வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கோவிந்தா, கோவிந்தா…,” “எல்லாம் கோவிந்தாவா?” முதலிய பேச்சுகள் இன்றைய தமிழர்களிடையே தோல்வி, ஏமாற்றம், இழப்பு முதலிய நிகழ்வுகளில் ஒரு வழக்கமாக மாறி விட்டது. “கோவிந்தாஎன்ற பெயரைக் கேட்டால், அபசகுனம் என்று பலரும் நினைக்கின்றனர்; ஏதேனும் முக்கிய பணிக்குச் செல்கையில் யாரேனும்கோவிந்தாஎன்று உச்சரித்துவிட்டால், அந்த காரியம் நிறைவேறாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர். கோவிந்த நாமத்தைக் கேலி செய்து எத்தனை எத்தனையோ திரைப்படக் காட்சிகள் வந்துள்ளன. இந்தக் கேலியிலும் அச்சத்திலும் வழக்கத்திலும் ஏதேனும் உண்மை உள்ளதா? சற்று ஆராய்வோம்.

பகவானின் திருநாமம்

“கோவிந்த” என்றால் என்ன? இது பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களில் ஒன்று. “புலன்களுக்கு இன்பமளிப்பவர்,” அல்லது “பசுக்களுக்கு இன்பமளிப்பவர்,” என்பது இதன் பொருளாகும். பகவான் கிருஷ்ணர் தமது நண்பர்களுடன் இணைந்து பசுக்களை மேய்க்கும் பணியில் ஈடுபடுகிறார். அச்சமயத்தில் அவருடனான உறவில் அப்பசுக்கள் பேரின்பத்தை அடைகின்றன. கிருஷ்ணரின் பார்வை, குரல், குழல், நடை, நடனம் என அனைத்தும் பசுக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து உயிர்களின் தெய்வீகப் புலன்களுக்கும் பேரின்பத்தை வழங்குவதால், அவருக்கு கோவிந்தர் என்று ஒரு திருநாமம் உள்ளது.

கோ என்னும் சொல்லிற்கு, பூமி என்று மற்றொரு பொருள் இருப்பதால், கோவிந்த என்னும் திருநாமம், பூமியை கர்ப்பக் கடலிலிருந்து உயர்த்திய பகவான் வராஹரையும் குறிக்கும், மூவுலகையும் இரண்டு அடியில் அளந்த பகவான் வாமனரையும் குறிக்கும். இந்திரனின் வஜ்ராயுதத்திற்கும் கோ என்று பெயர், அந்த வஜ்ராயுதத்திற்காக ஆலோசனை வழங்கியதால், பகவான் நாராயணருக்கும் கோவிந்தர் என்னும் திருநாமம் பொருந்துகிறது.

கோவிந்த நாமத்தின் மகிமைகள்

எண்ணற்ற லீலைகளை என்றென்றும் நிகழ்த்தும் எம்பெருமானுக்கு எண்ணற்ற திருநாமங்கள் உள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் தெய்வீகமானவை, இவற்றை உச்சரிப்பதால் அடையும் பலன்களும் தெய்வீகமானவை. பகவானுடைய திருநாமம் அந்த சாக்ஷாத் பகவானிடமிருந்து வேறுபடாதது என்பதால், இப்பெயரை உச்சரித்தல் எல்லா நன்மைகளையும் வழங்கக்கூடியது, தலைசிறந்த நன்மையான கிருஷ்ண பிரேமையையும் வழங்கக்கூடியது.

பகவானுடைய முக்கிய திருநாமங்களில் ஒன்றான கோவிந்த நாமம் மிகவும் மங்கலகரமானதாகும். இதனை ஒருவர் தெரிந்து உச்சரித்தாலும் தெரியாமல் உச்சரித்தாலும் நன்மையைப் பெறுவர், விளையாட்டாக அல்லது கேலியாகச் சொன்னாலும் பயன் உண்டு, வேறு யாரையோ எண்ணி இப்பெயரை உரைத்தாலும் பயன் உண்டு. மருந்தை உண்பவர்கள் அதனை அறிந்து உண்டாலும் அறியாமல் உண்டாலும், அஃது எவ்வாறு பயனைத் தருகிறதோ, அவ்வாறே பகவானின் நாமமும் உயர்ந்த பயனை நல்கும்.

திருநாமத்தை ஆடிப் பாடுவதே நம்மை மரணத்தி லிருந்து காப்பாற்றும், வேறெதுவும் காப்பாற்றாது.

மரண நேரத்தில் கோவிந்த நாமம்

மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவர்கள் அவருடைய லோகத்திற்குச் செல்ல முடியும் என்பதையும் அவர்களுக்கு மீண்டும் இவ்வுலகில் பிறவியில்லை என்பதையும் கீதையில் காண்கிறோம். பகவானை அவ்வாறு நினைப்பதற்கு, அவருடைய நாமத்தைத் தவிர வேறு ஏதேனும் சிறந்த வழி உண்டோ? நிச்சயம் இல்லை. எனவே, மரண நேரத்திலும் மரணத்திற்குப் பின்னர் உடலை எரிக்கும் வரையிலும், பகவானுடைய திருநாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பது சாஸ்திரமும் ஆச்சாரியர்களும் நமக்கு வழங்கியுள்ள பாதையாகும்.

அதன்படி, ஒருவர் மரணத்தைச் சந்திக்க உள்ளார் என்றால், அங்கே சென்று பகவானின் திருநாமங்களைப் பாடுவது வைஷ்ணவர்களின் மரபாக உள்ளது. வட இந்தியாவிலுள்ள சைவர்கள்கூட, மரண நேரத்தில் இராம நாமத்தை உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்கான் பக்தர்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனத்தில் ஈடுபடுவர். சிலர் “கோவிந்தா,” “கோவிந்தா,” என உச்சரிப்பர். இத்தகு கீர்த்தனங்கள் ஓர் உடலிலிருந்து புறப்படும் ஜீவனுக்கு நல்ல கதியை ஏற்படுத்தும், இதில் துளியும் ஐயம் கிடையாது.

அபசகுனமா?

மரண நேரம் மட்டுமின்றி, கோவிந்த நாமம் எல்லா சூழ்நிலைகளுக்கும் மங்கலத்தை வழங்கக் கூடியது. இது சொல்பவர்கள், கேட்பவர்கள் என அனைவருக்கும் மங்கலத்தை வழங்குகிறது. இவ்வாறிருக்க, “கோவிந்தா,” “கோவிந்தா,” என்பதை சிலர் அபசகுனமாகக் கருதுகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கையில், அவர்களின் செயல் அடிமட்ட முட்டாள்தனம் என்றே கூற வேண்டும். மக்கள் நற்கதியை அடைந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சில அயோக்கியர்கள், பகவானின் திருநாம உச்சாடனத்தை அபசகுனம் என்று கூறி, அறியா மக்களை திசைதிருப்பியுள்ளனர்.

என்றும் எப்போதும் எங்கும் நற்கதியை வழங்கும் திருநாமத்தை கேவலமாகப் பேசுவதும், அதனை வைத்து கிண்டல் செய்வதும் கீழ்தரமான எண்ணங்களாகும். உண்மையைக் கூறினால், பகவானின் திருநாமத்தை உச்சரிக்காமல், ஒருவன் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது; அவ்வாறு செய்தால், அந்த காரியம் அபசகுனத்தில் செய்யப்பட்ட காரியமாகவே கருதப்படுகிறது. வேறு விதமாகக் கூறினால், கோவிந்த நாமத்தைச் சொல்வதும் கேட்பதும் அபசகுனம் அல்ல, சொல்லாமல் இருப்பதும் கேட்காமல் இருப்பதுமே அபசகுனமாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய தகவல்களை சாஸ்திரங்கள், உயர்ந்த சாதுக்களின் வார்த்தைகளைக் கொண்டு அறிய வேண்டும்.

நாத்திகர்களின் தந்திரங்கள்

உண்மை இவ்வாறிருக்க, ஏன் தமிழகத்திலும் இதர சில பகுதிகளிலும் இந்த மூட நம்பிக்கை மக்களிடையே பிரபலமாகக் காணப்படுகிறது? இந்த மூட நம்பிக்கை எங்கே தொடங்கியது என்பதை யாராலும் கணக்கிட இயலாது. ஆனால், ஒன்றை உறுதியாகக் கூற முடியும். சாஸ்திரத்திலுள்ள உண்மையான நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று கூறி, தங்களுடன் சேர்ந்து அப்பாவி மக்களையும் முட்டாளாக்கும் அடிமட்ட முட்டாள்கள் இந்த மூட நம்பிக்கையினை மக்களிடையே பரவலாகப் பரப்பியுள்ளனர். அந்த நாத்திகர்கள் தங்களுடைய தந்திரத்தின் மூலமாக, திரைப்படத் துறையில் நாத்திகம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில், “கோவிந்த நாமம் அபசகுனமானது,” என்னும் மூட நம்பிக்கையினைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியுள்ளனர்.

என்னே அயோக்கியத்தனம்! மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் என்று கூவுகின்றனர், ஆனால் இவர்களே ஒரு மூட நம்பிக்கையினைப் பரப்புகின்றனர். ஏன் இந்த கபடத்தனம்? எத்தனை திரைப்படங்கள், எத்தனை கட்டுரைகள், எத்தனை ஏமாற்று வேலைகள்! கோவிந்தருடைய திருநாமத்தை மக்கள் உச்சரித்துவிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு தந்திரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால், நெஞ்சம் பதறுகிறது. வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டவன் மரணத்தில்கூட கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக, கோவிந்த நாமத்தைத் தடுக்க முயல்கின்றனர். எம்பெருமான் திருப்பதி வேங்கடாசலபதியை மக்கள் வணங்கி நற்கதியை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை மக்களிடையே சென்று சேர்த்தனர்.

கோவிந்த நாமமே காப்பாற்றும்

ஒருவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும், அழகானவனாக இருந்தாலும், புகழ் பெற்றவனாக இருந்தாலும், பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், அவனுடைய அறிவு, செல்வம், அழகு, புகழ், பலம் என அனைத்தும் மரணத்தின்போது அவனை விட்டுச் சென்று விடும். வங்கியில் அவன் வைத்துள்ள கோடிக்கணக்கான பணம் அவனை மரணத்திலிருந்து காப்பாற்றாது, அவன் வாங்கியுள்ள பட்டங்கள் அவனைக் காப்பாற்றாது, இலட்சக்கணக்கான மக்கள் அழும் அளவிற்கு புகழ் பெற்றிருந்தாலும் மரணத்தைத் தள்ளி வைக்க முடியாது, எவ்வளவு பலம் கொண்ட உடலாக இருந்தாலும் மரணத்திற்கு முன் நிற்க முடியாது.

எனவேதான், அந்த மரணம் வருவதற்கு முன்பாக, முட்டாள்தனத்தினைக் கைவிட்டு, கோவிந்தரைப் பூஜியுங்கள் என்று சங்கராசாரியரும் கூறியுள்ளார்:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

கோவிந்தம் பஜ மூட-மதே

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்-கரணே

“முட்டாள்களே, கோவிந்தரை வழிபடுங்கள், கோவிந்தரை வழிபடுங்கள், கோவிந்தரை வழிபடுங்கள். உங்களுடைய இலக்கண அறிவும் வார்த்தை ஜாலங்களும் மரண நேரத்தில் உங்களுக்கு உதவாது.”

சாஸ்திரங்களை ஏற்போம்

திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் “கோவிந்தா, கோவிந்தா,” என்றால், எல்லாம் அழிந்துவிடுகிறது என்பதைப் பார்த்து, கோவிந்த நாமத்தை ஒதுக்குதல் முற்றிலும் முட்டாள்தனமாகும். கோவிந்த நாமத்தின் விளைவுகள் என்ன என்பதை சாஸ்திரத்தின் மூலமாக அணுகுவோமாக. யார் என்ன கூறினாலும், அது மெய்ப்பொருளா என்பதை ஆராய்வதற்கு சாஸ்திரங்களே அவசியம். சாஸ்திரங்கள் கோவிந்த நாமத்தையும் பகவானின் பல்வேறு இதர நாமங்களையும் மிகமிக உயர்வாக எடுத்துரைக்கின்றன. எனவே, நாம் சாஸ்திரங்களின் வாக்கினைப் பின்பற்றுவோம், அந்த சாஸ்திரங்களின்படி தூய்மையாக வாழ்ந்த ஆச்சாரியர்களின் வாக்கினைப் பின்பற்றுவோம், உயர்ந்த சாதுக்களின் வாக்கினைப் பின்பற்றுவோம்.

அதை விடுத்து, யாரோ ஒருவர் எங்கோ கூறினார் என்றெல்லாம் கற்பனை செய்தல் சரியல்ல. திருநாமத்தின் பெருமைகளை எல்லா சாஸ்திரங்களும் உரக்கப் பாடுகின்றன. இந்த சாஸ்திரங்கள் இகவுலக மனிதனின் குறைபாடுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவை. வாழ்நாள் முழுவதையும் தூய்மையாகக் கழித்த ஆச்சாரியர்களின் வாக்கினை ஏற்பதா, குடித்து கும்மாளமிடும் சினிமா நடிகர்கள் அல்லது நாத்திகர்களின் வாக்கினை ஏற்பதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நாத்திகர்களின் பற்பல முயற்சிகளையும் தாண்டி, கோவிந்த நாமத்தினை பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் உச்சரித்து வருகின்றனர், பெருமாள் கோயிலுக்குச் சென்று, “கோவிந்தா, கோவிந்தா,” என்று மகிழ்ச்சியுடன் சப்தமாக உரைக்கின்றனர். எனவே, நாத்திகர்களால் ஒருபோதும் கோவிந்த நாமத்தை மறைத்து விட முடியாது. இருப்பினும், பலருடைய மனதில் கோவிந்த நாமம் குறித்த ஐயம் இருக்கலாம் என்பதாலேயே இங்கே இக்கட்டுரையை வடித்துள்ளோம்.

அறிவுபூர்வமான முடிவினை எடுங்கள்! கோவிந்த நாமத்தை உச்சரிப்பதில் தவறாது ஈடுபடுங்கள்! அவ்வாறு ஈடுபடுபவர்களை ஒருபோதும் கனவிலும் இழிவாகக் கூறாதீர்! ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் பிரபலமாக்கப்பட்ட ஹரே கிருஷ்ண உச்சாடனத்திற்கும் கோவிந்த நாம உச்சாடனத்திற்கும் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் உரைப்பதன் மூலம், நாமும் பக்குவம் பெற்று மற்றவர்களும் பக்குவமடைய உதவுவோமாக.