அசுரன் ஹிரண்யகசிபுவின் மகனாகப் பிறந்த பிரகலாதர் சிறு வயதிலேயே மாபெரும் ஞானத்துடன் திகழ்ந்தார். இஃது அனைவருக்கும் தெரிந்த கதை. அந்த ஞானம் பிரகலாதருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெரியாத துணுக்கு.

ஹிரண்யகசிபு தன் ராஜ்ஜியத்தை விட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றான். அப்பொழுது அவனது மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமோர் அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தைப் பிறந்தவுடன் அதைக் கொன்று விட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை ஸ்வர்க லோகத்திற்குக் கொண்டுச் சென்றபொழுது, வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நாரத முனிவர், கருவில் இருப்பது மாபெரும் பக்தர்,” என்று கூறி, ஹிரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அவளைத் தமது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆஷ்ரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பளிக்கும்படி நாரதரிடம் வேண்டினாள், தன் கணவர் தவத்திலிருந்து திரும்பி வந்த பின்னரே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். நாரதரும் அதற்கு உறுதியளிக்க, கயாது பெரும் பக்தியுடன் நாரதருக்கு சேவை செய்யத் தொடங்கினாள். அச்சமயத்தில் நாரத முனிவர் கயாதுவிற்கும்  அவளது கருவிலிருந்த குழந்தைக்கும் பகவத் விஷயங்களை நீண்ட காலம் உபதேசித்தார்.

பிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி பிரகலாதர் அவளது வயிற்றிலேயே நீண்ட நெடுங்காலம் தங்கியிருந்தார். ஹிரண்யகசிபு தவத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னர் கயாது மகனைப் பெற்றெடுத்தாள். பெண்ணாக இருந்த கயாதுவினால் நாரதர் வழங்கிய உபதேசங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், நாரதரின் கருணையினால் பிரகலாதர் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தார்.

-ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் 7.7.2-16