வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

கிருஷ்ணரும் பலராமரும் ஓடி விளையாடி, அன்னை யசோதைக்கும் இதர மூத்த கோபியர்களுக்கும் சொல்லவியலா மகிழ்ச்சியைக் கொடுத்த ஊர் கோகுலம். இன்றைய இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில், கிருஷ்ணர் பிறந்த மதுராவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் மனதை மயக்கும் யமுனை நதிக்கரையில் கோகுலம் அழகின் உருவாக அமைந்துள்ளது. அந்த கோகுலத்தினுள் நுழையலாமே!

கிருஷ்ணர் கோகுலம் செல்லுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில், வஸுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றினார். சிறையிலிருந்த வஸுதேவரின் சங்கிலிகள் அறுந்தன, சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன, சிறை காவலர்கள் ஆழ்ந்து உறங்கினர். வஸுதேவர் குழந்தை கிருஷ்ணரை எடுத்துக் கொண்டு நந்த மஹாராஜர் வாழ்ந்த கோகுலத்தை நோக்கி முன்னேறினார், ஆர்ப்பரித்து சீறிய யமுனையும் வஸுதேவருக்கு வழி விட்டது.

நந்த மஹாராஜரின் இல்லமானது மஹாவனம் என்ற பகுதியைச் சார்ந்த கோகுலத்தில் இருந்தது. குழந்தை கிருஷ்ணரை வஸுதேவர் யாருக்கும் தெரியாமல் நந்த மஹாராஜரின் இல்லத்தில் அன்னை யசோதையின் அருகில் வைத்துவிட்டு, அன்னை யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையைக் கையில் சுமந்தபடி மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

கிருஷ்ணர் கோகுலத்தில் நமது கணக்கின்படி மூன்று ஆண்டு நான்கு மாதம் வரை எண்ணற்ற லீலைகளை அரங்கேற்றினார்.

நந்த பவனம்

நந்த மஹாராஜர் வசித்த அனைத்து இல்லங்களுமே நந்த பவனம் எனப்படுகிறது. கோகுலத்தில் இருக்கும் நந்தபவனின் தனிச்சிறப்பு யாதெனில், இங்குதான் முதன் முதலில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியும் கிருஷ்ண-பலராமரின் குழந்தைப் பருவ லீலைகளும் ஆரம்பமாயின.

வஸுதேவர் கிருஷ்ணரை கோகுலத்தில் விட்டுச் சென்ற பின்னர், மறுநாள் காலை நந்த பவனத்தை மையமாக வைத்து கோகுலமே விழாக்கோலம் பூண்டது. யசோதைக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்த கோகுலவாசிகள் ஆடம்பர உடைகளை அணிந்து பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, குதூகலத்துடன் நந்த பவனிற்கு கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

கிருஷ்ணரின் வரவை கோலாகலமாக கொண்டாட விரும்பிய நந்த மஹாராஜர் அரண்மனை முழுவதையும் மலர்களாலும் பட்டுத் துணிகளாலும் அலங்கரித்து, நறுமணப் பொருட்களால் மணம் கமழச் செய்தார். கோகுலவாசிகள் வீதி முழுவதும் ஒருவர் மீது ஒருவர் தயிர், பால் மற்றும் வெண்ணையைத் தெளித்து தங்களது பேரானந்தத்தை வெளிப்படுத்திய வண்ணம் கிருஷ்ண பிரேமையில் மூழ்கினர். கிருஷ்ணர் தமது திருமேனி, முக வசீகரம், புன்முறுவல் முதலியவற்றால் அனைத்து கோகுலவாசிகளையும் ஆட்கொண்டு, அவர்களது இதயத்தில் பேரானந்த அலையை ஏற்படுத்தினார்.

