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் அங்கு என்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், தங்களின் பக்குவமற்ற புலன்களைக் கொண்டு அவர்கள் மனக்கற்பனை செய்கின்றனர்; படிப்படியாக அதுவே பைத்தியக்காரத்தனமாகிறது. இதனால்தான், அங்கு நீங்கள் குறைகளைக் காண்கிறீர்கள்.

பக்குவமான அறிவைப் பெறுவதற்கு நீங்கள் பக்குவமான நபரை அணுகுங்கள், அப்போது நீங்கள் படிப்படியாக பக்குவமடைவீர்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives