குன்றேந்திய பெருமான்

இறைவனுடனான தொடர்பை எத்தனையோ மதநூல்கள் மனிதனுக்கு போதித்து வரும்போதிலும், 5,000 வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் தொகுக்கப்பட்ட வேதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற மதநூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மட்டுமின்றி, அவற்றில் கூறப்படாத பல்வேறு கருத்துகளையும் நாம் வேதங்களில் காணலாம். வேதங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையைத் தூக்கிய லீலையினை நாம் காணலாம்.

வழங்கியவர்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு, பாரத தேசத்தின் விருந்தாவன கிராமத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்து தனது பால்ய லீலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவர் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தை நந்த மகாராஜர் தேவர்களை வணங்குவதற்கான யாகத்திற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் தனது தந்தையிடமும் பெரியோர்களிடமும் சென்று, “தந்தையே, இந்த யாக ஏற்பாடுகள் எதற்காக? இதன் பயன் என்ன? இது யாருக்காக?” என வினவினார்.

கிருஷ்ணரால் யாகத்தின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாது என்று எண்ணிய நந்தர் பதிலுரைக்காது அமைதி காத்தார். ஆனால் கிருஷ்ணரின் வற்புறுத்தலினால், அந்த யாகம் பரம்பரை பரம்பரையாக வருவதாகத் தெரிவித்தார். இரண்டு காரணங்களைக் கூறி அந்த இந்திர யாகத்தினை நிறுத்த வேண்டும் என்று கிருஷ்ணர் வலியுறுத்துகின்றார். அந்த வழிபாட்டின் இறுதி நோக்கம் தற்காலிகமான ஜடத் தேவைகள் என்பதை முதல் காரணமாக எடுத்துரைத்தார். அறிவிற் குறைந்தோர் மட்டுமே பலன்களை எதிர்பார்த்து வழிபாடு புரிவர் என்பதால் அத்தகு வழிபாடு அவசியமற்றது என்று கூறினார். மற்றொரு காரணம், ஜடத் தேவையாயினும் ஒருவன் பரம புருஷ பகவானையே சரணடைய வேண்டும் என்பதாகும். கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதால், தன்னிடம் மட்டுமே சரணடைய வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்துகின்றார். கிருஷ்ணருக்கும் நந்த மகாராஜருக்கும் விவாதம் தொடங்கியது. குழந்தை கிருஷ்ணர் அந்த இந்திர யாகத்தினை நிறுத்துவதற்கு, பெரும் கர்வத்துடன் இருந்த இந்திரனை தண்டிப்பது என்னும் மற்றொரு காரணமும் இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் யாரும் இந்திரனை வழிபடுவது இல்லை என்பதால், தேவர்களை வழிபடுவதைப் பற்றிய இத்தகவல் தற்போது தேவையற்றது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு. தேவர்கள் சாதாரண மனிதனைக்காட்டிலும் அதிக சக்தி படைத்தவரும், எதையும் செய்யும் வல்லமை படைத்தவரும் ஆவர். பொதுவாக தேவர்கள், இறைவனால் ஜடவுலகினை நிர்வகிக்கும் பொறுப்பினைப் பெற்ற உயர் உலகைச் சார்ந்தவர்கள். உதாரணமாக இந்திரன் மழைக்கான தேவராகவும், விவஸ்வான் சூரிய கிரகத்திற்கான தேவராகவும் உள்ளனர். பொதுவாக சொன்னால், சமுதாயத்தில் அதிகாரம் படைத்த மனிதர்கள் தேவர்களைப் போன்றோர். இப்படிப்பட்ட பெரும் புள்ளிகளிடம் பணிவு காட்டி அவர்களின் கருணையால் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்பது இன்றும் பழக்கத்தில் உள்ளது. திரைப்பட நடிகர், அரசியல்வாதி, அல்லது தொழிலதிபர்களை நாடி அவர்களை திருப்திபடுத்துவதன் மூலம் பலர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது கள்ளச் சந்தையில் நிறைய பொருளீட்டிய ஓர் இந்தியர், அப்போருக்கு முக்கிய காரணமாக இருந்த ஹிட்லரை தன் வீட்டில் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்தார். இதுபோன்ற வழிபாடு முற்றிலும் அறியாமை குணத்தைச் சார்ந்தது.

