வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பக்தர்கள் மனம் உருகி பகவானை வழிபட வேண்டும் என்னும் கூற்று பலரும் அறிந்த ஒன்று. இஃது என்ன, பகவானின் மனதை உருக்குதல்? ஆம், இதுவே பக்தி. உண்மையான பக்தியில் பக்தரின் மனம் மட்டுமின்றி பகவானின் மனமும் உருகுகிறது. ஏனெனில், உண்மையான பக்தியில், பக்தன் பகவானின் மீது அன்பு செலுத்துவதைப் போலவே பகவானும் பக்தனின் மீது அன்பு செலுத்துகிறார். அந்த அன்புதான் அவரது மனதையும் உருக வைக்கிறது.

கிருஷ்ணரின் மனதை உருக்கும் பக்தியின் குணங்களில் ஒன்று, பணிவு. சரணாகதியின் ஆறு தன்மைகளில் ஒன்றான பணிவினை பக்தன் உண்மையான முறையில் வெளிப்படுத்தும்போது, அது பகவானைக் கவருகிறது, சில சமயங்களில் அவரது உள்ளத்தை உருக்குகிறது.

உண்மையான பணிவும் போலி பணிவும்

பணிவு ஒரு விரும்பத்தக்க குணம் என்பதையும் அஃது அடுத்தவரின் மனதை உருக்கும் என்பதையும் அனைவரும் அறிவர். இதனால், அந்தப் பணிவினை செயற்கையான முறையில் வெளிப்படுத்த பலர் முயல்கின்றனர். மனதில் தன்னை பெரிய பக்தனாக நினைத்துக் கொண்டு, மற்றவரிடம்நான் அற்பன், அடியவர்களுக்கு அடியவன்என்றெல்லாம் கூறலாம். ஆனால் அத்தகு போலி பணிவு உண்மையான நன்மையை வழங்காது; ஏனெனில், இதயத்தில் அமர்ந்திருக்கும் அந்த மாதவன் அதனை நன்கு அறிவார். மற்றவர்களை மேலோட்டமாக ஏமாற்றலாம், உருக்கலாம்; ஆனால் கிருஷ்ணரை அவ்வாறு உருக்கி விட முடியுமா? உண்மையான பணிவினால் பகவான் எவ்வாறு கவரப்படுகிறார் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

உரிமைகளைக் கடந்த பணிவு

பணிவிற்கு தனி இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஹரிதாஸ தாகூர். பிறப்பினால் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும், அவர் தலைசிறந்த வைஷ்ணவராக சதா ஸர்வ காலமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது பக்தியைப் பாராட்டி, சாக்ஷாத் கிருஷ்ணரான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவருக்கு நாமாசாரியர் என்று பட்டமளித்தார். அவரது செயல்கள் மஹாபிரபுவின் இதயத்தை மட்டுமின்றி, கேட்பவர்களின் இதயத்தையும் உருக்குபவையாகத் திகழ்ந்தன, இன்றும் திகழ்கின்றன.

பிறப்பினால் இஸ்லாமியர் என்பதால், புரி ஜகந்நாதர் கோயில் விதிகளின்படி உள்ளே செல்ல அவருக்கு அனுமதி கிடையாது. இருப்பினும், அவர் விரும்பியிருந்தால். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அதற்கு எப்படியாவது ஏற்பாடு செய்திருப்பார். ஸ்ரீ சைதன்யரின் தனிப்பட்ட பரிந்துரையும் மன்னர் பிரதாபருத்ரரின் ஆளுமையும் அவரை நிச்சயம் கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கும். ஒரு தலைசிறந்த வைஷ்ணவர் என்ற முறையில், ஜகந்நாதரை தரிசிப்பது அவரது உரிமை. ஆனால் அவர் அதுபோன்று நினைக்கவே இல்லை. மாறாக, அவர் தன்னை மிகவும் கீழானவனாக கோயிலுக்குள் நுழைய தகுதியற்றவனாக எண்ணினார்.

நான் பக்தன், எனக்கு கோயிலில் இந்த உரிமை வேண்டும், அந்த உரிமை வேண்டும்,” என்று போராடும் பலருக்கு மத்தியில், தம்மை மிகுந்த பணிவுடன் வைத்துக் கொண்டு ஒதுங்கி நின்றார் ஹரிதாஸர். அதன்படி, கோயிலுக்கு வெளியே இருந்தபடி, கோயிலின் உச்சியிலுள்ள சுதர்சன சக்கரத்தை தரிசிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டார். அவரது அத்தகு பணிவு மஹாபிரபுவின் உள்ளத்தை உருக்கியது. அதனால், கிருஷ்ணரைக் காணச் செல்லாத ஹரிதாஸரைக் காண, அந்த கிருஷ்ண சைதன்யரே தினமும் நேரில் சென்று தரிசனம் வழங்கினார்.

பணிவினால் ஜகந்நாதரைக் காணச் செல்லாத ஹரிதாஸரை ஸ்ரீ சைதன்யர் தினமும் சந்தித்தார்.

செல்வத்தைக் கடந்த பணிவு

செல்வச் செழிப்பில் திளைத்தபோதிலும், பக்திக்கான எளிமையுடனும் பணிவுடனும் வாழ்ந்த பக்தர்கள் அந்தப் பணிவினால் கிருஷ்ணரின் உள்ளத்தை உருக்கியுள்ளனர். இதற்கான மிகச்சிறந்த உதாரணம், மன்னர் பிரதாபருத்ரர்.

மன்னர் பிரதாபருத்ரர் மஹாபிரபுவின் நேரடி தரிசனத்தைப் பெற பகீரத பிரயத்தனம் செய்தார். ஆனால் மஹாபிரபுவோ அவர் மன்னர் என்பதால் அவரைச் சந்திக்க மாட்டேன் என்பதில் மிகமிக உறுதியாக இருந்தார். அவர் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தாரோ, அந்த அளவிற்கு அவரைச் சந்திக்க வேண்டும் என்பதில் மன்னரும் உறுதியாக இருந்தார். இறுதியில், தமது பணிவின் மூலமாக, மன்னர் வென்றார், பகவான் தோற்றார்.

மன்னர் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தபோதிலும், அவர் தம்மை எப்போதும் பகவானின் பணிவான சேவகனாகவே வைத்துக் கொண்டார். அதன்படி, ஜகந்நாதர் தமது ரதத்தில் வீதி உலா வருவதற்கு முன்பாக, மன்னர் அந்த வீதியை தாமே பெருக்கி தூய்மை செய்தார். “நாட்டிற்கு நான் தற்காலிக மன்னனாக இருக்கலாம், பகவான் ஜகந்நாதரோ முழு உலகிற்கும் நிரந்தர மன்னராக இருப்பவர்,” என்பதை மனமார உணர்ந்து, மன்னர் பிரதாபருத்ரர் பணிவுடன் செய்த அச்சேவை, அதுவரை கல்லைப் போன்று இருந்த மஹாபிரபுவின் உள்ளத்தை உருக்கியது, மன்னருக்கு மஹாபிரபு கருணை மழையைப் பொழிந்தார்.

நான் செல்வந்தன், அதிக காசு கொடுத்து சிறப்பு தரிசனம் பெறுவேன், கோயில் நிர்வாகமும் கோயிலிலுள்ள பக்தர்களும் என்னிடம் வந்து மண்டியிட வேண்டும்,” என்ற மனப்பான்மையுடன் செயல்படுவோர் பலர் இருக்க, மன்னர் பிரதாபருத்ரர் கிருஷ்ணரின் உள்ளத்தை உண்மையாக உருக்குவது எவ்வாறு என்பதை உணர்த்துகிறார்.

மன்னரைக இருந்தபோதிலும் ஜகந்நாதரின் ரத வீதிகளைப் பெருக்கியதால், மன்னர் பிரதாபருத்ரர் சைதன்யரின் மனதை உருக்கினார்.

எளிமையான வாழ்வின் பணிவு

எளிமையான வாழ்வின் மூலம் பணிவை வெளிப்படுத்தி பகவானின் உள்ளத்தை உருக்கியவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து வேலை செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான ஆட்களைக் கொண்ட மாபெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்த ரகுநாத தாஸர் ஸ்ரீ சைதன்யரின் சேவைக்காக புரியில் துறவற வாழ்வில் ஈடுபட்டார். அவர் செல்வத்தைத் துறந்து துறவியாக வாழ்ந்தது பெரிதல்ல, எத்தகைய துறவியாக வாழ்ந்தார் என்பதே உள்ளத்தை உருக்கும் செய்தி.

கட்டியிருந்தது கோவணம் மட்டுமே; உண்டது எதுவுமே இல்லை; பருகியது கையளவு மோர் மட்டுமே; ஜபித்தது தினமும் குறைந்தது ஒரு இலட்சம் நாமங்கள்; விழுந்தது பகவானின் முன்பு தினமும் ஆயிரம் முறை, பக்தர்களின் முன்பு தினமும் இரண்டாயிரம் முறை; சொற்பொழிவு வழங்கியது தினமும் குறைந்தது மூன்று மணி நேரம்; நீராடியது தினமும் ராதாகுண்டத்தில் மூன்று முறை; உறங்கியது தினமும் இரண்டு மணி நேரம்கூட இல்லை. இதுவே ரகுநாதரின் தியாக வாழ்க்கை.

இவரது விருந்தாவன வாழ்க்கை இவ்வாறு இருக்க, அதற்கு முன் புரியில் வாழ்ந்தபோது, இவர் ஆரம்பத்தில் தந்தையின் பணத்தில் அனைத்து வைஷ்ணவர்களுக்கும் விருந்து படைத்தார், பின்னர் அதை விடுத்து கோயில் வாசலில் அன்னதானம் பெற்று வாழ்ந்தார், பின்னர் அதை விடுத்து அன்னதான சத்திரத்தில் உணவருந்தினார், பின்னர் அதையும் விடுத்து பசுக்களும் புறக்கணித்த கெட்டுப் போன பிரசாதத்தினைக் கழுவி சில கவளம் உண்டு வந்தார். அவரது எளிமையும் துறவும் ஸ்ரீ சைதன்யரின் உள்ளத்தை உருக்காமல் இருக்குமா என்ன?

நம்முடைய நிலையை ரகுநாதருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரசாதம் கொஞ்சம் சுவையின்றி இருந்தாலே நாம் குற்றம் சொல்கிறோம், எங்கே சுவையான விருந்து கிடைக்கும் என்று அலைகிறோம், 16 மாலை ஜபிப்பதையே பெருமையாக நினைக்கிறோம், அவ்வாறு ஜபிப்பதற்குள் 16,000 எண்ணங்கள் மனதில் ஆடுகின்றன, பகவானின் முன்பும் வைஷ்ணவர்களின் முன்பு தினந்தோறும் சில தடவை விழுந்து எழுவதற்குப் புலம்புகிறோம், உறக்கத்தைச் சற்று கட்டுப்படுத்தி மங்கல ஆரத்திக்குச் செல்வதற்கே தவிக்கிறோம். நம்மால் எப்படி பகவானின் உள்ளத்தை உருக்க முடியும்?

பாண்டித்துவம் கடந்த பணிவு

கிருஷ்ணர் கீதையில் வித்யா வினய ஸம்பன்னே என்கிறார்; அதாவது, பாண்டித்துவம் பணிவை வளர்க்கும் என்பது பொருள். உண்மையான பாண்டித்துவத்தைப் பெற்றவர்கள் அதன் விளைவாக தங்களது அற்பமான நிலையினை உணர்ந்து, கர்வமின்றி பணிவுடன் செயல்படுவர். அத்தகு பணிவு பகவானின் உள்ளத்தை உருக்கும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி.

அவருடைய தலைசிறந்த அறிவாற்றலின் காரணத்தினால், முஸ்லிம் மன்னர் அவரைத் தமது பிரதான மந்திரியாக வைத்திருந்தார். பல்வேறு சாஸ்திரங்களில் மிகச்சிறந்த அறிஞராக இருந்தபோதிலும், அவர் பகவானின் முன்பு தம்மை ஒரு முட்டாளாக முன்வைத்தார். “மக்கள் என்னைப் பண்டிதன் என்று அழைக்கின்றனர், ஆனால் நான் யார் என்பதையே அறியாத முட்டாள் நான்,” என்று ஸநாதனர் ஸ்ரீ சைதன்யரிடம் கூறினார்.

புல்லைவிடப் பணிவாக இருக்க வேண்டும் என்று நம்மை அறிவுறுத்தும் ஸ்ரீ சைதன்யர், “உங்களது பணிவினை தயவுசெய்து கைவிடுங்கள், இஃது எனது உள்ளத்தை உருக்குகிறது,” என்று கூறுமளவிற்கு ஸநாதனர் பல தருணங்களில் தமது பாண்டித்துவத்தைக் கடந்த பணிவினை வெளிப்படுத்தினார்.

ஏதோ சில ஸ்லோகங்கள், கொஞ்சம்கொஞ்சம் சமஸ்கிருதம், ஓரளவு ஞாபக சக்தி, சிறிது பேச்சாற்றல் என பாண்டித்துவம் சிறிதளவு தலைதூக்கினாலே நமக்கு கர்வம் வந்து விடுகிறது. இந்நிலையில் ஸநாதனரின் பணிவைப் பார்த்தால், நமக்கு தலை சுற்றி விடும்.

கெட்டுப் போன பிரசாதத்தினைக் கழுவி சில கவளம் உண்டு வந்த ரகுநாதரிடம் ஸ்ரீ சைதன்யர் அதனை வலுக்கட்டாயமாகப் பெற்று உண்ணுதல்.

நமது நிலையில் பணிவு

நம்மிடம் ஹரிதாஸரைப் போன்ற உயர்ந்த பக்தியோ பக்தியினால் எழுந்த உரிமையோ இல்லை, மன்னர் பிரதாபருத்ரரைப் போன்ற செல்வச் செழிப்பும் கிடையாது, ரகுநாத தாஸரைப் போன்ற துறவும் இல்லை, ஸநாதனரைப் போன்ற பாண்டித்துவமும் இல்லை; ஆயினும், இவை எல்லாம் இருந்தும் அவர்களிடம் இல்லாமல் இருந்த அந்த கர்வம் மட்டும் நம்மிடையே ஆழமாக இருக்கின்றதே! பௌதிகச் செல்வங்கள் தற்காலிகமானவை, ஆத்மா அற்பமானவன், பகவானுக்குத் தொண்டு செய்வதே ஆத்மாவின் உண்மையான கடமை முதலிய உபதேசங்களை மீண்டும்மீண்டும் கேட்டு, படித்து பக்தியில் உண்மையுடன் ஈடுபட்டால், நிச்சயம் பணிவு முதலிய பல்வேறு நற்குணங்கள் நம்மிடம் படிப்படியாகத் தோன்றும்.

பணிவினை வளர்ப்பதற்கென்று நாம் செயற்கையாக எந்த முயற்சியும் மேற்கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், அதற்கான விருப்பமும் பிரார்த்தனையும் அவசியமாகிறது. கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களின் பாடல்கள் அத்தகு பிரார்த்தனைக்கு வழிவகுக்கின்றன.

ஹரிதாஸர், பிரதாபருத்ரர், ரகுநாதர், ஸநாதனர் முதலியோரைப் போன்று நகல் செய்வதற்கு நாம் முயற்சித்தால், நிச்சயம் தோல்வியடைவோம், அதனை நாம் பரிந்துரை செய்வதும் இல்லை. இருப்பினும், இவர்களிடமிருந்து சில பாடங்களைக் கற்று ஒருநாள் நாம் உண்மையாகப் பக்குவம் பெற்றால், ஸ்ரீ சைதன்யரின் உள்ளத்தை நம்மாலும் உருக்க முடியும்; முழுமையாக இல்லாவிடினும் சிறிதளவேனும் உருக்க முடியும்.

மிகச்சிறந்த அறிஞரான ஸநாதனர், பகவான் முன்பு தம்மை ஒரு முட்டாளாக முன்வைத்தார்.