நந்த மஹாராஜர் பிராமணர்களுக்கு 18 இலட்சம் பசுக்களை தானமாகக் கொடுத்தார். அனைத்து பசுக்களும் முத்துமாலை மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. கோகுலத்தின் ஐஸ்வரியத்தை இதன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய நந்த பவன நுழைவு வாயில்

மதிமயங்கிய கோகுலவாசிகள்

கிருஷ்ணரின் அழகைக் கண்டுகளித்த கோகுலவாசிகள் கண்கள் படைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய தொடங்கினர். கிருஷ்ணர் படிப்படியாக வளரத் தொடங்கினார். மழலைப் பேச்சில் மதிமயங்குவது அனைவருக்கும் இயல்பு. கிருஷ்ண-பலராமரின் மழலைப் பேச்சுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? கோகுல மண்ணில் அவர்கள் தவழ்ந்து விளையாடுகிற காட்சிகளைக் கண்ட கோகுலவாசிகள் தங்களது இதயங்களை பறிகொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவித ஆன்மீக பெருமிதமும் கொண்டனர்.

கோகுலத்தின் அரண்மனை

இன்றைய கோகுலத்திற்குச் செல்வோம்.

கோகுலத்திற்கு தற்போது பயணம் மேற்கொள்பவர்கள் நந்த பவனில் கம்பீரமாக காட்சியளிக்கும் 84 தூண்களைக் காணலாம். 5,000 வருடத்திற்கு முன் நந்த மஹாராஜரின் காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் இன்றும் இவ்விடத்தில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்விடம் தற்போது கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. நந்த மஹாராஜர் அன்னை யசோதையின் மூர்த்திகளுக்கு நடுவே கருமை நிறத்தில் பலராமரின் விக்ரஹத்தையும், தொட்டிலில் புல்லாங்குழல் ஊதும் கோபாலரின் விக்ரஹத்தையும் காணலாம்.

சைதன்ய மஹாபிரபு தமது விரஜ மண்டல பயணத்தில் கோகுலத்தை அடைந்தபோது, அவரது பரவச ஆனந்தம் கோடி மடங்கு அதிகரித்தது. சைதன்ய மஹாபிரபு பரவசமாக நடனமாடி தமது கருணையை அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வழங்கினார். அவர்கள் கிருஷ்ணரின் இருப்பை சைதன்ய மஹாபிரபுவின் மூலம் உணரத் தொடங்கினர்.

நந்த பவனிற்கு வெகு அருகில் நந்த மஹாராஜரின் கோசாலை அமைந்துள்ளது. இந்த கோசாலைக்கு சற்று தூரத்தில் சப்த-சமுத்திர கிணறும் உள்ளது. இந்த கிணற்றில் பிரபஞ்சத்தில் காணப்படும் ஏழு சமுத்திரங்களின் நீரும் உள்ளடங்கி காணப்படுகிறது. வைசிய மன்னரான நந்த மஹாராஜர் பாரம்பரிய வழக்கமாக இந்த கிணற்றில் தினந்தோறும் நீராடுவார். வைசிய தொழிலில் தெரியாமல் செய்யும் பாவ விளைவுகளிலிருந்து விடுதலை பெற இக்கிணற்று நீர் உதவுகிறது என்பது ஐதீகம்.

நந்த பவனத்தின் 84 தூண்களின் ஒரு பகுதி

ஸநாதனரின் பஜனை

நந்த பவனின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடில் அமைந்துள்ளது. ஸநாதன கோஸ்வாமி ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகான சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, உடனடியாக மதி மயங்கினார். அந்த சிறுவன் கோயிலுக்குள் நுழைந்தபோது ஸநாதன கோஸ்வாமியும் பின்தொடர்ந்தார். ஆயினும், ஸநாதன கோஸ்வாமியினால் அங்கே மதனகோபாலரின் விக்ரஹத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.

விளையாட வந்த சிறுவன் கிருஷ்ணரே என உணர்ந்த ஸநாதன கோஸ்வாமி கோயிலின் அருகே ஒரு பஜனை கூடத்தை நிறுவினார். அவ்விடத்தின் கீழ்ப்பகுதியில் தற்போது இருபது அடி ஆழத்தில் பாதாள தேவியின் ஆலயமும் அமைந்துள்ளது.

அசுர வதம் நிகழ்ந்த இடங்கள்

கிருஷ்ணர் தோன்றிய சில தினங்களில் கம்சனின் ஆணையை ஏற்று பகாசுரனின் சகோதரியான பூதனை கிருஷ்ணரைக் கொல்வதற்காக தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு கோகுலத்திற்கு வந்தாள். கிருஷ்ணர் பூதனையின் மடியில் பாலை அருந்தியபோது, அவளது உயிரையும் சேர்த்து குடித்தார். கிருஷ்ணர் கைக்குழந்தையாக இருந்தாலும் கோகுலவாசிகளுக்கு தம்மால் அசுரர்களிடமிருந்து பாதுகாப்பைத் தர முடியும் என்னும் நம்பிக்கையை உலக மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். பூதனை வதம் செய்யப்பட்ட இடம் நந்த மஹாராஜரின் இல்லத்திற்கு வெகு அருகில் இருப்பதை இன்றும் காணலாம்.

மற்றொரு முறை, அன்னை யசோதை கிருஷ்ணரை தொட்டிலில் கிடத்தியபோது, அவர் சகடாசுரனை வதம் செய்தார். இவ்விடத்தையும் கோகுலத்தில் காணலாம்.

பொதுவாக, குழந்தையை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவது வழக்கம். அன்னை யசோதையினால் தம்மை குறிப்பிட்ட தூரத்திற்கு போல் தூக்கிப் போட முடியாது என உணர்ந்த கிருஷ்ணர், தமது அந்த விருப்பத்தை திருணாவ்ருதன் என்ற அசுரனின் மூலமாக நிறைவேற்றிக் கொண்டார். திருணாவ்ருதன் கோகுலத்திற்கு வந்தபோது, யசோதையின் கையிலிருந்த கிருஷ்ணர் தமது உடல் எடையை அதிகரித்தார். யசோதை வேறு வழியில்லாமல் கிருஷ்ணரை தரையில் இறக்கினான். அச்சமயத்தில் அங்கே காற்று உருவில் வந்த திருணாவ்ருதன் கிருஷ்ணரை மேலே தூக்கிக் கொண்டு புறப்பட்டான். கிருஷ்ணர் தமது பறக்கும் விருப்பத்தை நிறைவேற்றியபடி, திருணாவ்ருதனையும் வதம் செய்தார்.

இம்மூன்று அசுரர்கள் வதம் செய்யப்பட்ட இடத்தை கோகுலத்தில் இன்றும் காணலாம்.

கிருஷ்ணர் மண் உண்ட இடத்திலுள்ள யமுனைக் கரை

மண் உண்ட இடம்

ஒருநாள் பலராமர் அன்னை யசோதையிடம், “கிருஷ்ணர் மண் சாப்பிட்டு விட்டான்,” என்று புகார் கூறினார். யசோதைக்கு உயிரே போய் விட்டது. ஆயினும், பலராமரை முற்றிலும் நம்பவில்லை. கிருஷ்ணரோ தாம் மண் சாப்பிடவில்லை என்று உறுதியாகக் கூறினார். “வாயைத் திறந்து காட்டு,” என கிருஷ்ணருக்கு யசோதை ஆணையிட்டாள்.

அவரும் வாயைத் திறந்தார். வாயில் அவர் சாப்பிட்ட ஒரு பிடி மண் மட்டுமா இருந்தது! அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து மண்ணும் அவர் வாயில்தானே இருந்தது. அவரது திருவாயில் யசோதை மொத்த பிரபஞ்சத்தையும் கண்டாள், அதில் விருந்தாவனத்தையும் கண்டாள், அந்த விருந்தாவனத்தினுள் தான் கிருஷ்ணரின் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள், குழப்பமுற்றாள். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய யசோதை கிருஷ்ணரை மீண்டும் தனது மகனாகவே பாவித்து தாலாட்ட ஆரம்பித்தாள்.

இந்த லீலை யமுனைக் கரையில் நிகழ்ந்தது. கிருஷ்ணர் தமது திருவாயில் அனைத்து பிரம்ம அண்டங்களையும் காட்டியதால், இந்த யமுனைக் கரை, “பிரம்மாண்ட படித்துறை” என்று கூறப்படுகிறது.

கோகுலத்தில் நிகழந்த அசுர வதம்

உரலில் கட்டுண்ட மாயன்

நந்த பவனத்திற்கு வெகு அருகில் கிருஷ்ணர் தாமோதர லீலையை அரங்கேற்றிய ஸ்தலமும் அமைந்துள்ளது. வெண்ணெய் தாழியை உடைத்து, யசோதைக்கு கோபத்தை ஊட்டி, அவளது கரங்களால் உரலில் கட்டிப் போடப்பட்டு, அங்கிருந்து தவழ்ந்து இரண்டு மகிழ மரங்களை வேரோடு சாய்த்து அவர் புரிந்த லீலையை அனைவரும் அறிவோம்.

தாமோதர லீலை நிகழ்ந்த இடத்தில், இன்றும் அதன் நினைவாக உரலும் விக்ரஹங்களும் உள்ளன. சிலர் இந்த உரல் கிருஷ்ணரைக் கட்டிப் போடப்பட்ட உண்மையான உரல் என்றும் கூறுகின்றனர்.

உரலில் கட்டிப் போடப்பட்ட கிருஷ்ணர்

இதர இடங்கள்

நந்த பவனிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் ஒரு ஜகந்நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகே ஒரு சிறு குன்றின் மீது யோகமாயைக்கு ஓர் ஆலயம் உள்ளது. கிருஷ்ணரின் ஆணையை ஏற்று யோகமாயை பலராமரை தேவகியின் கருவிலிருந்து ரோகிணியின் கருவிற்கு மாற்றியதை நாம் அறிவோம். இங்குள்ள இந்த சிறு குன்று பலராமரின் பிறப்பிடமாகப் போற்றப்படுகிறது.

நந்த பவனிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ரமன்ரேத்தி எனப்படும் இடம் உள்ளது. கிருஷ்ண-பலராமரின் திருப்பாதங்களுக்கு ஆனந்தம் தர விரும்பிய பூமாதேவி விரஜ மண்டலத்தில் இருந்த மண் துகள்கள் அனைத்தையும் மிருதுவாக மாற்றினாள். அதிலும், இந்த ரமன்ரேத்தி என்னும் இடம் கிருஷ்ண-பலராமருக்கு மிகவும் பிரியமான விளையாட்டு மைதானமாகும். ஏனெனில், இங்கிருக்கும் மண் அவ்வளவு மிருதுவாக இருக்கும்.

கிருஷ்ணரின் லீலா ஸ்தலங்களை நிர்வகிக்கும் பூஜாரிகள் சில நேரங்களில் அதிக தட்சணையை எதிர்பார்க்கலாம். பக்தர்கள் அவர்களிடம் பக்குவமாக, குறைகளைக் காணாது நடந்துகொள்ளுதல் சிறந்தது.

கோகுலத்தின் தனிச்சிறப்பு

ஆன்மீக உலகில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி கிடையாது, அசுர வதமும் கிடையாது. ஆயினும், அந்த பகவான் ஆன்மீக உலகிலிருந்து பெளதிக உலகிற்கு வரும்போது, கட்டுண்ட ஆத்மாக்களைத் தம்மிடம் வசீகரிப்பதற்காக பிறப்பு லீலை, அசுர வத லீலைகள் என தமது இனிமையையும் கருணையையும் வெளிப்படுத்துகிறார். இந்த விதத்தில், இங்குள்ள கோகுலம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கிருஷ்ண பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆயுளை கோகுலத்தில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் கோகுலத்தை தரிசிக்க வேண்டும்.