பரம புருஷ பகவானான தன்னை மட்டுமே மக்கள் வணங்க வேண்டும் என்பதே கிருஷ்ணருடைய நோக்கம் என்றபோதிலும், அவர் தனது தந்தையிடம் முதலில் ஒரு நாத்திகனைப் போன்று பேசினார். தனது வாதத்தின் முதல் கருத்தாக, கோபாலர்கள் வளமாக வாழ்வதற்கு மாடு மேய்ப்பதே போது மானது என்றும், இதற்காக இந்திரன் போன்ற தேவர்களை வணங்குவது அவசியமில்லை என்றும் கூறினார். நந்த மகாராஜரோ, தொழிலை மட்டும் செய்தால் விரும்பிய பலன்களை அடைய முடியாது என்றும் உயர் அதிகாரிகளின் கருணையும் அவசியம் என்றும் எடுத்துரைத்தார். உதாரணமாக, மருத்துவரின் சிறப்பான மருத்துவத்திற்குப் பிறகும் நோயாளி இறந்துவிடலாம். பெற்றோர்களின் கவன மான வழிகாட்டுதலுக்கு மத்தியிலும் குழந்தை இறப்பதும் வழிதவறிப் போவதும் இயற்கையே. வேறு விதமாகக் கூறினால், நமது செயல்கள் மட்டுமே பலன்களைத் தருவதில்லை, உயர் அதிகாரிகளின் ஒப்புதல் நிச்சயம் தேவை.

ஆனால், கிருஷ்ணரோ அரசாங்கப் பணியில் இருப்பவர் தமது பணியைச் செய்ய வேண்டியது அவசியம் என்றும், அவர் செய்யும் பணிக்காக அவரை வழிபடுதல் அவசியமற்றது என்றும் கூறி, மழை தர வேண்டியது இந்திரனின் கடமை என்றும் அதற்காக அவரை வணங்க வேண்டிய அவசியமில்லை என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், அவர் தனது தந்தையையும் மற்ற பெரியோர்களையும் விருந்தா வனத்தில் பசுக்களை பராமரிக்கும் தமது கடமையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். விருந்தாவனவாசிகள் தங்களது கடமையைச் செய்தால், நீர் வழங்குதல் என்னும் தனது கடமையை இந்திரன் செய்தாக வேண்டும். கடலின் சார்பாக யாரும் இந்திரனை வணங்காதபோதும், கடல் மீதும் மழையைப் பொழிவது இந்திரனின் கடமையாக உள்ளதே. எனவே, கிருஷ்ணர் தம் தந்தையிடம் கோவர்தன மலைக்கும் விருந்தாவன காட்டிற்கும் உள்ள தொடர்பினைப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். “அன்புள்ள தந்தையே, இந்திர யாகத்திற்கு ஏற்பாடு செய்த பொருட்களைக் கொண்டு பிராமணர்களுடன் இணைந்து கோவர்தன மலையைத் திருப்திப்படுத்தும் வகையில் யாகத்தைத் தொடங்குங்கள்,” என்று கூறினார்.

கிருஷ்ணரின் வார்த்தையால் ஈர்க்கப்பட்ட நந்த மகாராஜர் ஒரு சமரச திட்டத்தினை முன்வைத்தார். தற்போது சேகரித்துள்ள பூஜைப் பொருட்களைக் கொண்டு இந்திர யாகத்தைச் செய்யலாம் என்றும், பின்னர் கோவர்த்தன பூஜையை மேற்கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால் கிருஷ்ணரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தூய பக்திக்கு எதிரான எத்தகைய சமரசத்தையும் கிருஷ்ணர் ஒருபோதும் ஏற்பதில்லை. பகவத் கீதையினைப் படித்தோர், அர்ஜுனனின் சமரச திட்டத்தைக்கூட கிருஷ்ணர் ஏற்கவில்லை என்பதை அறிவர். குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனன் முதலில் கிருஷ்ணரின் அறிவுரையை பின்பற்ற மறுத்து, பல்வேறு காரணங்களைக் கூறி, போரிலிருந்து விலக நினைத்தான். ஆனால் அவன் கூறிய கருத்துகளை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோல, தேவர்களை வணங்கு வதற்கான ஏற்பாடுகளை நந்தர் செய்து விட்டபோதிலும், கிருஷ்ணர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருக்கும் பொருளை தூய பக்தித் தொண்டில் உபயோகிக்கும்படி அறிவுறுத்தினார்.

கிருஷ்ணரின் மீதான அன்பில் எப்போதும் திளைத்து வாழும் விருந்தாவனவாசிகள் அனைவருக்கும் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதே விருப்பம். எனவே, கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்படி நந்த மகாராஜர் கோவர்த்தன பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கிருஷ்ணர் அவரிடம், “இந்திர பூஜைக்காகச் சேகரித்த வெண்ணெய் மற்றும் தானியங்களைக் கொண்டு சுவையான உணவுப் பண்டங்களை தயார் செய்யுங்கள். சாதம், பருப்பு, அல்வா, பக்கோடா, பூரி, சர்க்கரைப் பொங்கல், இனிப்பு உருண்டைகள் மற்றும் பலவிதமான பால் பொருட்களை தயார் செய்து, கல்விகற்ற பிராமணர்களை வேதம் ஓத அழைக்க வேண்டும். பசுக்களுக்கு நல்ல புற்களை உணவாக வழங்குங்கள். இதுவே கோவர்த்தன பூஜையாகும். இஃது என்னை மிகவும் திருப்திபடுத்தும்,” என்று கூறினார்.

கிருஷ்ணர் சில நேரங்களில் கார்தமீஸர் என்று அழைக்கப்படு கின்றார். கார்தமீஸர் என்றால் “இடையர்களுடைய கிராமத்து நாயகர்” என்று பொருள். இடையர்கள் வசிக்கும் கிராமங்களில், அங்கிருக்கும் கார்தமீஸர்களை தினமும் அணுகும் மக்கள், அவர்களிடம் என்ன உணவு வேண்டும் என வினவுவர். அவர்கள் கூறுகின்ற உணவு வகைகளைத்தான் அந்த கிராமத்தினர் அன்றைய நாளில் சமைப்பர். இதுபோன்ற உறவை நாம் உன்னத கார்தமீஸராகிய கிருஷ்ணருடன் ஏற்படுத்த வேண்டும். அவருடைய விருப்பமே நம்முடைய விருப்பமாக இருக்க வேண்டும். அவரை திருப்திபடுத்துவது நமக்கு உண்மையான இன்பத்தினைக் கொடுக்கும். கிருஷ்ணரை திருப்திபடுத்துவதால் ஏற்படும் மகிழ்ச்சி, அவரை விட்டு விலகியிருக்கும் போது நாம் அடையக்கூடிய கற்பனையான ஆனந்தத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானதாகும்.

இந்திரனைப் பொறுத்தவரையில், சக்தி வாய்ந்த மனிதர்களுக்கே உரிய ஒருவித மயக்கத்தினால் அவன் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் தன்னையே உன்னத ஆளுநராக நினைத்து, சக்தி வாய்ந்த தேவர்கள் அனைவரும் முழுமுதற் கடவுளின் அம்சமே என்பதை மறந்திருந்தான். எனவே, இந்திரனை தண்டிக்கும் பொருட்டு இந்திர பூஜையை நிறுத்திவிட்டு, கிருஷ்ணர் கோவர்தன பூஜையைத் தொடங்கினார். எளிய மனம் கொண்ட நந்த மகாராஜரும் விருந்தாவனவாசிகளும் கிருஷ்ணர் கூறிய வண்ணம் பூஜையைச் செய்தார்கள். கோவர்தன பூஜை முடிந்த பின்னர், அவர்கள் கோவர்தன மலையினை வலம் வந்தனர். இந்த கோவர்தன பூஜை, அன்றிலிருந்து இன்று வரை விருந்தாவனத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தனது தந்தை நந்தரின் இந்திர பூஜையை கிருஷ்ணர் நிறுத்துதல்

ஆயர்பாடியில் இந்திர விழா நிறுத்தப்பட்டதை அறிந்த இந்திரன், விரஜவாசிகளின் மீது கடுங்கோபம் கொண்டு, ஊழிக்காலத்தில் (முழு உலகமும் அழிக்கப்பட வேண்டிய காலத்தில்) பயன்படுத்தப்படும் கருமேகங்களை விருந்தாவனத்தில் வெள்ளத்தினை ஏற்படுத்த அனுப்பினான். அசுரர்கள் பலம் பெறும்போது கடவுளின் உன்னத தன்மையினை உணர மறுப்பர். இந்திரன் அசுரன் அல்ல என்றாலும், தன் பலத்தின் மீது கர்வம் கொண்டு பரம புருஷ பகவானை எதிர்க்கத் தொடங்கினான். கிருஷ்ணரை சாதாரண மனிதனாகவும் தன்னை அவரைவிட சிறந்தவனாகவும் எண்ணினான். “விருந்தாவனத்தை வெள்ளத்தால் நிரப்புங்கள், சாதாரண மனிதனான கிருஷ்ணனை நம்பிய அந்த விருந்தாவனவாசிகள் தக்க தண்டனை பெற வேண்டும்,” என கட்டளையிட்டான்.

இந்திரனின் ஆணையை ஏற்ற மேகங்கள் விருந்தாவனத்தை வெள்ளக்காடாக மாற்றின, இடைவிடாத இடி, மின்னலுடன் மழை கொட்டியது, விருந்தாவனத்தின் மேடு பள்ளங்கள் மறைந்தன. பசுக்கள் உட்பட அனைவரும் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டனர். கிருஷ்ணரைத் தவிர வேறு எவரையும் தமது இறைவனாக அறியாத விரஜவாசிகள் அனைவரும், அன்பார்ந்த கிருஷ்ணரே, தாங்கள் மிகவும் பலம் பொருந்தியவர், பக்தர்களிடம் அன்பு கொண்டவர். தயவுசெய்து எங்களை இந்திரனின் கோபத்திலிருந்து காப்பாற்றுங்கள்,” என வேண்டியபடி பகவான் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர்.

தன்னைப் பெரியவனாக எண்ணிக் கொண்டுள்ள இந்திரனின் கர்வத்தினை அடக்க இதுவே சரியான தருணம் என்று எண்ணிய கிருஷ்ணர், ஒரு குழந்தை சிறிய காளானை எடுப்பதுபோன்று, எளிமையான முறையில் கோவர்த்தன மலையினைத் தூக்கி குடை போன்று பிடிக்கலானார். தனது இடதுகை சுண்டு விரலினால் மலையை உயர்த்திப் பிடித்த பின்னர், தனது பக்தர்களை நோக்கி, “எனதன்பு விருந்தாவன மக்களே, அனைவரும் இந்த மலைக் குடையின் கீழ் வாருங்கள், இது தவறி விழுந்துவிடும் என்று எண்ண வேண்டாம்,” என்று கூறி அழைத்தார். கிருஷ்ணரின் இந்த ஆற்றலைக் கண்ட இந்திரன் அதிர்ச்சியடைந்தான். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை ஏழு நாள்களுக்கு தொடர்ந்து தூக்கிப் பிடித்திருந்தார். அதைக் கண்ட இந்திரன் தனது தவறை உணர்ந்து மேகங்களை விலகும்படி கட்டளையிட்டான்.

கோவர்தன மலையை கிருஷ்ணர் உயர்த்திப் பிடித்த காட்சி

மேகங்கள் எல்லாம் கலைந்து, வானம் வெளுத்தது. கிருஷ்ணர் விருந்தாவனவாசிகளைத் தத்தமது மனைவி, மக்கள், விலங்குகள் மற்றும் செல்வங்களுடன் திரும்பிச் செல்லுமாறு பணித்தார். அனைவரும் வெளியே சென்ற பின்னர், மலையைப் பழைய இடத்தில் முன்பிருந்தபடியே வைத்து விட்டார். விண்ணோர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க, விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ணரைத் தழுவிக் கொண்டாடினர்.

அறிவற்ற மூடர்களாக இருக்கும் சிலர் தங்களை இறைவனாக எண்ணிக் கொள்கின்றனர். வேதங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டு அவற்றை நகல் செய்ய ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக, கோபியர்களுடனான கிருஷ்ணரின் லீலைகளைச் சில முட்டாள்கள் நகல் செய்வதைக் காணலாம். ஒருவன் தன்னைக் கடவுள் என்று கூறிக் கொண்டால் போதும், வேறு ஏதும் செய்யத் தேவையில்லை அவனைக் கடவுளாக நம்புவதற்கு ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட யோகிகள், சுவாமிகள் மற்றும் இதர போலிகளுக்கும் இந்த கோவர்த்தன லீலை ஒரு சவாலாகும். தன்னையே கடவுளாகக் கூறும் அந்த போலிகளை மலையைத் தூக்கும்படி சொல்ல வேண்டும்.

அவர்களால் அதை நிச்சயம் செய்ய இயலாது. நாம் எவ்வாறு இறையுணர்வில் இருப்பது என்று கிருஷ்ணர் அறிவுறுத்தியுள்ளாரோ, அதனை நாம் பின்பற்ற வேண்டுமேயொழிய, அவரது செயல்களை நாம் நகல் செய்ய இயலாது. எவனொருவன் தன்னைக் கடவுளாக பிரகடனம் செய்கின்றானோ அவன் கோவர்தன லீலையைச் செய்தாக வேண்டும்–இல்லையெனில், அவன் அயோக்கியர்களில் கீழானவன் என்றும் வடிகட்டிய முட்டாள் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

தன் தவறினை உணர்ந்த இந்திரன், தனியிடத்தில் கிருஷ்ணரின் முன் தோன்றி கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செலுத்தினான்: “அன்பார்ந்த பிரபுவே, அகங்காரத்தினால் தங்களின் உயர்நிலையை மறந்து, எனது யாகப் பங்கினை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களோ என்று எண்ணி நிலை தவறி தவறிழைத்துவிட்டேன். தாங்கள் எவ்விதத்திலும் எனக்குப் போட்டியாளர் அல்ல; ஏனெனில், தாங்களே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், நான் தங்களின் நிரந்தர சேவகன். எனது அறியாமையினால் தங்களை மறந்து விட்டேன். மன்னித்தருள வேண்டுகிறேன்.”

தன் அகங்காரத்தினை நீக்கிய கிருஷ்ணரின் புத்திசாலித்தனத்தை இந்திரன் வெகுவாகப் புகழ்ந்தான். தன் பலம் அனைத்தையும் இந்திரன் பயன்படுத்தியபோதிலும், கிருஷ்ணர் தனது இடதுகை சுண்டு விரலினால் அவனைத் தோல்வியுறச் செய்தார். தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை உணர்ந்த இந்திரன், கிருஷ்ணரிடம், “நான் தங்களின் பாதங்களை சரணடைகிறேன். ஏனெனில், தாங்கள் பரம ஆளுநர் மட்டுமின்றி அனைத்து ஜீவன்களுக்கும் ஆன்மீக குருவுமாவீர்” என்று கூறினான். இவ்வாறு கூறிய பின் கிருஷ்ணரின் அனுமதியைப் பெற்று மீண்டும் ஸ்வர்க லோகத்திற்குச் சென்றான்.

ஒரு விதத்தில் பார்த்தால், கிருஷ்ணர் மலையைத் தூக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. தனது ஜட சக்தியைக் கொண்டே அவரால் இந்திரனை அடக்கியிருக்க முடியும். எனினும், தனது பக்தர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் கோவர்தன மலையைத் தூக்கிப் பிடித்தார். இப்படிப்பட்ட லீலைகளைக் கேட்கும்போது, “இறைவன் மிகப் பெரியவர்” என்பதை நாம் தெளிவாக உணரலாம். நம்பிக்கையுடன் இதனைக் கேட்கும் போது கிருஷ்ணரின் மீதான அன்பினை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அதுவே அனைத்து  ஜீவன்களின் உன்னதமான நிலையாகும். கிருஷ்ணரின் நித்திய சகாக்களான விருந்தாவன வாசிகளே அனைத்து ஜீவன்களிலும் மேன்மையானவர்கள். எவரொருவர் கிருஷ்ணருடன் ஆன்மீகத் தளத்தில் இணைய விரும்புகின்றார்களோ, அவர்களுக்குத் தேவையான ஒரே தகுதி கிருஷ்ணரின் மீதான அன்பேயாகும். அதுவே நம்முடைய உண்மையான ஆன்மீக நிலை. நாம் நம்முடைய உண்மையான ஆன்மீக உறவை மறந்துள்ள காரணத்தினால், கனவு போன்ற இந்த ஜட பந்தத்தில் சிக்குண்டு வாழ்கிறோம். மனித குலத்தினை விழிப்புறச் செய்வதற்காக தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் நமக்கு வேத அறிவினைப் பல்வேறு புத்தகங்களின் வடிவில் வழங்கியுள்ளார். கிருஷ்ணர், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் புத்தகத்தினை ஆழ்ந்து படிப்பதன் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கிருஷ்ணரின்பால் நாம் திரும்ப இயலும்.

இந்திரன் கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டல்

About the Author:

தவத்திரு. ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சிஷ்யரும் மூத்த ஸந்நியாசியுமாவார். இவர் மிகவும் பிரபலமான ஸ்ரீல பிரபுபாதரின் லீலாம்ருதத்தை இயற்றியவரும், பல புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

Leave A Comment