இறையன்பை வழங்கும் திருநாம உச்சாடனம்

Must read

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, புனித ஸ்தலங்களில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவற்றில் முதலாவதான திருநாம உச்சாடனம் பற்றி தற்பொழுது காண்போம்.

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

புனித நாமத்தின் தன்மைகள்

புனித நாமம் உன்னதமானது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவருடைய நாமத்திற்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. இந்த திருநாமத்தின் தன்மைகள் பத்ம புராணத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

நாம சிந்தாமணி: க்ருஷ்ணஸ்    சைதன்ய-ரஸ-விக்ரஹ:

பூர்ண: ஷுத்தோ நித்ய-முக்தோ  (அ)பின்னத்வான் நாம-நாமினோ: 

சிந்தாமணி என்னும் சொல், கிருஷ்ணரின் திருநாமம் சிந்தாமணியைப் போன்றது என்பதைக் குறிக்கும். சிந்தாமணி என்பது ஒரு விசேஷமான கல். இதனைக் கொண்டு எப்பொருளை தொட்டாலும் அப்பொருள் உடனே தங்கமாக மாறிவிடும், கிருஷ்ணருடைய திருநாமமும் அதை போன்றதே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி எல்லாவற்றையும் (முக்தி உட்பட) தரவல்லவரோ, அதைப் போன்றதே அவரது திருநாமமும்.

சைதன்ய என்னும் சொல், கிருஷ்ணரின் திருநாமம் உயிரோட்ட முள்ளது என்பதைக் குறிக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமம் ஜடப் பெயர்களைப் போன்றதல்ல. ஒரு ஜடப் பொருளும் அதன் பெயரும் ஒன்றல்ல. உதாரணத்திற்கு நமக்கு தாகமாக இருந்தால் நாம் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் என்ற பொருளை பருக வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் “தண்ணீர், தண்ணீர்” என்று அதன் பெயரை உச்சரித்தால் நமக்கு தாகம் தீராது. இதிலிருந்து ஜடப் பொருளும் அதன் பெயரும் வித்தியாசமானது என்பதை அறிகின்றோம். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது திருநாமமும் அவரும் வேறல்ல, அவர் எவ்வாறு உயிரோட்டமுள்ளவரோ அதைப் போலவே அவரது திருநாமமும் உயிரோட்டமுள்ளதாகும்.

ரஸ-விக்ரஹ என்னும் சொற்கள், கிருஷ்ணரின் திருநாமம் எல்லா இன்பத்தின் உறைவிடம் என்பதைக் குறிக்கும். ஆகையால்தான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்து பாடி ஆடும்போது, பரவசமும் ஆனந்தமும் ஏற்படுகின்றன.

பூர்ண: ஷுத்தோ என்னும் சொற்கள், கிருஷ்ணரின் திருநாமம் முழுமையானது என்பதையும் சுத்தமானது என்பதையும் குறிக்கும். இந்த பௌதிக உலகம் களங்கம் நிறைந்தது என்பதால், எந்தப் பெயரை நாம் உச்சரித்தாலும் நம்மால் தொடர்ந்து அதனை உச்சரிக்க முடியாது. ஆனால் கிருஷ்ணருடைய திருநாமம் களங்கமற்றது, சுத்தமானது என்பதால், இந்த திருநாமங்களை இருபத்துநான்கு மணிநேரமும் தொடர்ந்து ஜெபித்தாலும் அலுப்போ சலிப்போ தட்டுவதில்லை. இவ்வுலகில் அதிக ஆனந்தமுடைய செயலாகக் கருதப்படும் பாலுறவில் நம்மால் தொடர்ந்து ஈடுபட இயலாது, இருபத்துநான்கு மணி நேரமும் அனு பவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டாலும் அதனை நாம் நிராகரித்து விடுவோம். சில நிமிடங்களே அதனை அனுபவிக்க முடியும். ஏனெனில் அது பௌதிகமானது. ஆனால் ஆன்மீக ஆனந்தமோ எல்லையற்றது. ப்ரஹ்ம-ஸௌக்யம் த்வனந்தம் (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1), அனந்தம் என்றால் எல்லையற்றது என்று பொருள். சுத்தமானதோடு மட்டுமல்லாமல் உள்ளும் புறமும் முற்றிலுமாக சுத்தப்படுத்துவது. பகவானின் திருநாமம் பூரணமானது. அந்த திருநாமத்தின் மூலமாகவே ஒருவர் பகவானுடைய ரூபம், குணம், லீலைகள் ஆகியவற்றை பூரணமாக உணரலாம்.

இருவகையான திருநாமங்கள்

புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான ஆன்மீக உலகுடன் தொடர்புடைய திருநாமங்கள் (கிருஷ்ண, ராதா ரமண, கோபிஜன வல்லப, ராம, நரசிம்ம, வாசுதேவ போன்றவை) அவரது முக்கிய நாமங்களாகும். ஜடவுலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருநாமங்கள் (பிரம்மன், பரமாத்மா, ஜெகத்பதி, ஸ்ருஸ்டி கர்த்தா போன்றவை) இரண்டாம் நிலை நாமங்களாகும். இரண்டாம் நிலை நாமங்கள் முழுமுதற் கடவுளின் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதிக்கின்றன. அவை பூரணமற்றவை. ஆனால் பகவானின் முக்கிய நாமங்களோ அவரிலிருந்து வேறுபட்டவையல்ல, மேலும் அவருடைய எல்லா சக்திகளையும் உள்ளடக்கியவை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை “மாதுர்ய நாமம்” என்னும் பிரத்யேகமான வகையைச் சார்ந்ததாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்.

நாமத்தில் அவதரிக்கும் கிருஷ்ணர்

கலி-காலே நாம ரூபே க்ருஷ்ண-அவதார

நாம ஹைதே ஹய ஸர்வ-ஜெகத்-நிஸ்தார

இந்த கலி யுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவருடைய திருநாமத்தில், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில், அவதரிக்கின்றார். திருநாமத்தை ஜெபிப்பதன் மூலமாகவே ஒருவர் பகவானுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். யார் அவ்வாறு செய்கிறார்களோ அவர்கள் விடுதலையடைவது நிச்சயம். (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை, 17.22) பகவான் தனது உன்னதமான சக்திகள் அனைத்தையும் புனித நாமத்தில் வைத்திருக்கிறார். ஆகையால் நாம் புனித நாமத்தை உச்சரிக்கும்பொழுது பகவானுடன் நேரடித் தொடர்பில் வருகிறோம். 

புனித நாம உச்சாடனம் கிருஷ்ணரை வெளிப்படுத்தும்

அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி    ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை:

ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ  ஸ்வயம் ஏவ ஸ்புரத்-யத:

களங்கமான பௌதிகப் புலன்களைக் கொண்டு, உன்னத தன்மை கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நாவினால் (புனித நாமத்தை உச்சரித்து) யார் சேவை செய்கிறார்களோ, அவர் களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகள் தானாக வெளிப்படுத்தப்படும். (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234) 

புனித நாம உச்சாடனம் பிரேமையை தரவல்லது

அஜாமிளன் என்ற கொடும் பாவி, தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எம தூதர்களைப் கண்டு பயந்து, அருகிலிருந்த தனது கடைசி மகனை பெயர் சொல்லி அழைத்தான். அந்த பையனின் பெயர் “நாராயணன்” என்று இருந்த காரணத்தால், அஜாமிளன் தன்னை அழைத்ததாக ஏற்றுக் கொண்ட பகவான், அங்கே விஷ்ணு தூதர்களை அனுப்பி வைத்தார். அஜாமிளன் பெரும் பாவியாக இருந்தபோதிலும், இறக்கும் தருவாயில் பகவானின் நாமத்தை உச்சரித்ததால் அவன் மீண்டும் ஒரு வாய்ப்பினைப் பெற்றான். அதன்பின், பக்தித் தொண்டாற்றி வைகுண்டமடைந்தான். வேறு யாரையோ எண்ணிக் கொண்டு பகவானின் புனித நாமத்தை உச்சரித்த பெரும் பாவியான அஜாமிளனின் பாவங்கள்கூட அழிக்கப்பட்டு, அவனுக்கே உயர்ந்த கதி கிடைக்கின்றதென்றால், அத்தகு திருநாமத்தை நம்பிக்கையுடனும் அன்புடனும் உச்சரிக்கும் பக்தர்களின் நிலையை நாம் கூறவும் வேண்டுமா.

ஒருமுறை நாமாச்சாரியரான ஹரி தாஸ தாகூரிடம் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, “இந்த கலி யுகத்தில், வேத கலாச்சாரமின்றி வாழும் மக்கள் விடுதலை பெறுவது எங்ஙனம்?” என்று கேட்டார். அதற்கு ஹரிதாஸ தாகூர், “அவர்களிடம் பகவானைப் பற்றிய உணர்வு அதிகமாக இல்லாவிட்டாலும், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை மிக சப்தமாக உச்சரித்தால் அஃது அவர்களுக்கு உதவும்” என்று பதிலளித்தார்.

சூரியக்கதிரைப் பார்க்கும்போது அது சூரியனிலிருந்து வருகின்றது என்று அறிகிறோம். அதுபோல பகவானின் திருநாமமும் ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து வருகிறது. கோலோகேர ப்ரேம-தன, ஹரி-நாம-ஸங்கீர்தன. இந்த ஹரிநாமம் கோலோகத்திலிருந்து வருவது மட்டுமின்றி, கிருஷ்ண பிரேமை என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் மீதான மிகவுயர்ந்த அன்பினைத் தர வல்லது.

உச்சரிப்பதற்கான தகுதி

இந்த நாம உச்சாடனம் செய்வதற்கு எந்த விதமான பௌதிக தடையும் கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். இனம், மதம், மொழி, நிறம், நாடு, அந்தஸ்து, படிப்பு, பணம் முதலியவை இதற்குத் தடை அல்ல, தத்ரார்பிதா நியமித: ஸ்மரனே ந கால:. (சிக்ஷாஷ்டகம் 2)

உச்சரிப்பதில் இருவகை

நாம உச்சாடனம் இரு வகைப்படும். பல பக்தர்கள் ஒன்று கூடி பாடுதல், நாம சங்கீர்த்தனம் எனப்படும்; தனக்குத் தானே கேட்கும் வண்ணம் தனியாக உச்சரித்தல், நாம ஜெபம் எனப்படும்.

செயல் முறை

பக்தர்கள் ஒன்றுகூடி கைகளை தட்டியபடி (முடிந்தால் கரதாளம், மிருதங்கம் ஆகிய இசைக் கருவி களையும் உபயோகித்து) ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைப் பாடுவதன் மூலம், ஒருவர் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட முடியும். மேலும், இஸ்கான் கோவில்களில் நடைபெறும் ஞாயிறு விருந்து நிகழ்ச்சி, திருவிழாக்கள், மற்றும் காலையிலும் மாலையிலும் தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வதன் மூலமும், நாம சங்கீர்த்தனத்தின் பலனை ஒருவர் அடைய முடியும்.

ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை நமது காதுகளுக்கு கேட்கும்படி உச்சரித்தல், நாம ஜெபம் எனப்படும். ஒவ்வொரு பக்தரும் தினசரி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் திரு நாமத்தை ஜெபிப்பது அவசியம். 108 மணிகள் கொண்ட ஜெப மாலையில் நாம ஜெபத்தை செய்தல் சிறந்தது. ஒவ்வொரு மணியிலும் இந்த மஹா மந்திரத்தை, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என முழுமையாக ஜெபம் செய்யும் பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாக நம் காதினால் கேட்க வேண்டும். 108 முறை மஹாமந்திரத்தை உச்சரித்தால், அஃது ஒரு சுற்று எனப்படும். அதுபோல தினமும் 16 சுற்றுகள் ஜெபம் செய்வது அவசியம் என்று நமது ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கட்டளையிட்டுள்ளார். மேலும், அதிகாலையிலேயே ஜெபம் செய்தல், மந்திரத்தின் சப்த அலைகளில் மனதை முழுமையாக ஒருமுகப்படுத்துதல், மற்றும் ஒவ்வொரு வார்த்தையையும் பிரஷ்டமாக உச்சரித்தல் ஆகிய அணுகுமுறைகளை நாம ஜெபத்தின் போது பின்பற்றும்படி ஸ்ரீல பிரபுபாதர் நமக்குப் பரிந்துரைத்துள்ளார். அவ்வாறு நாம் திருநாமத்தை ஜெபித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுவது உறுதி.

ஷ்வேதாஷ்வதர உபநிஷத்தின் கூற்றின்படி, இரண்டு சுல்லிகளினுள் இருக்கும் நெருப்பு, உராய்தல் என்னும் முறையினால் வெளிப்படுவதைப் போல, நமது இதயத்திலும் திருநாமத்திலும் இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நாம ஜெபம் என்னும் முறையினால் வெளிப்படுவது உறுதி.

 

ஓம் தத் சத்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives