ஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு

Must read

மேலுள்ள படத்திலிருக்கும் விக்ரஹங்களை பார்க்கும் தமிழக மக்களில் பெரும்பாலோர் கேட்கும் முதல் கேள்வி, “இவர்கள் யார்?” என்பதே. நமது வலது ஓரத்தில் கருமை நிறத்தில் இருப்பவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஜகந்நாதர் (கிருஷ்ணர்) என்றும், இடது ஓரத்தில் இருப்பவர் ஸ்ரீ பலராமர் என்றும், நடுவில் இருப்பவர் அவர்களது சகோதரியான சுபத்ரை என்றும் விளக்கம் கொடுப்பது வழக்கம். “இவர்கள் ஏன் விசித்திரமாகத் தென்படுகின்றனர், இவர்களின் வரலாறு என்ன?” என்று கேட்கப்படும் அடுத்த கேள்விகளுக்கு இதோ இங்கு பதில்கள்.

இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள ஜகந்நாத பூரியில் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் வசித்துவருகிறார், ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரை (தேர் திருவிழா) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஜகந்நாதர் தனது சகோதரர் ஸ்ரீ பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் பிரம்மாண்டமான ரதங்களில் பவனி வரும் கோலாகலமான விழாவே ரதயாத்திரை திருவிழா. ஜகந்நாத பூரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதரின் ஆலயம் இந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்று. ஸ்ரீ ஜகந்நாதர் இப்பூவுலகில் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம் புராணங்களில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

நீலமாதவரைக் காண விருப்பம்

ஒருமுறை பகவான் விஷ்ணுவின் பெரும் பக்தரான மன்னர் இந்திரத்யும்னரின் அரசவைக்கு விஜயம் செய்த விஷ்ணு பக்தரொருவர், நீலமாதவர் என்னும் வடிவிலிருந்த பகவானைப் பற்றிப் புகழ்ந்து பேசலானார். இதனால் மிகவும் கவரப்பட்ட மன்னர், பல்வேறு திசைகளுக்கு பிராமணர்களை அனுப்பி நீலமாதவரின் இருப்பிடத்தை அறிந்து வர கட்டளையிட்டார். அனைவரும் தோல்வியுடன் திரும்ப, சளைக்காமல் தேடி அலைந்த வித்யாபதி என்பவர், சபர இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை அடைந்து, விஸ்வாசு என்பவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார், விஸ்வாசு தனது மகளான லலிதாவை பிராமண விருந்தாளிக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்ய நியமித்தார். அங்கேயே சிலகாலம் தங்கிய வித்யாபதி, விஸ்வாசுவின் வேண்டுகோளின்படி லலிதாவை மணம் புரிந்தார்.

விஸ்வாசுவின் வீட்டில் வித்யாபதி தங்கியிருந்தபோது, விஸ்வாசுவின் நடவடிக்கைகளில் சில விசித்திரங்களை கவனித்தார். ஒவ்வோர் இரவும் விஸ்வாசு தனியே எங்கோ சென்று மறுநாள் மதியம் சந்தனம், கற்பூரம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணத்துடன் வீடு திரும்புவதை கண்டார். இதற்கான காரணத்தை தனது மனைவியிடம் வித்யாபதி விசாரிக்க, தனது தந்தை இரகசியமான இடத்தில் ஸ்ரீ நீலமாதவரை வழிபடச் செல்வதாக அவள் கூறினாள்.

 

வித்யாபதி நீலமாதவரைக் காணுதல்

அதை கேட்ட வித்யாபதி அளவற்ற மகிழ்ச்சியுற்றார். ஸ்ரீ நீலமாதவரை பற்றி எவரிடமும் கூறக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை, லலிதா, கணவனிடம் கூறியதன் மூலம் மீறினாள். நீலமாதவரை உடனடியாக காண வித்யாபதி ஆவலுற்றபோதிலும், லலிதாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப்பின், விஸ்வாசு, வித்யாபதியின் கண்களைக் கட்டியபடி ஸ்ரீ நீலமாதவரின் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றார். இருப்பினும், பாதையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, வித்யாபதி தனது மேலங்கியில் சிறிதளவு கடுகினை இரகசியமாக எடுத்து வந்தார். கட்டப்பட்ட கண்களுடன் சென்ற வித்யாபதி, வழியெங்கும் கடுகினைத் தூவியபடி நடந்தார். ஸ்ரீ நீலமாதவரின் கோயிலை அடைந்தவுடன் வித்யாபதியின் கண்களைக் கட்டியிருந்த துணியை விஸ்வாசு அகற்ற, விக்ரஹ உருவிலிருந்த நீலமாதவரின் அதிஅற்புதமான அழகை வித்யாபதி கண்டார், பேரானந்தத்தில் மூழ்கி பிரார்த்திக்க தொடங்கினார்.

காக்கைக்கும் முக்தி

வித்யாபதி பிரார்த்தனை செய்த பின்னர், விஸ்வாசு அவரை அங்கேயே விட்டுவிட்டு மலர்களைச் சேகரிக்கச் சென்றார். அப்போது, பிரமிக்கச் செய்யும் ஓர் அற்புத காட்சியினை வித்யாபதி கண்டார்: அருகிலிருந்த மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த காகம் ஒன்று, கிளையிலிருந்து தவறி ஏரியில் விழுந்தது, உடனடியாக அக்காகம் நான்கு கைகளையுடைய வைகுண்ட ரூபத்தைப் பெற்று ஆன்மீக வானத்தை நோக்கிப் புறப்பட்டது. குளத்தில் விழுந்து இறந்த காக்கை கூட முக்தியடைந்து விட்டதைக் கண்ட வித்யாபதி, மரக்கிளையில் ஏறி தானும் அந்த ஏரியில் குதிக்கத் தயாரானான்.

அப்போது வானத்திலிருந்து ஓர் அசரிரீ, “வித்யாபதி! நீலமாதவரை நீ தரிசித்த விஷயத்தை மன்னர் இந்திரத்யும்னரிடம் உடனடியாக தெரிவிப்பாயாக” என்று கூறியது. வித்யாபதி மரக்கிளையில் இருந்து இறங்கி காத்திருக்க, விஸ்வாசு காட்டு மலர்களையும் வேர்களையும் எடுத்துக் கொண்டு விரைவில் திரும்பினார். பின்னர் நீலமாதவருக்கான தனது தினசரி வழிபாட்டைத் தொடங்கினார். அவ்வாறு வழிபட்டுக் கொண்டிருக்கையில், “வெகுகாலமாக நீ எமக்கு அர்ப்பணித்த காட்டு மலர்களையும் வேர்களையும் ஏற்றுக் கொண்டேன். தற்போது எனது பக்தனான மன்னன் இந்திரத்யும்னனின் இராஜபோக சேவையை ஏற்க விரும்புகிறேன்” என்று நீலமாதவர் கூறினார்.

இந்திரத்யும்னரின் ஏமாற்றம்

ஸ்ரீ நீலமாதவரின் சேவை தனக்குக் கிடைக்காமல் போய்விடும் என்று விஸ்வாசு வருந்தினார். இருப்பினும், வித்யாபதியை மன்னரிடம் செல்ல அனுமதித்தார். உடனடியாக மன்னர் இந்திரத்யும்னரிடம் சென்ற வித்யாபதி, நீலமாதவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததைப் பற்றித் தெரிவித்தார்.

பெரும் பரவசமடைந்த அரசன், ஸ்ரீ நீலமாதவரை தரிசித்து அங்கேயே வாழ்நாள் முழுவதும் தங்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் பல்வேறு மக்களைக் கூட்டிக் கொண்டு காட்டிற்கு விரைந்தார். வித்யாபதி வழிநெடுக தூவிய சில கடுகு விதைகளிலிருந்து சிறு செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை பின் தொடர்ந்த அனைவரும் ஸ்ரீ நீலமாதவரின் இருப்பிடத்தை அடைந்தனர். ஆனால், நீலமாதவரை அங்குக் காணவில்லை, மன்னருக்கு ஏமாற்றமே மிச்சமாக அமைந்தது. அப்பகுதி முழுவதும் மணலினால் மூடப்பட்டுவிட்டது.

மன்னர் வருத்தமடைய,  “வருத்தப்படாதே! நீலமலையின் உச்சியில் நீ எனக்காக ஒரு கோயிலைக் கட்டுவாயாக. அங்கு பரம்பொருளாகிய நான் தாரு-பிரம்மனாக (மரத்தின் வடிவில்) தோன்றுவேன். இனி என்னை நீலமாதவராகக் காண இயலாது,” என்று ஓர் அசிரிரீயின் மூலம் பகவான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

 

கோவில் கட்டுமானம்

அரசர் இந்திரத்யும்னர் கோவில் கட்டுவதில் தீவிரமானார், பௌமலை என்ற இடத்திலிருந்து கற்களை கொண்டு வருவதற்காக, அங்கிருந்து நீல கந்தாரமலை வரை சாலை அமைத்தான். ஸ்ரீ க்ஷேத்திரம் அல்லது பூரி என்று அழைக்கப்பட்ட அந்த புனித ஸ்தலம் ஒரு சங்கின் வடிவில் அமைந்திருந்தது. அதன் மையப் பகுதியில், இராமகிருஷ்ணபுரம் என்ற நகரத்தை அமைத்த மன்னர், அங்கு ஜகந்நாதருக்கு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினார். கோயிலின் உச்சியில் கலசமும் அதற்கு மேல் ஒரு சக்கரமும் அமையுமாறு கட்டினார். கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார். பிரம்மதேவரே நேரில் வந்து மஹா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பிய அரசர் இந்திரத்யும்னர், பிரம்ம லோகம் வரை சென்று அவரை அழைத்து வந்தார்.

பிரம்மதேவரின் அருள்

பின்னர், இந்திரத்யும்னர் பிரம்ம தேவரிடம் உயர்ந்த முக்தியை நல்கும் ஸ்ரீ க்ஷேத்திரம் என்ற அப்பகுதியையும் கோயிலையும் புனிதப்படுத்த வேண்டினார். பிரம்மதேவரோ, பகவானின் அந்தரங்க சக்தியால் தோன்றியுள்ள இந்த ஸ்ரீ க்ஷேத்திரத்தில் பகவானே எழுந்தருளியிருக்கிறார் என்பதால், அவரை இங்கு ஸ்தாபிப்பது தனது சக்திக்கு உட்பட்டதல்ல என்று கூறினார். அக்கோயிலின் உச்சியில் ஒரு கொடியினை அமைத்த பிரம்மதேவர், அதனை ஒருவர் தூரத்திலிருந்து தரிசித்து தலை வணங்கினாலும் எளிமையாக முக்தி அடைவர் என்று ஆசிர்வதித்தார்.

பிரம்மதேவர் யாகம் ஒன்றினைச் செய்து ஸ்ரீ நரசிம்மதேவரின் விக்ரஹத்தை அங்கு முதலில் பிரதிஷ்டை செய்தார். தற்போது கோயில் இருக்கும் இடம் அந்த யாகம் நடந்த இடமே என்று கூறப்படுகிறது. கோயில் வளாகத்தில் இருக்கும் முக்தி மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி பிரம்மதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அதே நரசிம்ம மூர்த்தியாகும்.

 

ஜகந்நாதரின் வரவு

நீலமாதவரின் வரவிற்காகக் காத்திருந்த மன்னர் இந்திரத்யும்னர், அவரைக் காண இயலாததால், தனது வாழ்வே பயனற்றது என்று எண்ணி தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதன்மீது உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்க தீர்மானித்தார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய பகவான், “அன்பான அரசனே! கவலைப்படாதே. பாங்கிமுஹான் என்ற இடத்தில் மரத்துண்டின் வடிவில் நான் கடலில் மிதந்தவாறு வருவேன்,” என்று கூறினார்.

மகிழ்ச்சியுற்ற மன்னர், தனது படைவீரர்களுடன் அவ்விடத்திற்குச் செல்ல, பெரிய மரத்துண்டு ஒன்று சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரைச் சின்னங்களுடன் கரையை வந்தடைந்தது. பலசாலி மனிதர்களாலும் யானைகளாலும்கூட அந்த தாரு-பிரம்மனை (மரத்தின் வடிவிலிருக்கும் முழுமுதற் கடவுளை) சற்றும் அசைக்க முடியவில்லை. மீண்டும் வருத்தமடைந்த மன்னரின் கனவில், அன்றிரவு ஸ்ரீ ஜகந்நாதர் மீண்டும் தோன்றி, “நீலமாதவனாக என்னை சேவித்த விஸ்வாசுவை அழைத்து வா, ஒரு தங்க ரதத்தை தாரு-பிரம்மனின் முன்பு நிற்க வை,” என்று கூறினார்.

அக்கட்டளையின்படி, தாரு பிரம்மனின் ஒரு புறம் விஸ்வாசுவையும் மறுபுறம் பிராமணர் வித்யாபதியையும் மன்னர் நிற்க வைத்தார், தங்க ரதத்தை தாரு பிரம்மனின் முன்பு நிறுத்தினார். பின்னர், பரம புருஷ பகவானது புனித நாமங்களை அனைவரும் கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். மன்னர் தாரு பிரம்மனிடம் ரதத்தில் ஏறுமாறு வேண்ட, அவர் மிகவும் எளிமையாக ரதத்தில் அமர்த்தப்பட்டு வேண்டிய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

விஸ்வகர்மாவின் உதவி

தாரு பிரம்மனிலிருந்து இறைவனின் வடிவத்தைச் செதுக்க பல்வேறு கைதேர்ந்த சிற்பிகளை மன்னர் இந்திரத்யும்னன் நியமித்தார். ஆனால் அவர்கள் செதுக்க ஆரம்பிக்கும்போது, அவர்களது உளிகள் உடைந்து துகள்களானதே மிச்சம், தாரு பிரம்மனை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இறுதியில், பகவான் விஷ்ணுவின் விருப்பத்தின்படி, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மர் வயதான சிற்பியின் உருவில் அரசவைக்கு வந்தார். இருபத்தோரு நாள்கள் கதவை மூடிவிட்டு தனிமையில் தன்னை வேலை செய்ய அனுமதித்தால், விக்ரஹங்களை தான் செதுக்குவதாக அவர் வாக்களித்தார். உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, வயதான சிற்பியின் வழிகாட்டுதலின்படி மற்ற சிற்பிகள் மூன்று தேர்களை செய்வதில் ஈடுபட்டனர். இருபத்தோரு நாள்களுக்கு முன்னர் எவரும் கதவைத் திறக்கக் கூடாது என்று அரசரிடம் வாக்குறுதியை பெற்ற வயதான சிற்பி, தாரு பிரம்மனை கோயிலுக்குள் எடுத்துச் சென்று கதவை மூடிக் கொண்டார். பதினான்கு நாள்கள் கழிந்த பின்னர், செதுக்கும் ஓசை எதுவும் கேட்காததால், அரசர் மிகவும் கவலையுற்றார். வயதான சிற்பிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்னும் அரசியின் ஆலோசனையின் பேரில், கோயிலின் கதவை மன்னர் தனது கைகளாலேயே மிகுந்த விசையுடன் திறந்தார்.

ஜகந்நாதரின் அருள்

உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார்.

ஜகந்நாதரின் வார்த்தைகளால் திருப்தியுற்ற அரசர் அவரிடம் பிரார்த்தனை செய்தார்: “எம்பெருமானே! உமது தோற்றத்திற்கு காரணமாகயிருந்த சிற்பியின் வம்சாவழியினர் இந்த மூன்று ரதங்களை வடிவமைக்கும் பணியில் காலம் காலமாக தொடர்ந்து இருக்க வேண்டும்.” அதற்கு அனுமதி வழங்கிய ஸ்ரீ ஜகந்நாதர், அரசரிடம், “நீலமாதவராக எனக்கு சேவை செய்த விஸ்வாசுவின் சந்ததியினரே எனக்கு எப்போதும் சேவை செய்ய வேண்டும். அவர்கள் எனது தைத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்; வித்யாபதியின் வழிவந்தோர் எனக்கு அர்ச்சா வழிபாடு செய்ய வேண்டும்” என்று கூறினார். பிறகு, அரசர் இந்திரத்யும்னர் ஜகந்நாதரிடம், “இக்கோவிலின் கதவுகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மூடியிருக்க வேண்டும், அப்போது உலகத்தோர் அனைவரும் வந்து உம்மை தரிசிக்க முடியும். நாள் முழுவதும் தாங்கள் உணவருந்த வேண்டும், அதன் மூலம் உமது தாமரை விரல்கள் காய்ந்திராமல் இருக்க வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை,” என்று வேண்டினார்.

அந்த ஆசியையும் வழங்கிய ஜகந்நாதர், உமக்காக நீ என்ன வரம் வேண்டுகிறாய்?” என்று கேட்டார். தனிப்பட்ட முறையில் யாரும் உம்முடைய கோயிலை உரிமை கொண்டாடக் கூடாது, இந்த ஒரு வரத்தை எனக்கு அளியுங்கள்” என்று வேண்டினார். ஜகந்நாதரும், அவ்வாறே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தார்.

ஜகந்நாதரின் இத்தகு விநோதமான வடிவத்தினை ஏதோ அறைகுறையான உருவம் என்று எண்ணிவிடக் கூடாது. ஒருமுறை, கிருஷ்ணரின் ராணியர் அனைவரும் அவரது விருந்தாவன லீலைகளை கேட்க ஆவல் கொண்டு அன்னை ரோகிணியை சூழ்ந்து கொண்டனர். அந்த அற்புத லீலைகளை அன்னையும் வர்ணிக்க, கிருஷ்ண பலராமர் வந்தால் சைகை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையுடன் காவலுக்கு வைக்கப்பட்ட சுபத்ரையும் அந்த லீலைகளில் மூழ்கிவிட்டார். கண்களை விரித்து லீலைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சுபத்ரையின் அருகில் வந்த கிருஷ்ண பலராமரும், தங்களது சொந்த லீலைகளை கேட்டு ஆனந்தத்தில் கண்களை விரித்தனர், கூட்டத்தினுள் புகுந்தபடி கேட்டுக் கொண்டிருந்ததால், கைகளும் ஒடுங்கி இருந்தன. இந்த அற்புத தோற்றமே ஜகந்நாதரின் தற்போதைய தோற்றம்.

இவ்வாறாக கருணையின் கடலாகிய ஸ்ரீ ஜகந்நாதர், தனது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் இவ்வுலகின் அனைத்து உயிர்வாழிகளின் நன்மைக்காகத் தோன்றினார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives