மலைகளின் மன்னன் கோவர்தனம்

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து தோன்றிய கோவர்தன மலையானது விருந்தாவனத்தின் மணிமகுடம் என்றும் அறியப்படுகிறது. மூவுலகிலும் காணப்படுகின்ற மலைகளில் மிகவும் புனிதமானது என்பதால், கிரிராஜன் (மலைகளின் மன்னன்) என்றும் கோவர்தனம்வேத சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த சேவகனாகவும் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் கோவர்தனம் இருவகையாகயாக புரிந்துகொள்ளப்படுகிறது. கோவர்தன மலை விருந்தாவனத்தின் ஒரு பகுதி என்பதால் அதன் வரலாற்றை சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.

கோவர்தனத்தின் வரலாறு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான நந்த மகாராஜர் ஒருமுறை தன் சகோதரர் உபநந்தரிடம் கோவர்தன மலை புனித பூமியான விருந்தாவனத்தில் எவ்வாறு தோன்றியது என வினவினார். அதற்கு உபநந்தர் இக்கேள்வியை பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டு, பாட்டனரான பீஷ்மரிடமும் கேட்டார் என பதிலளித்து, கர்க சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள கோவர்தன மலையின் வரலாற்றை பின்வருமாறு கூறினார்.

ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்தில், ஒருநாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தங்களுடைய திவ்யமான லீலையை பௌதிக உலகத்தில் இருக்கும் பூமியில் அரங்கேற்ற வேண்டும் என்றும், அதற்காக ஸ்ரீமதி ராதாராணி உடனடியாக அங்கு தோன்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதைக் கேட்ட ஸ்ரீமதி ராதாராணி, விருந்தாவனம், யமுனை, கோவர்தன மலை ஆகியவை பூமியில் இல்லை என்றால், அவ்விடம் தனக்கு மகிழ்ச்சியளிக்காது என பதிலளித்தாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அப்போது ஸ்ரீமதி ராதாராணியிடம் அவர்கள் மூவரும் ஏற்கனவே பூமியில் தோன்றிவிட்டார்கள் என தெரிவித்தார்.

அதன்படி, முன்னொரு காலத்தில் சால்மலி த்வீபத்தில் பெரிய மலையாக துரோணாசலம் கருதப்பட்டது. அவரின் மனைவி, கோவர்தனம் என்னும் மலையை மகனாகப் பெற்றெடுத்தாள். கோவர்தனத்தின் பிறப்பை கொண்டாட தேவர்கள், இமயமலை, மேருமலை ஆகியோரும் அங்கு கூடினர். கோவர்தன பரிக்ரமாவை (மலையை சுற்றி வருதல்) மேற்கொண்ட இவர்கள் மரியாதையுடன் கோவர்தனத்தை மலைகளின் மன்னனாக ஏற்றுக் கொண்டனர். சில வருடங்கள் கழிந்தபின், ஸத்ய யுகத்தில் புலஸ்திய முனிவர் சல்மலி த்வீபத்திற்கு வருகை புரிந்தார். அழகே உருவான கோவர்தன மலையானது, செடி, கொடிகள், தாவரங்கள், பூக்கள், நதிகள், குளங்கள், நீர்வீழ்ச்சிகள், குகைகள், புதர்கள், காடுகள், மரங்கள், பறவைகள் என சூழ்ந்திருப்பதை கண்ட புலஸ்திய முனிவர், இம்மலை முக்திக்கும் மேலான பக்தித் தொண்டை தரவல்லது என்பதை உணர்ந்தார். துரோணாசலரைச் சந்தித்த புலஸ்திய முனிவர், தான் காசியை சேர்ந்தவன் என்றும், பல புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகன் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார்.

காசியில் கங்கை பாய்ந்து கொண்டிருந்தாலும் அழகான மலை என்று அங்கு எதுவுமில்லை என புலஸ்திய முனிவர் துரோணாசலரிடம் தெரிவித்தார். தன்னிடம் கோவர்தன மலை கொடுக்கப்பட்டால், அந்த மலையின் உச்சியில் தன்னால் சிறப்பாக தவத்தை மேற்கொள்ள முடியும் என்கிற விருப்பத்தையும் புலஸ்திய முனிவர் அவரிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட துரோணாசலர் தன் மகனைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதைப் பார்த்த கோவர்தனம், புலஸ்திய முனிவர் தன் தந்தையை கோபத்தில் சபித்து விடுவாரோ என்று எண்ணி, “நீங்கள் எவ்வாறு என்னை காசிக்கு சுமந்து செல்வீர்?” என அவரிடம் கேட்டார். அதற்கு, புலஸ்திய முனிவர், “என் வலது கையால் உன்னை சுமந்து செல்வேன்” என பதிலளித்தார். அதன்பின், கோவர்தனம் அவருடன் செல்வதற்கு ஒரு நிபந்தனையை விதித்தார்: அதாவது, போகும் வழியில் தன்னை ஏதாவது ஓரிடத்தில் கீழே வைத்து விட்டால் மீண்டும் அவ்விடத்தை விட்டு சற்றும் நகர மாட்டேன், மீண்டும் தன்னைத் தூக்க இயலாது என்று தெரிவித்தார். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட புலஸ்திய முனிவர் தன் வலது கையால் கோவர்தனத்தை தூக்கி கொண்டு காசிக்கு புறப்பட்டார்.

கோவர்தனத்தின் விருப்பம்

பகவானின் திட்டப்படி புலஸ்திய முனிவர் விருந்தாவனத்தை கடந்து காசிக்குச் செல்ல நேர்ந்தது. விருந்தாவனத்தை நெருங்கியவுடன், தான் இருக்க வேண்டிய இடம் இந்த புனித பூமியே என்பதை கோவர்தனம் உணர்ந்தார். கோவர்தனம் தன்னுடைய சித்தியினால் புலஸ்திய முனிவருக்கு இயற்கை கடன்களை உடனடியாக கழிப்பதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார். இயற்கையின் அழைப்பை ஏற்றுக் கொண்ட புலஸ்திய முனிவர் தன்னையறியாமல் கோவர்தன மலையை விருந்தாவன பூமியில் கீழே வைத்தார். இயற்கையின் கடமைகளை முடித்த பிறகு, புலஸ்திய முனிவர் மீண்டும் மலையை தூக்க முனைந்தபோது அது சிறிதளவும் அசையவில்லை. பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்த புலஸ்திய முனிவர் வெறுப்புடன் கோவர்தன மலை தினந்தோறும் தன் உயரத்தில் கடுகளவு குறையும் என சாபமிட்டார்.

கோவர்தன மலை முதன்முதலில் விருந்தாவனத்தை அடைந்தபோது 64 மைல் நீளமும், 40 மைல் அகலமும், 16 மைல் உயரமும் கொண்டதாக இருந்தது. தற்போது கோவர்தன மலை அதிகபட்சமாக 80 அடி உயரத்தை கொண்டிருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு கோவர்தன மலை முற்றிலும் மறைந்து விடும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கோவர்தன மலையும் யமுனையும் இருக்கும்வரை, கலி யுகத்தினால் தனது முழு சக்தியை வெளிப்படுத்த இயலாது என உபநந்தர் தன் சகோதரர் நந்த மஹாராஜரிடம் தெரிவித்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற திவ்யமான அன்பு பரிமாற்ற லீலைகளை கோபர்களுடனும் கோபியர்களுடனும், கோவர்தன மலையிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் அரங்கேற்றியிருக்கிறார். பிரம்ம-விமோஹன லீலை, இந்திரனின் கர்வத்தை அடக்கிய கோவர்தன பூஜையின் லீலை, கோபியர்களிடம் வரி வசூலிப்பது, மானஸ கங்கையில் படகு லீலை போன்ற லீலைகளும் அவற்றில் அடங்கும். கோவர்தன மலையை கிருஷ்ணர் தனது இடதுகை சுண்டு விரலால் தூக்கிய லீலையை சுருக்கமாக இப்போது காண்போம்.

இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த பூஜையினை கோவர்தனத்திற்கு செய்யும்படி கிருஷ்ணர் தனது தந்தையான நந்த மஹாராஜரிடம் வலியுறுத்துதல்

கோவர்தன பூஜை

தன் தந்தையான நந்த மகாராஜர் மூத்த கோபர்களுடன் சேர்ந்து ஆடம்பரமான யாகத்திற்கு ஏற்பாடு செய்வதைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யப்படும் பூஜை தேவையில்லை என்று கூறி, அதற்கு பதிலாக கோவர்தன மலையை வழிபடுமாறு முன்மொழிந்தார். பிராமணர்களுடனும் மாடுகளுடனும் இணைந்து, இந்திரனுக்காக சேர்த்து வைத்திருந்த உபகரணங்களை அப்படியே கோவர்தன மலைக்கு அர்ப்பணிக்குமாறு கிருஷ்ணர் தன் தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார். சாதம், இனிப்பு, பால், பழங்கள், காய்கறிகளால் மலை போன்று அன்னத்தை அமைத்த விருந்தாவனவாசிகள், அன்ன படையலை கோவர்தன மலைக்கு அர்ப்பணித்து வழிபடத் தொடங்கினர். அப்போது கிருஷ்ணர் தன்னை பெரிய திவ்யமான ரூபத்தில் விஸ்தரித்துக் கொண்டு தானே கோவர்தன மலை என அங்கு கூடியிருந்தவர்களிடம் பிரகடனப்படுத்தினார். அனைத்து அன்னத்தையும் உண்ட கிருஷ்ணர், பின் அதனை மஹா பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினார்.

விருந்தாவனவாசிகள் கோவர்தன மலைக்கு ஆரத்தி எடுத்த பிறகு, கிருஷ்ணரின் தலைமையில் அனைவரும் கோவர்தனத்தை சுற்றி வலம் வந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கிருஷ்ண பக்தர்கள் கோவர்தன பரிக்ரமாவை தினந்தோறும் மேற்கொள்கின்றனர்.

இந்திரனின் கர்வத்தை அடக்குதல்

தனக்கு வழக்கமாக சேர வேண்டிய பூஜை தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்த இந்திரன் கடுங்கோபமடைந்து, விருந்தாவனத்தை அழிக்க சம்வர்தக சூறாவளி காற்றை ஏவினான். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மழையை பெய்வித்த இந்திரன், தொடர்ந்து இதயத்தை பிளக்கக்கூடிய இடியையும் மின்னலையும் விருந்தாவனம் மீது அனுப்பிக் கொண்டே இருந்தான்.

தன் பக்தர்களை என்றும் கைவிடாத கிருஷ்ணர் அனைத்து விருந்தாவனவாசிகளையும் பாதுகாப்பதற்காக, கோவர்தன மலையை தனது இடதுகை சுண்டு விரலால் தூக்கி குடையைப் போல வைத்துக் கொண்டார். கன்றுக் குட்டிகள், மாடுகள், பறவைகள் உட்பட அனைத்து விருந்தாவனவாசிகளும் மலையின் கீழ் அடைக்கலம் பெற்று கிருஷ்ணரின் நேரடி பாதுகாப்பினைப் பெற்றனர். கோவர்தன மலையை கிருஷ்ணர் சுண்டு விரலால் தூக்கியபோது, பௌதிக கணக்கின்படி அவருடைய வயது ஏழு. தொடர்ந்து ஏழு நாள்கள் மழை பெய்தபோதிலும், விருந்தாவனவாசிகள் சிறிதும் துன்பமடையவில்லை என்பதைக் கண்ட இந்திரனின் கர்வம் அடங்கியது. அதன் பின்னர், இந்திரன் ஐராவத யானையின் மீது அமர்ந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு தனிமையில் வந்து மன்னிப்பு கோரினார்.

கோவர்தன மலையை கிருஷ்ணர் உயர்த்திப் பிடித்தல்

அன்பு பரிமாற்ற பூமி

அசுரர்கள் விருந்தாவனவாசிகளுக்கு சிறிதளவு துன்பத்தைக் கொடுத்தால்கூட, அதனைப் பொறுத்துக்கொள்ளாத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக அவர்களை வதம் செய்தார். ஆனால், இந்திரன் தொடர்ந்து ஏழு நாள்கள் விருந்தாவனவாசிகளுக்கு துன்பத்தைக் கொடுத்தபோதிலும், அவர் விசேஷமான பக்தர் என்கிற காரணத்தினால், கிருஷ்ணர் இந்திரனை வதம் செய்யவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன: கிருஷ்ணர் வீட்டில் இருக்கும்போது, இடையர் குலச் சிறுவர்களும் பெண்களும் மாடுகளும் பிரிவில் தவிப்பர்; கிருஷ்ணர் தன் தோழர்களுடன் மாடுகளை மேய்க்கும்போது, வீட்டிலிருக்கும் பெற்றோர்கள் பிரிவில் தவிப்பர். எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் ஒருசேர தன் அருகில் வைத்து கொண்டு அன்பு பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என பிரியப்பட்டார். கிருஷ்ணர் ஏழு நாட்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தன் எல்லா பக்தர்களுடனும் ஆனந்தமாக இருந்தார். பகவானின் இந்த திட்டத்தை புரிந்துகொள்ளாமல் இந்திரன் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு மழையை பெய்வித்து மறைமுகமாக உறுதுணை புரிந்தார். விருந்தாவனமும் கோவர்தனமும் அத்தகைய அன்பு பரிமாற்ற பூமியாகும்.

சிறந்த ஹரி சேவகன்

ஹரியின் சேவகர்களில், யுதிஷ்டிர மஹாராஜர், உத்தவர், கோவர்தன மலை ஆகிய மூவரும் சிறந்தவர்கள் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இம்மூவரில் கோவர்தன மலையே சிறந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதால், கோவர்தன மலையானது, ஹரிதாஸவர்ய:, ஹரியின் சேவர்களில் சிறந்தது என ஸ்ரீமத் பாகவதத்தில் (10.21.18) கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர், பலராமர், பசுக்கள், கன்றுகள், இடையர் குலச் சிறுவர்கள் என அனைவருக்கும், கோவர்தன மலையானது குடிப்பதற்கான நீரையும் நீராடுவதற்கான குளங்களையும் படுத்து உறங்குவதற்கான குகைகளையும் உண்பதற்கான பழங்களையும் இயற்கையாக வழங்கி எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.

கோவர்தன மலை பசுக்களுக்கு மென்மையான புல்லை வழங்குகின்றது. கிருஷ்ணர் தன் தோழர்களுடன் விளையாடும்போது கோவர்தன மலையின் கற்கள் மென்மையாகிவிடுகின்றன. கோவர்தன மலையின் குகைகள் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் மாறிவிடுகின்றன. கிருஷ்ணர் மற்றும் பக்தர்களின் திருப்பாதங்கள் தன்மீது படும்போது கோவர்தனம் குதூகலமடைந்து விடுகிறது. எந்த சூழ்நிலையிலும் தனது எஜமானரான கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் கோவர்தனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகிறது. கிருஷ்ணர் சுண்டு விரலால் கோவர்தன மலையை தூக்கியபோது அனைத்து விருந்தாவனவாசிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதற்காக குடைபோல விரிந்து கொண்டார்.

கோவர்தனத்தின் மகிமை

கோவர்தன மலை கிருஷ்ணருக்கு மட்டும் சேவை செய்ய பிரியப்படாமல் பக்தர்கள் அனைவருக்கும் சேவை செய்கின்ற மனப்பான்மையுடன் திகழ்கிறார். இதன் மூலம் கிருஷ்ணரை எவ்வாறு மகிழ்விப்பது என்கிற சூட்சுமத்தை கோவர்தன மலை நன்கறிந்துள்ளார். கோவர்தனம் வழங்கும் வலிமை வாய்ந்த புல், சில சமயங்களில் யாகங்களுக்கும் பயன்படுவதுண்டு. கோவர்தன மலையின் புல்லை உண்கின்ற பசுக்கள் கிருஷ்ணருக்கு இனிமையான பாலைக் கறக்கின்றன. கிருஷ்ணரும் பலராமரும் கோவர்தன மலைமீது திருப்பாதத்தை வைக்கும்போது, கோவர்தன மலையின் கற்கள் வெண்ணைபோல் மென்மையாகிவிடும், கிருஷ்ணரும் பலராமரும் அமருவதற்கு இயற்கையான ஆசனங்களையும் ஏற்படுத்தி கொடுக்கின்றது. கோவர்தன மலையின் உயரமான புல்கள் பரவசத்தில் எழுச்சி பெற்ற ரோமங்கள், ஈரப்பதம் அவற்றின் வியர்வை, கற்களில் வழிந்தோடுவது பிரேமையின் நீர்த்துளிகள். இவ்வாறு கோவர்தன மலை தன் ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றது.

 

கோவர்தன மலையில் கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் விளையாடுதல்

கோவர்தன கிரிவலம்

நாம் கோவர்தன கிரிவலம் மேற்கொள்வதன் மூலமாக கிருஷ்ணர்மீதான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். கோவர்தன மலையை வழிபட விரும்புபவர்கள் அதனைச் சுற்றி வலம் வர வேண்டும். கோவர்தன கிரிவலம் 26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். சைதன்ய மஹாபிரபு இம்முறையைக் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவர்தன மலையை சுற்றி பல கோயில்களும், குளங்களும் இருப்பதால் கிரிவலத்தை முடிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகலாம். அப்பாதையில் இருக்கின்ற சில முக்கிய இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது. விருந்தாவனத்தை விட்டு வெளியில் செல்வதற்கு விரும்பாத விருந்தாவனவாசிகளுக்காக கிருஷ்ணர் கங்கையை அங்கே வரவழைத்தார்.

ஹரிதேவரின் கோயில்: கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே. சைதன்ய மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் இவ்விக்ரஹத்தை தரிசித்து நடனமாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை பிரார்த்தனை செய்து நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.

சகலேஸ்வர மஹாதேவர்: ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடிலுக்கு அருகில் சகலேஸ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் சிவாலயம் அமைந்துள்ளது. விருந்தாவனத்தின் பிரதான பஞ்ச சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று. ஸநாதன கோஸ்வாமி கொசு தொல்லையினால் இவ்விடத்தை விட்டு செல்வதற்கு நினைத்தபோது, சிவபெருமான் பிராமணரின் உருவத்தில் வருகை புரிந்து, கொசுத் தொல்லை இனி இங்கு இருக்காது என உத்திரவாதம் அளித்தார். இப்போதும் இவ்விடத்தில் கொசுக்கள் இருப்பதில்லை.

லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர். இதற்கு அருகில் இருக்கும், தான-கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.

அனியோர்: சமோசா, கச்சோரி, சாதம், பூரி, இனிப்பு, காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது. கிருஷ்ணர் அனைத்து அன்னத்தையும் உண்ட பிறகு, இன்னும் வேண்டும் என்று கேட்டதால், அனியோர் என்று இவ்விடம் அழைக்கப்படுகின்றது. இவ்விடத்திற்கு அருகில் கோபால-ப்ரக்ருத-ஸ்தலி அமைந்துள்ளது. 500 வருடங்களுக்கு முன் மாதவேந்திர புரி இங்கு கோபால விக்ரஹத்தை கண்டெடுத்தார். ஜெட்டி புரா என்னும் இவ்விடத்தில் மாதவேந்திர புரி சிலகாலம் தங்கியிருந்தார்.

ராகவ பண்டிதரின் குடில்: அப்சர குண்டத்தின் அருகில் சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய சகாவான ராகவ பண்டிதரின் பஜனை குடில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் இருக்கும் கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளது.

ராதா குண்டம்: இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது ராதா குண்டம். ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ஸ்ரீமதி ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கௌடீய வைஷ்ணவர்களின் பிரோயஜன ஆச்சாரியர் (இறுதிக் குறிக்கோளை எடுத்துரைக்கும் ஆச்சாரியர்) என்று அழைக்கப்படும் ரகுநாத தாஸ கோஸ்வாமியின் பஜனைக் குடிலும் சமாதியும் இக்கரையோரத்தில் அமைந்துள்ளன. ராதா குண்டத்தின் கரையோரத்தில், ரகுநாத தாஸ கோஸ்வாமியிடமிருந்து தினந்தோறும் பல மணிநேரம் சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளைக் கேட்ட பிறகே, கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றினார்.

சியாம குண்டம்: கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன. மஹாபிரபு இக்கரையோரத்தில் தமல மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறியதால், பைடக என்றும் இவ்விடம் அழைக்கப்படுகிறது.

குசும சரோவர்: இவ்விடத்தில் கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். சைதன்ய மஹாபிரபு இங்கு நீராடியுள்ளார். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தார்.

கோவர்தனத்தின் கிரிவலப் பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வலம் வருகின்றனர்.

கோவர்தன மலையின் இன்றைய தோற்றம்

மேலே: ராதா குண்டத்தின் ஒரு தோற்றம் எதிர் பக்கத்தில்: குசும் சரோவர்

சில அறிவுரைகள்

சைதன்ய மஹாபிரபு கோவர்தன மலையை கண்டவுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பிரேமையில் நடனமாடினார். கோபால விக்ரஹத்தை தரிசிப்பதற்காகக்கூட, சைதன்ய மஹாபிரபு, கோவர்தன மலைமீது ஏறவில்லை. கோவர்தன மலை சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் தங்கள் பாதங்களை கோவர்தன மலை மீது வைப்பதும் இல்லை. தினந்தோறும் கோவர்தன கிரிவலத்தை மேற்கொள்வதில் ஸநாதன கோஸ்வாமி திடமான உறுதியுடன் இருந்தார்.

சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள், ஆறு கோஸ்வாமிகளான ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி, ரகுநாத பட்ட கோஸ்வாமி, ரகுநாத தாஸ கோஸ்வாமி, கோபால பட்ட கோஸ்வாமி, ஜீவ கோஸ்வாமி ஆகியவர்களின் ஆசியையும் கருணையையும் பெற்ற பிறகே விருந்தாவனத்தை அணுக வேண்டும். பக்தர்கள் சிறிதளவு கர்வம் கொண்டிருந்தாலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைப் பொறுத்து கொள்ளமாட்டார். நான் உயர்ந்தவன் என்று நினைப்பவனுக்கு, விருந்தாவனத்தில் ஒருபோதும் இடமில்லை.

மாதவேந்திர புரி, அத்வைத ஆச்சாரியர், நித்யானந்த பிரபு, சைதன்ய மஹாபிரபு, வல்லபாசாரியர், ரகுநாத தாஸ கோஸ்வாமி, நரோத்தம தாஸ தாகூர், ஸ்ரீ நிவாஸ ஆச்சாரியர், விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் என பலரும் கோவர்தன கிரிவலத்தை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About the Author:

mm
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment